பச்சைக்கிளிகள் – பாவண்ணன் சிறுகதைத் தொகுப்பு -ஒரு வாசகன் பார்வையில்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 19 in the series 5 ஜூலை 2015

என் செல்வராஜ்

இந்த தொகுப்பு பாவண்ணனின் 15 ஆவது சிறுகதைத் தொகுதி. இந்த தொகுப்பில் 13 கதைகள் உள்ளன. இந்த தொகுப்பு 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான சுஜாதா விருது பெற்றுள்ளது.
pachaikiligal இந்த தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாமே பழைய தென்னாற்காடு மாவட்ட மொழி நடையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக வட்டார மொழியில் கதைகள் எழுதப்படும்போது பல வார்த்தைகள் புரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது.ஆனால் இந்தக் கதைகளில் கையாளப்படும் மொழி நடையில் அந்த மாதிரியான பிரச்சினை எதுவும் இல்லை.ஆசிரியர் அந்த வகையில் கவனமாகவே மொழியை கையாள்கிறார்.

Paavannan முதலில் எனக்கு மிகவும் பிடித்த கதையைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அந்தக் கதை ” வெளிச்சத்தைக் கொண்டுவருபவன்” இந்தக் கதை ஒரு படக்கடையில் உடைந்து போன தன் ஆசிரியரின் படத்தின் சட்டத்தை மாற்ற வரும் வெள்ளச்சாமியின் வழியாக சொல்லப்படுகிறது. ரெங்கநாதன் ஆசிரியர் பணி ஓய்வுக்கு மூன்று வருடமே இருக்கும் நிலையில் சிதம்பரம் பகுதியில் இருந்து வெள்ளச்சாமியின் ஊர் பள்ளிக்கு ஆசிரியர் பணியில் மாற்றப்படுகிறார்.அந்த ஊர் பள்ளி ஆறாவது முறையாக எஸ் எஸ் எல் சி தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளி என்று பத்திரிக்கையில் வந்த நேரம். ரங்கநாதன் அனைத்து ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியரிடமும் இது பற்றி கேட்கிறார்.அவர்கள் இது பற்றி அலட்டிக்கொள்ளாமல் “அட விட்டுத்தள்ளுங்க சார், ஒரு பிள்ளையும் ஸ்கூலுக்கு ஒழுங்கா வராது “என்கின்றனர். அவர் ஆங்கில ஆசிரியர். வகுப்பில் ஒருவருக்கும் ஆங்கிலம் படிக்கவே தெரியவில்லை.மாணவர்களில் பாதிக்கும்மேல் வகுப்புக்கு வரவில்லை. அவர்கள் கூலி வேலைக்குப் போய்விட்டார்கள் என்பதை அவர் அறிகிறார்.அவர்கள் வேலை செய்யும் இடத்துக்கு சென்று அவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிக்கு அனுப்புமாறு கேட்கிறார்.அவர்களோ ஒவ்வொரு பிள்ளைகள் மீதும் கடன் வாங்கி இருப்பதாகவும் அதனால் பள்ளிக்கு வரமாட்டார்கள் என்றும் சொல்கின்றனர். மறுநாளும் சூளை மேட்டுக்கு சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிக்கு அனுப்புமாறு கெஞ்சுகிறார்.கடைசியில் மாணவர்களின் அம்மா ஒருவர் வெற்றிலை போட்டு துப்பும் நேரத்துக்குள் சொல்லிக் கொடுத்துவிட்டு போகுமாறு சொல்கிறாள். ஆசிரியரும் தினமும் ஆங்கிலத்தில் சில எழுத்துக்களை சொல்லித்தருகிறார்.

சூளைமேட்டில் ஆரம்பித்த வகுப்பை கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்கு கொண்டுவந்துவிடுகிறார். மாணவர்கள் பள்ளிக்கு வர ஆரம்பிக்கின்றனர். அந்த ஆண்டும் இறுதிதேர்வில் ஒருவரும் தேறவில்லை.அந்த இருபத்து எட்டு பேரையும் வீட்டுக்கு வரவழைத்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து படிக்க வைத்து மீண்டும் தேர்வுக்கு அனுப்பிவைக்கிறார். அதில் வெற்றி பெற்ற ஏழு மாணவர்களையும் வேலை வாய்ப்பு அலுவகத்தில் பதிய வைத்து தட்டச்சு பயிற்சியில் சேர்த்து வைக்கிறார். மறு ஆண்டு பன்னிரண்டு மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். அவர்களை கடலூரில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து விடுகிறார். பள்ளியில் படிக்கும் மாணவ்ர்கள் பலர் கள்ளச்சாராயம் காய்ச்சுபவனுக்கும், அரசியல்வாதிக்கும் வேலை செய்வதை அறிந்த ரங்கநாதன் அவர்களின் பெற்றோர்களிடம் அவ்வாறு செய்யவிடாமல் தடுக்கிறார்.
அதனால் எதிரிகள் அவ்ர் போஸ்ட் ஆபிஸ் போய் வரும்போது இரவில் அடித்து போட்டு விடுகின்றனர். ஊர் மக்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.டில்லியிலிருந்து மறுநாள் அவர் பிள்ளைகள் வந்து தில்லிக்கு வருமாறு அழைக்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது என்று தன் பிள்ளைகளிடம் சொல்கிறார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆறு பேருக்கு வட்டார வளர்ச்சி அலுவலக குமாஸ்தா வேலை கிடைக்கிறது. எவ்வளவு சம்பளம் என்று கேட்கும் ஆறுமுகத்தின் அம்மாவிடம் நூற்றி எழுபது கிடைக்கும் என்கிறார்.அவர்களுக்கு வேலை கிடத்ததை பார்த்து எல்லா பெற்றோர்களும் தங்கள் மக்களை நன்றாக படிக்க தூண்டுகின்றனர்.கதை சொல்லியாக வரும் வெள்ளச்சாமி இறுதிதேர்வில் தேர்ச்சி பெறுகிறான்.அந்த ஆண்டு இருபது பேர் தேர்ச்சி பெறுகிறார்கள்.அவன் எப்படியாவது ஒரு பட்டப் படிப்பு படிக்க ஆசைப்படுகிறான்.அவனை கல்லூரியில் சேர்த்து விடுகிறார். அடுத்த ஆண்டும் அந்த பள்ளியில் இருபது பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஆசிரியர் ரங்கநாதன் ஓய்வு பெற்று அந்த ஊரில் தான் தங்கி இருந்த வீட்டை வாங்கி ஒரு பெரிய வீடாக கட்டி படிப்பு மையமாக உருவாக்குகிறார். அந்த மையம் அங்கிருந்து படித்து வெளியேறிய மாணவர்களால் வளர்ந்தது. எண்பதில் வெள்ளச்சாமியின் திருமணம் நடந்ததாக
வெள்ளச்சாமி சொல்கிறான். அந்த படிப்பு மையத்தில் படித்து குரூப் ஒன் தேறிய மாணவன் தர்மதொரையின் கவிதையாக வெள்ளச்சாமி சொல்லும்
கவிதை இது.

” சாதி எதுவும் தகுதியில்லை, தங்கம் வைரம் தகுதியில்லை
ஆதிப்பெருமை தகுதியில்லை ஆஸ்திகூடத் தகுதியில்லை
துறவு நிலையும் தகுதி இல்லை தூய்மை கூட தகுதி இல்லை
அறிவு ஒன்றே தகுதியம்மா, அதுவே எங்கள் தெய்வமம்மா”

அவன் எழுதிய கவிதை தொகுப்பு வெளிச்சத்தை கொண்டுவருபவன் என்று தர்மதொர சொல்கிறான்.

” எதார்த்த வாழ்விலும் இத்தகு தியாக மனப்பான்மை கொண்ட நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களைப்பற்றி வெளியே தெரியவில்லை என்பதால் அப்படிப்பட்டவர்கள் வாழவில்லை என நினைத்துவிட முடியாது. என் வாழ்விலிருந்தே, ஓர் எடுத்துக்காட்டை என்னால் முன்வைக்கமுடியும். நான் 1977 ல் எஸ் எஸ் எல் சி படித்தபோது எங்கள் பள்ளி இது போன்ற நிலையில் தான் இருந்தது.நான் இறுதி வகுப்பில் சேர்ந்தபோது அதற்கு முந்தைய ஆண்டில் பள்ளி இறுதித் தேர்வில் யாரும் தேர்ச்சி பெறவில்லை.எங்கள் பள்ளிக்கு சிதம்பரத்திலிருந்து பெருமாள் சார் தலைமையாசிரியராக வந்தார்.எங்களுக்கு அப்போது ஆங்கிலம் சரியாகத் தெரியாது. முதல் நாள் எங்கள் வகுப்புக்கு வந்த தலைமையாசிரியர் எந்த பாடம் புரியாதது என்று எங்கள் வகுப்பு மாணவர்களிடம் கேட்டார். அனைவரும் ஆங்கிலத்தில் இலக்கணம் தெரியாது என்றோம்.ஏன் எனக்கேட்டார். இதுவரை எந்த ஆசிரியரும் ஆங்கில இலக்கணம் நடத்தவில்லை என்று சொன்னோம். அந்த வருடம் முழுவதும் ஆங்கில இலக்கணத்தையும் ஆங்கில பாடத்தையும் மாலை நேரத்திலும் அதிகாலையிலும் டியூஷன் சொல்லித்தந்தார். எங்கள் பள்ளியிலேயே தங்கி வகுப்பெடுத்தார்.அவரே தனக்கு
வேண்டியதை சமைத்துக்கொண்டார். அந்த ஆண்டு மூன்று மாணவர்கள் தான் தேர்ச்சி அடைந்தோம். ஆனாலும் அந்த மூவரில் இருவர் உயர் பதவிகளில் இருக்கின்றோம்.இன்னொரு மாணவர் உயர்நிலையில் இருக்கிறார். மூவரும் வெவ்வேறு சாதி. ஆனாலும் எங்களை வளர்த்துவிட்ட அந்த ஆசிரியரை இன்றும் மறக்க முடியாது. இந்த கதை மிகச் சிறந்த கதையாக வந்திருக்கிறது. இந்த கதை உயிர் எழுத்து இதழில் வெளியாகி இருக்கிறது

