தமிழிசை அறிமுகம்

This entry is part 6 of 25 in the series 3 மே 2015

[குறிப்பு: இது தமிழிசை பற்றிய விரிவான கட்டுரை அல்ல. இந்தத் தமிழ்ப் புத்தாண்டிலிருந்து நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் தன்னுடைய நிகழ்ச்சிகளில் தமிழிசையை ஒரு நிரந்தர நிகழ்ச்சியாக வழங்க முடிவு செய்துள்ளது. மே 2, 2015 சனியன்று தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், பார்வையாளர்களுக்குச் சுருக்கமாக தமிழிசையை அறிமுகப்படுத்தி சில நிமிடங்கள் மட்டும் நான் பேசியதன் எழுத்து வடிவம் இது. நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் தமிழிசை நிகழ்ச்சியை நடத்தவும், ஒருங்கிணைக்கவும், தொகுத்து வழங்கவும் வாய்ப்பளித்த அதன் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி. – பி.கே. சிவகுமார்]
கேட்போரை இசைய வைப்பதால் – உடன்பட வைப்பதால் – அதை இசை என்கிறோம். ஆக, இசை நம்மை இசைக்கிறது. இசை என்ற சொல்லுக்கு உண்டு பண்ணுதல் என்ற பொருளும் உண்டு. இசை நம்மிடம் மனவெழுச்சியை உண்டாக்குகிறது. புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. உயிர்ப்பை உண்டாக்குகிறது. உண்டாக்குவதில் இசை கடவுளுக்கு நிகர். அதனால்தான் திருஞான சம்பந்தர் கடவுளைப் பாடும்போது ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்கிறார்.
இசை என்ற சொல்லுக்கு கட்டுதல் என்ற பொருளும் உண்டு. ஆமாம், இசை கேட்போரைப் பிணித்துக் கட்டிப் போடுகிறது. . ஆதிகாலம் முதலே எல்லா மதங்களிலும் இசை மனிதர்களுக்குப் ப்ரியமான விஷயமாக இருந்து வந்திருக்கிறது. மனிதர்களுக்குப் பிரியமான விஷயங்களை அவர்கள் கடவுளுக்குப் படைப்பது இயல்பு. அதனாலேயே வேதம், விவிலியம் உள்ளிட்ட மதம்சார் புனிதநூல்களிலெல்லாம் இசை பற்றிய விஷயங்களும் குறிப்புகளும் விரவிக் கிடக்கின்றன.
இந்த இசைக்கு மொழி இல்லை என்கிறார்கள். உண்மைதான். இசை வல்லுனர்களுக்கு – இசையின் நுட்பங்களை – ஆழ அகலங்களை அறிந்தவர்களுக்கு – இசை மொழியைத் தாண்டிய ஓர் வடிவம்தான். ஆனால், இசையை அறியாதவர்களுக்கு, இசையைக் கற்றுக் கொள்ள விரும்புகிற குழந்தைகளுக்கு, இசையின் ஆரம்பப் படிநிலைகளில் நின்றபடி ரசனானுபவத்துக்காக அதனுள் இறங்குகிறவர்களுக்கு, இசையின் மொழி மிகவும் முக்கியமானது. மொழியின் ஊடாகவே அவர்கள் இசைக்குள் நுழையவும் அதன் நுணுக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றறியவும் முடியும். அவர்களுக்கு மொழி இசையின் படிக்கட்டுகளில் கைப்பிடித்து அழைத்துச் சென்று அதன் அதிசயங்களைக் காட்டக் கூடிய ஒரு வழிகாட்டி.
இசைக்கு மொழி முக்கியமெனில் எம்மொழியில் அதைக் கற்பது? தாய்மொழி வழிக் கல்வி – தெரிந்த மொழியில் கற்பதே – கல்வி பெறுவதற்கு மிகச் சிறந்த வழி என்று அறிவியல் நிரூபித்துப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. உதாரணமாக, 1953ல் இருந்தே புனெஸ்கோ அமைப்பின் மூலம் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மூளை அறிவுத்திறனுக்கும் இதயம் உணர்வுக்கும் ஆகுபெயர்களாக நம்மிடையே நிறுவப்பட்டுள்ளன. மூளைக்கும் – அதாவது அறிவுத்திறனுக்கும் – இதயத்துக்கும் – அதாவது உணர்வுபூர்வமான விஷயங்களுக்கும் நெருக்கமான மொழியாக ஒருவருக்குத் தாய்மொழி இருக்கிறது. சொல்லப்போனால், மூளையின் ஒரு பகுதி அறிவுசார் விஷயங்களுக்கும் இன்னொரு பகுதி உணர்வுசார் விஷயங்களுக்கும் என்று நிரூபணமும் ஆகியிருக்கிறது.
புலம் பெயர்ந்த நாடுகளில் வேறு மொழிசார் சூழலில் வளர்கிற குழந்தைகளுக்குத் தமிழையும் தமிழ்க் கலைகளையும் சொல்லிக் கொடுப்பது கற்பதற்குச் சிறந்த வழி என்பது மட்டுமல்ல, மொழி மற்றும் நம் பண்பாடு சார்ந்த விஷயம் என்பது மட்டுமல்ல – தாய்மொழியில் முதலில் கலைகளிலும் கல்வியிலும் தேர்வதன்மூலம், நம் குழந்தைகள் பிற மொழிகளையும் பிறமொழி சார்ந்த கலைகளையும் அறிவது மிகவும் சுலபமாகிறது.
தமிழிசை தமிழைப் போலவே தொன்மையானது. நம்மிடையே தமிழ்ராக வடிவம் என்று சொல்லக்கூடிய தமிழ்ப்பண் இருந்திருக்கிறது; இருக்கிறது. இன்றைக்கு எல்லாவகை இசையையும் கர்நாடக இசை, தமிழ்ப்பண், மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை ஆகியவற்றை இசையறிந்த ஒருவர் இணைத்துவிட முடியும் – உதாரணமாக – இந்த கர்நாடக இசைராகம் இந்தத் தமிழ்ப்பண்ணை ஒத்தது என்று. ஆங்கிலத்தில் இதை மேப்பிங் என்கிறோம். அவ்வகையில் இன்றைக்குத் தமிழிசையைப் பரப்ப நாம் தமிழ்ப்பண்களை மட்டும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. இசையின் எல்லா வடிவங்களிலும் தமிழிசையைப் பரப்ப முடியும். ஆனாலும், நாம் திரையிசைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிற கேளிக்கைசார் சமூகமாக மாறிவிட்டிருக்கிறோம்.. இதன் பொருள் தமிழ்த் திரையிசை கூடாது என்பதில்லை. மரபான பிற இசை வடிவங்களான, சாஸ்திரிய இசை, நாட்டுப்பாடல்கள் போன்றவற்றுக்கும் உரிய இடம் தரப்பட வேண்டும் என்பதுதான்.
தமிழிசை இயக்கம் தமிழ்நாட்டில் 1941ல் சிதம்பரத்தில் தோன்றியது. அதுவரை சங்கீதக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்கள் கச்சேரியின் முடிவில் – துக்கடாக்களாகப் பாடப்பட்டு வந்தன. அவற்றுக்கு துக்கடா என்றே பெயர். தமிழுணர்வு சார்ந்த மொழிசார் குறுகிய நோக்கத்துக்காகத் தோன்றியது தமிழிசை இயக்கம் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனாலும், இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலரும் தமிழிசையின் தேவைக்குக் குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா அண்ணாமலை செட்டியார், ரத்னசபாபதி முதலியார், ஷண்முகம் செட்டியார், ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, கல்கி சதாசிவம் என்று பல்தரப்பட்ட அரசியல் கருத்துடையவர்களும் தமிழிசையை ஆதரித்தனர். தொடர்ச்சியாக மதுரை மணி ஐயர், தண்டபாணி தேசிகர், வசந்தகோகிலம், டி.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கச்சேரிகளில் தமிழ்ப்ப்பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து பாட ஆரம்பித்தனர். அம்மரபு இன்றும் தொடர்கிறது. நம்முடைய புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் அனைவரும் தமிழிசைக்கு உரிய இடமும் மரியாதையும் கொடுக்கிறவர்களாகவே தொடர்கிறார்கள்.
தமிழ்நாட்டிலேயே தமிழுடன் வாழ்கிறவர்களுக்கே தமிழிசைக்கு ஓர் இயக்கம் தேவைப்படுகிறதென்றால் – அயல்நாட்டில் – தமிழை வீட்டுக்குள் மட்டும் பேசுகிற தமிழர்களாகிய நமக்குத் தமிழிசையை ஆதரிப்பதும், அவற்றை நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவாவது செய்வதும் முக்கியம் இல்லையா? அவ்வகையில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டிலிருந்து நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கம் தன்னுடைய நிகழ்ச்சிகளில் தமிழிசைக்கும் இடம் ஒதுக்க முடிவு செய்திருக்கிறது. அதற்காக நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரைப் பாராட்டுகிறேன். முதன்முறையாகக் குழந்தைகள் சுருதிப் பெட்டியின் துணைகொண்டு மட்டும் தமிழ்ப் பாடல்கள் பாடப்போகிற இந்நிகழ்ச்சி அடுத்தடுத்து அவர்கள் வாத்தியங்களின் துணைகொண்டு கச்சேரி அமைப்பில் பாட வழிசெய்யும் நிகழ்ச்சியாக வளர நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கம் துணை நிற்கும். நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் புரவலர்களும், ஆதரவாளர்களும் இந்தத் தமிழிசை நிகழ்ச்சி தொடர்ந்து நம்முடைய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நடக்க ஆதரவளித்து உதவ வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நியூ ஜெர்ஸியின் 5 புகழ்பெற்ற இசை ஆசிரியைகள் தங்களின் மாணவ மாணவியரை இந்நிகழ்ச்சிக்குத் தயார் செய்து அனுப்பி உதவியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்கள் மாணவர்களுக்கு இயல்பாகவே தமிழ்ப் பாடல்களையும் சொல்லித் தந்து தமிழிசைக்குத் தொண்டாற்றுகிறவர்கள். அவர்களின் திறமைக்கும் புகழுக்கும் அறிமுகம் தேவையில்லை. அவர்கள், திருமதி விஜயஸ்ரீ சந்திரசேகரன், திருமதி சரோஜினி தனபாலசிங்கம், திருமதி புவனா ஐயர், திருமதி நெய்வேலி ராமலஷ்மி மற்றும் திருமதி டாக்டர் பவானி பிரசாத் ஆகியோர். அவர்களுக்கு நம் அனைவரின் பாராட்டுகளும் நன்றிகளும்.
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் – பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் என்கிறார் திருஞான சம்பந்தர். இசைத்தமிழால் பாடுகிறவர்களுக்கு இறைவன் மிகுந்த திருவருளைத் தருகிறார் என்பது இதன் எளிய பொருள். இங்கு இன்று இந்த இசைத்தமிழைப் பாடுகிறவர்களுக்கும் கேட்கிறவர்களுக்கும் இறைவனின் மிகுந்த திருவருள் கிடைக்குமென்பது உறுதி.
இதோ உங்களுக்காக இந்தத் தமிழ்ப் புத்தாண்டிலிருந்து நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கம் வழங்கும் தமிழிசை.

Series Navigationவெடிக்கும் விண்மீன்கள் வெளியேற்றும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியின் இடிமுகிலில் மின்னழுத்தம் அளக்க உதவுகிறதுகலை காட்சியாகும் போது
author

பி கே சிவகுமார்

Similar Posts

2 Comments

  1. Avatar
    mahakavi says:

    துக்கடா என்பதே இந்தி வார்த்தை தான். டுக்டா ஹோ கயா என்றால் துண்டு துண்டாக உடைந்து விட்டது என்று அர்த்தம். சின்ன துண்டுக்கு டுக்டா என்று பெயர். கச்சேரி முடிவில் குறைந்த நேரத்தில் பாடுவதால் அவற்றுக்கு துக்கடா என்ற பெயர்

  2. Avatar
    மோனிகா மாறன் says:

    இசையுடன் மொழி இணைவது மனதிற்கு இன்னும் நெருக்கத்தைத் தரும்.வெளி உலகில் தான் தாய்மொழி இன்னும் அருகாமையை உணரவைக்கிறது என எண்ணுகிறேனு.தமிழிசை முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *