ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது ! இதில் 39 கவிதைகள் உள்ளன. இக்கவிதை இயல்புகள் : 1. வளமான சொல்லாட்சி
2. எண்ணிலாப் படிமங்கள் 3. புத்தம் புதிய சிந்தனைகள் 4. புரிதலைக் கடுமையாக்கும் இடைவெளிகள் 5. வெளிப்பாட்டில் பரிமாண
வேறுபாடு எனலாம்.
‘ நாட்டுப்புறப் பாடகி ‘ பிரிவுத் துயரைக் கருவாகக் கொண்டது. இதில் சொற்கள் அழகையே இறக்கைகளாகக் கொண்டு வாசகன்
மனத்தில் பறந்தலைந்து ரீங்கரிக்கின்றன.
ஒரு வார்த்தைக்குள் ஒளித்துக்கொண்டேன்
நமது அந்தரங்கத்தை
கனிக்குள் புழுவாகி
அச்சொல் இனிப்பில் ஊறி நெளிகிறது
—- நான்கு வரிகளுக்குள் இரண்டு படிமங்கள் வந்து விழுகின்றன. தொடக்கமே ‘ அந்தச் சொல் என்னவாக இருக்கும் ? ‘ என்ற கேள்வியை
உருவாக்குகிறது. விடை தர , கவிதையின் எதிர்பாராத போக்கு உதவுகிறது.
கனிகளைத் தராத மௌன மரமாகி
நீ மரத்துப் போகத் தொடங்கிய நாளில்
அந்த வார்த்தை
பெரும் மலையாக மாறிவிட்டிருந்தது
இறுகவும் பாழ்படவும் தொடங்கியது
—– ‘ மௌன மரம் ‘ என்றது அவனுடைய , ‘ திருமணத்திற்குச் சம்மதம் ‘ என்று சொல்லாத நிலைப்பாட்டைக் குறிக்கிறது எனலாம்.
தனியே நாட்டுப் புறப்பாடலைப் பாடிக்கொண்டே
மலையைச் சுற்றத் தொடங்கினான்
ஆன்மாவின் செவிகளுக்குக் கேட்கின்ற
உன் மிருதுவான இசைக் கருவி
மௌனத்தின் உறுப்பாகிவிட்டதா
—— ஒரு மலையைச் சுற்றி வர எவ்வளவு நேரமாகும் ? தனிமைத் துயரின் கால அளவு எப்போதும் நீண்டே கிடப்பதுதான் இயல்பு !
‘ இசைக் கருவி ‘ என்ற குறியீடு என்ன பொருளை உணர்த்துகிறது ? ‘ கனிவான பேச்சு ‘ என்பதுதான். அவனிடமிருந்து எந்தத் தகவலும்
இல்லை என்ற பெண் மனக் கனத்தை மேற்கண்ட பத்தி விளக்குகிறது. இங்கு மலை அவனுக்குக் குறியீடு எனவும் எண்ண முடிகிறது.
வனப் பறவைகளது தானியங்களால்
பசி தணிக்கிறேன்
எதிர்ப்படும் அபாய விலங்குகளின் கண்களில்
உன் இசையிலிருந்து மந்திரித்த
பொடிகளைத் தூவுகிறேன்
——‘ பறவைகளது தானியங்கள் ‘ நிச்சயம் நம் பசியைத் தீர்க்காது. ஆனால் இந்த முரண் தரும் தகவல் என்ன ? மனப்பால் குடிக்கும்
நிலைப்பாடுதான் எனத் தெரிகிறது.
” பாலாய்க் கொதிக்கிறேனே
பச்சைபோல் வாடுறேனே
நெய்யாய் உருகிறேனே
உன் நினைவு வந்த நேரமெல்லாம் ”
—— கவிதையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட அந்த ஒரு வார்த்தை என்ன ? அவனது பெயர் என்பதுதான் என் யூகம் ! இக்கவிதையில்
கலை நேர்த்தி நன்றாக அமைந்துள்ளது இருண்மையைப் போர்த்தியபடி.
‘ ஊஞ்சல் ‘ என்றொரு கவிதை !
சாய்ந்து எழுந்த விருட்சம்
வந்து செல்கின்ற மலைக்குன்று
தள்ளடுகிற ஆகாயம்
இங்குமங்கும் ஓடியோடித் தேய்ந்த நிலா
ஊஞ்சலில்
தலைகீழாகப் பார்க்கிறேன் உலகத்தை
—– இவ்வரிகளில் காட்சிப் படுத்துதல் நன்றாக அமைந்துளது. இந்தக் கயிற்று ஊஞ்சல் கொய்யா மரத்தில் கட்டப்பட்டுள்ளது. ஊஞ்சலாடும்
மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன தருகிறது ?
பறவையொன்றின் தன்மைகளைக்
கற்றுத் தருகிறது ஊஞ்சல்
எட்டித்தொடுகிறது
வானகத்தின் ஏழு வாசல்களையும்
—– அதென்ன ஏழு வாசல்கள் ? மதம் சார்ந்த தொன்மப் குறிப்பாக இருக்கலாம். அடுத்து , ஊஞ்சலாடும் சுகம் எப்படிப்பட்டது ?
ஊஞ்சல் கொண்டுபோய் எறிந்த எங்கள் உலகம்
சிவந்த தும்பிகளின்
கண்ணாடிச் சிறகைப் போல்
எதிலெதிலோ மோதிச் சிதைந்து….
—— சிறுசுகள் எப்போதும் அப்படியே இருந்துவிட முடியுமா ?
ஆண்களென்றும்
பெண்களென்றும் பிரிந்தோம்
வயது வந்தவர்களாகி
எங்கள் ஊஞ்சலைத் தவறவிட்டோம்
——- என்று கவிதை முடிகிறது. பிள்ளைப் பருவ விளையாட்டு எளிமையாகவும் அழகாகவும் எழுதப்பட்டுள்ளது.
‘ புள்ளக் கூடு ‘ என்ற கவிதை , கிழக்கிலங்கை – கல்முனைப் பிரதேச முஸ்லிம் வீடுகளில் குளவி கூடுகட்டியிருந்தால் , அதே
வீட்டில் அல்லது அயலில் பெண் கருத்தரித்திருக்கிறாள் என நம்பும் வழக்கம் பற்றிப் பேசுகிறது.
‘ எலுமிச்சை நிறப் பூ ‘ என்றொரு கவிதை. இதில் பூவின் தன் கூற்று வழிக் கவிதை அமைந்துள்ளது.
இன்றைய பகலின் நிறப்பொலிவை
காதல் நிரம்பிய குரலால்
உஷ்ணமடையச் செய்கிறாய்
எனது முக நிறத்தின் ஒளிர்வுடன்
பளிச்சிடுகின்ற ஏறு வெயிலில்
உன் பக்கமே சாய்கிறது
முற்றிய கதிர்களாய் த் தலை பூத்த காதல்
—– மேற்கண்ட இரண்டு பத்திகளிலும் பூவின் இனிய குரல் கேட்கிறது. ஒளிநாட்டம் மிகவும் நயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது எனலாம்.
அதாவது அவன் பால் இவள் நாட்டம் !
தங்கக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தேன்
நாகப் புள்ளிகளிலிருந்து கிளம்பி வீசியது
மணம்
——- சூரிய கிரணத்தை , சூரியனைப் பாம்பு விழும்புவதாகச் சொல்வதுண்டு. அந்த நாகத்தின் புள்ளிகளிருந்து மணம் கிளம்பி வீசுவதாகச்
சொல்வது நுணுக்கமான கற்பனையாகும். ‘ தங்கக் கண்ணாடி ‘ சூரியனுக்குக் குறியீடாகும்.
மரைகளின் கொம்பு வரிகளை
என் தோலில் எழுதுகிறாய்
—— என்ற வரிகளின் பொருள் விளங்கவில்லை. கவிதையின் முத்தாய்ப்பு சிந்திக்க வைக்கிறது.
என் உதடுகளின் ருசி ஏறிக்
கூவுகிறாய்… கூவுகிறாய்… நீ என் பெயரை
—– பூ சூரியனை முத்தமிட்டிருந்தால்தான் ‘ உதடுகள் ருசி ஏறி ‘ என்ற சொற்கள் பொருந்தும். சரி , பூ முத்தமிட்டதாகவே வைத்துக்
கொள்வோம். அந்த இடம் எப்படிப்பட்டது தெரியுமா ?
மலை உச்சிகளின் மருத மரங்களைத் தாண்டி
வெள்ளைக் காளாங்கள் பூத்த வானில்
மின்னல் கிளைகளை ஒடித்து வீசி
மேகக் கருஞ்சுவர்களுக்கப்பால்
எப்படித் தொடுகிறது
மனோரதிய நிறக்குழைவுகள்
சௌந்தர்யமாய் மிதக்கும் ஓரிடத்தில்
—– என அச்சூழல் வர்ணிக்கப்படுகிறது. ‘ மின்னல் கிளைகளை ஒடித்து வீசி ‘ என்ற படிமம் புதியது. [ இதை மிகையுணர்வு வெளிப்பாடு
என்று ஏற்காத வாசகர்களும் உண்டு ] ஒரு நல்ல கவிதையைப் படித்த நிறைவு தோன்றுகிறது.
‘ குடுவையில் நிறையும் இரவு ‘ என்ற கவிதைத் தலைப்பிலேயே கவித்துவம் அமைந்துள்ளது. கவிமொழி வேண்டிய தேடலில் சில
தொய்வுகள் உள்ளன. கவிதையின் தொடக்கத்தில் ஒரு சுய விமர்சனம் காணப்படுகிறது.
ஊரும் அரணையின் மினுங்கலும் பதுங்கலும்
ஊடுருவும் பச்சை வாசனை
ஊர்வனவற்றின் நெளிவு
உரியும் தோலின் புள்ளி
தெய்வ உருக்குகளின்
பளபளபைக் கொண்டிருக்கும்
முழு அந்திவானம் நான்
—– நுணுக்கம் அதிகமாக வெளிப்பாடு சிக்கலை உருவாக்குகிறது. பொருள் திரண்டு வராமல் விலகிப் பொகிறது
நெல் மணிகள் கிடைத்த
சிட்டுக்குருவிகளின் காலைப் பாடல் நீ
—– புதிய உவமை. அழகாக இருக்கிறது.
பூந்துணர் கொழுந்துகள்
விரிந்து தளரும் போது
அது உன் நிறம்
—- இதை எத்தனை பேர் பார்த்திருக்க முடியும் ? நல்ல நுணுக்கம்.
மொட்டுக்கள் உதிரும்
மகரந்தச் சதுப்பு மணல் நான்
—– இந்த வரிகளில் உட்பொருள் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு தோல்வி தெரிகிறது. அடுத்த பத்தி மிக அழகாக அமைந்துள்ளது.
கனவுகளின் பாளைகளில் சேரும்
‘ கள் ‘ எனப்
பொங்கும் இவ்விரவை
நீ கொஞ்சமும்
நான் கொஞ்சமும்
குடுவையில் பிடிக்கலாம்
நிறையும் வரை
—— இரவின் தன்மையைப் புதுமையாக விளக்குகிறார் அனார். ‘ குடுவையில் பிடிக்கும் ‘ படிமம் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.
இக்கவிதையின் மிக நயமான பகுதியிது !
பறவையின் ஆயுள்வரை
சேர்ந்திருக்க முடியாமல்
உதிர்ந்துவிட்ட இறகு
நம் நடுவே மிதந்து மிதந்து வருகிறது.
—— கனவு மெய்ப்படவில்லை என்னும் கருத்து விளக்கப்படுகிறது. படிமம் சிறப்பு பெறுகிறது.
‘ மாபெரும் உணவு மேசை ‘ யில் சர்வாதிகாரியின் கொடுமையான மனம் பேசப்படுகிறது. இதயமில்லாதவனின் வக்கிரங்கள் கவிதையில்
அதி பயங்கரமான போக்கைத் தூக்கி நிறுத்துகின்றன.
சிசுக்களின் மூளையிலான
மிளகு ரசம் [ புதினா சேர்த்தது ]
கண்ணாடிக் குவளைகளில் ஊற்றப்படுகிறது
—— அந்த விருந்திற்கு சாணக்கியர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
‘ சில்லி ‘ சோஸ் ஊற்றப்பட்ட தட்டுகளில்
யோனிகள் பரிமாறப்பட்டன
உடனுக்குடன் வெட்டப்பட்ட முலைகளும்
விருந்தினரை அதிகம் கவர்ந்திருக்கின்றன
——- இதைவிடக் கொடுமையான ஒரு காட்சியைக் காண முடியுமா ? ‘ விலங்குகளை உருவேற்றி மந்திரிக்கும் அரக்கன் ‘ சிம்மாசனத்தில்
உட்கார்ந்திருக்கிறானாம். அவன் தோற்றம் எப்படி இருக்கிறது ?
பசியடங்காத ஓநாயின் சிவந்த நாக்கென
நெஞ்சில் தொங்குகிற
கழுத்துப் பட்டையை வருடியவாறு
அலங்கரிக்கப்பட்ட முள்கரண்டியால்
பிஞ்சுக் குழந்தையின் மாமிசத்தை ருசிக்கிறான்
மகா விருந்திபசாரம் !
மாபெரும் உணவு மேசை…!!
—— என்று கவிதை முடிகிறது.
கனமான இத்தொகுப்பில் பல நயங்களைச் சுமந்து நிற்கும் பல கவிதைகள் உள்ளன. நுணுக்கத்தின் முறுக்கு அதிகமாக ஏறியதால்
உரிய பாதையைவிட்டு விலகும் இடங்களும் உள்ளன. இது சிறந்த தொகுப்பு என்பதில் நிஜம் நிரம்பித்தான் வழிகிறது. கவிதை வாசகர்களுக்கு
நல்ல விருந்து : பாராட்டுகள் ! நூல் வெளியீடு ; காலச்சுவடு
- பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன.
- எலி
- மிதிலாவிலாஸ்-24
- தொடுவானம் 74. விடுதியில் வினோதம்
- தெருக்கூத்து
- அணைப்பு
- வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா
- காய்களும் கனிகளும்
- கவி ருது வான போது
- திருக்குறளில் இல்லறம்
- அனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..
- எப்படியும் மாறும் என்ற நினைப்பில்
- தெரவுசு
- புதிய சொல்
- சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா
- திரை விமர்சனம் நேற்று இன்று நாளை
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12
- ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்
- திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்