எலியனார் அப்தெல்லா டௌமாட்டோ
கபிலா qabila (tribe) என்ற வார்த்தை வெறுமே உறவுக் குழுவை மட்டுமே குறிப்பிடுவது அல்ல. அது அந்தஸ்தையும் குறிப்பிடுவது. கபிலி குடும்பங்கள் அரபு மூதாதையர்களான அட்னன் அல்லது கதான் (Adnan or Qahtan,) ஆகியோரிடமிருந்து வழிவழியாக வருகின்றன. காதிரிகள் என்படுபவர்கள் (khadiri) (சுதந்திரமானவர்கள் ஆனால், அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தை காட்டவியலாதவர்கள்). ஆகவே அத்னன் அல்லது கதான் ஆகியவர்களின் வழித்தோன்றல்களாக வரும் ஜாதிகள் தங்களை காதிரிகளிடமிருந்து தனிப்பட்டவர்களாகவும் மேலானவர்களாகவும் கருதிக் கொள்கின்றனர். காதிரிகள் பெரும்பாலான கைவினைஞர்களாகவும், வியாபாரிகளாகவும் படிப்பாளிகளாகவும், எண்ணெய் வளம் பெருகுவதற்கு முந்தைய அரபியாவில் இருந்திருக்கின்றனர்.
கபிலி (அரபு மேட்டுக்குடியினர்) தங்களை மேன்மையான கபிலி ஜாதியினர், கீழ்மையான கபிலி ஜாதியினர் என்று இரண்டாகவும் பிரித்துகொள்கின்றனர். மேன்மையான கபிலி ஜாதியினர் தம்மை, ரத்தத்திலும் மூதாதையரிலும் தூய்மையானவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். இவர்கள் அஸல் கபிலி என்று வழங்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட மேன்மையான கபிலி ஜாதியினராக அனிஜா, ஷம்மார், ஹார்ப், முஸ்தாய்ர், அஜ்மன், தாபிர், பானு காலித், பானு ஹாஜ்ர், அல் முரா, கடான், உத்ய்பா, தவாஸிர், சாஹுல், மனஸ்ர், பானு யாஸ், ஷிபே, க்வாஸிம், பானு யாம், ஜாப், பானு தமிம் ஆகியோர். கீழ்மையான கபிலி ஜாதியினராக அவாஜிம், ரஷய்தா, ஹூடாய்ம், அகய்ல், சுலுப்பா ஆகியோர். சுலுப்பா ஜாதியினர் பாலைவனம் முழுவதும் பயணம் செய்து, ஆங்காங்கு மேட்டுக்குடி பெடவீன்களுக்கு, இரும்பு வேலைகள், கூலித்தொழில் ஆகியவற்றைச் செய்துவருகிறார்கள். இவர்கள் அரபு ஜாதி அமைப்பில் இருக்கும் மிகக் கீழாவனர்கள்.
கபிலா ஜாதியினருக்கும் காதிரி ஜாதியினருக்கும் இடையேயான மண உறவுகளும், மேலான ஜாதியினருக்கும் கீழான ஜாதியினருக்குமான மண உறவுகளும் சகித்துகொள்ளப்படுவதில்லை. (அரபு ஜாதியினரின் ஜாதி அமைப்பு ஆண்கள் சார்ந்து இருக்கிறது. ஆண்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் அந்த ஜாதியினராக கருதப்படுகிறார்கள்.) கபிலி ஜாதிகளின் அந்தஸ்து அவர்களது ரத்த தூய்மை சார்ந்து இருப்பதால், கலப்பு திருமணத்தால் பிறக்கும் பிள்ளைகள் அந்த ஜாதியினராகவே கருதப்பட்டாலும், கலப்பு காரணமாக, அந்த பிள்ளைகள் பாரபட்சத்துடனே நடத்தப்படுகிறார்கள். இதனால், அவ்வாறு திருமணம் செய்தவரின் ஜாதி முழுவதின் அந்தஸ்துமே சந்தேகத்துக்குள்ளாகிறது. தற்கால சவுதி அரேபியாவில் கிட்டுகிற படிப்பு வசதிகளாலும், பொருளாதார முன்னேற்றத்தாலும், மண உறவுகளில் உள்ள முந்தைய அந்தஸ்துத் தடைகள் உடைந்து வருகின்றன என்றாலும், புதிய அந்தஸ்து வகையறாக்கள் உருவாகியிருக்கின்றன. இவை புராதன ஜாதி அந்தஸ்து வகைகளுடன் போட்டியிட்டு, அரபு ஜாதிக் குழுக்களின் படிநிலையை அசைத்து அதன் சமூக முக்கியத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.
இன்று, சவுதி அரேபியாவில் ஜாதி விசுவாசத்தை காட்டும் மக்களின் எண்ணிக்கை என்னவென்று தெரியவில்லை. ஆனால், நாடோடிகளாக வாழும் அரேபியர்கள் அனைவருமே ஜாதி அமைப்புக்குள்தான் இருக்கிறார்கள். 1950இல் சவுதி அரேபியாவின் நாடோடி மக்கள்தொகை சுமார் 50 சதவீதமாக கணக்கிடப்பட்டது. வரலாற்றுரீதியாக இத்தகைய ஜாதிகள் விவசாய நிலங்களில் வருடத்தில் சிறுகாலமோ முழுவதுமோ வாழ்ந்து வருகிறார்கள். 1970இல் கணக்கிடப்பட்ட எண்ணிக்கையின்படி சுமார் 80 சதவீத அரபியர்கள் தங்களை குறிப்பிட்ட ஜாதிக்கு விசுவாசமானவராக காட்டியிருக்கிறார்கள். இது ஓரளவுக்கு அங்கீகரிக்கப்படக்கூடியது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, பெரும்பாலான நஜத் பிரதேச மக்கள் புராதன மரபுக் குழுக்களைச் சேராத காதிரிகளாக- அப்த் (கருப்பு அடிமைகள் அல்லது அந்த அடிமைகளின் வழித்தோன்றல்கள்) ஆகியோரை மணம் புரிந்திருக்கிறார்கள் என்பதால்- இருக்கலாமென அறியப்படுகிறது. ஹிஜாஜ் பிரதேசத்தின் பெரு நகரங்களான ஜிட்டா, மெக்கா ஆகியவை வெகுகாலமாக அந்நியதேசத்தினரை ஈர்த்திருக்கின்றன. ஆகவே இங்கே சவுதி அரேபியர்களிடையே தங்களை குறிப்பிட்ட ஜாதிக்கு விசுவாசமானவர்களாக காட்டிக் கொள்வதும் குறைவானதாகவே இருக்கலாம்.
அமைப்பு முறையில், நாடோடி பழங்குடி ஜாதிகள் தந்தைவழிமுறையைப் பின்பற்றுகின்றன. இந்த வழிமுறை, தனிநபர்களைச் சமூக அளவில் நாளாவட்டத்தில் பெருகி வரும் குழுக்களாக உள்ளவற்றில் இணைக்கிறது. மிகச்சிறிய ஜாதி அல்லது அலகாக கருதப்படுவது ஹமுலா வம்சம் (lineage) ஆகும். இது மூன்று அல்லது ஏழு தலைமுறைகள் சேர்ந்த பெரும் குடும்பமாகும். இது தந்தை வழியில் இணைக்கப்பட்ட குறுஞ் சமூகமாகும். இந்த வழிமுறையில் உள்ள உறுப்பினர்கள் தந்தைவழிச் சகோதரர்கள். இந்த ஹமுலா பெரும்பாலும் இப்ன் அம்ம் (அப்பாவின் சகோதரரின் மகன்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது அல்லது வெறுமே அஹ்ல் (மக்கள்) என்று அழைக்கப்படுகிறது. அதற்குள்ளாக இருக்கும் ஒரு குடும்ப அலகு பெய்த் (வீடு அல்லது கூடாரம்) என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குடும்பம், மனைவி, அல்லது மனைவிகள், குழந்தைகள் இருக்கும் ஒரு அலகு.
ஒரே மூதாதையரின் கீழே வரும் குடும்ப உறுப்பினர்கள் அருகருகே இருப்பிடங்களை அமைத்து வாழ்கின்றனர். தங்களது ஆடுமாடுகளை ஒரே குழுவாக மேய்க்கின்றனர். இந்த பெருங்குடும்பம் இந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்கிறது. அந்த தவறுகளுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதையும் பொதுவாக எடுத்துகொள்கிறது. அதே நேரத்தில் தங்கள் பெருங்குடும்பத்தின் உறுப்பினருக்கு நிகழ்ந்த பாதிப்புக்குப் பழி தீர்க்கவும் தீர்மானம் கொள்கிறது. இந்த குழுக்கள் ஜாதி அந்தஸ்தில் மாறுபட்டாலும், ஒரே ஜாதியின் கீழ் வரும் அனைத்து பெரும் குடும்பங்களும் ஒரே அந்தஸ்தினராக கருதப்படுகின்றனர். தண்ணீர் கிணறுகள், அரசாங்கத்தால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் ஆகியவை இந்த வழிமுறையின் கீழ் பொதுச்சொத்தாக கருதப்படுகின்றன. நாடோடிகள் மத்தியில், கோடைக்கால முகாம் அடித்த இடத்திலுள்ள அனைத்து கால்நடைகளும் அந்த பெருங்குடும்பத்தின் பொதுச் சொத்தாக கருதப்படுகின்றன. சமூக உறவுகளை பொறுத்தமட்டில், அரசாங்க அதிகாரிகளுடன் உறவு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு ஒருவரின் ஜாதி அடையாளம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
பரம்பரை (lineage)க்கு மேலே பல படிநிலைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் சேர்ந்தே ஜாதி (tribe) அமைக்கப்படுகிறது. ஃபக்த் (fakhd- தொடை) என்பது ஏராளமான பரம்பரைகள் சேர்ந்த ஒரு அலகு. இது பழங்குடியினர் பிரதேசத்தில் இருக்கும் மேய்ச்சல் நிலங்கள், கிணறுகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து கட்டுப்பாட்டில் வைத்துகொள்கிறது. அஷிரா (பன்மை அஷைர்- ashira (plural ashaʾir ) என்பது நிறைய ஃப்க்த் – கள் சேர்ந்த ஒரு அலகு. இதுவே ஒரு ஜாதியின் கீழ் இருக்கும் மிகப்பெரிய அலகு. ஒரே ஜாதியில் இருக்கும் பல்வேறு குழுக்கள் தங்களைத் தந்தை அல்லது மூதாதை கொண்டு அடையாளம் செய்துகொள்கின்றன. இதுவே ஒரே ஜாதியில் இருக்கும் ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையேயான உறவை நிர்ணயம் செய்கிறது. பொதுவாக ஒரு அலகு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதன் செயல் வழித் தாக்கம் என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கையில் குறைவு.
கிழக்கு அரேபியாவில், ஜாதிக் குழுக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை வைத்து அவர்களது பிரிவு அமைந்துள்ளது. யாமானி (அல்லது கடானி) ஆகியோர் ஓமான் நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் தெற்கில் உள்ள யேமன் நாட்டிலிருந்து புராதன காலத்தில் வெளியேறி இங்கு தங்கியவர்கள் என்று கருதப்படுகிறது. அட்னானி (அல்லது நிஜாரி) ஜாதிகள் வடக்கு ஓமான், ட்ரூசியல் கடற்கரை, பஹ்ரைன், கட்டார் ஆகிய பிரதேசங்களில் காணப்படுகிறார்கள். இவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இன ரீதியாக தெற்கிலிருந்து வந்தவர்களை விட ”தூய்மை” குறைவானவர்களாக கருதப்படுகிறார்கள். கட்டாரில் உள்ள பெரும்பாலான ஜாதிகள் கிழக்கு அரேபியாவை சேர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். கட்டாரின் ஆளும் குடும்பம் அல் தானி ஜாதி. இவர்கள் மத்திய அரேபியாவின் பானு தாமிம் ஜாதியை சேர்ந்தவர்களாகவும், கட்டாருக்கு பதினேழாம் நூற்றாண்டில் வந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். கிழக்கு அரேபியாவில் மிகவும் பரவலாக காணப்படும் மனஸ்ர் ஜாதியினர் பெரும்பாலும் பெடவீன் நாடோடிகளின் வழித்தோன்றல்கள். இவர்கள் அல் புராய்மி பாலைவனச்சோலை பகுதியிலும், ஐக்கிய எமிரேட்டுகளிலிருந்து கட்டார் அல் ஹாஸா என்னும் மேற்கு பகுதியிலும், ஷார்ஜா மற்றும் ரஸ் அல் காய்மா பகிதியிலும், அல் ஷாஃப்ரா, அல் லிவா என்னும் மேற்கு அபுதாபி பகுதிகளிலும் காணப்படுகிறார்கள். ஓமனின் பலம் வாய்ந்த அல் நாய்ம் (al-Naʿim) ஜாதியினர் கட்டார் மற்றும் கிழக்கு அரேபியாவில் காணப்படுகிறார்கள். பானு யாஸ் ஜாதியினரின் குயாபைஸாத் பிரிவினர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கவார் அல் உதாய்ட் பகுதியில் குடியேற முயற்சி செய்து தோற்றார்கள்.
சவுதி அரேபியாவில் தோன்றியுள்ள புதிய தேச உணர்வு , ஜாதி விசுவாசங்களோடு போட்டி போட்டு, புதிய மைய கருத்தாக உருவாகி வருகிறது. இது ஜாதிகளின் சுயாட்சியை கேள்விக்குள்ளாக்கியிருகிறது. நாடோடி முறை அகன்று மக்கள் ஒரே இடத்தில் தங்குவதால், ஜாதி அமைப்பின் பலன்களை குறைத்திருக்கிறது. குழந்தைகள் அரசாங்கம் உருவாக்கியுள்ள பொது கல்வி அமைப்பின் கீழ் வருகிறார்கள். இதனால் ஜாதி அமைப்பு தரும் கல்வி மறைந்துவருகிறது. ஆனால், நாடோடி மக்களிடம் இருக்கும் ஜாதிய விசுவாசம் இன்னமும் அந்த ஜாதிகள் எவ்வாறு மத்திய அரசாங்கத்துடன் உரையாடல் நிகழ்த்துகின்றன என்பதை நிர்ணயிக்கும் முறையாக உள்ளது. 1980களின் மத்தியிலிருந்து மத்திய அரசாங்கம் ஜாதித் தலைவர்களை நியமிக்கும் உரிமையை எடுத்துக் கொண்டுள்ளது. இவர்களே ஜாதிகளின் சார்பாக மத்திய அரசாங்கத்துடன் பேச அதிகாரம் பெற்றவர்கள். இந்த ஜாதித் தலைவர்கள் மாவட்ட அமீர்கள், கவர்னர்கள் ஆகியோர்களுடன் உரையாடி, கல்வி, விவசாய முன்னேற்றம், சட்டவிவகாரங்களில் உதவி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு முன்னேற்றம், சமூக உதவி, சவுதியில் மக்களுக்குக் கிட்ட வேண்டிய குடியுரிமை வழி வளங்கள் ஆகியவற்றைப் பெற ஜாதி உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்தும் இடையேயான பாலமாக இருக்கிறார்கள்.
அல் முரா போன்ற ஜாதிகளை பொறுத்தமட்டில், நாட்டுப் பாதுகாவலர்கள் என்பது போன்ற அரசாங்க அமைப்புகள் இந்த ஜாதி அமைப்பை வலுப்படுத்தி அந்த சாதி அமைப்புகள் மைய அரசாங்கத்துடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவியிருக்கின்றன. தேசியக் காவலர் குழுவில் சேர்வது ஜாதி அடையாளத்து வழியேதான் நடக்கிறது, ஜாதிக்குழுவில் தலைமையில் இருப்பவர்களுக்கு இந்தக் காவலர் குழுவில் உள்ள ஜாதி அணியில் தலைமைப் பதவி கிட்டும். முன்னாள் நாடோடிக் குழுக்கள் அரசாங்க காவல்படையினர் மூலமாக, உயர் பதவிகளை அடையும் வழிகளை அறிவது, ராணுவப் பயிற்சி பெறுவது, வீட்டு வசதி மற்றும் சமூக நலத்திட்டங்களிலிருந்து பயன் பெறுவது ஆகியவற்றுக்கு உதவி பெறுகிறார்கள்.
பெடவீன்களாகவே வாழ்க்கையை தொடரும் ஜாதியினருக்கு, அரசாங்கம் தண்ணீர் குழாய்கள், நகரங்களில் சந்தை இடங்கள், கிராமங்களிலும் நகரங்களில் தங்கள் ஆடுமாடுகளை விற்கக்கூடிய இடங்கள், மிருக வைத்தியசாலைகள், தீவன மானியம், விளைச்சல்களைச் சேமிப்பதற்கு கட்டிடங்கள் ஆகியவற்றை தருகிறது. தற்போதைக்கு சுமார் 5 சதவீத சவுதி அரேபிய மக்கள் நாடோடி பெடவீன்களாக வாழ்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான ஜாதிகள் சவுதி அரச குடும்பத்துடன் திருமணம் மூலம் உறவு கொண்டிருக்கின்றன. திருமண உறவுகள் மூலம் சவுதி குடும்பம் மற்ற ஜாதிகளுடன் உறவு வைத்துகொள்வது என்பது சவுதி அரசகுடும்பத்தின் கொள்கையாகும். இன்றைக்கு சவுதி அரசாங்கத்துக்கும், இந்த ஜாதிகளுக்குமான உறவை வலுப்படுத்த சவுதி இளவரசர்கள், அரசாங்க அதிகாரிகள் போன்றோர் இந்த பலதரப்பட்ட ஜாதிப்பெண்களை மணமுடிக்கிறார்கள். உதாரணமாக, தெற்கு அரேபியாவின் அல் சார் ஜாதியினர் அரசாங்கம் தங்களுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்பதற்காக தங்கள் ஜாதிப் பெண்களை அரச அதிகாரிகளுக்கு மணமுடித்து தருகிறார்கள்.
ஆங்கில மூலம்: எலியனார் அப்தெல்லா டெமாட்டோ
தமிழாக்கம்: ஆர் கோபால்
http://www.encyclopedia.com/doc/1G2-3424602698.html
–
மேலதிக குறிப்புகள்.
1) tribes என்பது தமிழில் ஜாதி என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. காரணம், ஜாதி எவ்வாறு பிறப்பின் அடிப்படையில் இருக்கிறதோ அதே போல இந்த tribeஉம் பிறப்பின் அடிப்படையிலேயே இருக்கிறது. அரபு ஜாதியில் ஒரு ஆணாதிக்க அம்சம் என்னவென்றால், ஆணின் வழித்தோன்றல் மட்டுமே அந்த ஜாதியை சேர்ந்தவராக கருதப்படுவார் என்பது. There are no specific criteria by which we may distinguish a tribe from a caste. என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆணை திருமணம் செய்துகொண்ட பெண் எந்த ஜாதியாக இருந்தாலும் ஆணின் ஜாதியால் உள்வாங்கப்படுவது இந்திய ஜாதிகளிலும் அதிகம். ஆகையால் tribe என்பதற்கும் ஜாதி என்பதற்குமான வித்தியாசம் எழுதுபவர்களின் அரசியல் சார்ந்ததாக இருக்கிறதே தவிர உள்ளார்ந்த அமைப்பு ரீதியில் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை.
2) இஸ்லாம் இந்த ஜாதிகளுக்கு எதிராக இருப்பதாக சொல்லப்படுவது வெறும் கட்டுக்கதை. இந்த ஜாதிகள் அரேபியாவில் முழு அங்கீகாரத்துடனேயே இயங்குகின்றன. இந்தியாவில் தமிழ்நாட்டில் இஸ்லாம் ஜாதிக்கு எதிரானது என்பது வெறும் பிரச்சாரம் மட்டுமே. உண்மையல்ல. இதனை முஸ்லீமல்லாதவர்களும் நம்புகிறார்கள். சவுதி அரசாங்கம் இந்த ஜாதிகளுக்கு எதிராக எந்த விதமான அறிவிப்பையும் செய்ததில்லை. செய்யப்போவதும் இல்லை. ஒரு பெண் மேல்ஜாதியாக இருந்து அந்த பெண் கீழ் ஜாதி ஆணை திருமணம் செய்திருந்தால் பல முறை அது சவுதி நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சவுதி நீதிமன்றங்கள் ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத்தின் கீழேயே இயங்குகின்றன. இது சம்பந்தமாக செய்திகள் வெளியே வருவதில்லை என்பதால் அது போன்று நடக்கவில்லை என்று இல்லை. உதாரணமாக இந்த செய்தி பாத்திமா அல் திமானி என்ற மேல்ஜாதி பெண் செய்த திருமணம் அவரது சகோதரர்களால் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிபதியால் விவாகரத்து செய்யப்பட்டது.
இந்த விவகாரம் வெளியே வந்து சில வருடங்களுக்கு பிறகு அந்த விவாகரத்து சவுதி அரசரால் நீக்கப்பட்டது.
3) அரபுகள் சென்று ஆக்கிரமித்த அனைத்து நிலங்களிலும் அரபு ஜாதிகள் மேலானவர்களாகவும் மற்ற ஜாதிகள் கீழானவையாகவும் கருதும் போக்கு உண்டு. உதாரணமாக லிபியாவில் உள்ள ஜாதிகள்.
4) அரபியாவில் உள்ள ஜாதிகளின் கணக்கெடுப்பும் அவற்றின் பெயர்களும் விக்கிபீடியாவில் இதன் இணைப்பு
https://en.wikipedia.org/wiki/Tribes_of_Arabia
5) ஈராக்கில் உள்ள அரபு ஜாதிகளின் பெயர்களும் அவர்களது பிரதேசங்களும்
https://en.wikipedia.org/wiki/Arab_tribes_in_Iraq
6) சூடான், மௌரிட்டானியா போன்ற அரபு ஆக்கிரமிப்பு பிரதேசங்களின் வாழும் கருப்பினத்தவர் அடிமைகளாக வாழ வைக்கப்படுகிறார்கள்.
அரபுகளால் சூடானின் கருப்பினத்தவர் மீது நடந்த இனப்படுகொலையே தெற்கு சூடான் என்ற தேசம் உருவாகக் காரணமாக ஆனது
மேலதிக தகவல்கள்
Bibliography
Anthony, John Duke. Historical and Cultural Dictionary of the Sultanate of Oman and the Emirates of Eastern Arabia. Metuchen, NJ: Scarecrow, 1976.
Dahlan, Ahmed Massan, ed. Politics, Administration and Development in Saudi Arabia. Jidda, Saudi Arabia: Dar alShorouq, 1990.
Dickson, Harold. The Arab of the Desert. London: Allen and Unwin, 1949.
Doughty, Charles. Travels in Arabia Deserta. Reprint, New York: Dover, 1980.
Hopkins, Nicholas. “Class and State in Rural Arab Communities.” In Beyond Coercion, edited by Adeed Dawisha and I. Zartman. London and New York: Croom Helm, 1980.
Kingdom of Saudi Arabia. Fifth Plan. N.d.
அரபுகளின் மேன்மையை இஸ்லாம் வலியுறுத்துவதை பற்றிய இணையப்பக்கம்
- பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?
- கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது
- கோணல் மன(ர)ங்கள்
- மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015
- இருதலைக்கொள்ளி
- காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1
- மிதிலாவிலாஸ்-29 (நிறைவு)
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3
- உதவிடலாம் !
- பயன்
- சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி
- அப்துல் கலாம்
- சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு
- இரா. பூபாலன் கவிதைகள்
- பரிசு
- என் வாழ்வின் வசந்தம்
- பந்தம்
- நிலாமகள் கவிதைகள்
- பொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்
- மாரித்தாத்தா நட்ட மரம்
- இசை: தமிழ்மரபு
- அமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- தொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு
- அரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்