வலையில் மீன்கள்

This entry is part 8 of 19 in the series 5 ஜூலை 2015

வளவ.துரையன்

விடிந்தும் விடியாத அதிகாலைப்பொழுது. பறவைகள் கூடு விட்டுக் கிளம்பி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. பால்காரர்களின் ‘பாம்-பாம்’ சத்தம் போய் இன்னும் உறங்குபவர்களையும் விழிக்க வைத்தது.
”ஞாயிறுதானே, மெதுவாக எழுந்திருக்கலாம்” என்று எண்ணியவாறே கண்களை மூடிப்படுத்திருந்தவனைத் தொலைப்பேசி ஒலி கிளப்பி விட்டது.
“வணக்கம்! யாருங்க பேசறது?” என்றேன் வழக்கம் போல.
“நான்தாண்டா தமிழ்மணி பேசறேன், எங்கியும் போயிடாத, இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன்”
“நீ வர்றது சரி, வா, என்னா செய்தியைச் சொல்லு” என்றேன் அவசரமாக.
“வந்து…ஒண்ணுமில்ல” என்று தயக்கமாகத் தொடங்கி “நம்ம பத்தரு செத்துட்டார்டா” என்றான்.
“யாரு, கோவிந்தனா?” என்றேன் பதற்றத்துடன்.
”ஆமாண்டா, நான் வந்து வெவரமா சொல்றேன்” என்று பேசியை வைத்து விட்டான்.
கோவிந்தனிடம் ஒரு பத்தாண்டுகளாக எனக்குப் பழக்கமுண்டு. என்னால்தான் தமிழ்மணியும் அவருக்கு நெருங்கியவன் ஆனான். என்னைவிட அவனுக்கு வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகம். தவிர தமிழ்மணியும் கோவிந்தனும் தொழிற்சங்கம் ,அரசியல், இலக்கியம் எல்லாவற்றிலும் தேர்ந்த நிபுணர்களாக இருந்தனர் .கோவிந்தன் நகைத் தொழிலாளர் சங்கத்திலும், தமிழ்மணி சர்க்கரை ஆலைத் தொழிலாளர் சங்கத்திலும் பொறுப்பில் இருந்தார்கள். நான் ஏதோ சில நண்பர்களின் காது குத்தலுக்கு அவரை அழைத்திருப்பேன். அவன் அவரைப் பல மாநாடுகளுக்கும், சுற்றுலாவுக்கும் கொண்டு சென்றுள்ளான்.
மனைவிடம் விவரம் சொல்லி’ “தமிழ்மணியும் அவன் வீட்லயும் வருவாங்க, நீயும் தயாராயிரு, போயிட்டு வந்துருவோம்” என்று சொன்னேன்.
தமிழ்மணி வந்திறங்கினான்.
“என்னடா, எப்படி? போனவாரம் கூட பார்த்துப் பேசினேன்”
ரெண்டு பேரும் ராத்திரி தூக்கு மாட்டிகிட்டாங்களாம்.” அவ்வளவுதான்.
“அய்யய்யோ” என்று கத்தி விட்டாள் என் மனைவி. அவள் ”வயசுக்கு வந்த பொண்ணும் பையனும் வேற இருக்காங்க, சொந்தம்னு சொல்ல வேற யாரும் இல்லன்னு சொல்லுவீங்க” என்றாள்.
“ஆனா கடைத்தெருவில பாத்தபோது ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க, பசங்களுக்குப் பணம் கட்ட முடியல, ரெண்டு மாதமா வாடகை குடுக்கல, வேலைங்க எதுவும் வரல”ன்னு வருத்தமாதான் பேசினாரு” என்றேன்.
“எப்படிடா வேல வரும், எப்படி வரும்? எல்லாத்தையும்தான் வித்திட்டீங்களே” என்றான் தமிழ்மணி ஆத்திரத்துடன்.
“என்னடா சொல்றே” என்றேன் அதிர்ச்சியாக.
“பின்னே என்னடா, பத்தருங்களாம் பெரிய பெரிய நகைக் கடையத்தான் நம்பி இருக்காங்க. நகைக்கடை மொதலாளிங்க தங்கம் கொடுத்து கம்மலு, மோதிரம், அட்டிகை, தாலின்னுன் செய்யச் சொல்லிக் கூலி கொடுப்பாங்க. பல கடைங்கள்ள பத்தருங்க கூலியை முன்பணமாவும் வாங்கிக்கறதுண்டு”
”சரி, இப்ப என்னாச்சு” என்றேன்.
“இப்பவா, அதான் உலக உலகமயமாக்கல்னு தொறந்து உட்டீங்க, அவன் அவன் இங்க வந்து தொழிலாளரைக் கெடுத்திகிட்டிருக்கான். தங்கக்கட்டி இறக்குமதி செஞ்சாதான பத்தருக்கு வேல கெடக்கும். இவங்கதா அங்கேந்தே தங்க நகைகளை விதம் விதமான வடிவத்தில் எறக்குமதி செய்றாங்களே? அப்புறம் இங்க இருக்கிறவங்கதான் செத்துப் போவணும், வெள்ளைக்காரன்தான் நம்ம நாட்டுக் கைத்தொழில நசிச்சான்ன்னு படிச்சோம். அதேதான் இப்பவும் நடக்குது” என்று கண்கள் சிவக்கக் கத்தினான் தமிழ்மணி. அவன் சிந்தனை எனக்குள்ளும் சில எண்ணங்களை விதைத்தது.
வாசலில் மொட்டைப்பந்தல், சற்றுத் தள்ளி வறட்டிப்புகை, பிளாஸ்டிக் நாற்காலிகள். நிறைய மிதிவண்டிகள் எனக் கோவிந்தன் வீட்டு வாயிலில் காணப்பட்டன.
நால்வரும் உள்ளே சென்றோம். இருவரும் பக்கத்தில் பக்கத்தில் உறங்குவது போல கிடத்தப்பட்டிருந்தனர். அந்த ஊதுவத்தி, மற்றும் பூமாலைகளின் மணம் வயிற்றைக் குமட்டியது. பதினேழு வயதில் உள்ள பெண் சுமதியும், பத்தாம் வகுப்பில் பயிலும் மனோகரனும் கதறிக் கதறித் துடித்தது என் மனைவியைக் குரலெடுத்து அழ வைத்து விட்டது.
இரு வண்டிகளில் நால்வரும் நகர்ப்பகுதியை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். ஒரு தேநீர்க்கடையைப் பார்த்ததும் “நிறுத்துடா, தேநீர் சாப்பிட்டுப் போவோம்” என்றான் தமிழ்மணி.
நால்வர் கைகளிலும் தேநீர். இறுக்கமான மௌனம். “அந்தப் புள்ளங்கள நெனச்சாத்தான் பாவமா இருக்கு. வலையில மாட்டிக்கிட்ட மீனுங்க மாதிரி எப்படித் துடிக்குதுங்க” என்றாள் என் மனைவி.
“அதேதாங்க எனக்கும் மறக்கவே முடியல” என்றான் தமிழ்மணி.
மறுநாள் மாலை வந்த அவன் இன்னும் சோகச் சூழலிலேயே இருந்தான். தேநீர் கொண்டுவந்த என் மனைவியிடம், “எப்டீங்க நீங்க வலை மீன்கள்னு சரியா சொன்னீங்க” என்றான்.
“என்னவோ நான் நெனச்சதச் சொன்னேன்” என்றாள் அவள்.
“இல்லீங்க ரொம்பப் பொருத்தமா சொன்னீங்க” என்றான் தமிழ். நான் இன்னும் அவனைத் தளர்த்த ”என்னா பொருத்தம் வெவரமாச் சொல்லு” என்றேன்.
“டேய், அந்தப்பசங்க கவலையே தெரியாம வெளயாடிக் கெடந்துதங்க; திடீர்னு இப்ப இது மாதிரி வந்து மாட்டிகிச்சிங்க; அதுங்க எதிர்காலம் இருட்டுதான். வலை மீனுங்க அப்படித்தான; தப்பிக்கவும் முடியாதுல்ல.”
“ஒனக்குதாம்பா இந்த உவமைப் பொருத்தம் இந்தச் சூழலிலேயும் பாக்க வரும்” என்று மேலும் அவன் மனத்தை மடை மாற்ற முயன்றேன்.
“சூழல் எதுவானாலும் வேதனைன்றது அனுபவிக்கிற எல்லார்க்கும் ஒரே மாதிரிதான. அதுவும் வலயில மீனுங்க மாட்டிக்கிறது பழைய உவமை தெரியுமா? ஒன் வீட்ல அதை நல்லாப் படிச்சவங்க மாதிரி சரியாகச் சொல்லிட்டாங்க”
”நான் எதைப் படிச்சேன்; நீங்கதான் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று சிரித்துக் கொண்டே உட்கார்ந்தாள் அவள்.
“பழங்காலத்துல பெண்களைப் பூட்டிப் பூட்டி வைச்சாங்க. அதுலயும் அரசன் வெளியுல வரும்போது அவனைப் பார்த்து ஆசைப்படக் கூடாதுன்னு அடைச்சு வச்சிடுவாங்களாம். ஆனா அவங்கள்ளாம் வீதியில போற மன்னனைச் சன்னல் வழியாப் பாப்பாங்களாம். அந்தப் பொண்ணுங்களுடைய கண்களெல்லாம் மீனுங்கபோல இருக்கும். அரசன் எங்கே வரான்னு அங்கும் இங்கும் அலைபாயற அந்தக் கண்கள் வலையில் அகப்பட்ட மீனுங்க போலத் துடிக்குமாம்.
”இது எதுல வருது” என்றேன் நான்.
”முத்தொள்ளாயிரத்துலதான். ஆனா உவமையைப் பாக்கறது மீனுங்க துடிக்கறதோட நிறுத்திக்கணும்” என்று சிரித்தான் தமிழ்.
”சன்னல வலை மாதிரி நெனச்சிக்கணும்” என்றேன் நான்.
“சுடரிலைவேல் சோழன்தன் பாடலம் ஏறிப்
படர்தந்தான் பைந்தொடியார் காணத்—தொடர்புடைய
நீல வலையில் கயல்போல் பிறழுமே
சாலேக வாயில்தோறும் கண்”
[முத்தொள்ளாயிரம்—78]
பாடலம்=குதிரை; சாலேகம்= சன்னல்

Series Navigationசஹானாவின் மூக்குத்திதொன்மம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *