சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)

author
0 minutes, 1 second Read
This entry is part 3 of 21 in the series 31 மே 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

ரகுபதி வெலவெலத்துப் போய்விட்டார். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டோம். இப்போது வாயை ஊதச் சொல்லப் போகிறார்கள். அவசரமாக PASS PASS பாக்கெட்டை அவர் கையில் திணித்தான் பட்டாபி. “சார் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள்” என்றான் ரகசியமாக. ரகுபதியும் அதுபோல் செய்தார்.
ஆனால் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் விதமாக அந்த சார்ஜெண்ட் ஒரு ப்ரீத் அனலைசரை (Breath Analyser) கொண்டு வந்தார். நிச்சயமாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்று ரகுபதிக்கு புரிந்தது. அருகில் வந்த அந்த அதிகாரி ப்ரீத் அனலைசரை வாயில் வைத்து, “ஊதுங்க” என்றார். முப்பது விநாடிகள் ஓடி விட்டது. ஆனால் மெஷினில் எந்த மாற்றமும் இல்லை, ரீடிங் “0” வைக் காட்டியது.
உடனே அந்த சார்ஜெண்ட், ஆதித்யா சானலில் வரும் கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சியில் சொல்வது போன்ற பாணியில் “சும்மா ஊதுங்க பாஸ்” என்றார். எந்த வார்த்தையை ரகுபதி வெறுத்தாரோ அதே வார்த்தையை ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் அவரிடம் அந்த அதிகாரி சொன்னபோது அவமானத்தில் அவர் கூனிக்குறுகி விட்டார்.
கொஞ்சம் சமாளித்துக் கொண்டு, “வேற ஸ்ட்ரா கொடுங்க” என்றார் ரகுபதி. வேறு ஸ்ட்ரா பொருத்தப்பட்ட பிறகு அதை வாயில் வைத்து நாதஸ்வரம் ஊதுவது போல கன்னம் இரண்டும் காற்றால் உப்ப லேசாக ஊதினார். இப்போதும் “0” வைத்தான் காட்டியது மெஷின். அதைப் பார்த்து கடுப்பான சார்ஜெண்ட், “காரை விட்டு கீழே இறங்குங்க” என்று அதட்டினார்.
இது போன்ற நேரங்களில் ரகுபதி கொஞ்சம் தைரியத்தைக் காட்டுவார். தன்னுடைய பாணியில் நிலைமையை சமாளிக்க நினைத்து, “சார், கொஞ்சம் இருங்க, நான் ஐஜி கிட்ட பேசணும்” என்றார். அதைக் கேட்ட உடன் அந்த சார்ஜெண்ட் கொஞ்சம் பின் வாங்கினார்.
“உங்களுக்கு ஐஜியைத் தெரியுமா” என்றார் மெதுவாக.
“தெரியும்” என்றார் ரகுபதி. சார்ஜெண்ட் இப்போது அவரை அனுப்பி விடும் முடிவுக்கு வந்தார்.
அத்தோடு விட்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போயிருக்கும். ஆனால் அவருடன் இருந்த பட்டாபி மூலமாக விதி விளையாடியது.
“சார், எனக்கும் ஐஜியைத் தெரியும்” என்றான் பட்டாபி.
“உனக்கும் தெரியுமா, எந்த ஐஜி. அவர் பேரென்ன” என்று கேட்டார் சார்ஜெண்ட்.
“ஐ. கோவிந்தராஜன் சார். அவர்தான் எங்க முதலாளி” என்றான் பட்டாபி.
அதைக் கேட்ட சார்ஜெண்ட் அதிர்ந்து விட்டார்.
“என்ன, ஐஜி உங்க முதலாளியா” என்றார் அந்த அதிர்ச்சி விலகாமல்.
“ஆமா சார் இளங்குமரன் கோவிந்தராஜன் என்பது அவர் பெயர். நாங்கள் சுருக்கமாக ஐஜின்னு தான் கூப்பிடுவோம்” என்றான்.
இதைக் கேட்ட சார்ஜெண்ட்டுக்கு கோபம் தலைக்கேறியது. “இறங்குடா கீழே” என்று கத்தினார் பட்டாபியைப் பார்த்து. பிறகு ரகுபதியிடம், “நீங்களும் கீழே இறங்குங்க” என்றார் அதட்டலாக.
இன்னொரு ஸ்ட்ராவை சொருகி, கீழே இறங்கிய ரகுபதியிடம் கொடுத்து “ம்.. ஊதுங்க” என்றார். மறுபடியும் அதே நாதஸ்வர அபிநயம் காண்பித்தார் ரகுபதி. இப்பொழுதும் ரீடிங்க் “0” தான். சுமார் இருபது நிமிடம் ஆகிவிட்டது. பன்னிரண்டு ஸ்ட்ரா காலியாகி விட்டது. சார்ஜெண்ட்டுக்கு கோபம் ஏறிக்கொண்டிருந்தாலும், பொறுமையைக் கடைப்பிடித்து ரகுபதியிடம் பேசினார்.
“சார், உங்களைப் பார்த்தால் டீசண்டான ஆளாகத் தெரிகிறது. உங்களுக்கு ஊதத் தெரியாதா. இதோ நான் செய்து காட்டுகிறேன் பாருங்கள்” என்று சொல்லி விட்டு, வேறொரு ஸ்ட்ராவை சொருகி ப்பூ என்று ஊதினார். இப்போது “24” ஐக் காட்டியது.
“பார்த்தீர்களா, நான் குடிக்கவில்லை என்பதால் 24 ஐக் காட்டுகிறது. நீங்கள் ஊதும் போது இதே போல் அளவு வந்தால் நீங்கள் குடிக்க வில்லை என்று தெரிந்து விடும். அல்லது குறைந்த அளவே குடித்திருந்தாலும் தெரிந்து விடும். அப்பொழுதும் விட்டு விடுவோம். குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே ஃபைன் போடுவோம். சரியா. இப்போ மறுபடி ஊதுங்க” என்று சொல்லிவிட்டு, “வேற ஸ்ட்ராவை கொடுய்யா” என்று கேட்டு வாங்கி கொடுத்தார்.
ரகுபதி வாயில் வைத்து முன்பு போல அதே பாணியில் ஊதினார். மறுபடியும் “0”. சார்ஜெண்ட் பொறுமையிழந்து விட்டார், “நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க” என்றார்.
“ஐயா, இவரை ஸ்டேஷனுக்கு கூட்டிப் போய் விசாரிக்கலாம்யா” என்றார் ஒரு கான்ஸ்டபிள்.
“ஆமா, அதுதான் சரி. கிளம்புங்க ஸ்டேஷனுக்கு” என்றார் சார்ஜெண்ட்.
“சார் சார், அவர் எங்க கம்பெனி மானேஜர் சார்” என்று சார்ஜெண்டிடம் சொன்ன குரல் பழக்கமான குரலாக இருந்ததால் நிமிர்ந்து யார் என்று பார்த்தார் ரகுபதி. அங்கு வாசு நின்று கொண்டிருந்தான். இப்படி எல்லாம் ஆனதற்கும் இங்கே மாட்டிக் கொண்டு அவமானப் படுவதற்கும் யார் காரணமோ, அவனே இப்போது அங்கே நிற்கிறான். அவமானத்துக்கு மேல் அவமானம்.
“ஏய் வாசு, நீ எங்கேய்யா இந்தப் பக்கம்” என்று அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட சார்ஜெண்ட் கேட்டார்.
“AVM ராஜேஸ்வரியில் ஒரு மேரேஜ் ரிசப்ஷன் சார். அங்கிருந்து வரும் போது இந்தக் காரைப் பார்த்தேன். அட, நம்ம மேனேஜர் காராச்சேன்னு இறங்கி என்ன விசயம்னு பார்த்தா, இங்கே விசாரணை நடக்குது” என்றான் வாசு.
“குடிச்சிருக்காரா இல்லையானு தெரிஞ்சுக்கிறதுக்காக இவரை மெஷினில் ஊதச் சொன்னால், ஊதவே மாட்டேங்கறார். அதான் ஸ்டேஷனுக்கு கூட்டிப் போய் விசாரிக்கப் போறேன்” என்றார் சார்ஜெண்ட்.
“அவர் தினமும் கம்பெனியில் விசில் ஊதுவார் சார். அப்படியே பழகி விட்டார். நாதஸ்வரத்தில் உள்ள சீவாளி மாதிரி தட்டையாக ஒரு ஸ்ட்ராவைக் கொடுத்தால் நன்றாக ஊதுவார் சார்” என்றான் வாசு. இந்த சூழ்நிலையிலும் அவன் கிண்டல் பண்ணியது ரகுபதிக்கு நாராசமாக ஒலித்தது. உடம்பெல்லாம் பற்றி எரிந்தது.
“ஸ்டேஷனுக்கு கூட்டிப் போய் விசாரிக்கிற விதத்தில விசாரிச்சா அதெல்லாம் சரியா ஊதுவாரு” என்றார் சார்ஜெண்ட் கடுப்பாக.
“சார் எனக்காக இந்த முறை அவரை விட்டுடுங்க சார்” என்றான் வாசு ரகுபதியைப் பார்த்துக் கொண்டே.
“வாசு உனக்காக அவரை இப்போ விடுறேன். இன்னொரு முறை இது போன்ற நிலையில் இவரைப் பார்த்தேன் என்றால் சும்மா விட மாட்டேன்” என்றார் சார்ஜெண்ட். பிறகு ரகுபதியைப் பார்த்து கையசைத்து போகச் சொன்னார்.
மறுநாள் கம்பெனியில் நுழைந்து தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்த ரகுபதி, உடனேயே வாசுவை கூட்டி வரச் சொல்லி பட்டாபியை அனுப்பினார்.
அவன் வந்ததும் தன் முன்னால் உட்காரச் சொன்னார். ஆனால் அவன் உட்காரவில்லை.
“என்ன விஷயம், சொல்லுங்க சார்” என்றான் வாசு.
“நல்லவேளையாக கடவுள் மாதிரி வந்து நேற்று என்னைக் காப்பாத்தினே வாசு. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்றார்.
“அட, விடுங்க சார், இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க” என்றான் வாசு பெருந்தன்மையாக.
“இதுவரை நடந்ததை எல்லாம் மறந்து விடுவோம் வாசு. நான் இனிமேல் உன்னைப் பற்றி புகார் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றார் ரகுபதி.
“நானும் உங்களை கிண்டல் எதுவும் செய்ய மாட்டேன் சார்” என்றான் வாசு.
கொஞ்ச நேரம் இரண்டு பேருக்குமே எதுவும் பேசத்தோன்றவில்லை. பிறகு
“ஆமா, உனக்கு எப்படி அந்த சார்ஜெண்ட்டைத் தெரியும். சொந்தமா” என்றார் ரகுபதி கேட்டார் ஆவலாக.
“இல்லை சார், பழக்கம் தான். ஆனால் அவருடைய புரமோஷனுக்கு நான் தான் காரணம் என்று என்னைப் பார்க்கும் போதெல்லாம் சொல்வார்” என்றான் வாசு.
“அவருடைய புரமோஷனுக்கு நீ காரணமா, எப்படி” என்றார் ரகுபதி.
“கொஞ்ச முன்பு வரை அந்த சார்ஜெண்ட் சாதாரண போலீஸ் ஏட்டாகத்தான் இருந்தார். அவர் பெயர் முருகேசன். ஒரு தடவை எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு நடமாட்டமில்லாத தெருவில் ஒரு சங்கிலி பறிப்பு திருடன், ஒரு பெண்ணிடம் கத்தி முனையில் நகைகளைக் கழற்றச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த முருகேசன் அதைப் பார்த்து விட்டு, அந்த திருடனைப் பிடிக்கப் போயிருக்கிறார்.
ஆனால் அவன் கத்தியை அந்தப் பெண்ணின் கழுத்தில் வைத்து தன்னை அவர் நெருங்கினால் அந்தப் பெண்ணைக் கொண்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறான். கொஞ்ச தூரத்தில் உள்ள திருப்பத்தில்தான் பொலீஸ் ரோந்து கார் நிற்கும். அவர் விசில் அடித்தால் அதைக் கேட்டு போலீஸார் வந்து விடுவார்கள். அதைத் தெரிந்து கொண்ட அவன், அவருடைய கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி நிற்கச் சொல்லி இருக்கிறான். அவரும் வேறு வழியின்றி அவன் நகை பூராவும் கழற்றும் வரை அப்படியே நின்று கொண்டிருந்தார்.
தற்செயலாக அந்தப் பக்கம் போன நான் நிலமையைப் புரிந்து கொண்டு அந்த திருடனின் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டிருந்தேன். அவன் எல்லா நகைகளையும் எடுத்துக் கொண்டு பைக்கில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்ய ஆரம்பித்த போது, மின்னலெனப் பாய்ந்து சென்ற நான் அவனுடைய முதுகுப் புறமிருந்து இரண்டு கைகளையும் கேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டேன். அவனால் திமிற முடியவில்லை. கத்தி கீழே விழுந்து விட்டது. அதைப் பார்த்த முருகேசன் அவனை நோக்கி ஓடி வந்தார்.
அப்பொழுது நான் அவரைப் பார்த்து அந்த வார்தையைச் சொன்னேன். அவரும் அதைச் செய்தவுடன் போலீஸார் ஓடி வந்து திருடனைப் பிடித்து விட்டார்கள். பல நாட்களாகத் தேடப் பட்ட வழிப்பறிக் கொல்ளையனைப் பிடித்துக் கொடுத்ததால் அவருக்கு சார்ஜெண்ட்டாக புரமோஷன் கிடைத்து விட்டது. ஆனால் அதற்கு நான் தான் காரணம் என்று என்னைத் தேடி வந்து பாராட்டினார். என்னுடைய குடும்ப நண்பராகவும் ஆகிவிட்டார்” என்றான் வாசு.
ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தபடி வாசு சொன்ன கதையைக் கேட்டுக் கொண்டு இருந்தார். எந்தக் கதையாக இருந்தாலும் அதை வாசு சொல்லும்போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார். பிறகு கொஞ்ச நேரம் கழித்து, “ஆமாம், ஏதோ ஒரு வார்த்தை சொன்னதாகச் சொன்னியே, அது என்ன” என்று கேட்டார்.
“அது வந்து.. வேணாம் சார்” என்றான் வாசு தயங்கியபடியே.
“ஏன் அப்படியென்ன சொல்லக் கூடாத வார்த்தை” என்றார் ரகுபதி ஆர்வமாக.
“வேண்டாம் சார், சொன்னால் நீங்கள் வருத்தப் படுவீர்கள்” என்றான் வாசு.
“நான் வருத்தப் படுவேனா.”
“ஆமாம் சார்”
“எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்”
“சம்பந்தம் இருக்கு சார்”
“பரவாயில்லை வாசு, எதுவாக இருந்தாலும் நான் வருத்தப்பட மாட்டேன். சும்மா சொல்” என்றார் ரகுபதி.
“சரி சொல்கிறேன் சார். நான் அந்தத் திருடனைப் பிடித்துக் கொண்டபின், அவன் திமிறினான் என்று சொன்னேன் அல்லவா, கொஞ்ச நேரம் தாமதித்தாலும் அவன் தப்பி விடுவான் என்று தோன்றியது. அவர் அவனைப் பிடிப்பதற்காக ஓடி வந்தார். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறி விடும் என்று நினைத்தேன். அதனால் மேலும் உதவி வேண்டும் என்பதற்காக நான் அவரைப் பார்த்துச் சொன்னேன்” என்றான் வாசு.
“என்ன சொன்னாய்” என்ற ரகுபதி வாசுவையே பார்த்தார். வாசு சொன்னான், “உடனே விசிலை எடுத்து ஊதுங்க சார்”
முற்றும்.

Series Navigationமிதிலாவிலாஸ்-20தொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *