பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்

author
0 minutes, 1 second Read
This entry is part 17 of 23 in the series 4 அக்டோபர் 2015

 elavarasiஅ. இளவரசி முருகவேல்

பக்தி இலக்கியத்தில் இறைவன் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக பல செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் இறைத் தொண்டர்கள் தங்களின் பக்தியுணர்வுகளை செய்யுள் வடிவிலும் பா வடிவிலும் இயற்றியதோடு இறைபக்தி, இறைவனை வணங்கும் முறைகள் போன்றவற்றை அவர்களின் பாக்கள் வாயிலாக நமக்கு அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வகையில் பிறமொழிக் கருத்துக்களல்லாமல் தமிழ்மொழியில் முதன்முதலாக பக்திச்சுவையை எடுத்துணர்த்தும் வகையில் எழுதப்பட்டது பெரியபுராணம். இப்புராணத்தில் சிவனை போற்றி பாக்கள் எழுதிய 63 மூவர்களின் பக்தியைப் பற்றியும் பெருமளவில் சுந்தரரின் பக்தியுணர்வைப் பற்றியுமான தரவுகள் இடம்பெற்றுள்ளன.

அறுபத்துமூவரின் பாடல்களில் மெய்பொருள் நாயனார் என்பவர் சிவன் தொண்டராக விளங்கியவர். இவர் சேதி என்னும் நாட்டை ஆட்சி செய்யும் மன்னனாக வாழ்ந்ததோடு சிவன் மீது அளவுகடந்த பக்திநெறியும், மிகுந்த அன்பும் கொண்டவராக வாழ்ந்துவந்தார். இதன் காரணமாக சிவவேடமிட்டு மன்னனை அழிப்பதற்கு வந்த தன் பகைவரையும் மன்னித்து உயிருடன் செல்ல உத்தரவிட்டவர். அவருடைய கருணை உள்ளத்தைப் பற்றிய செய்திகளாக இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகின்றது.

மெய்யனார் திருத்தொண்டாற்றுதல்

திருக்கோவலூரில் வாழ்ந்தவர் மெய்பொருள் நாயனார். இவர் சேதி என்னும் நாட்டை ஆட்சி செய்து வந்தவர். மலையமான் குலத்தைச் சேர்ந்த இவர் சிவபிரானை அன்புடன் வழிபட்டு வந்தார். வேத நெறிகளைத் தவறாமல், தன் அரசாட்சியையும் சிறப்புடன் செயல்படுத்தி வந்தவர். மக்கள் விரும்பும் வகையில் தன் ஆட்சியை நிலைநாட்டியவர். மட்டுமின் ஈசன் மீது கருத்தறிந்த பேரன்புடன் விளங்கியவர். இதனை உணர்த்தும் வரிகளான,

“வேதநல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு

காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்தறிந்து ஏவல் செய்வார்

அரசியல் நெிறியின் வந்த அறநெறி வழாமல் காத்து”

தம் நிலை தவறாமல் நின்றவர் என்பதற்கான இவ்வரிகளின் வாயிலாக மெய்பொருள் நாயனாரின் ஆட்சித் தன்மையும் அவரின் பக்திச் சிறப்பினையும் அறிந்துகொள்ள முடிகிறது.

செல்வங்களை ஈசனடியார்களுக்கு அளித்தல்

மெய்யனார் தான் அரசாட்சி செய்த காலங்களில் அரசு சாராத அரசுரிமையில் கிடைக்கின்ற செல்வங்களை தான் பயன்படுத்தாது தன் குடும்பத்திற்கும் பயன்படுத்தாது சிவனின் அடியார்கள் என்று கூறிக்கொண்டு வரும் ஈசனடியார்களுக்கு அளித்து வந்தார். அவர்களுக்கு வேண்டிய அளவில் உள்ளத்தன்போடும் மனநிறைவோடும் அச்செல்வங்களை தானமாக வழங்கி வந்தார். இதன் சிறப்பை செய்யுள் வடிவில் நோக்கும் போது.

“தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்

ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று

நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது

கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து உவந்தார்”.

 

என்பதை அறியலாம். மற்றும் தினமும் சிவாயலங்களுக்குச் சென்று தேவையான அனைத்து சேவைகளையும் செய்து வந்தார். மற்றும் அவரின் அன்பால் சேதிநாட்டிலுள்ள சிவாலயத்தில் ஆடலும், பாடலும் நிறைந்து மங்களம் பொங்க விளங்கிற்று.

பொய்தவ வேடமிட்டவனை ஒருத்தல்

மெய்பொருள் நாயனாரின் ஆட்சிச் சிறப்பைக் கண்டு அவரை அழித்துவிட்டு சேதி நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வேறுநாட்டைச் சேர்ந்த முத்தநாதன் என்பவன் திட்டமிட்டான். இவரின் சிவபக்தியைக் கண்டு அதனை பலவீனமாகப் பயன்படுத்தி சிவனடியாரைப் போன்று பொய்யான வேடமனிந்து அரண்மனையடைகிறான். முத்தநாதனைக் கண்டு நாயனார் உள்ளம் மகிழ்ந்து தன் இல்லம் தேடி வந்தவனை மனநிறைவோடு வரவேற்று வணங்கினார். ஆனால் முத்தநாதன் “ஆகமநூல்களைக்” கற்பிக்க வந்தேன் என்று பொய்யுரைத்து. அவரை தன் கையிலிருந்த புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டிச் சாய்கின்றான். இதனையுணர்ந்த மெய்பொருள் நாயனார்,

“மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள் எனத் தொழுது வென்றார்”

சிவவேடமிட்டு வந்து தன்னை அழிக்க நினைத்த முத்தநாதனை மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று சிவனே தன்னை அழித்ததாக நினைத்து உள்ளம் நிறைந்து வணங்கி நின்றார். இச்செயல் அவர் சிவன்மீது கொண்டுள்ள அன்பினையும் கருணை உள்ளத்தையும் எடுத்துரைக்கின்றது.

மற்றும்,

“எம்பிரான் அடியார் போக மீதிடை விலக்கா வண்ணம்

கொண்டு போய்விடு நீ”

என்று உரைத்து முத்தநாதனை மீண்டும் தாக்க வந்த காவலர்களை நோக்கி அவனை விட்டுவிடுங்கள். அவன் “ நமர்” (சிவனடியார்) என்று கூறித் தடுத்து மண்ணில் வீழ்ந்ததையும் அறியும் போது அவரின் கருணையுள்ளம் அறியப்படுகின்றது. பின்பு தன் உயிர் துறக்கின்ற வேளையில் தாம் கூறியதை நெறிதவறாமல் அப்பணியை செய்துமுடித்த தத்தன் என்ற காவலைப் பார்த்து,

“இன்றெனக்கு ஐயன் செய்தத யார் செய்ய வல்லார்” என்று

நின்றவன் தன்னை நோக்கி நிறைபெரும் கருணை கூர்ந்தார்.”

என்ற வரிகளில் தவ வேடம் புனைந்து வந்த முத்தநாதனை இடையூறின்றி விட்டுவிட்டேன் என்று கூறிய தத்தனைப் பாரத்து, இன்று எனக்கு ஐயன் செய்த உதவியை வேறு யார் செய்யக் கூடியவர். என்று போற்றியுரைத்து எதிர் நின்ற தன் மெய்க் காவலனைக் கருணை விளங்க நோக்கினார்.

முடிவுரை

இவ்வாறு பெரியபுராணத்தில் மெய்பொருள் நாயனார் சிவன் மீது கொண்டிருந்த பக்தியையும் அதன் விளைவாக தன் உயிரையும் பறிகொடுத்த தருணத்தில் சிவபெருமான் நடராசப் பெருமான் திருக்கோலத்தில் காட்சியளித்து தேவர்களுக்கும் எட்டாத அருட்பாத நிழலில் சேருமாறு கொண்டு, அவர் இடையறாது வணங்கி மகிழும் பேற்றினை அளித்தார். ஆகவே சிவனின் மீது கொண்டிருந்த உள்ளத்தன்பின் காரணமாக சிவனின் வரத்தைப் பெற்றவராகவும் விளங்கினார். அவரின் சிவத்தொண்டானது கருணையுள்ளம் கொண்டதாக விளங்கிற்று என்பதையே மேற்கண்ட உரைகளின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

 urselavarasi@gmail.com

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை – 7திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *