மிதிலாவிலாஸ்-13

This entry is part 13 of 26 in the series 10 மே 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

அன்றுதான் சித்தார்த்தை நர்சிங் ஹோமிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப் போகிறார்கள். அபிஜித் நான்கு மணிக்கு தான் வந்து விடுவதாகவும், இருவரும் சேர்ந்து சித்தார்த்தை வீட்டில் கொண்டு போய் விடுவோம் என்றும் சொல்லியிருந்தான்.
மதியம் மூன்று மணி நெருங்கிக் கொண்டிருந்தது. மைதிலி அபிஜித்தின் வருகைக்காகக் காத்திருந்தாள். சித்தார்த் டிசைன் செய்த ஆடைகளில் சோனாலியின் போட்டோக்களைப் பார்த்த பிறகு மைதிலிக்கு சித்தார்த் மீது பிரியம் மேலும் கூடிவிட்டது. அபிஜித்தும் காபி அருந்தும் போது கூட அந்த போட்டோக்களை கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். “இவ்வளவு நல்ல காம்பினேஷன் அவனுக்கு எப்படி சாத்தியம் ஆயிற்று?” என்று வியப்படைந்து கொண்டிருந்தான்.
மைதிலி அந்த போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்த போது போன் ஒலித்தது. உடனே எடுத்து ‘நான் ரெடி’ என்று சொல்லப் போனாள்.
மறுமுனையிலிருந்து பேசியது அபிஜித் இல்லை. அவனுடைய பி.ஏ. வர்த்தன். “சார் வேறு வேலையாய் பிசியாக இருக்கிறார். நர்சிங் ஹோமுக்குப் போவது தோது படாது என்றும், மாலையில் வீட்டுக்குப் போய் பார்க்கலாம் என்றும் சொல்லச் சொன்னார் நர்சிங் ஹோமில் பணம் எல்லாம் கட்டி சித்தார்த்தை வீட்டில் கொண்டுவிடச் சொல்லி என்னிடம் சொன்னார். நான் போகப் போகிறேன்” என்றான்.
மைதிலியை ஏமாற்றம் சூழ்ந்துகொண்டது. போனை வைத்து விட்டாள். இது சாதாரணமாக நடக்கும் விஷயம்தான். இதில் விசேஷம் எதுவும் இல்லை. அபிஜித்துக்கு சிலசமயம் மூச்சு விட முடியாத அளவுக்கு வேலைகள் வந்து விடும். சொன்ன நேரத்திற்கு வரமுடியாமல் போனபோது அவன் நொந்து கொண்டால் மைதிலி சொல்லுவாள். “அப்படி வருத்தப்பட்டுக் கொள்ளத் தேவை இல்லை. நான் நிம்மைதியாக வீட்டில் இருக்கிறேன்” என்று சமாதானப் படுத்துவாள்.
ஆனால் இன்று அப்படி இல்லை. சொன்னது போல் கணவன் வராததில் ரொம்ப கோபம் வந்தது. நாற்காலியில் உடகார்ந்து பைலைத் திறந்து இந்த மாதம் மாதர் சங்கத்தில் செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை பார்வையிடத் தொடங்கினாள். ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை. பைலை மூடிவிட்டு பக்கத்தில் போட்டாள். எழுந்து அறையில் குறுக்கும் நெடுக்கும் நடையைப் பயின்றாள். ‘அபிஜித் வரவில்லை என்றால் என்ன? நீ போய் வரலாம் இல்லையா?’ ஏதோ தெரியாத சக்தி கேள்வி கேட்பது போல் தோன்றியது. சித்தார்த் வீட்டிக்கு போனதுமே பாட்டியுடன் ஏதாவது ரகள ஏற்பட்டால் எப்படி சமாளிப்பான்? அவன் ஆஸ்பத்திரியில் இருப்பது தெரிந்து தான் வந்து பார்க்கப் போவதாக அழுது ரகளை செய்து கொண்டிருப்பதாக கண்ணாயிரம் தெரிவித்து இருந்தார். சித்தார்த் விருப்பபடவில்லை.
“வேண்டாம்” சுருக்கமாக சொல்லிவிட்டான். கண்ணாயிரம் மேற்கொண்டு வாதம் புரியவில்லை.
“அவன் வாய் வழியாக வேண்டாம்.. கூடாது என்று மட்டும் வந்தால் இனி அதற்கு மறுபேச்சு இருக்காது. வேண்டாம் விடுங்க. அந்தக் கிழவியின் வாய் ரொம்ப நீளம். பிலாக்கணம் பாட அராம்பித்தால் என்றால் நம்மால் சமாளிக்க முடியாது” என்றார்.
ஏனோ சித்தார்த் விஷயத்தில் தனக்கு ஒவ்வொரு சின்ன விஷயமும் பிரத்யேகமாகத் தோன்றுகிறது. இந்த தாமதத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மைதிலி உடனே போன் செய்தாள். வர்த்தன் எடுத்தான்.
“நான் நர்சிங் ஹோமுக்குப் போகிறேன். நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
“ஆனால் சார் பில் பே பண்ணச் சொன்னார்” என்று முணுமுணுத்தார்.
“நான் பார்த்துக் கொள்கிறேன். ஒரு வேலையாய் அந்தப் பக்கம்தான் போகிறேன். சார் கேட்டால் சொல்லி விடுங்கள்” என்று போனை வைத்து விட்டாள். இந்த முடிவை வெளிப்படுத்திய பிறகு மனம் இலேசாகி விட்டது போல் இருந்தது.
மைதிலி நேரத்தைப் பார்த்துக் கொண்டாள். எப்படியும் தையல் சம்பந்தப்பட்ட சில பொருட்களை மிசெஸ் மாதுர் வீட்டில் கொடுக்க வேண்டும். அங்கிருந்து அப்படியே நர்சிங் ஹோமுக்குப் போனால் சரியாக இருக்கும். உடனே பேக்கையும், கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். “ராஜம்மா! அய்யா போன் செய்தால் நான் நர்சிங் ஹோமுக்குப் போயிருப்பதாக சொல்லி விடு” என்றாள்.
“ஆகட்டும் அம்மா. நீங்க மறுபடியும் எப்போ திரும்பி வருவீங்க?”
“ஒரு மணி நேரத்தில் வந்து விடுவேன்.” மைதிலி அறையை விட்டு வெளியே வந்து கொண்டே சொனாள்.
மைதிலி நர்சிங் ஹோமுக்குப் போய் சேரும் போது சித்தார்த் அறைக்கு வெளியே விசிட்டர்ஸ் பெஞ்சில் உடாகார்ந்திருந்தான். அப்படி உட்கார்ந்திருப்பதிலும் அதே பற்று இல்லாத தன்மை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் சந்தடியை பொருட்படுத்தாத நிர்விசாரம்.
“ஹலோ!” என்றாள் மைதிலி அருகில் வந்து.
அவன் திடுக்கிட்டாற்போல் பார்த்தான். மைதிலியைப் பார்த்ததும் எழுந்து நின்றுகொண்டான்.
“வீட்டுக்குப் போவதற்கு ரெடியா?” முறுவலுடன் கேட்டாள்.
அவன் கண்கள் அவளுக்குப் பின்னால் யாரையோ தேடின. மைதிலிக்கு அந்த தேடுதல் புரிந்தது. “உங்க சார் வரவில்லை. வேலை வந்து விட்டது. என்னை வீட்டில் கொண்டுவிட்டு வரச் சொன்னார்.” மைதிலி நர்சை தேடிக் கொண்டு போனாள். சித்தார்த்தின் டிஸ்சார்ஜ் பேப்பர்களை வாங்கிக் கொண்டாள். பேக்கைத் திறந்து பில்லுக்கு உண்டான பணத்தைக் கொடுத்தாள்.
“ஒரு நிமிஷம் உட்காருங்கள் மேடம். நான் பணம் கட்டிவிட்டு ரசீதைக் கொண்டு தருகிறேன்.” நர்ஸ் போய் விட்டாள்.
மைதிலி நர்ஸ் கௌண்டர் அருகில் நின்றபடி சுற்றிலும் பார்த்தாள். சித்தார்த் நின்று கொண்டுதான் இருந்தான். மைதிலியின் கண்கள் அவன் போட்டுக் கொண்ட டிரெஸ்ஸை பார்த்தன. தான் கொண்டு வந்த உடை அவனுக்கு அளவு சரியாக இருக்கிறது. அந்த உடையில் அவன் பணக்கார வீட்டுப் பையன் போல் தென்படுகிறான். மைதிலியால் பார்வையை அவனை விட்டு திருப்ப முடியவில்லை.
அவன் அருகில் செல்ல வேண்டும் என்றும், தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு நெருங்க வேண்டும் என்றும் மனம் தவித்துக் கொண்டிருந்தது. தன் மனதில் இது போன்ற பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் வருவானேன் என்று பயமாகவும் இருந்தது.
அபிஜித் வரவில்லை என்றாலும் தானே முடிவு செய்து இங்கே வந்தது நல்ல காரியம் என்று தோன்றியது. மனதிற்கு திருப்தியாகவும் இருந்தது. வர்தன் மூலமாகவோ, வேறு யாரையோ அனுப்பி சித்தார்த்தை வீட்டில் கொண்டு விடச் சொல்வதை, அந்த எண்ணத்தை கூட அவளால் தாங்க முடியவில்லை.
நர்ஸ் பாகி பணத்தை, ரசீதை கொண்டுவந்து கொடுத்தாள்.
“தாங்க்யூ” என்றாள் மைதிலி.
“இந்த பையன் யார் மேடம்? உங்களுக்கு ரொம்பவும் வேண்டியவனா?” மைதிலி நேரில் வந்ததால் ஆர்வம் தாங்க முடியாமல் நர்ஸ் கேட்டுவிட்டாள்.
“ஆமாம். ரொம்பவும் வேண்டியவன்” என்றாள் மைதிலி. அப்படி சொல்லுவதில் ஏதோ நிறைவு. “இவன் எங்களுக்கு ரொம்பவும் வேண்டியவன்.” என்ற சொற்கள் மனதில் எதிரொலித்து சந்தோஷ அலைகளாய் ஓட்டமெடுத்தன.
மைதிலி சித்தார்த் அருகில் வந்தாள். “கிளம்புவோமா?”
“நான் போய் கொள்கிறேன்” என்றான். அவன் முகம் சீரியஸாக இருந்தது. சுருக்கமாக ஒலித்த வார்த்தைகளில் விருப்பமின்மை தெளிவாக வெளிப்பட்டது.
மைதிலி சிரித்தாள். “நான் உன்னை வீட்டில் இறக்கிவிட்டுப் போகிறேன். வழியில் மருந்துகளும் வாங்க வேண்டும். கிளம்பு.” வழி நடந்தாள்.
வேறு வழியில்லாமல் அவன் பின்பற்றினான். லிப்ட் அருகில் வரும் போது ஓரிரு டாக்டர்கள் எதிர்ப்பட்டு மைதிலியை விஷ் செய்தார்கள். “ஹலோ சித்தார்த்! எப்படி இருக்கிறாய்?” என்று அவனையும் குசலம் விசாரித்தார்கள்.
அவன் முறுவல் பதில் சொல்வது போல் இல்லை. எரிச்சல் வெளிப்படவும் இல்லை. லிப்டில் வேறு யாரும் இல்லை. கதவு சாத்திக் கொண்டதும் மைதிலி பட்டனை அமுக்குவதற்காக கையை நீட்டினாள். ஏற்கனவே சித்தார்த் அதன் மீது கையைப் பதித்து இருந்தான். வைர மோதிரம் அணிதிருந்த மைதிலியின் கை அந்தக் கையின் மீது பதிந்தது. உடனே அந்தக் கை பின்னால் வரவில்லை. தன்னுடைய கையின் கீழே அவனுடைய கை! அந்த தொடுகை ஏதோ வேதனையின் பாரத்தை நிலவின் குளிர்ச்சியைப் போல் இலேசாக்கி விட்டது போல் இருந்தது. அவளால் அந்த கையை எடுத்துக் கொள்ள முடியவில்லை.
கடைசியில் சித்தார்த் தன்னுடைய கையை அவள் கையின் அடியிலிருந்து இழுத்துக் கொண்டு விட்டான். லிப்ட் வேகமாக இறங்கத் தொடங்கியது.
மைதிலிக்கு தடுமாற்றமாக இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. அவன் என்ன நினைத்துக் கொண்டிருப்பான்? மனம் கலவரமடைந்தது
லிப்ட் கிரவுண்ட் ப்ளோரின் வந்து நின்றது. நிறைய பேர் லிப்டுக்காகக் காத்திருந்தார்கள். அதில் ஓரிரு நர்சுகள் மைதிலியை அடையாளம் தெரிந்து கொண்டு “வணக்கம் மேடம்!” என்று விஷ் செய்தார்கள். மைதிலி இயந்திர கதியில் பதில் சொல்லிக் கொண்டே நடந்தாள். சித்தார்த் அவளுக்கு முன்னால் நடந்தபடி அவளுக்கு வழியை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். அவள் பின்னாலேயே வந்து கொண்டிருந்தாள்.
இருவரும் படியருகில் வந்தார்கள். படிகளில் இரண்டு பக்கமும் அழகான பூச்செடிகள். கீழே இறங்குவதற்கு பன்னிரெண்டு படிகள் இருந்தன. படிகளில் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் மக்கள் பிசியாக இருந்தார்கள். மைதிலி, சித்தார்த் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சித்தார்த்துக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தள்ளாடி விழப் போனான். மைதிலி சட்டென்று ஒரு அடி முன்னால் வைத்து அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டு தாங்கிக் கொண்டாள். அவன் தலை அவள் தோளில் சாய்ந்துவிட்டது.
மைதிலிக்கு ஒரு நிமிடம் இந்த சிருஷ்டி முழுவதும் அழகாக, இன்பத்தைத் தருவது போல் தோன்றியது. அவனை மேலும் அழுத்தமாக பிடித்துக் கொண்டாள். ஏதோ சந்தோஷம் உடல் முழுவதும் பரவுவது போல் இருந்தது. இந்த உலகில் தனக்கு இவனைத் தவிர வேறு யாருமே தேவை இல்லை என்று தோன்றியது. ஏதோ சக்தி அவள் விலங்குகளை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு அமிர்தத்தை பருகச் செய்தது போல் இருந்தது.
காய்ந்து கட்டாந்தரையாக இருந்த மனம் என்ற நிலத்தில் அமிருதம் மழைத் துளிகள் அவளுள் ஏதோ ஏழ்மை பழுத்த இலைகளாய் உதிர்ந்து போவது போல்… புது காற்று.. புதிய பாதையில் பயணம். சித்தார்த்தின் தோளைச் சுற்றி தயக்கமில்லாமல் கையைப் போட்டு அந்த புதிய வெளிச்சத்தை நோக்கி நடப்பதற்கு தயாராகி விட்டாள். தன்னை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. அபிஜித்தால் கூட முடியாது. தான் பிறந்தது, வாழ்ந்து கொண்டிருப்பது இந்த அற்புதமான வினாடிகளுக்காகத்தான். இவனுக்காகத்தான்.
“குட் ஈவினிங் மேடம்!” யாரோ அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
மைதிலி திடுகிட்டவளாய் இந்த உலகத்திற்கு வந்தாள். நர்சிங் ஹோம் மேனேஜர் எதிரே தென்பட்டார்.
ஏற்கனவே சித்தார்த் அவளிடமிருந்து விடுவித்துக் கொண்டு கீழ் படியில் முழங்காலில் முகத்தைப் புதைத்தபடி உட்கார்ந்துவிட்டான்.
“என்ன ஆச்சு?” மைதிலி பதற்றத்துடன் கேட்டாள்.
“தலையைச் சுற்றுகிறது.”
“அடடா!”
“ஏதாவது உதவி தேவையா மேடம்?” சித்தார்த் பக்கத்திலேயே படியில் உட்கார்ந்துவிட்ட மைதிலியை சித்தார்த்தை மாறி மாறி பார்த்துக் கொண்டே கேட்டார் மேனேஜர்.
“கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?”
“ஷ்யூர்..” வேகமாக ஓடிச் சென்று அவரே சுயமாக தண்ணீர் கொண்டு வந்து அவளிடம் நீட்டினார்.
“தண்ணியைக் குடி” என்றாள் அவள். சித்தார்த் குடித்தான். எழுந்து ஓரமாகச் சென்று மிச்சம் இருந்த நீரில் முகத்தை அலம்பிக் கொண்டான்.
“இந்த பையன் யார் மேடம்?” மேனேஜர் கேட்டார்.
“எங்களுக்கு வேண்டிய பையன்.” பதில் சொல்லிக் கொண்டே சித்தார்த் அருகில் சென்றாள்.
அவன் ஷர்ட்டில் முகத்தைத் துடைத்துக் கொள்ளப் போகும் போது தடுத்துவிட்டு பேக்கிலிருந்து கைக்குட்டையை எடுத்துக் கொடுத்தாள். அவன் வாங்கித் துடைத்துக் கொண்டான்.
“இப்போ எப்படி இருக்கு?”
“பரவாயில்லை. என்னால் ஆட்டோவில் போக முடியும்.” அவன் போக முற்பட்ட போது அவள் கையைப் பிடித்து தடுத்து விட்டாள்.
அவன் கண்கள் கோபமாக தன் கையைப் பற்றி இருந்த கையை நோக்கின.
மைதிலி சட்டென்று கையை விட்டுவிட நினைத்தாள். “கார் இங்கேயே பக்கத்தில் இருக்கு. வா போகலாம்.” அவனுடைய எரிச்சலை பொருட்படுத்தாதவளாய் இழுத்துக் கொண்டு போய் காரில் உட்கார வைத்தாள். காரை ஸ்டார்ட் செய்து கொண்டே “ஐ யாம் சாரி. உனக்கு சங்கடத்தைக் கொடுத்து விட்டேனோ என்னவோ. உனக்கு இன்னும் முழுவதுமாக குணமாகவில்லை. நீ மறுபடியும் ஆஸ்பத்திரியில் சேரவேண்டி வந்தால் உங்கள் சாருக்கு ரொம்ப நஷ்டம்” யாரும் கேட்காமலேயே தனக்குத் தானே விளக்கம் சொல்லிக் கொண்டாள்.
சித்தார்த் அவள் வார்த்தைகளை பொருட்படுத்தவில்லை. கார் கதவுக்கு பக்கமாக நகர்ந்து அவள் கை தன் மீது பட்டு விடுமோ என்பது போல் ஒதுங்கி உட்கார்ந்தான். அவளுடைய நடவடிக்கை அவனுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பது அவனுடைய புருவத்தின் சுளிப்பிலும், முகத்திலேயும் அப்பட்டமாக தென்பட்டுக் கொண்டிருந்தது.

Series Navigationஇயல்பான முரண்வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *