இளைய தலைமுறை மறந்துபோன சோத்துப்பாறையும்-ஊன்சோறும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 23 in the series 14 ஜூன் 2015

பயணம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு இன்றியமையாதது. பிறப்பு தொட்டு தன் பயணத்தை காலத்தின் வழியே ஆரம்பிகிற மனிதனின் ஒவ்வொரு செயல்பாடும், ஏதாவது ஒன்றை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. பயணத்தின் மேன்மையும், வரலாற்றில் மனித வாழ்வின் நிலையாமையையும், உலக மக்கள் அனைவரின் பால் செலுத்தக்கூடிய தாட்சண்யமற்ற அன்பு மட்டுமே ப+மியில் நிலைத்திருக்ககூடியது என்பதை விளக்கும் வகையான பயணத்தின் தேக்கம் நமக்குக் காணக்கிடப்பது பற்பல அருவிகள், மலைகள், அணைகள், தொல்லியல்துறை இடங்கள், கடற்கரைகள் இன்னும் பல உள்ளன. அவற்றில் சோறு உண்பதற்காக பண்டைய காலத்தில் மாட்டுவண்டிகளில் பயணம் புறப்பட்டு சாதி, மதம், இனங்களைக்கடந்து மழைவேண்டிய தங்கள் பயணத்தை தொடர்ந்து சோத்தை ஆக்கி அந்த சோத்தை பாறைகளில் தட்டு, இலை போன்றவற்றை பயன்படுத்தாமல் பாறைகளை கழுவி சோத்தை உணவருந்தியதால் சோத்துப்பாறை என பெயர் பெற்றது.
தேனிமாவட்டம், பெரியகுளத்திலிருந்து சுமார் 8.கி.மீ. தொலைவில் இருபக்கமும் மாமரங்கள், மலைப்பகுதியில் விளையக்கூடிய பழங்கள் என கமகம வாசனையுடன் வரவேற்கிறது சோத்துப்பாறை. கொடைக்கானல் அருகே உள்ள பேரீஜம் என்ற ஏரியிலிருந்து வரும் நீரைத்தேக்கி அதனைதடுத்து தமிழகத்தின் இரண்டாவது உயரமான அணையாக கட்டப்பட்டது சோத்துப்பாறை அணை.
இளைய தலைமுறை மறந்து போன சோறு தான் ஊன்சோறு என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்து முப்போகம் விளையவேண்டியும் காடு, மலைகளில் கிடைக்ககூடிய மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி அதனை சமைத்து உணவருந்துவது வழக்கம். இவ்வாறு செய்து உணவருந்திவிட்டு சிறிது நேரத்தில் மழை பொழிந்துள்ளது என்கிறார்கள் வயது முதிர்ந்தோர். பண்டைய தமிழகத்தில் கி.பி. 2 ம் நூற்றாண்டு காலத்தில் ஊன்சோறு பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளது. அரிசி, ஆடு அல்லது மானின் இறைச்சி, புன்னை இலை, மிளகு, மாம்பிஞ்சு சட்டினி, புளியங்காய் சட்டினி ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அவித்து செய்யப்பட்ட ஊன்சோறு பற்றி சங்க காலத்தில் சில புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றிற்கு ஆதாரமாக குழம்பு வைக்க ஏராளமான அம்மிக்கற்கள், உரல்கள் வெட்டப்பட்டுள்ளது. காலத்தின் சுவடுகளாக மேற்குமலைத்தொடர்ச்சியில் இன்றும் சான்றாக உள்ளது. காலத்தின் மாற்றம், விஞ்ஞான யுகம், அவசரமான நிலை இவையற்றை எல்லாம் மனிதன் புறந்தள்ளிவிட்டு மேற்கத்திய உணவிற்கு அடிமைப்பட்டு பாரம்பரியத்தை தொலைத்து விட்டு நோய்களை விலைக்கு வாங்குவது தான் அன்றாட நிகழ்வுகளாக உள்ளது.
சோத்துப்பாறை அணை
தேனி மாவட்டத்தில் இயற்கையிலேயே பசுமையும் அணைகளும், ஆறுகளும், ஏரிகளும் நிறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளார் அணை, சோத்துப்பாறை அணை, பச்சிலைநாச்சியம்மன் அணை, வைகை அணை உள்ளிட்ட பல வகையான அணைகளும், சுருளிஅருவி, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி,எலிவால் அருவி என பலவகையான அருவிகளும் உள்ளடக்கியது தேனி மாவட்டம். இம்மாவட்டத்தின் மற்றுமொரு சிறப்பு தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய சந்தை தேனி சந்தை ஆகும். இதுபோல தமிழகத்தின் உயரமான அணை சோத்துப்பாறை அணையாகும்.
பண்டைய காலத்தில் சோத்துப்பாறையில் மழை பொழியாவிட்டால் 12 கலம் நெல்லைக்குத்தி அனைவருக்கும் பொதுவாக அன்னதானம் வழங்குவார்களாம். பிரார்த்தனைக்கு பிறகு வாழை இலை போடாமலேயே பாறையைக் கழுவி உணவு படைப்பார்களாம். பாயாசம் சாப்பிட்டவுடன் மழை கொட்டுமாம். இதனால் சோத்துப்பாறை என பெயர் வந்தது. சோத்துப்பாறை அணைக்கு மேற்குமலைத்தொடர்ச்சியில் இருந்து 2090 மீட்டர் அடி உயரத்தில் பழநிமலையில் உற்பத்தியாகி, கிழக்குச் சரிவின் வழியாக சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் ஓடிவந்து வராக நதியில் கலக்கிறது.
கி.பி.1891 ஆம் ஆண்டு அரசு அதிகாரியான சுகாதாரப் பொறியாளராக பணியாற்றிய ஜோன்ஸ் என்பவரால் பெரியகுளம் நகருக்குத்தேவையான குடிநீர்திட்டம் ரூ.1,25,000 மதிப்பீட்டில் தயார் செய்து மதராஸ் கவர்மெண்டிற்கு அனுப்பினார். கி.பி.1895 ஆம் ஆண்டு மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள பேரீஜம் ஏரியிலிருந்து தண்ணீரை பெரியகுளத்திற்கு கொண்டுவருவதற்கு அன்றைய ஜமீன்தார் திவான் பகதூர் வெங்கிட்ட ராமபத்ர நாயுடுகாரு நடவடிக்கை மேற்கொண்டார். சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து சோத்துப்பாறை அணைக்கு தண்ணீர் வரப்பட்டது. 1982 ஆம் ஆண்டு இரண்டுமலைகளுக்கு இடையே அணைகட்டுமானம் பணி துவங்கி 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணி நிறைவடைந்தது. அணையின் பின்புறம் காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை அருந்தும் இதனை பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்கள் சோத்துப்பாறை அணையின் தண்ணீர் மிகவும் அருமையாக இருக்கும். இவை தவிர அணையில் வழிந்தோடி வரும் நீரில் குளித்து மகிழலாம். மேலும் அணையிலிருந்து பார்த்தால் பெரியகுளம் நகரை காணலாம். கண்ணுக்கு எட்டிய வரை மாந்தோப்புகள் அதிகமாக இருக்கும். அணைக்கு மேலே டைகர் பால்ஸ் என்ற அருவி உள்ளது. அணையில் பல ப+ங்காக்கள் உள்ளது. குடும்பத்துடன் சென்றால் கட்டணமில்லாமல் கண்டு களிக்கலாம்.
அணையின் நீரியல் விபரங்கள்
அணையின் மொத்த நீளம் 345 மீட்டர் ஆகும். நீர்வரத்தின் பரப்பு 38.40 சதுரகிலோ மீட்டர் ஆகும். நீர்வரத்தின் முழுக்கொள்ளவு 100 மில்லியன் கன அடி, முழுக்கொள்ளளவு உச்சநீர்மட்டம் 405.50 மீட்டர் ஆகும். அணையின் அதிகபட்ச உயரம் 57 மீட்டர் ஆகும். அணையின் மேல்மட்ட அகலம் 7.32 மீட்டர் ஆகும். இந்த அணையினால் நன்செய் பாசனப்பரப்பு 1825 ஏக்கர், புதிய புன்செய் பாசனப்பரப்பு 1040 ஏக்கர் ஆகும். இதனால் தென்கரை கிராமம், தாமரைக்குளம் ஆகிய கிராமம் பயனடைகிறது. இவை தவிர சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டதின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் தேவைகளை ப+ர்த்தி செய்கிறது.
பெரியகுளத்தில் உள்ள கல்வெட்டு
சோத்துப்பாறையிலிருந்து வரும் நீரானது பெரியகுளத்தில் வந்து அதன்பின்னர் பல குளங்களுக்குச் செல்லும். பெரியகுளத்தில் உள்ள கங்கா மடையில் தமிழ் கல்வெட்டு ஒன்று உள்ளது. இது அம்மடையில் பெரியகுளம் தென்கரை பகுதியைச்சேர்ந்த நரசய்யன் மகன் அம்புலிங்கய்யன் அவர்கள் திருத்தி அமைத்ததை தெரிவிக்கிறது.
அக்கல்வெட்டில் உள்ள வரிகள்
ஸ்வஸ்தி ஸ்ரீ சாலி
வாகந சகாப்தம்
1635 இதன் மேல் செல்ல நி
ன்ற விசய வருசி
த்திரை மீ 23 உ
திங்கள் கிளமை நா
ளில் தென்கரை
மகா சனங்களில்
நரசய்யன் அவர்கள்
புத்திரன் அம்புலி
ங்கய்யன் அவர்கள்

பயம்.
கல்திட்டை
சங்க காலத்தில் சவ அடக்கமுறைகள் பல இருந்ததை சங்க நூல்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. வேம்பற்றூர் குமரனாரின் அகம் 157 ஆம் பாடலில் வில்லிட வீழ்ந்தோர் பதுக்கை என்ற வரி இடம் பெறுகிறது. கருந்தொடை கவினார் என்ற புலவரின் பாடலில் அம்பின் விசையிட வீழ்ந்தோர் என்னுமரபறியா உவலிடு பதுக்கை என்று கூறப்படுகிறது. பதுக்கை, திட்டை, கற்குவை. குத்துக்கல் போன்றவை இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் ஆகும்.அவ்வகையில் பெரியகுளத்தில் பி.டி.சிதம்பரச+ரிய நாராயணன் என்பவர் மாந்தோப்பின் அருகாமையில் கல்பதுக்கை ஒன்று உள்ளது. இதனை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டால் இன்னும் பல மர்மங்கள் வெளிவரும். பயணங்கள் நமக்கான நேர்மையான ஆசான் என்பதை நினைவில் கொண்டு பயணப்படுவோம் சோத்துப்பாறையை நோக்கி.
வைகை அனிஷ்

Series Navigationஎழுதவிரும்பும் குறிப்புகள் நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வுவிழிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *