நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -3

This entry is part 17 of 26 in the series 26 ஏப்ரல் 2015

 

கோபமா என்றான் ராகவ் ?

 

யாழினி பிள்ளையார் கோவிலின் சுவரில் சாய்ந்தபடி மறைவாக நின்றிருந்தாள்.

 

எதற்கு ?

 

உன்னிடம் முதலில் தெரிவிக்க வேண்டிய காதலை உங்கப்பாக்கிட்ட சொன்னதுக்கு

 

ச்சே இல்லை என்றாள்

 

என்னை பிடிச்சிருக்கா என்றபடி அவளின் கையைப் பற்றினான் ராகவ்

 

அச்சோ கோயில் இது.  கையை விடுங்க ராகவ் என்றாள் யாழினி

 

கட்டிக்கப் போறவன் தான யாழ் நான் கையைப் பிடிக்கக் கூடாதா?

 

இருந்தாலும்

 

என்னா இருந்தாலும்

 

எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான்

 

அது சரி நான் என்ன முத்தமா கேட்டேன்

 

இந்த ஆசை வேறயா என்றபடி மறைவிடத்தில் இருந்து வெளிவர முற்பட்டவளை, சுவரில் சாய்த்து நெருங்கி நின்றான் ராகவ், அத்தனை நெருக்கத்தில் அவனைக் காண்பது யாழினிக்கு மூச்சை முட்டியது. ஒரு வித நடுக்கம் ஏற்பட்டது உள்ளத்தில்.

 

கொஞ்சம் தள்ளி நில்லுங்க

 

நான் உன்ன கட்டிக்கப் போறவன்பா

 

இருக்கட்டுமேங்க பொது இடத்துல இப்படியா நடந்துப்பாங்க, யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க ?

 

மத்தவங்களுக்காகத்தான் வாழணுமா, நமக்காக வாழக் கூடாதா?

 

மத்தவங்க மத்தியில தானங்க நாம வாழ வேண்டியிருக்கு.

 

ச்சே இருக்கற கஷ்டத்துல கொஞ்ச நேரம் சந்தோஷமா பேசலாம்ன்னு வந்தா! என்று கைகை உதறினான்.

 

எல்லாம் கலிகாலம், பயபக்தியே இல்லாம போயிடுச்சு, என்று முணுமுணுத்தபடி கடந்தார் அய்யர்

 

இப்ப என்ன பண்ணிட்டாங்க என்று கோபமாய் திரும்பினான் ராகவ்

 

அய்யோ பேசாம வாங்க என்று கையைப் பிடித்து வெளியில் இழுத்து வந்தாள் யாழினி.

 

அடிமனதில் சிறு பயம் எழுந்தது. நிச்சயமும் முடிந்த நிலையில், இவனோடு வாழ எனக்கு பயமாய் இருக்கிறது என்றால் என்னவாகும் தன் பெற்றோரின் நிலை.

 

ராகவ் தொட்டதிற்கெல்லாம் கோபப்பட்டான். அந்நிய ஆண்களின் பார்வை யாழினி மீது விழுவதை அவன் விரும்பவில்லை. யாழினி வேறு ஆண்களோடு பேசுவதையும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  யாழினியின் சாதாரண எதார்த்தமான ஆடை விலகலையும், சிரிப்பையும் குதர்க்கப் பார்வையோடே பார்க்கத் துவங்கினான்.

 

யாழினிக்கோ அவனோடு வெளியில் போகவே பயமாக இருந்தது. எந்த நேரத்தில் யாருடன் சண்டை போடுவானோ என்ற பயம் உள்ளுர இருந்து கொண்டே இருந்தது.

 

 

சி 7 பஸ்ஸில் யாழினியின் அருகில் அமர்ந்திருந்தான் ராகவ்

 

அவனின் உள்ளங்கையில் யாழினியின் கை பொதிந்திருந்தது.

 

உள்ளங்கை வியர்வை அவளின் உள்ள பயத்தை தெரிவித்த போதிலும், அதை அவன் உணராது இறுகப் பற்றியிருந்தான். ஒரு பெண் தன் பிடிக்குள் இருக்கிறாள் என்ற ஆணின் இறுமாப்பு அந்த நெருக்கத்தில் தெரிந்தது.

 

அவசரத்தில் தந்தையின் உள்ளம் கோணக் கூடாதென்று மனம் ஒவ்வாத ஒருவனின் பிடியில் சூழ்நிலை தன்னை தள்ளியிருப்பதை உணர்ந்த போதும் மனதிற்குள் சமாதானம் செய்து கொண்டாள் யாழினி. பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளையைதான் மணக்கப் போவது அது இவனாக இருந்தால் என்ன இப்போது.

 

இந்த காலத்து பிள்ளைங்களுக்குப் பயமே இல்லை எப்படி கைய கோத்துக்கிட்டு கிடக்குங்க பாரு பின்புறம் யாரோ காது பட பேசினார்கள்.

 

கண்டெக்டரிடம் டிக்கெட் வாங்கும் போதும் கூட கைப் பிணையை நீக்கவில்லை ராகவ்

 

கொஞ்சம் கையை விடுங்களேன்

 

ஏன் என்ற புருவம் சுருக்கிய வினாவில் கனல் தெரித்தது

 

உனக்கு தெரிஞ்சவன் எவனாச்சும் வந்திருக்கானா? என்ற அடுத்த கேள்வியில் மனம் வெதும்பி போனாள் யாழினி.

 

பெரியவர்கள் யாரேனும் வரக்கூடும் இதே பேருந்தில். காதலி கிடைக்காதவனோ அல்லது மனைவி இல்லாதவனோ வரக்கூடும் பிறர் மனதை தன் காட்சி காயப்படுத்தக் கூடாது என்று எண்ணுபவள் யாழினி.

 

எப்பொழுது பயணித்தாலும் இந்த ஜன்னலோரப் பயணம் அத்தனை சுகத்தை அள்ளித் தெறிக்கும் இப்பொழுதோவெனில் எப்பொழுது இந்தப் பேருந்து நிற்கும் என்று தோன்றியது.

 

கம்பளிப் புழுக்களின் கூட்டம் ஒன்று அருகாமை இருக்கையில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வு. இத்தனை ஒவ்வாமையோடு எப்படி குடும்பம் நடத்தப் போகிறாள் இவனோடு.

 

வெறிச்சோடிய சாலையின் இருண்ட புறவெளியில் நடந்துக்கொண்டிருந்தார்கள் யாழினியும் ராகவும், அங்கும் அவன் அவள் கையை விட்டபாடில்லை.

 

திருமணம் நிச்சயம் ஆனால் இப்படித்தான் கையைக் கோர்த்துக்கொண்டே திரிய வேண்டுமோ என்று மனதிற்குள் எழுந்த வினாவை அவனிடத்தில் கேட்கவும் செய்தாள் யாழினி

 

சட்டென்று கையை உதறியவன் தள்ளி நடந்தான்.

 

சரி நீங்க போங்க, நான் இதுக்கு மேல போய்க்குறேன் என்றாள் யாழினி

 

ஏன் இதுக்கு மேல எவனயாச்சும் வரச் சொல்லிட்டியா? இந்த பொட்டச்சிங்கள நம்பவே முடியாது என்றான் காட்டமாக.

 

இதென்ன வேதனை! அப்பாவோ அதிர்ந்து பேசாதவர், அவர் பார்த்த மணமகன், அவனோ இத்தனை கீழ்த்தரமாக பெண்களை எடைப் போட்டு வைத்திருக்கிறான். இல்லை ராகவ் சமூக வெளிகளின் பேசுகிற பேச்சு என்பது வேறு தொனியிலும் தன்னிடம் பேசும் தனிப்பட்ட பேச்சு வேறுவிதமாகவும் இருப்பதை நிதானித்திருக்கிறாள் யாழினி.

 

அங்க உட்காரலாம் என்றான் ராகவ்

 

வேண்டாம் வீட்டுக்குப் போகலாமே என்றாள் யாழினி

என்ன வீட்டுக்கு வீட்டுக்குன்னு, கொஞ்ச நேரம் என் கூட இரு யாழினி, எனக்கு எவ்வளவு பிரச்சனை எல்லாத்தையும் மறந்துட்டு கொஞ்ச நேரம் உன்கூட இருக்கலாம்ன்னு தானே வந்தேன்.

 

ஏதும் பேசாமல் அவனோடு சாலை விட்டு விலகி குன்று மறைவில் பரந்துகிடந்த பாறையின் மேல் போய் அமர்ந்தாள்.

 

அருகில் வந்தவன் அவள் மடியில் படுத்துக்கொண்டான். தலையை வருடும் படி அவள் கைகளை தலைக்குள் புதைத்தான்.

 

கோபமும் வீம்பும் வந்தன. அம்மா தனித்து வேலை செய்து கொண்டிருப்பாள். அப்பா வந்தாரோ இல்லையோ! வந்திருந்தால் சுடுதண்ணீர் வைத்துத்தர வேண்டும், அப்பாவால் தூக்கி விளாவ முடியாது. சிந்தனை வீட்டைச் சுற்றியே நகர்ந்தது.

 

அவள் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டான், எரிச்சலாய் வந்தது யாழினிக்கு, திருமணம் வரைக்கும் கூட ஒருவனால் பொறுக்க முடியாதா? காமத்தை அடக்க முடியாதவனா ஆண்? அவள் பெற்றோர் அருகருகே அமர்ந்துகூட பார்க்காதவள் அவள். அந்தரங்க விடயங்களை அந்தரங்கமாகவே வைக்கத்தான் கற்றுக் கொடுத்தார்கள்.

 

பிறை நிலா அவள் கோபத்தைக் கண்டு மேகத்தில் முகம் மறைத்தது. மெல்ல முகம் மேல் நகர அப்படியே பாறையில் அவளைச் சாய்த்தான். அவனின் அதரங்கள் அவள் இதழ்களை கவ்விச் சுவைத்தன. அவனின் மொத்த பாரமும் அவள் மேல் விழ நகர முடியாமல் கத்தவும் முடியாமல் திணறினாள் யாழினி.

 

தன் உடல் வலிமை எங்கு காணாமல் போனது. மனத்திண்மை தவிடு பொடியாகியது. அசைய விடாமல் அவன் இயங்கிக் கொண்டிருந்தான். அவள் மனதில் இடம்பெற்றிருந்த அந்த நளின மான முதலிரவுக் காட்சி கண்ணாடிச் சில்களாய் சிதறிக்கொண்டிருந்தது.

 

அவனின் இயக்கம் முடிந்து அவன் புரள, சட்டென்று எழுந்து நடுக்கமுடன் ஓடினாள் யாழினி, ஏய் யாழ் என்று அழைத்த அவனின் அழைப்பு அவளை தடுத்து நிறுத்த முடியவில்லை. மனமுவந்து கொடுப்பதற்கு பதிலாக வலிக்க வலிக்கப் பறித்துக் கொண்ட உணர்வு ஏற்பட்டது அவளுள்.

 

 

[தொடரும்]

Series Navigationவைரமணிக் கதைகள் – 13 காலம்தலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ராகவ் சந்தேகப் பேர்வழி என்பதை யாழினி அறிந்துகொள்கிறாள். திருமணம் ஆகுமுன்பே இந்தப் பிரச்னை தலையெடுத்து விடுகிறது. இந்தத் திருமணம் நடந்தால் நிச்சயமாக அதில் பூகம்பம் வெடிப்பது திண்ணம். ஆனால் இந்த சந்திப்பில் அவனிடம் தன்னை இழந்துவிடுகிறாள். இனி வேறு வழியில்லை அவளுக்கு. அவனுடன் சேர்ந்துதான் வாழவெண்டியுள்ள நிர்ப்பந்தம். இது எப்படி தொடரும் என்ற ஆவல் எழுகிறது. பரவாயில்லையே. தொடக்கத்திலேயே இந்த சிக்கலை உருவாக்கிவிட்டார் தமிழ்ச்செல்வி. பாராட்டுகள்….டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *