ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்

This entry is part 15 of 27 in the series 6 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன் –

aravindan
ஒவ்வொரு நாளும்
பொய் சொல்லாமல் கழிப்பதென்பது
இயலாமலேயே இருக்கிறது..
நம்மையறியாமல் நம்முள்
நிரந்தரமாய்க் குடியேறிவிட்டன பொய்கள்.
அதிலும் இந்த கைபேசி வந்த பிற்பாடு
சகலரும் பொய் மட்டுமே
அதிகமாய் சொல்கின்றனர்..

வீட்டில் கட்டிலில் படுத்தபடி
வெளியூரில் இருப்பதாக…
வெளியூரில் இருந்தபடி
வீட்டிலிருப்பதாக…

தொடர்ந்து அழைக்கப்படும்
அழைப்புகளை எடுக்காமலேயே விட்டு..
மீட்டிங்ஙில் இருந்ததால்,
சைலெண்டில் வைத்ததாகவும்
பல பொய்கள் கூசாமல் உதிர்கிறது
ஒவ்வொரு வாயிலிருந்தும்.

நம்மையழைக்கும் சிலர்
எங்கோவொரு மதுபானக்
குடிப்பிடத்தில் இருந்தபடி
தான் இன்று
குடிப்பதையே நிறுத்திவிட்டதாய்…
இனிமேல் குடியைத்
தொடவேப் போவதில்லையென்று
போதைக் குரலில் சொல்வதையும்…

நான் நேற்றே விட்டுவிட்டேனென்று
கையில் மதுக் கோப்பையுடன்
நாம் பதில் சொல்வதையும்…

இதோ உன்னைப் பார்க்க
வந்துகொண்டிருக்கிறேனென்று
சொல்பவரிடம்…அய்யையோ…
நேற்றே சொல்லக்கூடாதா?
இன்று நான் அவசரமாய்
காலையில் கிளம்பி ஊருக்குப்
போய்க்கொண்டிருக்கிறேனென்ற
பெரும் பொய்யும்
சந்தேகத்தோடோ.. சந்தேகமே
இன்றியோ எதிர்முனைப்
பொய்யரால் ஏற்றுக்கொள்ளப் படுகிறது ,

ஏனெனில் வந்துகொண்டிருக்கிறேனென்று
சொன்னவர் அவரூரில்
சாய்வு நாற்காலியில் சாய்ந்து
அரைத்தூக்கத்திலிருந்து பேசுகிறார்

பேசுபவர் இருக்குமிடமறியும்
நவீன கைபேசி வந்ததன் பிறகும்
எல்லோருமே…
இடம் மாற்றி சொல்லும் பொய்களை
மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றனர்
ஒரு சிறு புன்னகையுடன்..

Series Navigationதொடுவானம் 84. பூம்புகார்தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !
author

பத்மநாபபுரம் அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *