பா. ராமமூர்த்தி கவிதைகள்

author
0 minutes, 12 seconds Read
This entry is part 16 of 23 in the series 21 ஜூன் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 

‘ கைப்பிடியில் நழுவும் உயிர் ‘ என்ற தொகுப்பின் மூலம் அறிமுகமாகிறார் ராமமூர்த்தி ! இவர் கவிதைகள் பெரும்பாலும் கடந்த காலத்தின்

பொன் துகள்களைக் கொண்டுவந்து ஓவியம் உருவாக்குகின்றன. கவிமொழி அவ்வளவாகக் காணப்படவில்லை. எனவே ஒருவிதத் தகவல்

தன்மை உள்ளது. இதுவே கவிதையின் யதார்த்தப் போக்கிற்குக் கதவு திறந்துவிடுகிறது.

‘ அப்பாவும் நானும் ‘ – ஒரு சோகக் கவிதை. அப்பா முகம் காணாமல் போனது ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு சோகமானது ? அந்த

ஏக்கத்தைச் சொல்கிறது. கிராமத்து நடைமுறை ஒன்று நகரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு புதிய தகவலைச்சொல்கிறது.

அமாவாசை வந்தால்

அப்பா நினைப்பு வரும்

கையும் வயிறும் காய்ந்தபடி

காத்திருப்போம்

அண்ணனும் நானும்

காக்கா வரும்வரை

கணவரை இழந்த பெண்ணின் நேசம் எப்படிப்பட்டது. ?

முப்பது வருஷம் முடிந்த பிறகும்

திருநீரில் இருப்பது அவருடைய

அஸ்தியென்பது அம்மாவின் நம்பிக்கை

அந்த ஊரில் காமன் பண்டிகையின் போது  மண்டகப்படிகளில் பராகிரமம் சொல்லிக் கூப்பிடும் முன் …

அசக்கிராமம் சொல்லி அழைக்கும்போது

அழுகையாய் வரும்…

{ அசக்கிராமம் = வெளியூரிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் } கிராம வழ்க்கையைக் கச்சிதமாக முன் வைக்கிறது இக்கவிதை !    இப்புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ கைப்பிடியில் நழுவும் உயிர் ‘ ! இதில் பூடகத்தன்மையும் தத்துவச் சாயலும் உள்ளன.

 

வலுவோடு துழாவும்

கைகளுக்கு அகப்படாத

காற்றுபோல்

பிடி நழுவுகிறது

—- என்று கவிதை தொடங்குகிறது.

கடைசிப் பிடிமானமாய்

முயற்சி செய்கிறேன்

திராணியைச் செலுத்தி

 

உயிர் கையிலிருக்கிறது

பற்றிக் கொள்வதும் விட்டுவிடுவதும்

நழுவிக் கொண்டிருக்கும்

பிடிமானத்தில் இருக்கிறது

கைப்பிடியில் நழுவும் உயிரை

கைதான் பற்றியிருக்கிறது

 

அக்கரையை அடையும்வரை

பிடி நழுவாதிருந்தால்

நீரிடமே கற்றுக்கொள்ள வேண்டும்

நீச்சலை

— என முடியும் கவிதையின் கீழ் , ஒருவன் பரிசலில் போய்க்கொண்டிருக்கும் படம் உள்ளது. கடைசி நான்கு வரிகள் புதிர்த்தன்மையுடன்

உள்ளன. ‘ பரிசலில் செல்வது போன்றதுதான் வாழ்க்கை ‘ என்ற கருத்தைச் சொல்கிறாரா ? ஆபத்து ஏற்படும் என்ற அச்ச உணர்வைச்

கவிதை சொல்கிறதா ? தெளிவாக இல்லை.

 

கடிதம் எழுதும் வாய்ப்பு மிகவும் குறைந்து போய்விட்டதைச் சொல்கிறது ‘ கடுதாசி ‘ என்ற கவிதை !  எப்படித் தூக்கம் வருகிறது

என்பதைச் சொல்கிறது ‘ புலனடங்கும் நேரம் ‘ ! இதில் சொற்கள் நெருக்கமாக அமைந்துள்ளன.

நடுநிசி நாழிகை

கண்கள் சுரந்து

கவனநிமிடம் கரைந்து

அயர்ந்த புலங்கள் ஒவ்வொன்றாய்

ஆசுவாசப்படுத்தி ஆழ்மனம் அமிழ்ந்து

தேகக் கனம் லேசாகி

கணநேரம் இமைகள் அயர்ந்து

தெளிவு தொய்ந்து உயிர் சுருங்கி

நிசப்த நினைவு மயங்கி

அரவமற்று வந்தது

சலனமேதுமில்லாமல்

நித்திரை

 

‘ நடுநிசி நாழிகை ‘ என்ற தொடக்கம் தூங்காத ஒரு விழிப்பு நிலையை உணர்த்துகிறது. தூக்கம் தொலைந்த காரணம் என்னவாக

இருக்கும் ? தனிமையா ? நோய்மையா ?  ‘ கவன நிமிடம் கரைந்து ‘ என்பது நல்ல வெளிப்பாடு !

‘ காத்திருப்பு ‘ என்றொரு கவிதை. இதில் இரண்டு இடங்கள் மொழி சார்ந்த நயங்கள் கொண்டவை.

 

  1. ஒவ்வொரு விடியலையும்

சிக்கனமாய்ச்  சேமித்து வைக்க

சீக்கிரமே செலவாகிவிடுகிறது

 

  1. எல்லா நேரமும்

சிறகு கட்டியிருக்கவே

விருப்பம் கொள்கிறது மனசு

—- வாழ்க்கையில்  ‘ காத்திருப்பு ‘ தவிர்க்க முடியாததுதான் !

உயிர்த்துடிப்பான கிராம வாழ்க்கையின் பால்ய கால நினைவுகளைச் சொல்லி , அதன் மகத்துவம் தன் மகனுக்குக் கிடைக்கவில்லை

என்பதையையும் ‘ பால்யம் தொலைத்து ‘ என்ற யதார்த்தக் கவிதை !

கிராமத்தைக் கடந்து செல்லும்

பறவைக் கூட்டங்களைக்

கண்டதும்

” ஆலா ஆலா பூப்போடு ‘ என

ஓடி ஓடிக் கைகளைக் காட்டியும்

ஒரு தடவைகூட ஆலா

பூப்போட்டதில்லை.

— இப்பதிவு அழகாக இருக்கிறது. பிள்ளை மனமும் கவி மனமும் ஒன்றாகக் காட்சியளிப்பது சிறப்பு. [ பெரும்பாலும் பிள்ளை மனம்

கவி மனமே ! ]

 

வெயிலில் உருகும்

ஓடாத மிட்டாய்க் கடிகாரத்தின்

பிசுபிசுப்பு

—- என்பது ‘ பளிச் ‘ சிடும் யதார்த்தம்.

இவை எதுவுமே அறியாத

என் மகன்

வீட்டுப்பாடம்

எழுதிக்கொண்டு

முழங்கால் சம்மணமிட்டு

முடங்கிக் கிடக்கிறான்

பொதுவாக , வாழ்க்கையைக் கூர்ந்து பார்க்கிறார் ராமமூர்த்தி. மொழி சார்ந்த வளமும் நயங்களும் இன்னும் கூடும்போது இவர்

கவிதைகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் !

 

 

 

Series Navigationஅமராவதிக்குப் போயிருந்தேன்செய்தி வாசிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *