ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்

This entry is part 17 of 21 in the series 31 மே 2015

சுப்ரபாரதிமணியன்

தமிழ்ச்சூழலில் அறிவியல் நூல்கள் பெரும்பாலும் விளக்க நூல்களாகவே அமைந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அறிவியல் துறைகளில் பணிபுரிவோர் தங்களின் அனுபவங்களை பதிவு செய்வது குறைவு, அவர்களுக்கும் இலக்கியம், நுண்கலைகளுக்கும் தொடர்பும் இரசனையும் வெகு குறைவாகவே இருக்கிறது . அவர்கள் மலிந்த இரசனை கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் நெடும் காலமாக இருந்து வருகிறது.

அறிவியல் விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்வது வெகு குறைவே. அதிலும் இலக்கிய அக்கறை கொண்டவர்களே அதை சில சமயங்களில் செய்கிறார்கள். கலாமின் விஞ்ஞான உலக அனுபவங்கள் பல வடிவங்களில் சொல்லபட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கான எளிமையான கதைகள், வாழக்கை அனுபவங்கள் என்ற வகையில் சொல்லபட்டிருக்கின்றன.. வா.செ. குழந்தைசாமியின் சமீபத்திய நூல் வரை அவரின் அனுபவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நிறைய விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதும் நெல்லை சு.முத்து அபூர்வமாக விஞ்ஞானக் கதைகள் எழுதிகிறார். திண்ணையில் கனடா ஜெயபாரதன், உயிர்மை இதழில் சமீப காலத்தில் ராஜ் சிவாவும் அதிகமாய் தென்படுகிறார்கள். விஞ்ஞானக்கதைகள் வேறு. விஞ்ஞானிகளின் அனுபவங்களின் பதிவுகள் வேறு. மக்களிடமிருந்து பெற்றதை மக்களுக்கு ஏதேனும் வகையில் கொண்டு செல்ல விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகள் பயன்படுகின்றன. அத்துறை அனுபவங்கள் அபூர்வமாகவே இலக்கியப் பதிவுகளாகீயிருக்கின்றன. முனைவர் வா.செ. குழந்தைசாமி அண்மையில் தன் வாழ்க்கை வரலாற்றை ” ஆடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி ” என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். இந்நாவலும் ஆனந்த மூர்த்தி தொடங்கி செல்வன் வரை பலரின் வரலாறகவும் விரிந்திருக்கிறது

அந்த வகையில் ” இயற்பியல் விஞ்ஞானியான ப.க. பொன்னுசாமி ” நெடுஞ்சாலை விளக்குகள் ” என்ற நாவலின் களம் தமிழுக்குப் புதிதே. விஞ்ஞானிகளின் ஆய்வுக் கூடமே அவரது இந்நாவல் உலகம்.. .பொதுவான மருத்துவ உலகின் வெளிச்சம் பற்றி இறுதி அத்தியாயத்தில் ஒரு உரை இதை உறுதிப்படுத்துகிறது. ” நீண்ட நெடுஞ்சாலையில் பயணம் போறோம். பயணம் தொடங்கறப்ப சாலையை தூரத்துக்குப் பாத்தா விட்டுவிட்டு கம்பங்கள்ல விளக்குக மங்கலா ஒளியைக் காட்டிகிட்டு நிக்கும். கொஞ்ச தூரம் போயிப் பார்த்தாலும் அப்படித்தான் தெரியும். ஒரு விளக்குக் கம்பத்துக்கு அடியில் போனதும் நல்லா வெளிச்சமாயிருக்கும். அதைக்கடந்ததும் இருட்டும் வந்திரும். எந்த விளக்குக் கம்பத்துக்கும் கீழயும் வெளிச்சமாவும், அதைக் கடந்ததும் இருட்டாவும் இருக்கும். மருத்துவத் தொழில்லே வெளிச்சம் காடடச் சத்தியம் செஞ்சிட்டு வந்திருக்கோம் ” நோய்களுக்கு மருத்துவம் பார்க்கிற மருத்துவர்கள் இல்லாமல், நோய்கள் வராமல் இருக்க ஆய்வு செய்யும் விஞ்ஞான மருத்துவர்களைப் பற்றி இந்நாவல் பேசுகிறது. ” ஆளுத்தான் குட்டை. மூளை நெட்டை ” என்ற வகையைச் சார்ந்தவர்கள் இவர்கள்.
எல்லாத் துறையைச் சார்ந்தவர்களைப் போல இவர்களின் வாழக்கையும் பொறாமையும், துர்குணங்களும், பெருமிதங்களும், உழைப்பும் கொண்டதாக இருக்கிறது.
ரங்கநாதன் என்ற விஞ்ஞானி தான் துறையின் மூத்தவர் என்றத் தகுதியில் எல்லா துஸ்பிரயோகங்களையும் செய்கிறார். ஆனந்த மூர்த்தி உழைப்பால் உயர்ந்து நின்று முன்னுதரமான இருந்தாலும் பிரச்சினைகளாலும், தனிமையாலும் மன நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார். கதை கட்டி விட்டு வேடிக்கை பார்ர்கும் அர்ச்சுனன் போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பெண் விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பெண்கள் என்ற அளவில் சிரமப்படுகிறார்கள்.துருப்புச் சீட்டுகள் போல ஆய்வுக்கூடத்து மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மைதிலி என்ற பெண் விஞ்ஞானி இந்த குழப்பங்களிலும் தன்னை ஒரு வெடிகுண்டாகவே நகர்த்திக்கொள்கிறாள். ரங்கநாதனிடம் இருந்து ஆய்வேட்டிற்கு கையெழுத்து வாங்குவது முதல் பத்மநாபன் என்பவனின் சுயரூபம் அறிந்து திருமணம் ஒன்றை நடக்காமல் இருக்கிற துணிச்சலான வேலையையும் செய்கிறாள். காதல் காமம் நட்பு இவர்களுக்கிடையில் பழகும் ஆண்களின் உலகில் சகஜமாக தன்னை கவுரவப்படுத்திக் கொண்டு நடமாடுபவளாக இருக்கிறாள். .

அறிவியல் சார்ந்த மந்தமான சூழல் அவர்களிடம் நிலவி அது தரும் சோர்வு பல திசைகளில் அவர்களைத் தள்ளுகிறது. புதிய உலகிற்குச் செல்ல வேண்டும் , இதுவரையில் பார்க்காத உலகத்தை, அனுபவங்களைப்
பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அறிவியல் உலகை விட்டு ஓட ஆசைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். மன்னாடிக்கு வயதான அம்மாவைப் போய் பார்த்து விட்டு ஓய்வெடுப்பதும் அமெரிக்காவிறகுப் போவதும் இப்படியாகத்தான் அமைகிறது. செலவன் போதைப் பொருட்களீன் உபயோகிப்பில் தன்னை இழந்து மாயத்துக் கொள்கிறான். தமிழ்ப்பற்று, இந்தி எதிர்ப்பு, தலைவணங்காமைக் என்பவையே வேறு உலகங்களுக்குள் துரத்துகிறது. ஆய்வும் வேண்டாம் ஆய்வு முடிவும் வேண்டாம் என்று நொந்து போகிறார்கள்..
அறிவியலாளர்களும் தங்களீன் குரூர முகங்களோடே வாழ்கிறார்கள். பிறரின் ஆய்வுக் கட்டுரையைப் படித்து விட்டு தான் தங்களின் முந்தைய ஆய்வு அனுபவத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கட்டுரையைத் தயாரித்து அவசரமாகப் பிரசுரித்ததோடு தன்னுடைய கண்டு பிடிப்பைத் தவறென்றும் சொல்லித் தங்களின் கண்டு பிடிப்பிற்கு முன்னுரிமை பெறும் கேவலமான முயற்சிகளும் நடக்கின்றன.கூட்டு ஆராய்ச்சியில் பெயர்களை விட்டு விடுகிறார்கள்.” கடல் வத்திப் போகாது. உங்க மூளையிலே இன்னும் எத்தனையோ புதுமைக உதிக்கும்.” என்று ஆறுதலை மட்டும் தந்து விட்டுப் போகிறார்கள்.சாதிக்காரங்களுக்குச் செய்யும் சலுகைகளும் உண்டு ” என்னெல்லாம் செய்யக்கூடாதுங்கறதுதான் இங்க செய்தி. அப்படிச் செய்யக்கூடாத ஒண்ண நடிப்புல செஞ்சு காட்டி அதை நான் செய்யவே மாட்டேன்னு உறுதி சொல்கிற ” வர்களாயும் இருக்கிறார்கள்.கரையான்களை இந்த வீட்டில் ஒழிக்க முடியாது என்று ஒதுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.ஆரோக்கியமான விவாதங்கள் என்று வருகிற போது ” இது அரசியல் கூட்டங்கள் அல்ல ” என்று ஒதுக்கப்படும் சூழல்களும் இருக்கின்றன.

அறிவியல் உலகம் சார்ந்த பலரின் வரலாறாக மட்டுமில்லாமல் அறிவியல் கல்வி வரலாறாகவும் இந்நாவல் நீண்டிருக்கிறது. அறிவுலக அரசியலின் அம்சங்களும் காதல் உனர்வுகளும் இயைந்து கிடக்கின்றன.
.கரையான்களை இந்த வீட்டில் ஒழிக்க முடியாது என்று ஒதுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.ஆரோக்கியமான விவாதங்கள் என்று வருகிற போது ” இது அரசியல் கூட்டங்கள் அல்ல ” என்று ஒதுக்கப்படும் சூழல்களும் இருக்கின்றன.

இந்நாவலின் முதல் அத்தியாயத்தில் ஒரு ஆங்கில நாவல் பற்றிய அபிப்பிராயத்தில் ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது : ” நாவல் நாவலா இருக்கு ” அப்படித்தான் எந்த மிகை உணர்வும் இன்றி இயல்பான கிராமத்து ஆற்று ஒழுக்கோடு இந்நாவல் செல்கிறது. அறிவியல் உலகம் சார்ந்த வக்கிரங்கள், குரூரங்களை காட்டும் நிகழ்வுகளும் கூட மிகை உணர்ச்சியோ, அதீத வகையிலோ சொல்லப்படாமல் இருப்பதில் ஆசிரியரின் எழுத்து நோக்கம் தென்படுகிறது.

அறிவியல் உலகம் சார்ந்தவர்கள் ஆய்வுக்கூடத்தின் உலகிற்குள்ளேயே முடங்கிப் போகிறார்கள். அவர்களை ஆட்டுவிக்கும் தனிமனித உணர்வுகளின் கூட்டிசைவாய் சம்பவங்கள் அமைந்து விடுகின்றன. வெளி உலகமோ, அரசியல் தாக்கமோ, கலாச்சார நடவடிக்கைகளோ அவர்களை பாதிக்காமல் இருப்பதாலேயே அவர்கள் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலப் பின்னணியும், திராவிட அரசியல் சார்ந்த அம்சங்களும் இந்நாவலில் இழையோடி இருப்பது அறிவியலாளர்களுக்குள் இருக்கும் தமிழ் அரசியல், மொழி சார்ந்த அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது.
சென்னை, மதுரைப்பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகப் பணிபுரிந்த அறிவியல் அறிஞராக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் ப.க. பொன்னுசாமி அவர்கள் அந்த அறிவியல் உலக அனுபவங்களை நாவலின் மூலம் பதிவாக்கியிருக்கிறார். இவரின் முந்தின நாவலான ” படுகளம் ” கொங்கு மனிதர்களின் வாழ்வைச் சொன்னது. இது அறிவியல் மனிதர்களின் போக்கைச் சொல்வது. அறிவியல் அம்சங்கள் மாறக்கூடியவை ஆனால் இலக்கியம் காட்டும் அறம் என்றைக்குமானதாக வெளிச்சம் காட்டும் எனபதை உள்ளுணர்வாக்கியிருக்கிறார். அறிவியல் சார்ந்த உலகத்தை முகக்கண்ணாடியாய் வெளிப்படுத்தும் முக்கியப் பதிவாய் இந்நாவல் அமைந்திருக்கிறது

( நெடுஞ்சாலை விளக்குகள் – ப. க. பொன்னுசாமியின் நாவல் , 350 பக்கங்கள், ரூ 280 என் சி பி எச் வெளியீடு , சென்னை )

சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 / 9486101003 / subrabharathi@gmail.com

Series Navigationசூரிய ஆற்றல்.டிமான்டி காலனி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *