நேர்த்திக் கடன்

This entry is part 25 of 29 in the series 19 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன்

நேற்று இரவு மீதமான சோற்றை ‘சில்வர்’ தட்டில் கொட்டினாள் நாகம்மா. தண்ணி சோறு. ஒரு கல் உப்பும் சிறிது மோரும் சேர்த்தாள். பாலு என்கிற பாலகிருஷ்ணனுக்கு காலை ஆகாரம் ரெடி.
பாலகிருஷ்ணன் முப்பது வயது இளைஞன். பூர்வீகம் ஆந்திராவில் உள்ள நெல்லூர். சென்னை மாகாணமாக இருந்த போது ஆந்திரா தமிழகத்துடந்தான் இணைந்திருந்தது. பின்னர் பிரிக்கப்பட்ட போது பிரிய மனமில்லாமல் சென்னையிலேயே தங்கி விட்ட குடும்பம் அவனுடையது. அந்தக் காலத்தில் சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலைகளுக்கு தெலுங்குக்காரர்கள்தான் என்று ஒரு எழுதப்படாத சட்டம் இருந்தது இவர்களுக்கு சாதகமாகப் போய்விட்டது. நைனாவும் அம்மாவும் கழிவறையே கதி என்று காலம் தள்ளி ஓய்வு பெற்று விட்டார்கள். பாலகிருஷ்ணன் பத்தாவது பெயில். ஆனால் அதுவே அந்தக் காலத்தில் பெரிய படிப்பு. பாலகிருஷ்ணனுக்கு கழிவறை உத்தியோகத்தில் நாட்டமில்லை. படிப்பு வேறு அதிகம். நைனா யார் யாரையோ பார்த்து அவனுக்கு அரசு வேலை ஒன்று வாங்கிக் கொடுத்தார். ‘அபட்டாயர்’ எனும் அரசு அங்கீகாரம் பெற்ற ஆடு வெட்டும் இடம். ஆரோக்கிய ஆடுகளை இனம் பிரிக்கும் அரசு அதிகாரிக்கு உதவியாளன். ஆரோக்கிய ஆடுகள் என இவன் சொல்பவைகளை அதிகாரி அரசு முத்திரையுடன் ‘பட்டை’ கட்டி அனுப்புவார். அப்புறம் ஆடு கதி அதோ கதி.

பாலகிருஷ்ணன் நைனா மாநகராட்சி உத்தியோகத்தில் கிடைத்த வருமானத்திலும் தன்னுடைய ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணத்திலும் கூடுவாஞ்சேரியில் ஒரு நிலம் வாங்கி சிறிய வீடு கட்டி இருந்தார். பாலகிருஷ்ணனுக்கு பதினெட்டு வயசிலேயே வேலை வாங்கிக் கொடுத்த கையோடு உறவிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணமும் செய்து வைத்தார். நாகம்மா நெல்லூரிலிருந்து செண்டரல் ரயில் நிலையத்திற்கு வந்த போது சென்னையைப் பார்த்ததுதான். புருஷன் காலையில் ஏழு மணிக்கு கிளம்ப வேண்டும் என்றும் இரவு எட்டு மணிக்குத்தான் திரும்பி வருவான் என்பதும் இத்தனை வருடங்களாக அவளுக்கு அத்துப்படியான அட்டவணை.

பாலகிருஷ்ணன் தலையைத் துவட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தான். பழைய சோறு தட்டைக் கையில் எடுத்து நின்றபடியே நாலு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டான். அவன் உணவுப் பிரியன் அல்ல. எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவான். ஆனால் சுத்த சைவம். அவர்கள் குடும்பம் அசைவம் சாப்பிடுகிற குடும்பம் தான். பாலுவுக்கு ஐந்து வயது இருக்கும்போது ஆட்டு ரத்தத்தை வறுத்துக் கொண்டு வந்தாள் அவன் உறவுக்கார அத்தம்மா. அதைச் சாப்பிட்டு அவனுக்கு ஒத்துக் கொள்ளாமல் போனதும் அதற்கப்புறம் அவனைத் பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போய் வெளி வராண்டாவிலேயே வைத்தியம் பார்த்ததும் அவனுக்கு நிழலாக இன்னும் நினைவில் இருக்கிறது. அன்றிலிருந்து ஆடும் அதன் கறியும் அவனுக்கு அந்நியமாயிற்று. பின்னாளில் மற்ற அசைவ வகைகளும் தவிர்க்கப்பட்டு முழு சைவமாக அவன் மாற்றப்பட்டான். அவனுக்கு மூலக்கொத்தளத்தில் உள்ள ஆடு வெட்டும் இடத்தில் வேலை.

பாலகிருஷ்ணன் பிடித்தம் போக தன்க்கு கிடைத்த சொற்ப சம்பளத்தில் சுக ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தான். சின்ன வயசில் உடம்பு சரியில்லாமல் போய் ஊரிலுள்ள நரசிம்ம சாமிக்கு வேண்டிக்கொண்டதும் பின்னாளில் பல சாமிகளுக்கு நேர்ந்து கொண்டதுமாய் சேர்ந்து அவனை ஒரு சாமியாராகவே ஆக்கிவிட்டிருந்தது. பல சமயங்களில் அவன் பாஷை புரியாதது போல் இருக்கும். அப்படித்தான் ஒரு நாள் கயிற்றுக் கட்டிலில் வேப்பமரத்தடியில் ஒரு ஞாயிற்றுக் கிழமை படுத்திருந்தபோது ‘அதோ பார் அந்த காக்காவை. அதுங்கழுத்திலே சூலம் தெரியுது’ என்றான். நாகம்மாவும் உற்று உற்று பார்த்தாள். அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. இருந்தாலும் புருஷன் கோபித்துக்கொள்ளப் போகிறானே என்று ஆமாம் என்று சொல்லி வைத்தாள். ராத்திரி அவன் தூங்கிய பின் நரசிம்ம சாமிக்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் முடிந்து வைத்தாள். அவளுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷனில் ஏழு இருபது வண்டியைப் பிடிக்க அவன் ஏழு மணிக்கு வீட்டை விடவேண்டும். சைக்கிளில் ஸ்டேஷன் போய் சேர பத்து நிமிடம் ஆகும். சைக்கிளை ஸ்டேண்டில் விட்டுவிட்டு பிளாட்பாரம் போனால் சரியாக வண்டி வந்து நிற்கும். பீச் ஸ்டேஷன் போய் அங்கிருந்து பஸ்ஸில் மூலகொத்தளம் போய் சேர அவனுக்கு பத்து மணியாகும். நடுவில் சைக்கிள் பஞ்சரானாலோ அல்லது யூனிட் தாமதமானாலோ அவனும் லேட்டு தான். அன்று எல்லாம் சரியாகவே நடந்தது. ‘சில்வர்’ தட்டில் பழைய சாதமும் அம்மா போட்ட ஆவக்கா ஊறுகாயும் உள்ளே போக நாகம்மா கொடுத்த ‘சில்வர்’ டிபன் பாக்ஸில் புளிக்குழம்பு சாதம் இருக்க பாலு வேலைக்கு ஆஜரானான்.

கன்னியப்பன் சார்தான் அவனுக்கு மேலதிகாரி. மந்திரிக்கு உறவாம். பேசிக்கொண்டார்கள். அதனால் தான் இந்த ‘போஸ்டிங்’ கிடைத்தாம். ஆட்டுக்கு பத்து ரூபாய் என்று மேல் வருமானம் வரும் இடம். குறைந்தது ஐநூறு ருபாயாவது கிடைக்கும் தினம். இரண்டு மணியோடு ஆட்டம் க்ளோஸ். ஆடுகளும் க்ளோஸ். அதன் பிறகு ஆபிஸர் வீட்டுக்கு போய்விடுவார். போகும்போது பாலுவுக்கு ஒரு ஐம்பது தருவார். அதற்கப்புறம் பாலு பட்டை, சீல், லெட்ஜர் புக்கெல்லாம் எடுத்து வைத்துவிட்டு சாப்பிடப் போவான். அவன் வேலை செய்யும் இடத்துகருகில் ஒரு முருகன் கோயில் இருக்கிறது. அதன் மண்டபத்தில்தான் அவன் ஏறக்குறைய தினமும் சாப்பிடப் போவான். ஆடு வாசனையில் சாப்பிட அவனுக்கு பிடிக்காததால் இந்த ஏற்பாடு. தினமும் முருகன் கோயிலில் சாப்பிடுவதால் மற்ற சாமிகளுடன் அவனுக்கு முருக சாமியும் பிடித்துப் போயிற்று.

இன்று சரியான நேரத்திற்கு வந்ததினால் பாலகிருஷ்ணன் கொஞ்சநேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான். கன்னியப்பன் சார் இன்னும் வரவில்லை. எந்நேரமும் வரலாம். வாசலில் கன்னியப்பன் சார் பைக் சத்தம் கேட்டது. ‘ சார் வந்துட்டாரு’ என்று காத்திருந்த சனங்களுக்கும் தனக்குமாய் சொல்லிக்கொண்டு வாசலுக்கு ஓடினான்.சார் கொடுத்த கூடையை வாங்கிக் கொண்டான். பையில் பெரிய பாட்டிலில் மோர் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை அதை கிளாஸில் ஊற்றி பாலுதான் கொடுப்பான். அவருக்கு அல்சராம், அதனால் டாக்டர் அப்படி சாப்பிடச் சொல்லியிருக்கிறாராம். சாயங்காலம் தண்ணியடிச்சிட்டு வெறும் வயத்திலே படுத்திருப்பாரு. அதான் அல்சர் வந்துட்டுது என்று பிச்சையும் கோபாலும் பேசிக்கொண்டது அவன் காதில் விழுந்தது. அந்த நேரத்திலேயே அது மறந்தும் போனது.

பகல் பதினொரு மணி இருக்கும். அந்த வெள்ளாடு கட்டிப் போட்ட இடத்திலிருந்து துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்க்க அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அதன் துள்ளல் அடங்கிவிடும் என்று நினைக்கும் போது அவனுக்கு வருத்தமாக இருந்தது. ஆடு ஆரோக்கியமாக இருப்பது அதன் துள்ளலிலேயே தெரிகிறது. எப்படியாவது இதைக் காப்பாற்றி விட்டால் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருக்குமே என்று நினைத்துக் கொண்டான். ஏய் துள்ளாதே என்று பார்வையாலேயே அதட்டினான். ஆடு அவன் பார்வைக்கு மசியவில்லை. அதன் துள்ளல் நிற்கவில்லை.

ஆட்டின் சொந்தக்காரன் ஆட்டை இழுத்துவந்தான். ஆட்டை ஏக்கமாக பார்த்தான் பாலு.

“சீக்கிரம். இன்னும் எவ்வளவு பேர் நிக்கறாங்க பார்” என்று கன்னியப்பன் சார் அதட்டினார். அல்சர் வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. பாட்டில் மோரை ட்ம்ளரில் வார்த்து அவரிடம் நீட்டினான். அதை வாங்கி குடிக்க ஆரம்பிக்கும் போதுதான் ஆட்டை அவன் கவனித்தான். ஆடு அவனைப் பார்த்து ‘மே’ என்றது. மேலுலகம் என்று உனக்கு சொல்லத் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டான், ஆடு அவனை நிமிர்ந்து பார்த்தது. அப்போதுதான் ஆட்டின் நெற்றியை பாலு கவனித்தான். வெள்ளை நெற்றியில் பழுப்பாக ஒரு அடையாளம். உற்றுப் பார்த்தபோது அது அவனுக்கு முருகனுடைய வேல் போல் தோன்றியது. ‘முருகா’ என்று மனசுக்குள் ஒரு முறை கூறிக்கொண்டான். இதை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று தீர்மானித்தான்.

கன்னியப்பன் சார் மோர் குடித்த திருப்தியில் லேசாக சாய்ந்து உட்கார்ந்திருந்தார். தன் உடம்பால் ஆட்டை லேசாக மறைத்துக் கொண்டான் பாலு. பட்டைக்கு நூல் கட்டுவதற்காக வைத்திருந்த கோணி ஊசியை எடுத்து ஆட்டின் காதுக்கு உட்புறமாக குத்தினான். ரத்தம் காதிலிருந்து ஒழுக ஆரம்பித்தது.வலியில் ஆடு அலறியது. செத்துப் போறதுக்கு இந்த வலி பரவாயில்ல . பொறுத்துக்கோ என்று மனதார வேண்டினான்.

‘சார்! ஆட்டு காதுல ரத்தம் வடியுது சார். சீக்கோ என்னமோ?’

அப்ப வேணாம் . விட்டிடு’ கன்னியப்பன் சார் கையசைத்தார்.

ஆட்டின் சொந்தக்காரன் ஏமாற்றத்துடன் நகர்ந்தான். ஆடு துள்ளல் நின்று போய் வலியுடன் வெளியேறிக்கொண்டிருந்தது.

பாலகிருஷ்ணன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

ஆட்டின் சொந்தக்காரன் அவன் மனைவியிடம் சொல்வது அவன் காதுகளில் விழுந்தது.

” ஆடு சீக்காம். ஆபிசரு சொல்லிட்டாரு. வேறென்ன பண்றது. நீ சொன்னாப்பல முருகன் கோயிலுக்கு நேர்ந்து விட்டுட வேண்டியதுதான்”
0

Series Navigationசினிமா பக்கம் – பாகுபலிநெசம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *