நானும் ரவுடிதான்

This entry is part 19 of 24 in the series 25 அக்டோபர் 2015

 

தாயை இழந்த சோகத்தை, பகையாக நெஞ்சில் ஏற்றி வளரும் இளம்பெண்ணின் கதையை சிரிப்புக் கார்னிவலாக தந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

காவல் அதிகாரி ரவிகுமாரின் ஒரே மகள் காதம்பரி. தந்தைக்கு ரவுடி கிள்ளிவளவனோடு ஏற்பட்ட பகையால் தன் அம்மாவை இழக்கிறாள் காதம்பரி. அந்த அதிர்ச்சியில் அவளது செவிகள் உணர்வு இழக்கின்றன. அழகின் மொத்த உருவமாக வளரும் அவள் மேல் காதல் கொள்ளும் பாண்டிக்கு அவள் அவன் காதலை ஏற்க வைக்கும் ஒரே நிபந்தனை, கிள்ளிவளவனை கொல்ல வேண்டும் என்பதே! காதம்பரியின் லட்சியம் நிறைவேறியதா? பாண்டி ரவுடி ஆனானா என்பதே க்ளைமேக்ஸ்!

நல்ல படம் கிடைத்தால், அனிருத் சின்ன இசைப்புயல் ஆகிவிடுவார் என்பது இதில் நிரூபணமாகிறது. படம் நெடுக சின்னச் சின்ன இசை இழைகளை படர விட்டு, பட்டாக்கி இருக்கிறார் படத்தை! “தங்கமே” பாடல் புது ரகம். அதில் இடையில் ஒலிக்கும் வயலின்களும் கிட்டாரும் தனி சுகம்.

நயன் தாரா சிறந்த நடிகை என்பது மாயா/ மாயை இல்லை என்பதை மீண்டும் நிறுவுகிறது இந்தப் படம். காது கேளாத காதம்பரியாக அவர் காட்டும் உணர்ச்சிகள் சூப்பர். நானும் ரவுடிதான் என்று வீறாப்பு பேசி விட்டு அதை செயல்படுத்த முடியாமல் தவிக்கும் பாண்டி வேடத்தில் விஜய் சேதுபதி தவிர வேறு யாரும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. “ க்கா” என்கிற ஒற்றை வார்த்தைக்கே அலறுகிறது அரங்கம். கிள்ளிவளவன் பார்த்திபன் தன் டிரேட் மார்க் நையாண்டியுடன் ‘கெத்து’ காட்டி செத்து மடிகிறார். ரவிகுமாராக அழகம்பெருமாள் கச்சிதம். பாண்டி ரவுடி ஆக பாடம் எடுக்கும் மொட்டை ராஜேந்திரன் குரலைக் கேட்டே சிரிப்பலைகளில் தளும்புகிறது கூட்டம்.

ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் இருளும் ஒளியும் சரிநிகர் சமானமாக போட்டியிடுகின்றன். இரண்டிலும் வெற்றி அவருக்கே!

“ஆர் யூ ப்ளைண்ட்? காது கேக்காதா?” போன்ற கிரேசி வசனங்களும், “ கானா பாலா காதுல உட்கார்ந்து பாடினாலே கம்முனு இருப்பா அவ” என்கிற துணுக்கு தோரணங்களும் நிறைந்து ரசிகனை கிள்ளுகின்றன விலாவில்.

காமெடி ரவுடியாக வரும் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரனுக்கு இனி போட்டியாகலாம்.

பாடல்கள் இனிமை! அதிலும் “ நீயும் நானும் சேர்ந்தே” முதல் பரிசை அள்ளுகிறது. ரகுமானின் “ நீயிருந்தால் “ (ஐ படம்) பாடல் சாயலில் ஒலிக்கும் “ எதற்காக கிட்டே வந்தாய்” தவிர்க்கப்பட்டிருக்கலாம்!

விக்னேஷ் சிவனின் காமெடி சென்ஸ் அபரிமிதம். அதிலும் பார்த்திபனைக் கடத்த பாண்டி போடும் திட்டமும் அது சொதப்பப்படும் காட்சிகளும் அக்மார்க் நகைச்சுவை!

139 நிமிடங்கள் என்பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது. ஶ்ரீகர் பிரசாத் வெட்டியிருந்தால், வீச்சு அதிகமாகி இருக்கும்!

0

சினிமா பார்வை : கெத்து / பீலா / மெர்சல்!

0

ரசனை மொழி : 1. இன்னும் டஃப் ஃபைட் குடுக்குது நயனு! அதுக்கு காரணம் அதோட லைனு!

இனிமே நயன் வர்ற படத்திலே எல்லாம் ஆபத்தான வளவுகள் கொண்ட பாவைன்னு போர்டு வைக்கணும் மச்சான்!

0

 

Series Navigationஉயிர் குடிக்கும் மதவெறிக்கு ஊழல் எவ்வளவோ பரவாயில்லை!வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *