ஜோதிர்லதா கிரிஜா
இந்தியாவின் அனைத்துக் குடியரசுத் தலைவர்களிலும் அப்துல் கலாம் அவர்களின் அளவுக்கு மக்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றவர் வேறு யாரும் இலர். அவரை அப்பெரும் பதவியில் அமர்த்திய வாஜ்பேயி அவர்களுக்கு நாம் கட்டாயம் நன்றி கூறியே ஆகவேண்டும். இப்பதவி இல்லாமலேயே ஒரு விஞ்ஞானி என்கிற அளவில் அவரது புகழ் ஈடு இணையற்றது தானென்றாலும், அவரது தகுதியை உணர்ந்து வாஜ்பேயி செயல்பட்டதைப் பாராட்டியே தீரவேண்டும். ஜவாஹர்லால் நேரு சிறு குழந்தைகளின் உறவில் மகிழ்ந்தது போல் அப்துல் கலாம் மாணவர்களின் உறவில் மகிழ்ந்து திளைத்தார். மாணவப் பருவத்தில் நல்ல எண்ணங்களை விதைத்துவிட்டால், அவர்கள் நன்மக்களாக உருவாவார்கள் என்பதை மிகவும் புரிந்துகொண்டிருந்த தேசபக்தர் அவர்.
அவர் எவ்வளவு எளிமையானவர் என்பதைச் சொல்ல ஒரு சாதாரணக் குடிமகளாகிய எனக்கு அவர் கடிதம் எழுதியதை நினைவு கூராதிருக்க முடியவில்லை. ஒரு பெரிய மனிதரோடு தொடர்புடைய நிகழ்வுகளை நினைவு கூர்கையில் ஒருவர் தன்னைப் பற்றி அவர் சொன்னதையும் சொல்லியாக வேண்டிய கட்டாயம் விளைந்து விடுகிறது. இது ஒரு வகையில் தற்பெருமையே யானாலும், தவிர்க்க முடிவதில்லை.
POET எனும் ஆங்கில மாத இதழில் நான் சில கவிதைத் தொடர்களை எழுத வாய்த்தது. அவற்றில் சில, இராமாயணம், இயேசு கிறிஸ்துவின் வரலாறு, நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளின் தொகுப்பு ஆகியவை. முகம்மது நபிகள் அவர்களின் முக்கியமான பொன்மொழிகளைத் தொகுத்து ஒரு நிறு நூலாக இந்து மதத்தின் ராமகிருஷ்ண மடத்தினர் வெளியிட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில் நான் எழுதிய ஆங்கிலப் பாடல்களளின் தொகுப்பு சில மாதங்கள் வரை தொடராக வெளிவந்தது. அதைப் படித்த அப்துல் கலாம் அவர்கள் கீழ்க்காணும் கடிதத்தை எனக்கு எழுதியிருந்தார்.
A.P.J. Abdul Kalam Rasahtrapathi Bhavan
New Delhi – 110 004
22nd April, 05
Dear Ms. Jyothirllata Girija,
I read with interest your poetic verses on Story of Jesus Christ and Holy Prophet in the POET. What a beautiful thought. My congratulations to you for this inspiring work. May God bless you.
With best wishes,
Yours sincerely,
Sd/-
(A.P.J. Abdul Kalam)
Ms. Jyothirllata Girija etc
Chennai 600 101
மேற்காணும் கடிதத்தை எழுதிய நாளில் அவர் குடியரசுத்தலைவர் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இதை நினைத்துப்பார்க்க்கையில் பெரிதும் போற்றத்தக்க அவரது எளிமையை வியக்காதிருக்க முடியவில்லை.
ஒரு முறை அவர் கீழே பணி புரிந்த ஒருவரை ஒரு முக்கியமான பணிக்காக அலுவலக நேரம் கடந்து தங்க வைக்க வேண்டிய கட்டாயம் அப்துல் கலாம் அவர்களுக்கு விளைந்ததாம். ஆனால், அவரோ அன்று தம் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்காக வீட்டுக்கு விரைவில் திரும்புவதாகச் சொல்லியிருந்திருக்கிறார். இதை யறிந்த அப்துல் கலாம் அவர்கள் அவரைப் பணிக்காக இருத்திய பின் தாமே அவர் வீட்டுக்குப் போய் அவருடைய குழந்தைகளை அவர் வாக்களித்திருந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றாராம்! எத்தகைய புரிந்துணர்வு! குழந்தைகள் மீது எப்பேர்ப்பட்ட கரிசனம்!
ஸ்ரீஹரிக்கோட்டாவில் ஏதோ ஓர் ஏவுகணையை வானோக்கி அனுப்பிய நாளில் அது பாதி வழியிலேயே வெடித்துச் சிதறிவிட்டதாம். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ‘இந்தப் பணியில் அப்துல் கலாம் இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார். அவர் அந்தப் பணியோடு சம்பந்தப்படவில்லை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாம். உடனே, இந்திரா காந்தி, “ஓ! அதுதான் அது பாதி வழியிலேயே சிதறிவிட்டது. இல்லாவிடில் வேற்றிகரமாய்ச் செலுத்தப் பட்டிருந்திருக்கும்!” என்றாராம். அவரது திறமையை நாட்டின் பிரதமர் அறிந்து வைத்திருந்த பெரும் பேறு எல்லாருக்கும் கிடைத்து விடுமா?
ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் தம் குடும்பத்தினரோடு தங்க அனுமதி உண்டு. எனினும் அப்துல் கலாம் தம் சகோதரரையும் அவர் குடும்பத்தினரையும் அழைத்துக்கொள்ளவில்லை. அது பற்றிய கேள்விக்கு, ”நான் திருமணம் செய்துகொள்ளாதவன். எனக்கென்று குடும்பம் இல்லாத போது, என் உறவினர்களை உடன் தங்கவைத்துக் கொள்ளுவது முறையாகாது!” என்றாராம். எத்தகைய நேர்மை!
பதவிக்காலத்தில் அடித்த கூத்துகள் போதாவென்று, முந்தைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் இப்போதும் செய்துள்ள கேலிக்கூத்து பற்றிச் சொல்லாதிருக்க முடியவில்லை. அரசு இவருடைய சொந்தக் காருக்கு ஆகும் பெற்றோல் செலவை ஏற்றுக்கொண்டுள்ளது. (அது;வே தவறு என்று சொல்லப்படுகிறது.) அப்படி இருந்தும் அப்துல் கலாம் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப் புனேவிலிருந்து ராமேசுவரம் சென்று வர அவருக்கு அரசு தனியாக ஒரு கார் அனுப்ப வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்! இந்த வெட்கக்கேட்டை என்ன சொல்ல!
பதவியில் இருந்த போது அப்துல் கலாம் அவர்களுக்கு இருந்த நேர்மை, எளிமை ஆகியவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடப் பதவியில் இல்லாத ஒருவருக்கு இல்லாததோடு இன்னமும் பழைய ஞாபகத்தில் செய்யும் அட்டகாச, அடாவடித்தனத்தை என்ன சொல்லித் திட்ட!
ஆண்டவனே! அப்துல் கலாம் அவர்களை எங்கள் நாட்டில் மீண்டும் பிறக்கச் செய்!
………
- இரண்டு இறுதிச் சடங்குகள்
- இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்
- தொடுவானம் 79. தரங்கம்பாடி – பாடும் அலைகள்.
- மிதிலாவிலாஸ்-28
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 2
- கற்பு நிலை
- விலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவர்களும் பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு
- அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்
- வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்
- மாஞ்சா
- மனக்கணக்கு
- இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்
- திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்
- அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்
- எறும்பைப்போல் செல்ல வேண்டும்
- எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்
- முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை
- கலாம் நினைவஞ்சலி
- திரை விமர்சனம் – சகலகலாவல்லவன்
- அமாவாசை
- ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு
- புரட்சிக்கவி – ஒரு பார்வை
- முதுமையின் காதல்
- கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015
- முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! – முத்துநிலவனின் கட்டுரை தொகுப்பு