கே.பாலமுருகன்
1
காட்டேரி பாதை – 1955
அம்மாச்சிக்கு மட்டும்தான் லாந்தர் விளக்கைக் கொளுத்தத் தெரியும். மண்ணெண்ணையை உள்ளே விட்டப் பிறகு நீளுருளையாக இருக்கும் ஏதோ ஒன்றை உள்ளே நுழைத்து நுழைத்து வெளியே எடுப்பார். விளக்கு அப்பொழுதுதான் பிறந்த சிறிய வெளிச்சத்துடன் மெல்ல பிரகாசித்துப் பெருகும்.
பெரட்டுக்குக் கிளம்பும் முன் அந்த விளக்கைக் கொளுத்திவிட்டுக் கையில் பிடித்துக் கொண்டுத்தான் அம்மாச்சி மேட்டுக் காட்டுக்குள் நுழைவார். அங்கிருந்து 500 மீட்டர் காட்டேரி ஒத்தையடி பாதை. இருவர் ஒன்றாகச் சேர்ந்து நடக்க முடிந்த இடைவெளி மட்டுமே. பக்கத்தில் மாங்காய் மரங்கள், ரம்புத்தான் மரங்கள், காட்டு மரங்கள் என எல்லாமே பெருத்து நிற்கும். அதைத் தாண்டினால் 4ஆம் நம்பர் காடு. அங்குத்தான் அம்மாச்சிக்கு வேலை.
லாந்தர் விளக்கின் உள்ளே இருக்கும் ஒளி காற்றில் அசையும். காட்டேரி பாதைக்கு அருகில் இருக்கும் மரங்களில் ஒளி படர்ந்து நகரும்போது அம்மாச்சிக்கு வயிறு கலங்கும். 20 வருடங்கள் அந்த ஒத்தையடி பாதையைப் பற்றி நிறைய கதைகளை அவள் கேட்டிருக்கிறாள். அம்மாச்சியின் அம்மா 1930களில் புளியங்கொட்டை பொறுக்க இந்தப் பாதையில் போய் பிறகொருநாள் காணாமல் போய்விட்டார். அதிலிருந்து அப்பாதையில் காலையில் பெரட்டுக்குப் போகும்போதெல்லாம் அவளுக்குப் பயம் மனத்தைப் பிடுங்கும்.
சத்தம் கேட்கும் திசையில் லாந்தர் விளக்கைப் படரவிட்டுத் தன் பயத்தைப் போக்கிக் கொள்வாள். அவ்விளக்கு இல்லாமல் அம்மாச்சி வேலைக்குப் போனதே இல்லை. காலை 5.30க்கெல்லாம் 4ஆம் நம்பர் காட்டுக்குப் போய்விட்டாள் அங்கு மேல் லயம் அஞ்சலையும் அவள் வீட்டுப் பிள்ளைகளும் அங்கு வந்துவிடுவார்கள். ஆகவே, அரை மணி நேரத்திற்குள் அம்மாச்சி காட்டேரி பாதையைக் கடக்க வேண்டும்.
அம்மாச்சிக்கு அப்பாதையைப் பற்றி நன்கு தெரியும். அதன் மொத்த தூரம் 546 மீட்டர். இடையில் ஒரேயொரு குழி வரும். அது கொஞ்சம் ஆழமானது. அதைக் கவனமாகத் தாண்ட வேண்டும். அக்குழியைத் தாண்டும்போது ஒரு குழந்தை விம்மும் சத்தம் தூரத்தில் கேட்கும். திடீரென சில நாட்களில் அக்குழந்தை அழும் சத்தமும் கேட்கும். அதைப் பொருட்படுத்தக்கூடாது. அதற்கு அப்பால் இருக்கும் சிறிய மலைக்குக் கீழே கேலாங் லாமா தோட்டம் இருப்பதாக அம்மாச்சிக்குத் தெரியும். அச்சத்தம் அங்கிருந்து வரலாம் என்கிற நம்பிக்கை அவளுக்கு. ஓம் ஓம் என சத்தமில்லாமல் ஒலித்துக் கொண்டே நடைபோடுவார்.
அடுத்து, 100 மீட்டர் முன்னேறினால் கைவிடப்பட்ட ஒரு கோவில் வரும். அது இடதுபுறத்தில் அப்பாதையை நெருக்கிக் கொண்டு சிறிது குறுக்காக இருக்கும். அதைத் தாண்டும் பொழுது அந்த இடிந்த கோவிலிலிருந்து மணியடிக்கும் ஓசை கேட்கும். சாம்பிராணி வாடையும் தூக்கும். அம்மாச்சிக்கு இயல்பாகவே அவ்விடத்தைக் கடக்கும்போது தும்மல் வரும். அதைச் சகித்துக்கொள்ள அம்மாச்சியால் மட்டுமே முடியும். கீழ் லயத்திலிருந்து இப்பாதையைத் தைரியமாகப் பயன்படுத்தி காட்டுக்கு வேலைக்குப் போகும் ஒரே ஆள் அம்மாச்சித்தான்.
இன்னும் 200 மீட்டர் தாண்டினால் குறுக்காக ஒரு சிறிய ஆறு வரும். அதைத்தான் துறை பிணம் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆறு என்பார்கள். 1930களில் துறை பங்களாவில் இருந்த அனைவரையும் யாரோ கொலை செய்து இந்த ஆற்றில்தான் தூக்கி வீசிவிட்டார்கள் எனும் கதை தோட்டத்தில் இருந்தது. அதில் இறங்கினால் முட்டி வரை நீர் நிரம்பும். அம்மாச்சி லாந்தர் விளக்கைத் தூக்கி மேலே பிடித்துக் கொண்டு இருளில் முனகிக் கொண்டிருக்கும் அந்த ஆற்றைச் சத்தமில்லாமல் கடப்பார். கடக்கும்போது ஓர் ஆங்கிலப் பாடல் கேட்கும். ஒரு கடுமையான குரல் அது. அம்மாச்சியினால் நன்றாகக் கேட்க முடியும். பழைய ஆங்கிலப்பாடலைப் போல வித்தியாசமாக ஒலிக்கும்.
“முனியாண்டி சாமி காப்பாத்து” என உச்சரித்துக் கொண்டே ஆற்றைக் கடந்துவிடுவாள்.
காட்டேரி பாதையை இதற்கு முன் யாரெல்லாம் பயன்படுத்தியிருப்பார்கள் எனும் ஒரு கதை உண்டு. 1890ஆம் ஆண்டுகளில் இக்காட்டை ஆண்டு வந்த மாஜாபாஹிட் அரசின் ஒர் இளவரசன் அன்றாடம் காட்டுக்கு வேட்டையாட இப்பாதையைத்தான் பயன்படுத்தினான் என்கிற வரலாறும் சொல்லப்படுகின்றது. மாஜாபாஹிட் அரசு மலேசியாவில் நுழைந்து கொஞ்ச காலம் அரசாண்டார்கள் எனப் பல முன்னோர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர்களைத் தின்னும் பழங்குடிமக்கள் இங்கு இருந்ததாகச் சில கதைகள் உண்டு. கி.பி 60ஆம் நூற்றாண்டில் இந்தக் காட்டேரி பாதையில் பிணங்கள் மட்டுமே புதைக்கப்பட்டு வந்ததாகப் பலநெடுங்காலம் இக்காட்டில் மூலிகை தேடி அலைந்த முனிவர் சொன்னதாகவும் கதைகள் உண்டு. அம்மாச்சிக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் லாந்தர் விளக்கை முனியாண்டி சாமியின் சாட்டையைப் போல நினைத்து அதைப் பிடித்துக் கொண்டு காட்டேரி பாதையில் கடந்த பல வருடங்கள் போய் வருகிறார்.
வானம் அப்பொழுதுதான் நீலம் பூக்கத் தொடங்கும். நான்காம் நம்பர் காடும் வந்துவிடும். சிறுக சிறுக வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து சேரும் ஆட்கள் கூடிவிடுவார்கள். அம்மாச்சி மரம் வெட்டத் தொடங்கிவிடுவார்.
தாத்தா இல்லாத வீட்டைத் தனியாளாக இருந்து கரை சேர்த்தவர் அம்மாச்சி. 1982 ஆம் ஆண்டில் தோட்டத்தை விட்டு வெளியாக வேண்டிய நிலை. எல்லோரும் டவுன் பக்கம் புறப்படத் தயாராகிவிட்டார்கள். அம்மாச்சிக்கு அவ்விடத்தை விட்டு நகர விருப்பமில்லை. சிறுப்பிள்ளை போல அழுது அடம் பிடித்தார். கடைசியாகத் தன் அம்மா கொடுத்த ஒரு பெட்டியின் சாவியை அவர் காட்டேரி பாதையில் தொலைத்துவிட்டதாகச் சொல்லி அழுதார். அப்பெட்டியில் அம்மாச்சியின் அம்மா ஏதோ ஒன்றைக் கொடுத்து வைத்திருக்கிறார்.
“சாவி இல்லாமல் இந்தப் பெட்டிய உடைச்சிங்கனா என் ஆத்மா எப்போதுமே சாந்தியடையாது பாத்துக்கோ…”
அம்மாச்சியின் அம்மா சொன்னது அவர் மனத்தில் இம்சித்துக் கொண்டே இருந்தது. வேறுவழியில்லாமல் அம்மாச்சி எல்லோரிடமும் அனுமதிக் கேட்டுக்கொண்டு காட்டேரி பாதையில் லாந்தர் விளக்கைத் தூக்கிக் கொண்டு சாவியைத் தேடிப் போனவர்தான். அதோடு அவர் வரவே இல்லை. என்ன ஆனார் என எவ்வளவு தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
2023 – அம்மாச்சியின் மகன் வீடு- கோலாலம்பூர்
“அதெப்படி அந்தச் சத்தம் கேட்கும்? இங்க சுத்தி எல்லாம் சீனவங்க”
“கேக்குது சார்…கேட்டுக் கேட்டுப் பழகிருச்சி. எங்கப்பா இங்க வந்து 40 வருசத்துக்கு மேல ஆச்சி. அவர் இருக்குற வரைக்கும் ஒன்னும் இல்ல. அப்பா செத்து ரெண்டு வருசத்துக்குப் பிறகுத்தான் அந்த மாதிரி சத்தம்லாம் கேட்குது.”
“ம்ம்ம் நீங்க முன்னால எங்க இருந்தீங்க?”
“நாங்க…ஏதோ ஒரு எஸ்டேட். அப்பா அங்கத்தான் வளர்ந்தாரு. நாங்க எல்லாம் இங்க வந்துதான் பொறந்தோம்…”
“சரி வீட்டுல ஒரு யாகம் வளத்தா எல்லாம் சரியாயிடும். பயப்படாதீங்க. சாமியார் அடுத்த மாசம்தான் இந்தியாவிலிருந்து வருவார். அப்ப வச்சிக்கலாம்”
“சரிங்க சார். பொம்பளை பிள்ளைங்கத்தான் ரொம்ப பயப்படுறாங்க…அதான்”
“உங்க வீட்டுல வேறு யாரும் இதுக்கு முன்ன சாலை விபத்துல கொடூரமா செத்துருக்காங்கலா?”
“அப்படி ஏதும் இல்லயே. ஆனா, அப்பா சொல்லுவாரு அவுங்க அம்மா எஸ்டேட்ல காணாமல் போய்ட்டாங்கானு…”
“சரிங்க…சாமி வந்தோன போன்ல கூப்டுறென்”
வீட்டுக்கு வந்தவரை அனுப்பிவைத்துவிட்டு மதன் உள்ளே வந்தான். தொட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவனுடைய ஆறு மாதக் குழந்தை அழத் தொடங்கியது. அவனுக்குத் தெரியும். அக்குழந்தை அழும்போது அருகே சென்றால் ‘ஓம் ஓம் ஓம்’ என அந்தச் சத்தம் வழக்கம்போல கேட்கும் என. தூரத்திலிருந்தே கிலுகிலுப்பையை எடுத்து ஆட்டினான். அவன் வீட்டில் கேட்கும் சில மர்மமான சத்தங்கள் பல மாதங்களாக அவர்களை ஆட்டி வைக்கின்றன.
சத்தம் 1
அவன் குழந்தை படுத்திருக்கும் தொட்டிலுக்குக் கீழே இருந்து கேட்கும். அவன் குழந்தை அழும் போதெல்லாம் அச்சத்தம் ‘ஓம் ஓம் ஓம்’ என யாரோ உச்சரிப்பதைப் போல கேட்கும்.
சத்தம் 2
அவன் வீட்டிலுள்ள சாமி மேடையின் அருகில் கேட்கும். அதுவும் அவர்கள் வீட்டில் யாராவது மணியடித்து சாமி கும்பிடும்போது சட்டென யாரோ தும்மும் சத்தம் கேட்கும்.
சத்தம் 3
மதனின் குளியறையில் தொட்டி நீரில் கேட்கும். மதனுக்கு ஒரு பழக்கம் உண்டு. அவனால் பாடாமல் குளிக்க முடியாது. அவன் தொட்டிலிலிருந்து நீரை அள்ளும்போதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்த ஆங்கிலப்பாடல்களைப் பாடுவான். அவனால் அதனைத் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. அச்சமயங்களில் சட்டென குறுக்கே ‘முனியாண்டி சாமி’ என்கிற குரல் அவனுக்குள் கேட்கும். எத்தனையோ முறை மிரண்டு போயிருக்கிறான். ஆனால் பின்னாளில் பழகிப் போனது.
இந்தியாவிலிருந்து அந்தச் சாமியார் வருவார் என மதன் காத்திருந்தான். பிறகொருநாள் சட்டென மதனின் குளியல் தொட்டியிலிருந்து ஒரு பழைய மக்கிப் போன லாந்தர் விளக்கு மிதக்கக் கண்டெடுத்தான் அதில் ஒரு திருப்பிடித்த சாவியும் ஒட்டிக் கிடந்தது.
– கே.பாலமுருகன் , மலேசியா
bkbala@gmail.com
- திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- ஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச அடிப்படைச் சீரமைப்பை உறுதிப்படுத்துகிறது.
- அவன், அவள். அது…! -3
- இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்
- பொன்னியின் செல்வன் படக்கதை – 6
- தொடுவானம் 87. ஊர் செல்லும் உற்சாகம்
- ‘ஜிமாவின் கைபேசி’ – திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது
- கடலோடி கழுகு
- விலை போகும் நம்பிக்கை
- வளவ. துரையனின் வலையில் மீன்கள்—ஒரு பார்வை
- பூனைகள்
- முற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள்
- குரு அரவிந்தன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்
- கூடுவிட்டுக் கூடு
- The Deity of Puttaparthi in India
- தாண்டுதல்
- லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்
- மாயா
- சுந்தரி காண்டம். 7 . ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி
- மருத்துவக் கட்டுரை- தலை சுற்றல் ( Vertigo )
- ’சாரல் விருது’ பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை