தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் ‘ பறையொலி ” தொகுப்பை முன் வைத்து…

This entry is part 16 of 25 in the series 17 மே 2015

 

” இப்படியொரு கவிஞரா என்று மலைப்பை ஏற்படுத்திவிட்டார் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் தமது ” பறையொலி ” கவிதைத் தொகுப்பின் மூலம் ” என்கிறார் தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன்.

 

இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவது இவர் கவிதைகளின் முக்கிய கூறாகிறது. கச்சிதமான

சொற்களால் கவிதையைப் பிடித்துக் கொண்டுவந்து நம் முன் நிறுத்துகிறார். ஏதோ ஒரு கவலை இவர் எழுத்தில் மௌனமாய் நின்று

கொண்டிருக்கிறது. அதன் உயிப்பை , சொற்களை வீசி வீசி விரவச் செய்கிறார்.

 

தற்குறிப்பேற்ற அணி தனலெட்சுமிக்கு அவ்வப்போது கை கொடுப்பதுண்டு. ” சலசலப்பு ” கவிதை அதை உறுதிசெய்கிறது.

 

மறுநாளைய திட்டத்திற்கான

மறு பரிசீலனையோ

கூடடையும் பறவையொலி ?

பறவையொலி , உணவு போதுமான அளவு கிடைக்காத சோகத்தைச் சொல்வதாகக் கூட இருக்கலாம் !

 

அம்மா நினைவு இல்லாதவர் யார் ? ” ஒற்றை முள் உறவு ” பாசத்தைப் பேசுகிறது.

 

சமையலறை யெனும்

சதுரக் கடிகாரத்தில்

ஒற்றை முள்ளாய்

ஓய்வின்றிச் சுற்றுகிறாள்

அம்மா !

 

புத்தம் புதிய படிமம். பாசம் எப்போதும் புதுமை மாறாததுதான் !

 

புத்தகத் தலைப்புக் கவிதை ” பறையொலி ” !

 

புறந்தோளில் பறை தொங்க

போதை ஏற்றியும் ஏற்றாமலும்

நீள் முடிகள் காற்றில் அலைய

நெடுநேரம் கண் விழித்து

ஏக பாவங்களை முகத்தில் தேக்கி

எதிரும் புதிருமாய் நின்று

சொட்டச் சொட்ட வழியும்

ஒட்டும் ஈரச்சட்டை உலரும் வரை

விடாமல் கொட்டடிப்போரைக்

காணுகையில்

எட்ட நின்று கை கொட்டி ரசிக்கிறேன்

எப்போதும் சிநேகத்துடன் !

 

என்றதில் காட்சிப்படுத்துதல் முக்கிய இடம் வகிக்கிறது. நல்ல மனித நேயக் கவிதை.

 

” மரவலி ” சிறிய கவிதைதான். மரவலி , மனித மனவலியாக மாற்றப்பட்டுள்ளது.

 

ஒடித்த கிளை பிரம்பாகிறது.

வலிக்கிறது , பள்ளிக்கூட

மரங்களுக்கு !

 

” பளிச் ” ஹைக்கூ ஆசிரியர்களுக்குப் பிரம்படி கொடுக்கிறது.

 

” காரிகையர் கனவு ” என்ற கவிதை , கட்டங்கட்டிக் காட்டி முக்கிய தகவல் ஒன்றைப் பத்திரப்படுத்தியுள்ளது.

 

நடுநிசியில்

நெட்டி முறிப்புகள்

நீண்ட பல

பெருமூச்சுகளின்

ஒலிகளுமாய்

விடிகிறது

மகளிர் விடுதிகளின்

காலைப் பொழுதுகள்

 

விடுதலை எப்போது என்கிற பதில் நம் யூகத்திற்கே விடப்பட்டுள்ளது. மிகவும் எளிமையான ஆனால் சொற்செட்டுள்ள கவிதை. வாசகர்

மனத்தில் வந்து உட்கார்ந்துவிட்ட கனம் கவலைப்பட வைக்கிறது.

 

” அக்கினிக் குஞ்சு ” என்ற கவிதையில்…

 

மின்னலென அபகரித்து

மேலெழும்பும் கிழட்டுக் கழுகைப்

பொசுக்குகின்றன பதறும்

தாய்க் கோழியின் நெருப்புக் கண்கள்

பிடி தளர வீழ்ந்து மாயும்

கழுகின் சாம்பலை

உதிர்த்து வெளியேறுகிறது

கோழிக் குஞ்சு…

 

” கழுகின் சாம்பல் ” என்னும்போது கழுகு எரிந்துவிட்டது என்ற தகவல் கிடைக்கிறது. கழுகு எரியச் சாத்தியமில்லை.எனவே இது

ஒரு முரண்பாடாகவே நின்று போகிறது. தாய்க் கோழியின் மனப்படம் என்று கொண்டாலும் அது வெறும் சுய திருப்தியாகவே இருக்கிறது.

கவிதைக் கருவில் இழை விலகுதல் கவிதை நோக்கத்தை முழுமையாக்கவில்லை.

 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 

Series Navigationபல்லக்குசுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *