தொடுவானம் 66. இனி சுதந்திரப் பறவைதான்

This entry is part 22 of 25 in the series 3 மே 2015
          .

எம்.பி. பி.எஸ். வகுப்பின் முதல் நாள் மறக்க முடியாததாகவே இருந்தது. வகுப்பு மாணவ மாணவிகளை ஒருவாறு அறிந்து கொள்ள முடிந்தது. அது மகிழ்ச்சியாகவே இருந்தது.

ஆனால் அன்று மாலை  விடுதி திரும்பியதும் அந்த மகிழ்ச்சி அனைத்தும் மறைந்து போனது. காரணம் அங்கு காத்திருந்த சீனியர் மாணவர்கள்தான். இன்று இரண்டாம் நாள் ரேகிங்! நாளை இறுதி நாள். இந்த இரண்டு இரவுகளைக் கடந்துவிட்டால் நாங்கள் சுதந்திரப் பறவைகளாகிவிடுவோம். அதன்பிறகு யாரும் எங்களைக் கண்காணிக்க மாட்டார்கள்!

அன்றும் கடுமையான ” இராணுவ டிரில் ” தான்! அதே இராணுவ உடையில், இடுப்பில் நீண்ட வாளுடன் அந்த இருவரும் காத்திருந்தனர். நேற்றை விட கடுமையான பயிற்சி! உடல் முழுதும் வலித்தது! அதை வெளியில் சொல்ல முடியாத நிலை. பயிற்சியை செய்ய முடியாதவர்கள் மீது வாளியில் வைத்திருந்த தண்ணீரை ஊற்றி மகிழ்ந்தனர்.

இருட்டிய பிறகுதான் அறைக்கு அனுப்பினர். குளித்துவிட்டு மீண்டும் உணவுக் கூடம் வரச் சொன்னார்கள். இரவு உணவு உண்டபின் நள்ளிரவு வரை எங்கள் ஒவ்வொருவரையும் சுற்றி கூட்டம் கூட்டமாக சீனியர் மாணவர்கள் சூழ்ந்துகொண்டு பல்வேறு கட்டளைகள் இட்டனர். எனக்கு பாடத் தெரியுமா என்று கேட்டனர். ஓரளவு தெரியும் என்றேன். அப்போ பாடு என்றனர். அப்போது ஜெமினி கணேசன் வைஜயந்திமாலா நடித்துள்ள ஸ்ரீதரின் ” தென் நிலவு ” திரைப்படம் வெளிவந்திருந்தது. அதில் ஏ. எம். ராஜா சுசிலா பாடியுள்ள ” ஓகோ எந்தன் பேபி ” என்ற பாடல் பிரசித்தி பெற்றிருந்தது. நான் அதைப் பாடினேன். அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதைத் தொடர்ந்து ஆடச் சொன்னார்கள். முடிந்தவரை ஆடினேன். என்ன பொழுதுபோக்கு என்று கேட்டனர். கதை எழுதுவேன் என்றேன். ஒரு கதை சொல்லச் சொன்னார்கள். ஒரு சிறுகதை கூறினேன். எந்த ஊர் என்றனர். சிங்கப்பூர் என்றேன். அப்போதிலிருந்து என்னை ” சிங்கப்பூர் மச்சான் ” என்று அழைத்தனர். ( அதன்பின் நான் தி. மு. க. அபிமானி என்று தெரிந்ததும் என்னுடைய புனைப்பெயர் டி.எம்.கே என்று மாறிவிட்டது. )

அன்று நள்ளிரவுக்குப் பின்புதான் மீண்டும் அறைக்குச் சென்றோம்.

இரண்டாம் நாள் காலையில் வகுப்புகள் இல்லை. கல்லூரி பேருந்தில் எங்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சி. எம். சி. மருத்துவமனை வேலூர் நகரத்தில் உள்ளது. நகரின் மத்தியில் பிரம்மாண்டமான கட்டிடங்களுடன்  அது காட்சி தந்தது. அந்தப் பகுதி வீதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் காணப்பட்டன. வெளியூர், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் அங்கு தங்குவார்கள். மருத்துவமனை பரபரப்புடன் காணப்பட்டது. பல்வேறு பிரிவுகளுடன்,  நவீன மருத்துவ வசதிகளுடன் புகழ் மிக்க மருத்துவமனையாக விளங்கியது வேலூர் சி. எம். சி. மருத்துவமனை. இந்தியாவில் வேறு இடங்களில் கைவிடப்பட்ட நோயாளிகள் கடைசியாக வந்து செல்லும் மருத்துவமனை என்ற பெயர் பெற்றிருந்தது.

நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் என்று எங்கும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. தாதியர்கள் பலர் கூட்டங்கூட்டமாக பணிகளுக்கு சென்றுகொண்டிருந்தனர். மருத்துவமனை வளாகத்தினுள்ளேயே தாதியர் பயிற்சிக் கல்லூரியும் இருந்ததால், நிறைய மாணவிகளும் சீருடையில் சென்று  கொண்டிருந்தனர். எங்கள் விடுதி சீனியர் மாணவர்கள் கழுத்தில் ” ஸ்டெத்தெஸ்கோப் ” மாட்டிக்கொண்டு பரபரப்புடன் சென்றுகொண்டிருந்தனர். மருத்துவப்  படிப்பில் மூன்றாம் ஆண்டிலிருந்து வகுப்புகள் மருத்துவமனையில் வார்டுகளிலும் வகுப்புகளிலும் நடைபெறும். விடுதியிலிருந்து காலையிலேயே கல்லூரி பேருந்துகளில் வந்துவிடுவார்கள், மாலையில்தான் விடுதி திரும்புவார்கள். மாணவர்களுக்கு ஓய்வுக் கூடம் உள்ளது. மதிய உணவு விடுதியிலிருந்து அங்கு வந்துவிடும்.

            முதலில் இரத்தப் பரிசோதனைக்கூடம் கொண்டு சென்றனர். அங்கு எங்களிடம் இரத்தம் எடுத்தனர். அனைவருக்கும் இரத்தப் பரிசோதனை செய்யப்படுமாம். அதன்பின்பு மருத்துவமனையின் சில பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். அது முடிந்தபின்பு நுழைவாயிலின் எதிர்புற வீதியில் இருந்த ” காலேஜ் புத்தகக் கடையில் ” சில பாட நூல்களை வாங்கிக்கொண்டோம். அங்கு அனைத்து மருத்துவ நூல்களும் இருந்தன. போதிய பணம் கிடைத்ததும் அனைத்தையும் வாங்கிக்கொள்ளலாம். வாங்கிய நூல்களில்  ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அது நாவல். அதை ஒரு முறை முழதுமாகப் படித்துவிடவேண்டும் என்று ஆவல் கொண்டேன். அதை ஆங்கில வகுப்பில் ஒரு வருடம் படித்தாகவேண்டும். ஒரு நூலை ஒரு வருடம் படிப்பதில் என்ன உள்ளது என்பது தெரியவில்லை.
          மதிய உணவுக்கு விடுதி .திரும்பிவிட்டோம். மீண்டும் இரண்டு மணிக்கு  வகுப்புகளுக்குச் சென்றோம். இடையில் அலுவலகம் சென்று கல்லூரிக்குச் செலுத்தவேண்டிய தொகையைக் கட்டினோம். விடுதிக்கான தொகையும் அதில் சேர்த்து கட்டினோம்.
          மாலையில் ரேகிங் தொடர்ந்தாது. இன்று கடைசி நாள் என்பதால் கடுமையாகவே இருந்தது. அதுவரை ரேகிங்கில் கலந்து கொள்ளாதவர்கள்கூட சிரமம் பாராது வந்து சேர்ந்துகொண்டனர். இரவு உணவுக்குப் பின்பு தொடர்ந்து இடைவிடாமல் தொடர்ந்தது. நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு  மாணவர்கள் அனைவரும் விடுதி நடுவில் இருந்த செயற்கைக் குளத்தின் அருகில் கூடினார்கள். அப்போது விடுதியின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. எங்களை உணவுக் கூடத்தில் உட்கார வைத்திருந்தனர். அங்கு எங்களுடைய கண்களை கறுப்புத் துணிகளால் இறுக கட்டிவிட்டனர். பின்பு ஒவ்வொருவராக எங்களை அழைத்துச் சென்றனர். குளத்தின் அருகே நிற்க வைத்து வாயில் கசப்பான எதையோ இட்டு விழுங்கச் சொன்னார்கள். அதன்பின்பு நீந்தத் தெரியுமா என்று கேட்டனர். தெரியாது என்றால் நீரில் மூழ்கி உயிர் போனால் யாரிடம் உடலை ஒப்படைப்பது என்று முகவரி கேட்டனர். குளத்தின் ஆழம் பத்து அடி என்று எச்சரித்தனர். எனக்கு ஓரளவு நீச்சல் தெரியும் என்றேன். பின்பு நான்கு பேர்கள் சேர்ந்து கைகளையும் கால்களையும் பிடித்து தூக்கி ஒண்டு இரண்டு மூன்று என்று சொல்லி எண்ணியபடி நீரில் வீசினர்! விழுந்த மாத்திரத்தில் அந்த குளிர்ந்த நீரில் முண்டியடித்துக் கொண்டு கண்ணில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து பார்த்தேன். சுற்றிலும் மாணவர்கள் நின்று கைகொட்டி ஆரவாரம் செய்தனர். நீரில் நின்று பார்த்தேன். அது பத்து அடி ஆழம்  இல்லை.ஐந்து அடிதான் இருக்கும். தப்பித்தோம் பிழைத்தோம் என்ற நிலையில் நீந்தி ஒரு ஓரம் வந்தேன். அவர்களில் சிலர் கைகொடுத்து வேலையே வர உதவினர்.
          அதன்பின் நடந்ததை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை! ஒவ்வொரு சீனியர் மாணவரும் கட்டித் தழுவி வாழ்த்து கூறினார்! என்னால் அதை நம்பவே முடியவில்லை! இவ்வளவு பாசத்தையும் பரிவையும் மனதில் வைத்துக்கொண்டுதானா அவ்வளவு கடுமையாக நடந்துகொண்டனர்? இப்படியும் ஒரு நடிப்பா? அவ்வாறு அனைத்து மாணவர்களும் குளத்தில் ” மூழ்கிய ” பின்பு எங்கள் அனைவரையும் வெகுவாகப் பாராட்டியதோடு அன்போடு எங்களை தங்களுடன் விடுதியில் சேர்த்துக்கொள்வதாகக் கூறினார்கள்!  அந்த ரேகிங் இறுதிக் காட்சியைக் காண விடுதியின் ” வார்டன் ” கூட வந்திருந்தார். அவருடைய இல்லம் விடுதியுடன் சேர்ந்த மாதிரிதான் ஒரு மூலையில் இருந்தது. அவரின்  பெயர் தாமஸ் என்பது. அவரும் மலையாளிதான்.
          அன்று இரவுதான் நிம்மதியாகத் தூங்கினேன். இனிமேல் எந்த கவலையும் இல்லை. இனிமேல் நான் முழுமை பெற்றுவிட்ட சுதந்திர மருத்துவ மாணவன். இனி எது பற்றியும் கவலை கொள்ளாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
          இத்தனை வருடங்கள் நான் கொண்டிருந்த இலட்சியக் கனவு ஓரளவுக்கு நிறைவேறிவிட்டது. அன்று இரவு கடந்த காலத்தையும் நினைவு கூர்ந்தேன். அப்போது முதல் வகுப்பிலிருந்து முதல் மாணவனாகவே தேறியது , பின்பு லதாவைக் காதலித்தது, அப்பாவின் கடுமையான கண்டிப்பு, தமிழகம் வந்தது, வேரோனிக்காவிடம்  மயங்கியது, ஊரில் கொகிலத்தைச் சந்தித்தது கடைசியில் வேலூரில் மருத்துவக் கல்லூரி விடுதி அறையில் படுத்திருப்பது அனைத்தும் மின்னல் போல் மனதில் தோன்றி பளிச்சிட்டது!
          விடிந்ததும் என்னைக் காணும் சீனியர் மாணவர்களின் நடத்தைகள் அனைத்துமே என்னை வியப்பில் ஆழ்த்தியது! இப்படியும் அன்பு காட்ட முடியுமா என்ற எண்ணமே நிலைத்தோங்கியது. ரேகிங் பொது எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டார்களோ அதற்கு நேர் எதிராக அன்பு காட்டினர்.
          காலையில் உணவுக் கூடத்தில் பசியாறியபோது அந்த ” பங்கர பீல்டு மார்ஷல் ” என்னைப் பார்த்து கைகொடுத்து தான் ” அஜீத் சிங்க் ” என்று அறிமுகம் செய்துகொண்டார். அவர் வட நாட்டவர் என்ற என்னுடைய யூகம் சரியானது. ஆம். அவர் பஞ்சாப் மாநிலத்தவர்!
           அதுபோன்றுதான் அந்த ” உதவி பீல்டு மார்ஷல்” மலேசிய நாட்டைச் சேர்ந்த சீன இனத்தவர்தான். அவருடைய பெயர்தான் ” சியா மன் புக் ” என்பது. அதைத்தான் மாற்றி   ” பக் ” என்று அழைத்துள்ளனர்! நான்கூட அது எந்த நாட்டு மொழி எ ன்று எண்ணியிருந்தேன்.
இதுவரை நாங்கள் சீனியர்களின் அறைகளில் தற்காலிகமாகத் தனியிருந்தோம். இன்று மாலையில் எங்களுக்கு சொந்த அறைகள் வழங்கப்படும். விடுதியிலேயே ஒரு அலுவலகம் உள்ளது. அதை சண்முகம் என்பவர்தான் கவனித்து வந்தார். அது இரவு ஒன்பது வரை திறந்திருக்கும். அங்கு தான் நாங்கள் கூடினோம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனி அறைகள் கிடையாது. நான்கு பேர்கள் ஒரு அறையில் தங்கவேண்டும்.அந்த நான்கு பேர்கள் யார் என்பதை சீட்டு போட்டு எடுத்தோம்.
          என்னுடன் தங்குபவர்கள் சம்ருதி ஜோசப், கணேஷ் கோபாலகிருஷ்ணன், தாமஸ் மாமன் என்பவர்கள். இவர்களில் சம்ருதி ஆந்திராவைச் சேர்ந்தவன். கணேஷ் தமிழ் நாடு. மாமன் கேரளா.கணேஷ் தவிர நாங்கள் மூவரும் கிறிஸ்துவர்கள். கணேஷ் தமிழ் இந்து பிராமணன். நாங்கள் நால்வரும் இனி ஒரு வருடம் ஒரு அறையில் தங்குவோம்.
          அது பெரிய அறைதான். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு கட்டில், மேசை நாற்காலி, அலமாரி ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. ஆர்தருக்கு நன்றி கூறிவிட்டு அன்று இரவே என்னுடைய பட்டி படுக்கையை புது அறைக்கு மாற்றினேன்.இனி கவலை இல்லை. என்னுடைய சொந்த அறையில் என்னுடைய கட்டிலில் படுத்து உறங்கலாம். பேச்சுத் துணைக்கு மூவர் உள்ளனர். போட்டி போட்டுக்கொண்டும் படிக்கலாம்.
         மற்ற மாணவர்களைப் பற்றி கூறுமுன் முதலில் என் அறைத் தோழர்கள் பற்றி கூறிவிடுகிறேன்.
          கணேஷ் உயரமாக நல்ல நிறத்துடன் உள்ளவன். எல்லாரிடமும் நன்றாகப் பழகுகிறவன். சீக்கிரமாக நண்பர்களை சேர்த்துக்கொள்கிறான். அறையில் அமர்ந்து பாடங்களை தவறாமல் படிக்கிறான். சில வேளைகளில் எங்களிடம் ஏதாவது பேசிக்கொண்டே பாடங்கள் எழுதுவதில் கவனம் செலுத்துவான். நாங்கள் வெறுமனே அமர்ந்து அவனிடம் பேசிக்கொண்டிருப்போம்.
          தாமஸ்  மாமன் உடலை கட்டாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துபவன். விடுதிக்குப் பின்புறம் ” ஜிம் ” உள்ளது. மாலையில் அங்கு சென்று உடற்பயிற்சி செய்வான். அங்கு சில சீனியர் மாணவர்களுடன் குத்துச் சண்டைப் பயிற்சி செய்வான். அறையில் இருக்கும்போது நிலைக்கண்ணாடி முன் நின்று குத்துச் சண்டை செய்வதுபோல் பாவனை செய்து தன்னைத்தானே இரசித்துக்கொள்வான்.சில நேரங்களில் வண்ணங்களில் ஓவியங்களும் வரைவான்.
           சம்ருதி கருப்பாக இருப்பான். ஆனால் நன்றாக உடை அணிந்துகொண்டு ஒப்பனை செய்துகொண்டு எப்போதும் கவர்ச்சியாகவே காணப்படுவான். அவனுக்கு இந்திப் பாடல்கள் பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் மத்தியில் முகமத் ரபி, ஜேசுதாஸ் பாடல்களைப் பாடி கைத்தட்டல் பெறுவான். அவனுக்கு ஆஸ்த்மா இருந்தது. சில இரவுகளில் மூச்சுத் திணறலால் மிகவும் சிரமப் படுவான். அப்போதெல்லாம் நான்தான் அவனைக் கண்காணித்துக்கொள்வேன்.
          நான் வழக்கம்போல் நாவல்கள் படிப்பதிலும், சிறுகதைகள் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தேன். ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டேன்.வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்தவில்லை. வேலூர் கோட்டை மைதானத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி. ஆர். எஸ்.எஸ்.ஆர். போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் பேச வந்தால் தவறாமல் சென்று  விடுவேன். இலக்கியம் பற்றி பேச செல்வராஜ் என்ற தமிழ் ஆசிரியரின் நட்பு கிட்டியது. அவருடைய இல்லம் கல்லூரியின் அருகில்தான் இருந்தது. அவர் அடிக்கடி என் அறைக்கு வருவார். நாங்கள் தமிழ் இலக்கியம் பற்றியும், தமிழக அரசியல் பற்றியும் நிறைய பேசுவோம்.
          அறை நண்பர்களைத் தவிர வேறு சிலரும் எனக்கு நெருங்கிய நண்பர்களானார்கள்.. எந்தக் குறையும் இல்லாமல் நாட்கள் இனிமையாக நகர்ந்து சென்றன.
( தொடுவானம் தொடரும் )
Series Navigationநாடக விமர்சனம் வாட்ஸ் அப் வாசுமிதிலாவிலாஸ்-12
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *