முனைவர் ந.பாஸ்கரன்,
தமிழாய்வுத்துறை,
பெரியார் அரசு கலைக் கல்லூரி,
கடலூர்-1.
பழந்தமிழரின் வாழ்வியலைப் பலநிலைகளில் பழந்தமிழிலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பழந்தமிழர் மிக வளமான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர் என்ற செய்தியைப் பொதுமையாகக் கூற வாய்ப்புகளில்லை. அன்றும் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்குப் பல்வேறு பாடுகளைப் பெரும்பாலானத் தமிழர்கள் எதிர்கொண்டுள்ளனர். இன்றைக்கு அதிகமாகக் காணப்படும் சூது, வஞ்சம் போன்ற மனிதமனங்களின் அழுக்கு அன்றைக்கு மிகப்பெரும்பான்மையும் இல்லை என்றே துணியலாம். பலர் வளமாக இருக்க அவர்களிடையே ஒருவர் வறுமையுற்றிருந்த நிலைக்கான சமுதாய மற்றும் பொருளாதார சூழல் அன்று இருந்துள்ளது. இன்றோ ஒருவர் வளமாக இருக்க அவரைச்சுற்றி பலர் வறுமையுடன் வாழும் நிலை இன்றைக்கான சமூக பொருளாதார சூழலாக நிலவுகிறது. எனவே, மக்கள் தங்களுக்கான வாழ்க்கைப் போராட்டத்தை அவரவர்க்கான களத்தில் அவரவர் எதிர்கொண்டு வருகின்ற எதார்த்தம் அன்றிலிருந்து இன்றுவரை நிகழ்ந்துகொண்டேதான் வருகின்றது. அவ்வகையில் சங்ககால தமிழர்கள் சிறிய மற்றும் பெரிய அளவிலான வியாபாரங்களைச் செய்து வந்துள்ளனர். கடைகளை அமைத்துக்கொண்டு கடைவியாபாரிகளாகவும், தெருவில் இறங்கி பொருள்களைச் சுமந்துகொண்டு நடைவியாபாரிகளாகவும் வியாபாரத்தைச் செய்துவந்துள்ளனர். அவர்களில் சிறிய அளவில் தெருவில் இறங்கி வியாபாரங்களைச் செய்த பெண் நடைவியாபாரிகளைப் பற்றி மட்டும் எட்டுத்தொகை இலக்கியங்களில் உள்ள பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.
பூ விற்கும் பெண்கள் (பூக்காரி)
சங்ககாலத் தமிழர்கள் மலர்களை அதிகமாகப் பயன்படுத்தி உள்ளனர். பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் மலர்களை அணிந்து மகிழ்ந்துள்ளனர். அகம், புறம் என்ற இருநிலைகளிலும் மலர்களைப் பயன்படுத்தியுள்ளனர். வெட்சி, கரந்தை,வஞ்சி போன்ற புறநிலைகளில் போருக்குச் செல்லும் ஒவ்வொரு கட்டத்திலும் மலர்களை மார்புகளிலும், தலையிலும் ஆண்கள் சூடி சென்றுள்ளனர். பலவகையான மலர்களையும் அவைகளுக்குரிய தழைகளையும் ஒன்றாக வைத்து அதனை கையுறையாக கொடுத்து பெண்களை மகிழ்வித்துள்ளனர். அத்துடன் கடவுள் வழிபாட்டின்போது மலர்களுக்கு முக்கியத்துவத்தை அளித்துள்ளனர். நெல்லையும் முல்லைமலர்களையும் தூவி அதன்நடுவில் விளக்கினை ஏற்றி வைத்து கடவுள் வழிபாட்டை செய்துள்ளமையை முல்லைபாட்டு காட்டுவதன்வழயாக இதனை அறிந்துகொள்ள முடிகிறது. வீடுகளின் கூரை, வேலி மற்றும் முன்பந்தல் போன்றவையாகவும் மலர்க்கொடிகளை வளர்த்து பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு தமிழர்கள் கொண்டாடிய மலர்களை பெண்கள் செடிப்பூ, கொடிப்பூ மற்றும் மரங்களில் உள்ள கோட்டுப்பூ என யாவற்றையும் பறித்து விற்பனை செய்துள்ளனர்.
தெருத்தெருவாக சென்று பெண்கள் இப்பூக்களை விற்று அதில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வாழ்ந்துள்ளனர். தட்டு, பனையோலைக்கூடை போன்றவற்றில் மலர்கள், மாலைகள் போன்றவற்றை எடுத்துச் சென்று விற்று வரக்கூடிய தொழிலைச் செய்துள்ளனர். இதனை,
“..பைங்குறுக்கத்தியொடு
பித்திகை விரவுமலர் கொள்ளீரோ என
வண்டுசூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மடமகளே” (நற்- முல்லை- பாடல்., 97)
“… பாதிரி, வால் இதழ்அலரி வண்டுபட ஏந்தி
புதுமலர் தெருவதொறு நுவலும்
நொதுமலாட்டி…” (நற்- பாலை- பாடல்., 118)
“கோடல் எதிர் முகைப் பசுவீ முல்லை
நாறு இதழ் குவளையொடு இடைிடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை” (குறுந்- பாலை- பாடல்., 118)
என்ற எட்டுத்தொகை பாடல்கள் வழி அறிந்துகொள்ள முடிகிறது.
குறுக்கத்தி, பித்திகை, பாதிரி, அலரி, முல்லை, குவளை போன்ற வகை மலர் வகைகளை விற்பனை செய்துள்ளனர். எயினர் குலத்தைச் சார்ந்த பெண்கள் இழுப்பை மலர்களை வீதிதோறும் எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளனர். (அகம்- நி.கோவை, 331) இவ்வாறு, மலர் விற்கும் பெண்கள் வட்டி எனப்படும் தட்டுகளிலும், கடகப்பெட்டி எனப்படும் கூடைகளிலும் எடுத்துச்சென்று விற்றுள்ளனர். அவ்வாறு அவர்கள் விற்பதற்காக எடுத்துச் செல்லும் மலர்களெல்லாம் அன்றலர்ந்த புதுமலர்கள் என்பதால் அவை தேன் ஒழுக இருக்குமாம். அதனால், அம்மலர்களின் மீது வண்டுகள் மொய்க்குமாம். அக்காட்சி மலர்க்கூடையை எடுத்துக்கொண்டு வீதியில் விற்றுச்செல்லும் அப்புக்காரியின் பின் வண்டுகள் பந்தல் போட்டதுபோல் செல்லும் என இலக்கியம் கூறுகின்றது. மேலும், உழவுத்தொழில் செய்யும் உழவரின் மகள் இவ்வியாபாரத்தைச் செய்பவள் என்பதையும் இப்பாடல் சான்றுகளின்வழி அறியமுடிகிறது. இப்பெண்கள் தலையிலும் இடுப்பிலும் புக்களை விற்பனைக்கா வீதியில் எடுத்துச்செல்லும் பெண்கள் “பூ விலை பெறுக” என கூவிக்கொண்டே செல்வர் என்பதையும் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. (புறம்- பா.எ 32)
பூக்களைப் பல தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் மாலைகளை பல வகைகளாகக் கட்டி விற்பனைச் செய்துள்ளனர். இதனை,
“பல கோள் செய் தார்…” (புறம்- பா.எண்-397.)
என்ற எட்டுத்தொகை நூலொன்றின் பாடலடி கூறுகின்றது. பெண்கள் அணியும் மாலைகளைக் கோதை என்றும், ஆண்கள் அணியும் மாலைகளைத் தார் என்றும் குறிப்பிடுவர்.
பூ விற்பனை செய்பவர் கூடைகளும் தட்டும் நிரம்பி வழியும்படியாக பூக்களையும் மாலைகளையும் எடுத்துவந்து விற்பனை செய்துள்ளனர். அப்படி வியாபாரம் செய்கின்ற போது வாங்குகின்றவர்களிடம் பொருளுக்கேற்ற விலைகளைக் கூறி விற்பனையைச் செய்துள்ளனர். இதனை,
“மல்கு அகல் வட்டியர்,
கொள்பு இடம் பெறாஅர் விலைஞர்”(அகம்- நி.கோவை, 391)
என்ற பாடற்பகுதியால் உணரமுடிகிறது. விலையைக் கூவி விற்பனைசெய்வதால் இவரை “விலைஞர்” என சுட்டியிருப்பதை உணரமுடிகிறது.
தயிர் விற்கும் பெண்கள்
ஆடு மாடுகளை வைத்து மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலப் பெண்கள் தயிர்களை புளிப்புத் தன்மையுடன் தயாரித்து விற்று வந்துள்ளனர். அப்படி விற்பனைக்குச் செல்லும்போது தயிருக்கு மாற்றாக காசுகளைப் பெறாமல் நெல் போன்ற சமையல் தானியங்களைப் பண்டமாற்றாகப் பெற்று ள்ளனர். இதனை,
“…..ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பு நிறைய
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்நெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்” (புறம்-பா.எண் 32)
என்ற பாடற்பகுதி வெளிப்படுத்துகின்றது. இப்பாடல்வழி ஒரு பானைத் தயிருக்கு ஒரு கடகப்பெட்டி நிரம்ப நெல்லைப் பண்டமாற்றாக கொடுத்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. மேலும், வயற்காட்டினைச் சொந்தமாக கொண்டிருந்த பெண்கள் பெரிய இல்லங்களில் வாழக்கூடிய வசதியைப் பெற்றவராக வாழ்ந்துள்ளனர். ஆயர்குலப் பெண்கள் அவர்களை நோக்க சற்று குறைந்தவர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை உணரமுடிகிறது.
கூழ் விற்கும் பெண்கள்
ஆயர்குலப்பெண்கள் தங்களிடம் உள்ள தயிரை விற்பனைச் செய்வதுபோல கூழ் வியாபாரமும் செய்துள்ளனர். தயிரை புளிக்கவைத்து அத்தயிரில் உரலில் இட்டு நன்றாகக் குத்தி சுத்தம் செய்யப்பட்ட வரகைக் கலந்து நன்றாக ஊறவைத்து கூழாகக் கரைத்து அக்கூழினை விற்பனைச் செய்துள்ளனர். (புறம்-பா.எண் 215)
புட்டு விற்கும் பெண்கள்
நெய்தல் நிலத்தில் வாழும் புலைத்தி தொழிலைச் செய்யக்கூடிய ஒரு பெண் புட்டு என்ற உணவுப் பொருளைத் தயாரித்து விற்று வருகின்றாள். அப்புட்டினைப் பனையோலையால் செய்யப்பட்டுள்ள புட்டில் எனப்படும் பனையோலைக் குடுவையில் வைத்து விற்பனைச் செய்துள்ளாள். இதனை,
“மாதர் புலைத்தி விலையாக செய்ததோர்
போழில் புனைந்த வரிப்புட்டில்” (கலி- 117)
என்ற பாடற் பகுதியின் மூலம் அறியமுடிகிறது.
சங்ககாலத் தமிழர்களில் பெண்கள் மனையுறை மகளிராக மட்டுமே வாழவில்லை. குடும்பம் நடத்துவதற்கான பொருளாதாரப் பங்களிப்பிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களாகவே வாழ்ந்துள்ளனர். பெண்கள் உப்பு தயாரித்தல், மீன்விற்றல், ஆடை தயாரித்தல், மட்பாண்டம் செய்தல், சலவைசெய்தல் போன்றவற்றிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வினையாற்றி உள்ளனர். எட்டுத்தொகை இலக்கியம் இவற்றையெல்லாம் உளளட விரிவஞ்சி அவற்றை மற்றுமொரு கட்டுரையாக்கும் எண்ணத்துடன் நிறைவு செய்கின்றோம்.
- ஏன் எப்போதுமே இந்துக்களே தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்?
- கைவிடப்படுதல்
- ஏமாற்றம்
- நிழல் 38 குறும்பட பயிற்சி பட்டறை
- வெடிக்கும் விண்மீன்கள் வெளியேற்றும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியின் இடிமுகிலில் மின்னழுத்தம் அளக்க உதவுகிறது
- தமிழிசை அறிமுகம்
- கலை காட்சியாகும் போது
- யாமினி கிருஷ்ணமூர்த்தி (8)
- பயணம்
- ஒரு மொக்கையான கடத்தல் கதை
- நல்ல காலம்
- பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார்
- Release of two more books in English for teenagers
- விவேக் ஷங்கரின் ஐ டி ( நாடகம் )
- எட்டுத்தொகை இலக்கியங்களில் வியாபாரம் (வீதி நடை பெண் வியாபாரிகள்)
- போன்சாய்
- மஞ்சுளா கவிதைகள் – ஒரு பார்வை ” மொழியின் கதவு ” தொகுப்பு வழியாக …..
- இந்த கிளிக்கு கூண்டில்லை
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4
- வைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்
- நாடக விமர்சனம் வாட்ஸ் அப் வாசு
- தொடுவானம் 66. இனி சுதந்திரப் பறவைதான்
- மிதிலாவிலாஸ்-12
- பிரியாணி
- நற்றமிழ்ச்சுளைகள் – [நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]
பழந்தமிழ் பெண்கள் எவ்வாறு தெருக்களில் வியாபாரம் செய்து பொருளீட்டினர் என்பதை எட்டுத்தொகை பாடல்களின் மேற்கோள்கள் மூலம் அழகுபட சித்தரித்துள்ளார் முனிவர் ந. பாஸ்கரன் அவர்கள். பூ விற்கும் பூக்காரியின் பின் பந்தல் போட்டது போன்று வண்டுகள் பின் தொடர்வது புதுமையான அருமையான வர்ணனை. இதுபோன்று அன்றைய தமிழ்ப் புலவர்கள் மிகவும் நுணுக்கமாக பாடல்களைப் பாடிச் சென்றுள்ளது நம்மை வியக்க வைக்கிறது! அன்றைய தமிழக கிராமத்து வீதிகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ள தங்களுக்கு என்னுடைய பாராட்டுகள்! அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.