அடுத்து ஒரு முக்கியமான சிறுகதை ” பச்சைக்கிளிகள்”. கதை ஆங்கில ஆசிரியர் வகுப்பில் குழலூதும் ஒருவனின் கதையை சொல்வதில் ஆரம்பிக்கிறது. மன்னனிடம் பரிசு வாங்க குழலூதுபவன் குழலூதி எலிகளை அவனை தொடரச்செய்து ஆற்றுக்குள் இறக்கி இறக்கும்படி செய்துவிடுகிறான். ஆனால் அவனுக்கான பரிசு கிடைக்காததால் மறுநாள் அவன் குழலூதி அந்நகரின் குழந்தைகளை கூட்டமாக கூட்டி அழைத்து செல்கிறான். அரசன் பயந்து பரிசைக் கொடுத்து குழந்தைகளை மீட்கிறான்.அந்த கதையை கேட்ட கதை சொல்லி குழலூதுபவனைப் போல நான்கு காகங்களையாவது வரவழைக்க முயலுகிறான். அவன் அழைப்பை கேட்டு எந்த காகமும் வரவில்லை. அவன் அம்மா , அண்ணன் ஆகியோர் கிண்டல் செய்கிறார்கள்.அவ்ர்கள் ஒரு ஓட்டல நடத்துகிறார்கள்.சிதம்பரம் ஜெயராமன் பாடிய கா கா என்ற பாட்டு தொலக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. படத்தில் பாடுபவரை சுற்றி காக்கைகளின் கூட்டம். அதை பார்த்த அவனுக்கு மெய்சிலிர்க்கிறது. அவர்கள் தெருவில் உள்ள கவுண்டர் வீட்டுக்கு ஒரு அம்மாவும் பிள்ளையும் குடிவருகிறார்கள்.வரும்போதே அந்த அம்மா ஹோட்டலுக்கு வந்து அவ்ன் அப்பாவிடம் வந்து கவுண்டர் வீட்டு மாடிக்கு குடி வந்திருப்பதையும் அரிசி முறுக்கு போடுவதுதான் தங்கள் தொழில் என்றும் சொல்கிறாள்.அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த அம்மாவின் மகன் முத்துசாமி மரமருகில் சென்று கிளியை பார்த்து கீ கீ என குரல் கொடுத்ததும் அந்தக் கிளி அவன் தோளில் வந்து உட்காருகிறது.அந்த காட்சி இவன் மனதில் படிகிறது.அன்று மாலையே அவன் முத்துசாமியின் நண்பனாகிறான்.முத்துசாமியின் அம்மாவுக்கு முறுக்கு சுடுவதுதான் வேலை. சின்ன சின்ன பாக்கெட்டுகளில் போட்டு வீடு வீடாக சென்று விற்று வருவது முத்துசாமியின் வேலை. சில மாதங்களில் முத்துசாமியின் முறுக்கு பாக்கெட்டும் ,பச்சைகிளிகளும் பிரபலமானது. ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் ரேஷன் அரிசிக்கு 15 ரூபாய் கொடுத்து முத்துசாமியின் அம்மா வாங்கியதால் அவர்கள் வியாபாரமும் பெருகியது.ஹோட்டல்காரர் வீட்டில் பொறாமையும் வளர்ந்தது.முத்துசாமி மாடியில் தினமும் கிளிகளுடன் இருப்பதும் அவன் அவற்றிற்கு அரிசியைக் கொடுப்பதும் அந்த ஊர் பள்ளிவரை பரவியது. ராமசாமி சார் “கடவுள் அம்சம் முத்துசாமி “என்றார். இதுவரை சிக்கலில்லாமல் செல்லும் கதை ஹோட்டல்காரரின் மனைவி அரிசி 10 ரூபாய்க்கு கிடைப்பதில்லை என்றும் அதற்கு காரணம் முறுக்குக்காரி 15 ரூபாய்க்கு வாங்குவது தான் என்றும் புகார் கூறுகிறாள். அதுவரை தனது ஊரிலிருந்து வந்தவள் முறுக்குக்காரி என்ற பாசத்துடன் இருந்த அப்பா சட்டென மாறிவிடுகிறார். அவளையும் அவள் குடும்பத்தையும் ஊரைவிட்டு விரட்ட தீர்மானிக்கிறார். மறுநாள் ஹோட்டல்காரரின் மனைவி 15 ரூபாய் கொடுத்து அரிசி வாங்க ஆரம்பிக்க அதிக அளவில் ரேஷன் அரிசி அவளுக்கு வருகிறது, மறுபுறம் முறுக்குக்காரி வீட்டுக்கு மாவட்ட ரேஷன் அதிகாரி வந்து மிரட்டிச் செல்கிறார். ஹோட்டலிலிருந்து முறுக்கு தட்டு எடுக்கப்பட்டு விடுகிறது. வனவிலங்கு துறையில் இருந்து ஒருவர் வந்து முத்துசாமியை ஐயா கூப்பிடுகிறார் என்று அழைத்துப் போகிறார். கதைசொல்லிக்கு எதுவும் புரியவில்லை.போலீஸ் அடித்ததால் முத்துசாமிக்கு ஜுரம் வருகிறது.மனம் தாங்காமல் அவன் சென்று முத்துசாமிக்கு என்ன என்று முறுக்குக்காரியிடம் கேட்கிறான். கடுமையான ஜுரம் என்கிறாள் அவள். தன் அம்மாவிடம் சென்று போலீஸ் அடிப்பாங்களா? அடிச்சா ஜுரம் வருமா என கேட்கிறான். அம்மா அவனை முறைக்கிறாள்.முத்துசாமியைப் பார்க்கக்கூடாது என கட்டளையிடுகிறாள். அந்த வார கடைசியில் இரவு
படுக்கையில் அவன் இருக்கும்போது வண்டி சத்தம் கேட்கிறது. இரவிலேயே வீட்டை காலி செய்துவிட்டு ஊரைவிட்டு கிளம்புகிறது முறுக்குக்காரியின் குடும்பம். காலையில் முத்துசாமியின் வீட்டுக்குப்போகிறான் அவன். அங்கே கிளிகள் முத்துசாமிக்காக அலைமோதி அலைவதையும் மெல்ல மெல்ல அனைத்துக் கிளிகளும் அந்த இடத்தைவிட்டு ப்றந்து சென்றுவிட்டதையும் காண்கிறான். அந்த கிளிகளின் குரல் ஆதரவற்ற குழந்தைகளின் குரல் போல அவனுக்கு கேட்கிறது. அவன் மறுநாள் காலையில் முத்துசாமி இருந்த வீட்டுக்கு போகிறான். அங்கே ஆகாயத்தில் ஒரு கிளி கூட இல்லை. அந்த வீடே மௌனத்தில் உறைந்து இருந்தது. கதை இங்கு முடிகிறது.

இந்த கதையில் வரும் பச்சைக்கிளிகள் முத்துச்சாமியின் தோளில் வந்து அமர்வதும் அவனோடு பாசமாக இருப்பதையும் படம் பிடித்துக் காட்டும் பாவண்ணன் ஹோட்டல்காரர் பொறாமையால் முறுக்குக்காரி குடும்பத்தின் மேல் புகார் கொடுத்து பல வகையிலும் தொந்தரவு கொடுத்து அனைத்து அரசு துறைகளையும் ஏவி அவளை ஊரை விட்டே விரட்டுவது கண்ணில் நீரை வரவழைக்கிறது. அப்படி செய்யும் ஹோட்டல்காரரும் அந்த அரிசியை 15 ரூபாய் கொடுத்து வாங்கும்போது ஒரு விதவைத் தாய்க்கும் அவள் மகனுக்கும் அவர் கொடுக்கும் தொந்தரவுகள் நியாயமானதில்லை என்ற கருத்து வாசகன் மனதில் தானாகவே உருவாகிவிடுகிறது. ஒரு ரூபாய்க்கு அரசு தரும் அரிசியின் விலை 15 ரூபாய்க்கும் மேல் என்பதால் தான் இத்தனை போராட்டங்கள்.தன் தந்தை செய்யும் பழிவாங்கும் செயல்களைக் காணும் அவன் மனம் மிகவும் வேதனை அடைகிறது.
தனக்கு தொந்தரவு என்றால் எதிரி எக்கேடு கெட்டுபோனாலும் பரவாயில்லை என்ற மனித இயல்பை படம் பிடித்து காட்டுகிறார்.எதிரி படும் துயரங்களைக் கண்டு மகிழும் ஹோட்டல்காரர் இதே போன்ற நிலையை இன்னொருவர் மூலம் அடையவேண்டி வரும்.அப்போது அவரும் தன் ஹோட்டலை மூடவேண்டி வரும்.

“பிரசாதம்” என்ற கதையில் வளவனூர் ஜார்ஜ் பள்ளியில் படிக்கும் ஒரு ஏழை மாணவன் வீரமுத்து . அவன் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் ரெட்டியார் வீட்டுத்திண்ணையில் கிராமபோனில் காற்றினிலே வரும் கீதம் பாட்டு காற்றில் மிதந்து வருகிறது.அதைக் கேட்டுக்கொண்டு வீரமுத்து நிற்கிறான்.அவனை அங்கிருப்பவர்கள் விரட்டுகிறார்கள்,பசி வயிற்றைக் கிள்ளுகிறது. திரௌபதி அம்மன் கோயிலுக்கு முன்னால் இருக்கும் செக்கைப் பார்க்கிறான். அதற்கு எதிரில் இருந்த திண்ணைக்கு எதிரில் நாற்காலியில் செட்டியார் உட்கார்ந்திருக்கிறார்.அவர் அங்கு வரும் பையன்களுக்கு மல்லாட்டை புண்ணாக்கை எடுத்து எடுத்து கொடுப்பதை பார்த்த வீரமுத்துவுக்கு பசி உடல் முழுவதும் பரவுவது போல இருந்தது. செட்டியாரிடம் சென்று கேட்க தயங்கி நின்ற அவனை செட்டியார் கூப்பிட்டு அவனுக்கு ஒரு பிடி புண்ணாக்கை கொடுக்கிறார். அவன் அதை வாங்கி தின்றதும் பசி கொஞ்சம் அடங்கியது.செட்டியார் மீண்டும் ஒரு பிடி புண்ணாக்கு
கொடுக்கிறார்.வீட்டுக்குள்ளிருந்து ஒரு சிறுமி வந்து செட்டியார் அருகில் நிற்கிறாள்,அவள் முகத்தில் புருவத்துக்கு மேல் வட்டமாக ஒரு கரிய தழும்பு இருப்பதை வீரமுத்து பார்க்கிறான்.மீண்டும் ஒரு பிடி புண்ணாக்கை செட்டியார் கொடுக்கிறார்.அதை வாங்கித் தின்றுவிட்டு வீடு சென்ற வீரமுத்து அம்மாவிடம் செட்டியாரை பற்றி சொல்கிறான். யாராவது பிள்ளையை ஏதாவது சொல்லிவிடுவார்களோ என புலம்பும் அம்மாவிடம் செட்டியார் தான் கூப்பிட்டு கொடுத்தார் என்கிறான் வீரமுத்து. அங்கு வரும் எல்லா பிள்ளைகளுக்கும் புண்ணாக்கு கொடுத்தார் செட்டியார் என்றும் அம்மாவிடம் சொல்கிறான். வீட்டில் கஞ்சி தான் அவனுக்கு சாப்பாடு. பிடிவாதமாக ஒரு வாரம் அந்த செட்டியார் கடை பக்கம் போகாமல் இருக்கிறான். ஆனாலும் எப்போதும் அவர் கொடுத்த புண்ணாக்கு தான் நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் பசி மயக்கத்தில் இருந்த அவன் கால்கள் தாமாக நடக்க அவன் செக்கடியை அடைகிறான்.செட்டியார் புண்ணாக்கை அள்ளி கொடுக்கிறார்.அதைத் தின்றபிறகு உடலின் நடுக்கம் குறைகிறது. அது செக்கடி இல்லை, கோயில், கோயிலில் பிரசாதம் கொடுத்தால் வாங்கித் திண்ணமாட்டோமா .அப்படி நினைத்து தான் புண்ணாக்கை வாங்கிகொள்கிறேன் என்று நினைத்துக் கொள்கிறான் வீரமுத்து. இரண்டு பிடி புண்ணாக்கும் இரவுக்கஞ்சியும் அவனுக்கு போதுமானதாக இருக்கிறது. ஆண்டுத்தேர்வின் இறுதி நாளில் கோவிந்தய்யர் மெட்ராசில் விடுதியிலேயே தங்கிப் படிக்க விரும்பும் மாணவ்ர்களுக்கு பள்ளி நிர்வாகம் உதவி செய்யும் என அறிவிக்கிறார். அவன் அம்மா பாம்பு கடித்து இறந்து விடுகிறாள். வீரமுத்தை கவுண்டர் அழைத்து தோட்ட வேலை செய்யச் சொல்கிறார். அங்கு வேலை செய்யும் கருப்புசாமி, கவுண்டரிடம் வீரமுத்து அம்மா அவனைப் படித்து பெரிய ஆளாக்க நினைத்திருந்தாள் என்று சொல்கிறான். கவுண்டர் சரி விடுமுறை நாள் வரை வேலை செய்து சாப்பிடட்டும் என்று கூறிவிடுகிறார். பள்ளி மீண்டும் திறந்ததும் வீரமுத்து கோவிந்தய்யரிடம் சென்று தன் அம்மா இறந்துவிட்டதையும் , பட்டணத்துக்குச் சென்று தான் படிக்க விரும்புவதாகவும் கூறுகிறான். அவரும் மெட்ராசில் உள்ள ஆல்காட் ஸ்கூலில் அவனை சேர்த்துவிடுகிறார். கோவிந்தய்யர் “நீங்க நல்லா படிச்சு ஜார்ஜ் ஸ்கூலுக்கும் ஆல்காட் ஸ்கூலுக்கும் பெரும சேக்கணும்” என வாழ்த்தி விடைபெறுகிறார். வீரமுத்து பள்ளி இறுதி, எஃப் ஏ, எல் எம் பி தேர்வுகளில் வெற்றி பெற்று தில்லியில் ஒரு ஆய்வுக்கழகத்தில் சேர்ந்து ஆய்வில் ஈடுபட்டு பட்டம் பெற்று சான்பிரான்சிஸ்கோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக சேர்கிறார். இப்போது தில்லியில் வானில் படியும் மாசுகளை பற்றிய ஒரு கருத்தரங்குக்கு வந்தவர் தன்னுடைய கல்லூரிக்கால நண்பர் சின்ஹாவைப் பார்க்க ஜெய்ப்பூர் செல்கிறார். இப்போது அவருக்கு வயது எழுபது இருக்கும் .சின்ஹா டி வி சேனலை மாற்றிக்கொண்டிருக்கும்போது ஒரு தமிழ் சேனலில் காற்றினிலே வரும் கீதம் பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் பாட்டைக் கேட்டதும் அவருக்கு புண்ணாக்கு அள்ளித்தந்த அந்த செட்டியார் ஞாபகம் வருகிறது. நண்பரின் வற்புறுத்தலுக்கு இணங்கி சென்னை சென்று ஆல்காட் ஸ்கூலுக்கு போகிறார்.அங்கே பழைய நினவுகளை அங்கு இருந்தவர்களுடன் பகிர்ந்துவிட்டு அந்த ஸ்கூலுக்கு நன்கொடை அளித்துவிட்டு, தான் படித்த் வளவனூர் செல்கிறார். அங்கே விசாரித்தால் ஜார்ஜ் ஸ்கூல், கோவிந்தையர் ஸ்கூலாக மறிவிட்டதையும் அவர் உயிருடன் இல்லை என்பதையும் அறிகிறார். செக்கடியைத்தேடிச் சென்று அம்மன் கோயிலை அடைகிறார்.அங்கே செக்கு இல்லை. ஒரு பெரியவர் அந்த செட்டியார் மக்களுக்காவே ஒரு செக்கு போட்டு குறைந்த கூலிக்கு எண்ணை ஆட்டிக்கொடுத்துக் கொண்டிருந்ததையும் பிள்ளைகள் யாரும் சரியாக இல்லை என்றும் அந்த ஊரில் ஒரு கிழவி மட்டும் அவர் வழியில் இருப்பதாகவும் சொல்கிறார். அந்த கிழவியைத்தேடிக் கண்டுபிடித்த வீரமுத்து , செட்டியாருடன் சிறுவயதில் தான் பார்த்த சிறுமி தான் அவள் என்பதை அந்த கிழவியின் புருவத்துக்கு மேலிருந்த கரிய வட்டதழும்பை வைத்து தெரிந்து கொள்கிறார். ஆனால் அந்த கிழவிக்கு செட்டியார் பற்றிய ஞாபகம் எதுவும் வரவில்லை. சொந்த ஊருக்கு போய் யாரைப் பார்ப்பது என்று தெரியாமல் மீண்டும் சென்னைக்கு வண்டியில் ஏறுகிறார்.

இந்த கதையில் செட்டியார் கொடுத்த புண்ணாக்கை பிரசாதமாக நினைத்து சாப்பிட்டு தன் படிப்பை தொடர்ந்த வீரமுத்து மிக உச்ச நிலையில் இருந்தாலும் அந்த நினைவில் அந்த செட்டியாரைப் பார்க்க 60 ஆண்டுகள் கழித்து வருகிறார். ஆனால் அவரால் யாரையும் அந்த ஊரில் பார்க்க முடியவில்லை.பார்த்த அந்த செட்டியார் வீட்டுக் கிழவியும் எந்த நினைவும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது தன் அம்மா இல்லாத ஊரில் யாரைப் பார்ப்பது என்ற முடிவுக்கு வருவது சரியானதே.சிறுவயதில் கேட்ட காற்றினிலே வரும் கீதம் பாடல் அவரைத் தன் சொந்த ஊரின் நினவுக்கு இழுத்துச் சென்றுவிடுவதை இந்தக் கதையில் காண்கிறோம். 1940 கால கட்டத்தில் இருந்த படிப்பு முறையையும், ஆல்காட் பள்ளியையும் அந்த காலத்தில் வாழ்ந்த நல்ல உள்ளம் படைத்த ஜார்ஜ் பள்ளி கோவிந்தையர் செய்த உதவிகளையும் இன்று நினைத்துப் பார்த்தால் அது போல ஒரு காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும். தாயை இழந்த பையன் படிக்க விரும்புகிறான் என்பதை அறிந்த அந்த கவுண்டர் அதற்கு தடை சொல்லாமல் அவனை அனுப்புவதும் மிக இயல்பானதாக இருக்கிறது.

மனம் பிறழ்ந்த நிலையில் தினம் ஒரு அச்சமூட்டும் நிகழ்வைச் சொல்லும் பக்கத்து வீட்டு ஆயாவின் மனதைத் தேற்றி சரி செய்ய முயலும் வாத்தியார் கடைசியில் திடீரென ஆயா காணாமல் போனதும் தேடித் தேடி அலைந்து எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். இதைச் சொல்கிறது “பாதை” என்ற கதை.

அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவள் உயிரைக் காப்பாற்றினால் குலதெய்வம் ஐயனாருக்கு பொங்கல் வைப்பதாக வேண்டிக்கொள்ளும் கணேசன் அந்த நம்பிக்கைகளில் நம்பிக்கையில்லாதவன்.
அவன் வேண்டிக்கொண்ட போதும் அவன் அம்மா இறந்து போகிறாள்.மனைவி சாரதாவின் நம்பிக்கைக்காக கோயிலுக்கு போய் பொங்கல் வைத்து வணங்குகிறான்.குயில் கூவும் சத்தம் கேட்டுத் தன் தாயே வந்து அழைப்பதாக நினைக்கிறான். அவன் காணிக்கை கொடுத்த கதையைச் சொல்லும் கதை “காணிக்கை”

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட அவனுக்கோ அல்லது அவன் சொந்தங்களுக்காகவோ ஆபத்தான நேரங்களில் கடவுளிடம் வேண்டிக்கொள்வதையும் அந்த வேண்டுதலை நிர்ப்பந்தத்தால் நிறைவேற்றுவதையும் இந்தக் கதை விளக்குகிறது.

” பிருந்தாவனம்” என்ற கதையில் அண்ணி ரேவதி கோயிலுக்குப் போகும்போது கடையில் பார்க்கும் ஒரு கண்ணன் பொம்மையை வாங்க ஆசைப்படுகிறாள்.அண்ணனோ மிகவும் கஞ்சன். செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு கேட்பவன்.வாங்குவதற்கு மிகவும் தயங்கும் அண்ணியிடம் பொம்மை விலையைக் குறைத்து வாங்கச் செய்கிறான்.அந்த செலவைத் துணி துவைக்க சோப்பு வாங்கியதாக கணக்கு எழுதிவைக்கிறாள் அண்ணி. அண்ணனோ அதையும் விடாமல் ஏன் வாங்கினாய் எனக் கேள்வி கேட்கிறான். போர்வை தலையணையை துவைக்க சோப்பு வாங்கியதாகச் சொல்கிறாள்.அதற்கும் விளக்கம் கேட்கிறான் அவள் கணவன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அறையைக் கணவன் சுத்தம் செய்கிறான். அலமாரியை சரி செய்ய சாவியைக் கேட்கிறான் . சாவியைக் கொடுத்த ரேவதி அந்த அலமாரியில் கண்ணன் பொம்மை இருப்பதால் பதற்றம் கொள்கிறாள். அண்ணனுக்கு தம்பி உதவி செய்கிறான். எப்படி பொம்மையை அண்ணன் கண்ணில் இருந்து மறைப்பது என அவன் விழிக்கிறான். அப்போது விளக்கு மாடத்தில் இருந்த கைப்பேசியில் ஒரு அழைப்பு வருகிறது. அது யாரென பார்க்கச் சொல்கிறான் அண்ணன். அதைப் பார்த்து சொன்னதும் கைப்பேசியை வெளியில் வந்து வாங்கிக்கொள்கிறான் அண்ணன்.அந்த நேரத்தில் கண்ணன் பொம்மையைத் தன் பள்ளிக்கூட பைக்கு மாற்றிவிடுகிறான் தம்பி. அண்ணன் அலமாரியை சுத்தம் செய்துவிட்டு மாலையில் வெளியே சென்றபின் அண்ணியிடம் உண்மையைச் சொல்கிறான். அந்த பொம்மையை ஒரு கணம் நெஞ்சோடு அணைத்து வைத்திருந்து விட்டு பின் மீண்டும் அலமாரியிலேயே வைக்கிறாள் அண்ணி. மனைவிக்குச் சிறிதும் சுதந்திரமோ, அவள் விருப்பத்தை தெரிந்து கொள்ளவோ விரும்பாத கணவனிடம் எட்டு ரூபாய் பொம்மைக்கு கஷ்டப்படுகிறாள் ஒரு பெண் என்பதை இந்த கதை சரியாக படம் பிடித்து காட்டுகிறது.

” வெயில்” என்ற கதையில் அவன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் பெண் காவேரி. அவனைக் காதலிக்கிறாள்,ஆனால் அவன் கனடா செல்ல வேண்டி இருக்கிறது. அவன் கனடா கிளம்பும் நேரத்தில் அவள் வந்து அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டுப் போய்விடுகிறாள். நான்கு ஆண்டுகள் கழித்து வரும் அவன் காவேரியைத் தேடி அவள் வீட்டுக்குச் செல்கிறான். ஆனால் காவேரியைத் தவிர மற்றவர்கள் ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும் , காவேரி பைத்தியமாகி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருப்பதாகவும் அந்த வீட்டில் இருக்கும் பெண் சொல்கிறாள். அவளைப் பார்க்க அவன் விரும்புகிறான். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று விசாரிக்கிறான். பணியில் இருக்கும் பெண் நூறு ரூபாய் கொடுத்த பிறகுதான் காவேரியைக் காட்ட ஆளை அனுப்புகிறாள். மூன்று பெண்கள் காவேரி என்ற பெயரில் இருப்பதாக பணியாள் தெரிவித்து ஒவ்வொருவராக காட்டுகிறான்.அவன் இரண்டு பெண்களைப் பார்க்கிறான்.அவர்கள் அவ்ன் தேடி வந்த காவேரி இல்லை. ஒவ்வொரு இடத்திலும் பணியாளுக்கு பணம் கொடுக்கிறான். கடைசியாக அவன் மூன்றாவது காவேரி இருக்கும் இடத்தை அடைகிறான். அவனுக்கு காவேரியை அடையாளம் தெரிகிறது.ஆனால் அவளுக்கு யாரையும் அடையாளம் தெரியவில்லை. அவனை முத்தமிட்ட உதடுகள் அவளை அவனுக்கு அடையாளம் காட்டுகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் அவள் மீது அவன் வளர்த்து வைத்திருக்கும் ஆசையைத் தெரிவித்து விடவேண்டும் என்று நினைத்து தான் அவள் வீட்டுக்கு அவன் சென்றான் ஆனால் அவள் தோற்றம் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. அவன் மனமும் உடலும் தடுமாற அவள் காவேரி இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறான். கதையின் முடிவு எதார்த்தமானது. அந்த நிலையில் இருக்கும் அவளை நினைத்து வருந்துவதை தவிர அவனுக்கு வேறுவழி இல்லை. அவளோடு வாழவேண்டும் என்ற அவன் ஆசை நிராசையாகவே முடிகிறது.

“சுவரொட்டி” என்ற கதை சுவரொட்டி சொக்கலிங்கம் என்பவரது மரணத்தில் ஆரம்பிக்கிறது. அவரது குடும்பம் அவரை விட்டு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து போய்விடுகிறது. சாப்பாட்டுக்காக ஒரு கும்பத்தை அண்டி கிடக்க வேண்டாம் என்ற முடிவில் சாப்பாடு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மோர், டீ, காப்பி, பழங்கள் என்று தன் வாழ்க்கையையே மாற்றிகொண்டு விடுகிறார் அவர். பாலித்தீன் பைகளுக்கு எதிராக உடல் முழுவதும் சுவரொட்டிகளை ஆடையில் குத்திக்கொண்டு போராடியவர் அவர்.அவர் சுவரொட்டிகளில் எழுதி ஒட்டி வந்ததும், போலீஸ் வந்து அவரைக் கைது செய்வதும் வாடிக்கையானது. பல போராட்டங்கள். போலீசில் பலமுறை அடி வாங்கி இருக்கிறார்.ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து அவர் வைத்த சுவரொட்டிக்காக அவர்களால் அடித்து போடப்படுகிறார்.இருபது வயதில் சுதேசி மில்லில் சேர்ந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒரு தொழிலாளிக்காக சுவரொட்டி வைத்துப் போராடி அதன் மூலம் பிரபலமானவர் அவர்.அவரின் சுவரொட்டி படித்து அதன் வாசகங்களால் ஈர்க்கப்பட்டு கவிஞனான ஒருவன் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. கவிஞனும் அவன் நண்பர்களும் சேர்ந்து அவரை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். கவிஞன் கொள்ளிவைக்கிறான். திரும்பி வரும்போது அவர் ஆற்று மணல் கொள்ளை பற்றி வைத்த சுவரொட்டி கண்ணில் படுகிறது. அவர் இறுதி ஊர்வலத்துக்கு அந்த பகுதியில் இருந்த ஆறு பேர் மட்டுமே வருகிறார்கள்.கவிஞன் மற்றும் அவன் நண்பர்கள் ஐவருடன். சமுதாயத்துக்காக பாடுபட்ட ஒருவனின் இறுதி ஊர்வலம் 12 பேருடன் முடிகிறது. பாவண்ணன் சுவரொட்டி சொக்கலிங்கத்தின் சுவரொட்டி வாசகங்கள் பலவற்றைக் குறிப்பிட்டு இருக்கிறார். அவை என்றும் இந்த சமுதாயத்துக்குத் தேவையானவை.

சில வாசகங்கள் :- மணல் கொள்ளைக்கு எதிராக அவர் எழுதிய சுவரொட்டி”
“ஆற்றுமணலை அள்ளாதே, அன்னை இயற்கையை கொல்லாதே, “
“திரண்ட மணல் எமது செல்வமடா ,திருட நினைப்பது பாவமடா”,
வேலை நீக்கப்பட்ட தொழிலாளிக்கு ஆதரவாக :
“நிர்வாகத்தின் தந்திரத்தால் நீதிதேவதை கண்ணிழந்தாள்,”
“வேலையை பறித்தது நிர்வாகம், நேர்மை இழந்தது பரிதாபம்”
பாலித்தீன் பைகளுக்கு எதிராக
” பாலித்தீன் பைகள் மரணத்தின் வலைகள், பாலித்தீன் கழிவு உலகுக்கே அழிவு ”

“மரணம் ” என்ற சிறுகதை வித்யா என்ற பெண் அவள் கணவனால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இறந்து போகிறாள். அந்தச் செய்தியை அவள் தம்பி விஜிக்கு சொல்லி அனைவருக்கும் சொல்லிவிடுமாறு சொல்கிறான். அவளோடு அலுவலகத்தில் பணிபுரிந்த அனைத்துப் பெண்களும் அவள் முகத்தைக் கடைசியாகப் பார்க்க அவள் வீட்டுக்குச் செல்கின்றனர்.ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர் கணவனிடமிருந்து அழைப்பு வருகிறது. எல்லா ஆண்களுமே தங்கள் மனைவியை உடனே வீட்டுக்கு வருமாறு அழைக்கின்றனர். ஒவ்வொரு கணவனும் ஆயிரம் கேள்விகளைத் தன் மனைவியிடம் கேட்கின்றனர். யாரும் அந்த இறந்து போன பெண்ணைப் பற்றி கேட்கவில்லை.போஸ்ட் மார்ட்டம் செய்ய நேரம் ஆனதால் வித்யாவின் உடல் தாமதாக வீட்டுக்கு வருகிறது.எல்லா பெண்களும் மாலையை போட்டு விட்டு அவரவர் வீட்டுக்கு செல்கின்றனர். அனைவர் மனதிலும் தங்கள் வீட்டில் என்ன நடக்குமோ இதனால் என்ற அச்சம் எழுகிறது.அந்தப் பெண்களின் கணவர் எவரும் வித்யா எப்படி இறந்தாள் என்று கூட கேட்கவில்லை. ஏன் இப்படி இந்த ஆண்கள் நடந்து கொள்ள வேண்டும்? இது பாவண்ணன் நம் முன் வைக்கும் கேள்வி. இந்த சமுதாயத்தில் வேலையில் இருப்பவர்களுக்கே இது தான் வீட்டின் நிலையென்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல? ஒவ்வொரு பெண்ணின் வழியாக அவரது கணவனைச் சாடியிருக்கிறார்.

இந்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளுமே நல்ல கதைகள். எனக்கு பிடித்த சில கதைகளைப் பற்றி நான் இந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். அவசியம் படிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு.

பச்சைக்கிளிகள் – பாவண்ணன் (சிறுகதை தொகுப்பு)
சந்தியா பதிப்பகம், சென்னை
விலை ரூ 150/.

Series Navigationதேவதைகள் தூவும் மழை – சித்திரங்களாலான கூடுகவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *