திரை விமர்சனம் வாலு

This entry is part 8 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

0

விலகிச் செல்லும் காதலியை விரும்ப வைக்கும் வித்தியாச இளைஞனின் கதை!

ஷார்ப் எனப்படும் சக்திவேல் வேலைக்குப் போகாமல் வெட்டியாக சுற்றித் திரியும் அப்பா செல்லம். அவனது நண்பன் டயர் என்கிற கிருபாகரன். இந்தக் கூட்டத்தின் காமெடி பீஸ் குட்டிப் பையன். ஷார்ப் கண்டவுடன் காதலாகும் பிரியா மகாலட்சுமி, மாமன் மகன் அன்போடு திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டவள். ஷார்ப் எப்படி பிரியாவின் மனதை மாற்றி, அன்பின் சம்மதத்தோடு அவளைக் கைப்பிடிக்கிறான் என்பது படம்.

சிம்புவுக்கு படங்கள் தாமதமானாலும், அவரது ரசிகர் கூட்டம் அப்படியே இருக்கிறது என்பதை அரங்கில் கேட்கும் ஆரவாரம் சொல்கிறது. ஷார்ப் சக்தியாக புது பாவங்களைத் தர சிம்பு தர முயற்சித்து, அதில் ஓரளவு வெற்றியும் அடைகிறார்.

பிரியாவாக ஹன்சிகா வழக்கமான கவரும் ஆடைகளில் வலம் வந்து விடலைகளின் மனதைக் கொள்ளை கொள்கிறார்.

டயராக சந்தானம். சொல்வதற்கு ஏதுமில்லை. அவர் சொல்வது பல இடங்களில் புரிவதே இல்லை. குட்டி பையன் விடிவி கணேஷ் எரிச்சல்.

புதுமுகம் ஆதித்யா, தெலுங்கு உச்சரிப்போடு வித்தியாச வில்லன் அன்பாக அறிமுகம் ஆகிறார். இனி இரண்டாம் வரிசை நாயகர்களுக்கு அவர்தான் கொஞ்ச காலத்திற்கு அதிரடி வில்லன்.

சக்தியின் ஒளிப்பதிவில் குறையில்லை. சிவாஜி, கமல், ரஜினி, அஜித் என பல கெட்டப்புகளில் சிம்பு ஆடும் ஆட்டத்திற்கு ஒளிப்பதிவு பெரும் பலம். காட்சிகளில் இயன்ற அளவிற்கு கலை நுணுக்கம் சேர்த்த லால்குடி இளையராஜா பாராட்டுக்குரியவர்.

தமன் இசையில் பாடல்கள், பழைய சிம்பு படப் பாடல்களின் சாயலில் இருப்பது குறை.

சிம்புவின் குழந்தை முகம் மாறி கொஞ்சம் வயது ஏறியிருக்கிறது. இனி அவர் படங்களைத் தேர்வு செய்வதில் தான் இருக்கிறது அவரது நிலையும் நிலையாமையும்.

0

க்ளாப்: நொடியில் அசைவுகளை மாற்றும் சிம்பு!

ஃப்ளாப்: தத்துவங்களாக உதிர்க்கும் சிம்பு!

0

Series Navigationஊறுகாய் பாட்டில்யாப்பு உறுப்பு: கூன்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *