குப்பி

This entry is part 8 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன்

padmaarvஅன்று அதிகாலை என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்தான் ஒரு வாரத்துக்கு முன்பே கப்பலில் இருந்து விடுப்பில் வந்திருந்தார். முந்தைய நாள் இரவே அக்காவுக்கு லேசாக நோவு எடுத்ததால், அவளை தக்கலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். நானும் அத்தானும், அம்மாவும் உடன் இருந்தோம்.

அதிகாலை அக்காவுக்கு சுகபிரசவத்தில் குழந்தை பிறந்தது. தாய்மாமனாகிவிட்ட சந்தோஷம் மனமெங்கும் நிறைந்தது. குழந்தையையும், அக்காவையும் அறைக்கு கொண்டு வந்ததும், நான் குழந்தையை அருகில் சென்று பார்த்தேன். அழகாக இருந்தது.

அம்மா என்னிடம், வீட்டுக்குப் போய் குளித்து விட்டு சில பொருட்களை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு திரும்பி வரச் சொன்னாள்.
நான் என் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி, வீட்டுக்கு வந்து பின்பக்கத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது முன்பக்க வாசலில் என் நண்பர்கள் முஜீப் மற்றும் அஜீத் அழைப்பது கேட்டது. நான் அவர்களை பின் பக்கம் வருமாறு குளியலறையில் இருந்து கத்தினேன்.

அவர்கள் வந்தனர். நான் குளியலறையுள் குளித்தபடியே விஷயத்தை சொன்னதும், குழந்தையும், அக்காவும் எப்படி இருக்கிறார்களென்று கேட்டனர்.
பெண் குழந்தையென்றதும்.. முஜீப், “நீ குடுத்துவச்சவம்டே… பொம்பளப்பிள்ளதான் அழகு.. அன்பா இருக்கும்… சொல் பேச்சி கேக்கும். ஆம்பளபயக்கோ.. இன்னாபாரு.. இந்த அஜியப் போல… ஒருவக சொன்னா கேக்கமாட்டான்..,” என்றான்.
உடனே அஜீத் அவனை நோக்கி, “ஆமடே.. யோக்கியரு வாறாரு.. சொம்ப எடுத்து உள்ள வைண்ணு சொல்லுகதுமாரியாக்கும் இருக்கு.. நீ சொல்லுகது,” என்றான்.

“மக்கா.. லேய் நீ அப்பொ… தாய்மாமனாயிட்டே.. இண்ணைக்கு ராத்திரி பார்ட்டி வைக்கணும் கேட்டியா,” என்றான் முஜீப் என்னை நோக்கி…
“இண்ணைக்கு அல்லற, சில்லற பார்ட்டி இல்ல… அடிப்பொளி பார்ட்டியா இருக்கணும் கேட்டியா..,” என்றான் அஜீத்.

சரிடே.. கலக்கிருவோம்… இப்போ எனக்கு ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டியிருக்கு.. நம்மோ மத்யானம் பாக்கலாம் என்றேன்.
நான் குளித்து முடித்து, உடைகள் மாற்றி, அம்மா எடுத்து வர சொன்ன எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
“டேய்.. ஏமாத்திரக்கூடாது… சாயங்காலம் சரக்கு வந்திருக்கணும்.. இல்லண்ணா.. தொலச்சேப் போடுவோம்..” என்றான் முஜீப்.
நான் சரியென்பதாய் தலையாட்டியபடி என் வண்டியை எடுத்தேன்.

‘இவர்களுக்கு எப்படி பார்ட்டி கொடுக்க?… கையில் காசு வேறு மிகக்குறைவாய் இருந்தது,’ யோசித்தபடியே மருத்துவமனைக்கு சென்றேன்.
நாங்கள் மூவரும் ஒன்றாம் வகுப்பு முதலே ஒன்றாகப் படித்தவர்கள். ஒவ்வொருவரின் சந்தோஷம் மற்றும் துக்கத்தில் பரஸ்பரம் பங்கேற்பவர்கள்.
கொண்டு வந்த பொருட்களையெல்லாம் அம்மாவிடம் கொடுத்து விட்டு குழந்தையைப் பார்த்தேன்.
அக்காவின் அருகில் கை கால்களை லேசாக அசைத்தபடி, கண்கள் மூடியிருக்க.. பால் குடிக்கும் ஞாபகத்தில் வாயை குவித்து சுருக்கிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்க்க எனக்கு ஒரு பஞ்சுப்பொதியின் ஞாபகம் வந்தது.

அம்மா என்னிடம், “நீ போய் எனக்கு மத்யான சாப்பாடு மட்டும் வாங்கிட்டுவா.. அத்தானையும் கூட்டிட்டு வீட்டுக்குப் போய்ரு.. போற வழியில சாப்பிட்டுப் போங்கோ.. நான் இண்ணைக்கு இங்க இருக்கேன்..,” என்றாள்.
நானும் அத்தானும் வீட்டுக்கு வந்தோம். நேற்று இரவு முழுவதும் விழித்திருந்ததால் எங்கள் இருவருக்கும் நல்ல தூக்கம் கறக்கியது.

நான் என் வீட்டின் வெளி வராந்தாவில் இருக்கும் என் அறைக்குள் வந்து டேப்ரெக்கார்டரில் ‘கரகாட்டக்காரன்’ படத்தின் பாடலைப் போட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். எங்கும் அப்படத்தின் பாடல்கள் மிகப் பிரபலமாகி ஒலித்துக் கொண்டிருந்த நேரமது.

என் வீட்டு வேப்பமரத்தடியில் படுத்திருந்த பகவதியப்பனின் நாய் குரைத்தது. அந்த நாய் பெரும்பாலான நேரங்களிலும் இங்கே தான் கிடக்கும். பகவதியப்பன் எங்களுடன் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாய் படித்தவன். பத்தாம் வகுப்பு தோல்விக்குப் பிறகு அவன் ஏதோ கார் பணிமனையில் வேலை பார்க்கிறான். முஜீப்பும், அஜீத்தும் வெளிக் கதவினைத் திறந்து படிகளில் ஏறி வருவது தெரிந்தது. அதுவரை மறந்திருந்த, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பார்ட்டி நினைவு வந்தது. இருவரையும் என் அறையுள் உட்கார வைத்து விட்டு, அரைகுறை தூக்கத்திலிருந்த அத்தானிடம் சென்றேன்.

“அத்தான் என்.. ஃபிரண்ட்ஸ்களுக்கு பார்ட்டி குடுக்கணும்,” என்றேன்.
அவர் எதுவும் கேட்காமல் எழுந்து, தன் பர்ஸினை எடுத்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளைத் தந்தார்.
“இவ்வளவு வேண்டாம்,” என்றேன்.
“பரவாயில்ல.. மருமக பொறந்திருக்காள்ளா.. எஞ்சாய்..,” என்றார்.

எனக்கு ஒரே ஆச்சரியம்.. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் எனக்கு அது ஒரு பெரிய தொகை. வணிகக் கப்பல் கேப்டனான அவருக்கு அது ஒன்றுமில்லை என்பது எனக்குத் தெரியும்.
சந்தோஷத்தோடு வந்தேன்.

டேப்ரெக்கார்டரில், “காலத்தழுவி நிக்கும் கனகமணி கொலுசு.. யம்மா.. நானாக மாற இப்பொ நெனைக்கிதம்மா மனசு..,” வரிகள் ஓடிக் கொண்டிருந்தது. அஜீத்தும், முஜீப்பும் தாளம் போட்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.

கையில் இருந்த ரூபாய் நோட்டுகளை காட்டியதும், “டேய், நெறய இருக்கே.. அப்போ இண்ணைக்கு கரகாட்டந்தாங்,” என்றான் அஜீத்.
நாங்கள் திட்டம் போட்டோம்.

“அத்தான் ஒறங்குகாரு.. எனக்கும் நல்ல ஒறக்கம் வருகு.. அதனால நானும் ஒறங்கிற்று, சாயங்காலம் அவர நான் ஆஸ்பத்திரில விட்டுட்டு வாறேன்.. பொறவு.. நம்மோ போய் குப்பி, புரோட்டா, சிக்கன், சிகரெட்டு எல்லாம் வாங்கிற்று.. இங்கயே வந்துருவோம்.. இங்க ஒரு பிரச்சனையும் இல்ல.. அடிச்சி பொளிப்போம்டே..,” என்றேன்.

“லேய்.. ஒனக்க அப்பா வந்திரமாட்டாருல்லா… வந்தாரு.. நம்ம எல்லாருக்க தோலையும் உரிச்சி உப்பு தேச்சிப் போடுவாரு…மக்கா,” என்றான் அஜீத்.
“அவரு.. நாளைக்கு சாயங்காலம் தான் புதுக்கோட்டேலேருந்து பொறப்புடுவேரு… மத்த நாளு காலேல தாண்டே வருவாரு..,” என்றேன் நான்.

எங்கள் திட்டப்படி எல்லாம் நடந்தது. மாலையில் அத்தானை மருத்துவமனையில் விட்டு விட்டு நான் வீட்டுக்கு வந்தேன்.

இரவு எட்டு மணிக்கு தக்கலை வந்தோம். வண்டியை ஓரமாய் நிறுத்தி, நான் என் மோட்டார் சைக்கிளின் பெட்டியில் இருந்து ஒரு துணிப்பையை எடுத்து அஜீத்திடம் கொடுத்து, “லேய் .. அஜி.. நானு வள்ளி ஒயின்ஸ் பக்கத்தில வண்டிய நிறுத்துவேங்.. நீ ஓடிப்போய்.. ஒரு குப்பி…,” என்ற படியே முஜீப்பினை நோக்கி “முஜீப்.. என்னடே.. பிராண்டியா.. விஸ்கியா?,” என்று கேட்டதும் முஜீப், “அதெல்லம் வேண்டாம்டே.. நமக்கு குதிரச் சரக்குதாங் செரியா இருக்கும் கேட்டியா..,” என்றான்.

நான் மீண்டும் அஜீத்திடம், “மக்கா.. அப்போ வண்டிய நிப்பாட்டுனதும் ஓடிப்போய்.. ஒரு குப்பி ‘ரம்’ வாங்கிற்று செணம் வந்திரணுங் கேட்டியா?,” என்றபடியே மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுத்தேன்..
வண்டியை நான் கிளப்ப இருவரும் பின்னால் ஏறிக் கொண்டனர்.

நான் வண்டியை ஒயின் ஷாப்பிலிருந்து சற்று தள்ளியிருந்த பெட்டிக்கடை பக்கத்தில் நிறுத்தினேன். முஜீப் சுற்றிலும் பார்த்தான் யாராவது ஊர்க்காரர்கள் தெரிகிறார்களாவென்று.

அவன் வண்டியில் இருந்து கீழே இறங்கிய அஜீத்தைப் பார்த்து, “டே.. அஜி, ஓடிப்போய் வாங்கிற்று சீக்கிரம்வா.. எவனாவது ஊருக்காரனுவ பாத்தாண்ணா.. நம்மோ போக முன்னால ஊரு முளுசுங் பரத்திப்போடுவானுவோ,” என்றான்.
அஜீத் சரியென்று தலையசைத்து, தன் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாய்ப் போய் அந்த ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தான்.

நானும், முஜீப்பும் வண்டியை நிறுத்தி விட்டு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டிருந்தோம்.
அஜீத் ஒயின் ஷாப்பின் வாசலுக்கு வந்து, அங்கிருந்தே கத்தினான், “டேய்.. ஒரு குப்பிண்ணா.. ஃபுல்லா… ஆஃப்பாண்ணு கேக்காண்டே.. என்ன எளவடே வாங்க..?”

முஜீப் தன் வலது முழங்கை முட்டியில் இடது கைவிரல்களை வைத்துக் காண்பித்து மெதுவாய் சொன்னான்,” ஃபுள்ளுலேப் பட்டி.”
அஜீத் மீண்டும் கடைக்குள் நுழைந்தான். அவன் மீண்டும் வெளிவந்து கத்தினான் அங்கிருந்தே, “டேய் பேரு… கேக்கான்.”

“இந்த மைராண்டிய அனுப்பினதுக்கு, நம்மளேப் போய் வாங்கியிருக்கலாம், இவனே சத்தம் போட்டு ஊரெல்லாம் சொல்லிருவாங் போலிருக்கே…,” என்றபடியே நான் பாதி சைகயிலும் மீதி அவனுக்கு கேட்கும் படியும் சொன்னேன்.

ஒரு வழியாய் ஒரு முயலைத் தூக்கி வருவது போல பையை உடலை விட்டு சற்று தள்ளிப் பிடித்து தூக்கி வந்தான், அஜீத்.
“என்ன மைருலே வாங்கினே.. அங்கக் கடைல இருந்தா சத்தம் போடுக.. வட்டுப் பயலே..,” என்றான் முஜீப்.

“எனக்கு என்ன மைராத் தெரியும்.. ஒரு குப்பி ரம்முதாண்ணு கேட்டேங்… குவட்டரா.. ஆஃபா, ஃபுள்ளாண்ணு கேட்டாங்… அடுத்தால என்ன ரம்மு வேணுண்ணு கேட்டாங்… இங்க எவனுக்குத் தெரியும் எளவுடுத்தப் பேரும்… அளவும்.. மைரும்,” என்று அஜீத் கோபமாய் சொன்னான்.

“செரி.. செரி.. விடு.. சாதனத்த பெட்டில போடுறே..,” என்று சொல்லிய படியே பைக்கின் பெட்டியைத் திறந்தேன்.
பெட்டிக்குள் வைத்து, பையினை விரித்துப் பார்த்தோம்.. உள்ளே ஓல்ட் மொங்க் ரம் இருந்தது.. “எவ்வளவுடே..,” என்று கேட்டேன்.
“இருநூறு ரூவாடே..” என்றான் அஜீத்.

நேராக புரோட்டாக் கடையில் நிறுத்தி இருபத்தைந்து வீச்சு புரோட்டா, மட்டன்கறி, காடைவறுவல், ரசவடை என்று வாங்கி விட்டு, சோடா, வாழைப்பழங்களும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தோம்.

வெளிக்கதவைத் திறந்து நானும் அஜீத்தும் உள்ளே நுழைந்தோம். முஜீப் பெட்டிக்குள்ளிருந்து எல்லாவற்றையும் எடுத்து குப்பியிருந்த பையில் வைத்து தூக்கி வந்தான்.

என் வீட்டு வேப்பமரத்தடியில் பகவதியப்பனின் நாய் படுத்திருந்தது. என்னைப் பார்த்ததும் லேசாக குழைந்தபடி வாலாட்டியது. என் பின்னால் வந்து கொண்டிருந்த அஜீத்தையும், கையில் பையோடு வந்த முஜீப்பையும் பார்த்து உறுமியது.

“இந்த சவத்தெளவு… இங்க வந்து ஏம்டே கெடக்கு,” என்று கேட்டான் முஜீப்.
“அந்த எளவு எப்பவும் இங்க தான் கெடக்கும். அதுக்கு இந்த வேப்பமர மூடு ரொம்ப பிடிக்கும்ணு நெனைக்கேன்… அந்த பகவதியப்பன் பயக்கிட்ட… எத்தனையோ தடவ சொல்லியாச்சு…. வீட்டுல கெட்டிப் போடுலேண்ணு.. மயிரங்.. கேக்க மாட்டங்கான்..,” என்றேன் நான்.

தென்னமட்டைய எடுத்து… நாலு சாத்து சாத்துவமா.. அந்த எளவுடுத்தத?..” என்று கேட்டான் அஜீத்.
“அது பாட்டுக்கு கெடக்கட்டும் விடுடே….” என்றான் முஜீப்.

நான் என் வராந்தாவின் அறைக் கதவினைத் திறந்தேன். முஜீப் அந்த பையினை கட்டிலில் வைத்தான். காடை, மற்றும் மட்டன் கறியின் வாசனை தூக்கியது.

அஜீத், பையிலிருந்து வாழைப்பழங்களையும், சோடாவையும் தனியாக எடுத்து என் மேசை மீது வைத்தான். குப்பியும், புரோட்டா, காடை, மட்டன் கறியையும் பையில் வைத்து மேசையின் கீழே வைத்தான்.

முஜீப் என்னிடம், “டேய் கிளாஸ் வேணும்.. உள்ளி கொஞ்சம் வெட்டணும்.. உள்ளி இருக்கா வீட்டிலே..?” என்றான்.

இருக்குடே.. வா.., அஜி.. நானும் முஜீப்பும் போய் கிளாஸ் கழுவி, உள்ளி வெட்டிட்டு வாறோம்,” என்றேன்.

அவன் டேப்ரிகார்டரில் ராஜாதி ராஜா படத்தின் பாடல்கள் இருந்த கேசட்டைப் போட்டான்.
முஜீப் அவனிடம், “அஜி.. மக்கா.. கதவத் தொறந்துப் போட்டுட்டு தம்மடிக்கப் போய்ராத.. அடிக்கணும்ணா இங்கயே அடிச்சுக்கோ..” என்றான்.

நானும், முஜீப்பும் அடுக்களைக்குப் போய் மேலே வைத்திருந்த பெட்டியிலிருந்து மூன்று கண்ணாடிக் கோப்பைகளை எடுத்தோம்.
கண்ணாடிக் கோப்பைகள் தூசு பிடித்துப் போயிருந்தன. முஜீப் அவற்றை சோப்பு போட்டு தேய்த்துக் கழுவ ஆரம்பித்தான். வெளியறையில், “மீனம்மா.. மீனம்மா.. கண்கள் மீனம்மா,” பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. நான் கண்கள் எரிய வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தேன்.

ஏதோ ஆட்டோ வந்து நின்று கிளம்பும் சப்தம் கேட்டது.

என் அத்தான் ஆட்டோவில் வந்து இறங்கி அடுக்களைக்கு வந்திருந்தார்.
“இப்பவே மணிபத்தரையாகுது… என்னா.. நீங்கோ இன்னும் தொடங்கல்லியா?” என்று கேட்டார்.
“இல்ல அத்தான்.. இனி தான்.. இப்போ தயாரெடுப்பு நடக்கு,” என்றான் முஜீப்.
“ஓ.கே. எஞ்சாய்.. நான் சாப்பிட்டுட்டேன்.. ரொம்ப டயர்டா இருக்கு.. நாளைக்கு காலைலே பாக்கலாம்..,” என்று கூறிய படியே அவர் ரூமுக்குள் போகப் போனார்.

நானும், முஜீப்பும் அவரிடம் , “பிள்ளை எப்படி இருக்கு?” என்று கேட்டோம்.
“நல்லா இருக்கு.. சிணுங்கும், பால் குடிக்கும்.. ஒறங்கும்.. சுகமான வாழ்க்கையில்லா.. பிள்ளைகளுக்கு..,” என்று சொன்னவர், “அவனெ எங்க.. அஜீத்?”என்று கேட்டார்.
“அவன் அங்க முன்ன ரூமுல காவலுக்கு இருக்கான்,” என்றேன்.

“அங்க யாரும் இல்லயே.. பாட்டு கேட்டிற்று இருக்கு.. நான் வரப்போ பாத்தனே.. கதவு திறந்து கெடந்தது… அவன் அங்க இல்லயே..” என்றார்.
சொல்லிவிட்டு அவர் உள்ளறைக்குள் படுக்கப் போய் விட்டார்.

முஜீப் அவனை இங்கிருந்த படியே சத்தமாய் அழைத்தான்… பதிலில்லை.
நாங்கள் வராந்தாவுக்கு சென்று அறைக்குள் பார்த்தோம். கதவு திறந்து கிடந்தது, அவனைக் காணவில்லை.

முஜீப் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துக் கேட்டான்.. “டேய்.. அந்த பையெங்க?”
நான் மேஜையின் கீழேப் பார்த்தேன்.. அந்த பை இருந்த இடம் காலியாக இருந்தது..
இந்த தொட்டிப்பய… எங்கடே போய்த் தொலஞ்சான்?

பின்புற கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, நான் போய் கதவினைத் திறந்தேன்.
அஜீத் நின்று கொண்டிருந்தான்.

‘’லேய்.. எங்கலப் போன.. அந்த பை எங்க?” என்று கோபமாய் கேட்டேன்.

“கக்கூஸ் முட்டிற்று டேய்… அதாங் போனேன், அந்த பை ரூம்ல தான் இருக்கு,” என்றான்.
பின்னால் வந்த முஜீப் அவனிடம், “லேய் மயிரே.. கதவ.. மக்க, மலக்க தொறந்து போட்டுற்று எங்கல.. நொட்டப் போன,” என்று சத்தமாகக் கேட்டான்.
“தூற வந்தா.. தூறாண்டாமா?” என்றான் அஜீத்.
கதவ.. அடச்சிற்று போக வேண்டியது தானே.. அல்லது எங்கள கூப்பிட வேண்டியது தானே,” என்றேன் நான்.

மூவரும் என் அறைக்குள் வந்து மீண்டும் மீண்டும் தேடினோம். காணவில்லை. மேஜை மீது வைத்திருந்த சோடாவும் வாழைப்பழங்களும் அப்படியே இருந்தன.
மூவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“புரோட்டாவும், சிக்கனும் போனாலும் பரவாயில்ல… கூட இருந்த குப்பியும் போயிற்றே.. ரொம்ப நாளைக்குப் பொறவு.. நல்ல குடிச்சி, திங்கலாம்ணு இருந்தப்போ.. இந்த மைராண்டியால எல்லாம் போச்சு… ஒயின் ஷாப்பும் பூட்டியிருப்பான்,” என்று முஜீப் கோபமாய் கத்தினான்.

நான் எதேச்சையாக வேப்பமரத்தடியைப் பார்க்க அங்கே பகவதியப்பனின் நாயைக் காணவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். டார்ச் விளக்கு எடுத்து வந்து வீட்டை சுற்றிலும் ஒரு இடம் விடாமல் தேடினோம், தெரு முழுக்கவும் தேடினோம்.

கறிமணத்தில், பகவதியப்பனின் நாய் தான் பையோடு தூக்கிச் சென்றிருக்கும் என்பது நிச்சயமானது. அந்த நாய் எங்கெல்லாம் சுற்றுமோ அங்கெல்லாம் தேடினோம்.

வியர்வை வழிய சலித்துப் போய் வீட்டிற்கு வந்து, வாழைப்பழங்களைத் தின்று, சோடவைக் குடித்து சோகமாய் படுத்தோம்.

“அந்த நாய்க்குப் பொறந்ததுக்க புத்திய பாத்தியா… இங்க வச்சித் திண்ணா நம்மோ பாத்து மொத்திருவமுண்ணு.. மொத்தமா தூக்கிற்று போயிற்று..,” என்றான் முஜீப் …

நாங்கள் அதன் பிறகு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

Series NavigationBLOSSOMS FROM THE BUDDHA – THE DHAMMAPADA, (The Buddha’s path of wisdom) RETOLD IN RHYMING VERSESநாக்குள் உறையும் தீ
author

பத்மநாபபுரம் அரவிந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    தமிழ்த்தாசன் தாணு கோலப்பன் பத்மநாபபுரம். says:

    13.9.15.”திண்ணை”இதழில் வெளியான “குப்பி”சிறுகதையில் கிராமிய நடை, நளினமும், நையாண்டியும் கலந்த உரையாடல்கள், வயிறு புண்ணாகும் அளவுக்கு சிரிக்க வைக்கும் சீரிய சம்பவக் கோா்ப்பு, பால்யகால நண்பா்களுடனான நக்கல்கள், சிணுங்கல்கள், சீண்டல்களுடன் மகிழ்ச்சியின் நெளிவு சுழிவுகள், அதைக் கொண்டாடப் போட்ட திட்டங்கள், சிறு நாயின் வேட்டையால் ஏற்படும் ஏமாற்றம், இறுதியில் மனஞ்சோா்ந்த துயில்வராத தூக்கம் என அத்தனையும் அருமை. அண்மையில் படித்து ரசித்த நல்ல ஒரு கதை. ஆசிரியரின் எழுத்தாற்றலுக்கு ஒரு’ சபாஷ்’ .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *