வெட்டுங்கடா கிடாவை

This entry is part 6 of 24 in the series 25 அக்டோபர் 2015

 

“காளி…இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில் திருவிழாவை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்…. நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் முத்து கேட்கிறார்.
“புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? நம்மோடு இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை மக்கள் வருசத்துல ஒரு நாளாவது  சந்தோசமா ஆட்டிறைச்சுக் கறியோடு வயிறாறச் சாப்பிடனும். நாம கோயில் கட்டிப் பத்து
வருசமாச்சு. அதனால, இந்தப் பத்தாமாண்டு கோவில் திருவிழாவில பத்துக்கிடாக்களை வெட்டி நம்ம முனியாண்டி சாமிக்குப் படைச்சி அமர்க்களப் படுத்திடனும் தலைவரே.இதுதான் என்னோட ஆசை” கோவில் செயலாளர் காளி பெரிய
எதிர்பார்ப்புடன் கூறுகிறான்.
“பத்தில்ல காளி…. இருபது கிடாக்கள வெட்டி நம்ம கம்பம் மட்டுமல்லாம…சுற்று வட்டாரத்துல இருக்கிற ஏழைபாளைகளுக்கெல்லாம்
பெரிய அளவில பத்தாமாண்டுக் கோவில் திருவிழாவ தடபுடலா விருந்து வெச்சு அசத்திடுவோம் அசத்தி…..!” தலைவர் முத்து உற்சாகமாகப் பேசுகிறார்.
“போன மாசம்  ‘கம்போங் செந்தோசாவில’ நடந்த கோயில் திருவிழாவைவிட நம்ம கோவில் திருவிழா படு சூப்பரா இருக்கனும் தலைவரே…..”
“இந்த வட்டாரத்தில, இதுவரையிலும் யாரும் நடத்திடாத அளவில மிக விமர்ச்சியா
கோவில் திருவிழாவ நடத்திக் காட்டுவோம் காளி” மீசையை வேகமாக
முறுக்கிவிடுகிறார்.
மீசையைத் தலைவர் முறுக்கினால் செயலில் அதிரடியாக இறங்கிவிட்டார் என்பதை,
அந்தக் கம்பத்தில் குடியிருக்கும் இருநூறு குடும்பத்தினரும் அவரைப் பற்றி
நன்கு தெரிந்தே வைத்திருந்தனர்.சொன்னதைச் செய்யும் மாசுமறுவற்ற ஒரு செயல்
வீரர் அவர் என்பதில் ஒருமித்தக் கருத்தைக் கொண்டவர்கள்.மிகுந்த
கட்டுக்கோப்பாகக் கோவில் திருவிழாவை அவர் நடத்திக்காட்டும்
பாங்கு…..அடடா சொல்லி மாலாது. ஆடு வெட்டி மக்களுக்குச் சுவையுடன்
விருந்து படைப்பதில் அவருக்கிருக்கும் திறமை மக்களை ஆச்சரியப்படச்
செய்துவிடும். அவர் படைத்த சுவையான  விருந்தை அங்குள்ள மக்கள் பல
ஆண்டுகளாக உண்டு மகிழ்ந்தவர்களாயிற்றே!
“தலைவரே….உங்கப் புண்ணியத்தாலே வருசா வருசம் கோவில் திருவிழாவில
சுவையான ஆட்டிறைச்சுக் கறியோட வயிறாரச் சோறு சாப்பிட முடியுது.என்
புருசன் இறந்த பிறகு நான் ஒண்டியா…. உழைச்சு சின்னஞ்சிறுசுகளா இருக்கிற
என்னோட ஐந்து புள்ளைங்களக் காப்பாற்ற பாடு இருக்கே அந்த முனியாண்டி
சாமிக்குத்தான் தெரியும்.நீங்க மவராசனா இருக்கனும் சாமி” அப்போது
கோவிலுக்கு வந்திருந்த நடுத்தர வயது மிக்க அம்மா ஒருவர் தலைவரிடம் தம் மன
ஆதங்கத்தைக் கூறுகிறார். அவர் கூறியதைக் கேட்டு தலைவரின் கண்களில்
சிறியதாய்க் கண்ணீர் அரும்பி நிற்கிறது. “ஏதோ….என்னால முடிஞ்சதச்
செய்யிறேன் தாயி” அந்த அம்மாவை நோக்கி  கைகூப்புகிறார் தலைவர்.
“கவலைப்படாம நீங்க வீட்டுக்குப் போங்கம்மா….வழக்கம் போல இந்த ஆண்டும்
தலைவர் விருந்த தடபுடலா நடத்துவாறு…” காளி ஆறுதலாகக் கூறி அந்த அம்மாவை
அனுப்பி வைக்கிறான்.கண்ணீரைத் துடைத்தவாறு அந்த அம்மா அங்கிருந்து
புறப்படுகிறார்.
“அந்த அம்மா சொன்னதக் கேட்டியா காளி…? நம்ம கம்பத்துலா சாப்பாட்டுக்கே
வழி இல்லாத ஏழைகள் நிறையவே இருக்கிறாங்கிறத புரிஞ்சிக்கிட்டியா காளி”
“எனக்கும் அதுபற்றி நல்லாவே தெரியும் தலைவரே. அப்ப…நாளைக்கே வசூல
ஆரம்பிச்சுடுவோம்…..பொது மக்கள்  மட்டுமல்லாம இந்த வட்டாரத்தில்
இருக்கிற வசதிபடைத்த எல்லாரிடமும் கணிசமானத் தொகையை வசூல் செய்வோம்”
உள்ளத்தில் புதையுண்டு கிடந்த திட்டத்தைக் காளி நறுக்கென்று கூறுகிறான்.
“அதோ இதோனு சொல்லிக்கிட்டு இருக்கிறமாதிரி கூடிய சீக்கிரத்தில் நாட்டோட
பொதுத் தேர்தல் நடக்கப்போறதா சொல்லிக்கிறாங்க. நாட்டுல ஆட்சி மாற்றம்
ஏற்பட்டுப் போச்சின்னா நம்ம கோயிலுக்கு ஆபத்து வந்திடுமோனு கொஞ்சம் பயமா
இருக்கு காளி. நம்ம தொகுதி ‘ஓய்பி’ வீரக்குமார் அவர்கள  கோயில்
திருவிழாவுக்கு அழைச்சு பெரிய வரவேற்பு கொடுத்து, கோவில் பிரச்சனையைப்
பொது மக்கள் முன்னிலையில அவரிடம் எடுத்துச் சொல்வோம். என்ன சொல்ற காளி?”
“தலைவரே….நீங்க சொல்றது நல்ல யோசனை.  நம்ம கோவில் கடந்த பத்து
ஆண்டுகளாப் புறம்போக்கு நிலத்துல இருக்கு.பண்டாராயாக்காரங்க எந்த
நேரத்துலயேயும் வந்து கோயில இடிச்சிடும் அபாயத்துலதான்  கோயில்
நிலைமையும் இருக்கு.அவர்களும் பல முறை நமக்கு நோட்டிஸ் கொடுத்திட்டுப்
போயிருக்கிறாங்க. கோவிலக் காப்பாற்ற உடனடியாக நாம ஏதாவது செய்தாகனும்.
ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த நம்ம தொகுதி ஒய்பிக்கிட்ட உண்மை
நிலவரத்தைச் சொல்லிட்டா அவரு எல்லாத்தையும் பார்த்துக்குவாரு; கேட்ட
உதவியையும் தவறாம செய்வாறு” காளியின் பேச்சில் உறுதி கொப்பளித்தது.
“அத்தோட  கோயில் திருவிழாவுக்குக் கொஞ்சம் புரோந்தோக்கானையும் அவரிடம்
கேட்போம்.கிடைச்சா நமக்கு  லாபம்தானே….நாளைக்கே நம்ம கோயில் கமிட்டிகள
அழைச்சிக்கிட்டு அவரோட ஆபிஸ்ல போய்ப் பார்க்கனும் காளி” தலைவர் ஆணை
பிறப்பிக்கிறார்.
“தலைவர்னா இப்படித்தான் இருக்கனும்.செய்ய வேண்டிய காரியத்த தள்ளிப்போடாம
உடனே செய்யிற அந்தச் செயல் திறன்தான்  உங்ககிட்ட எனக்குப் புடிச்ச
விசியம் தலைவரே” காளியின்  புகழ் மழையில் நனைந்த தலைவர் முத்து
மனதுக்குள் சிரித்துக் கொள்கிறார்.
மறுநாள் கோவில் கமிட்டி இருபது பேர்களையும் முத்து அழைத்துக்கொண்டு
ஒய்பியை நேரில் சந்திக்கிறார்கள். கோவில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை
விலாவாரியாக அவரிடம் எடுத்து கூறுகின்றார் முத்து.
பிரச்சனைகளைக் கவனமுடன் கேட்ட ஒய்பி சில வினாடிகள் ஆழ்ந்து
சிந்திக்கிறார்.கோவில் தனது தொகுதியில் இருப்பதைக் கடந்த இரு தவணைகளாகக்
கண்கூடாகக் கண்டு வருகிறார்.அவர் தொகுதியில் பல  கோயிலுக்கு மாற்று இடம்
கொடுத்து அவற்றுக்குக் கணிசமாக மானியம் கொடுத்து,  ஒய்பி அந்தத் தொகுதி
தமிழ் மக்களிடையே நல்ல பெயரை எடுத்திருந்தார்.அவரது தொகுதியில் இந்து
சமயம் சிறப்பாக வளர்வதற்கு அவர் ஆற்றிய பணி நிறைவாகவே இருந்தது.
“முத்து…. கோவில் அமைந்திருக்கிற ‘கம்போங் மிஸ்கின்’  அரசாங்க
நிலம்.இன்று இல்லாட்டியும் எதிர்காலத்துல  மேம்பாட்டு திட்டத்திற்காக
அந்த நிலத்த அரசாங்கம் எடுத்துக்க வேண்டிவரும்.ஆனா….எத்தனை
ஆண்டுகளாகும்னு உறுதியா சொல்ல முடியாது….”
“ஒய்பி…அப்படியொரு நிலைமை வந்தா நீங்கதான் எங்களுக்குக் குடியிருக்க
வீடுகளும் கோவிலுக்கு மாற்று இடமும் ஏற்பாடு செய்யனும்” தலைவர் முத்து
பணிவுடன் கூறுகிறார். அவருடன் வந்திருந்த கோவில் கமிட்டிகளும் தலைவரின்
வேண்டுகோளை ஒருமுகமாக ஆதரிக்கின்றனர்.
நாட்டின் பொதுத்தேர்தல்   நெருங்கிக்கொண்டிருப்பதால்  தலைவர் முத்து
போன்றோரின் ஓட்டு தேவை என்பதால் தாம் பிரச்சனைக்கு வழிகாண்பதாக
வந்தவர்களிடம் உறுதி கூறியதுடன்  புரொந்தோக்கானாகச் சில ஆயிரங்களையும்
தலைவர் முத்துவிடம் கொடுத்து அனைவரையும் வழியனுப்பி வைக்கிறார் ஒய்பி
வீரக்குமார்.
வந்த காரியம் சாதகமாக முடிந்த மகிழ்ச்சியில் தலைவர் முத்து தனது
பரிவாரங்களோடு  ஒய்பியின் அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறார்.
கோவில் திருவிழாவுக்கு வரும் ஒய்பி வீரக்குமார் அவர்களுக்குச் சிறப்பு
செய்யும் பொருட்டு எல்லா ஏற்பாடுகளையும் முத்து தாமே முன்னின்று
கவனிக்கிறார்.தலைவருக்கு உறுதுணையா இருந்து அனைத்து ஏற்பாடுகளையும்
சீராகச் செய்து கொண்டிருக்கிறான் காளி.
கோவில் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்த வேளை தலைவர்
முத்து கமிட்டிக் கூட்டத்தை தனது அறையில் நடத்தி கொண்டிருக்கிறார்.ஏழு
மணிக்குத் தொடங்கி விவாதம் இரவு ஒன்பது மணியை நெருங்கிய பின்னரும்
விவாதங்கள் சூடாக நடந்து  கொண்டிருக்கின்றன.
“தலைவரே…..வருசா வருசம் கோவில் திருவிழாவில பல கிடாக்களை
உயிர்பலியிட்டு  திருவிழா கொண்டாடுவதை விட இந்த வருடம் தொடங்கி சைவ
சாப்பாடு  பக்தர்களுக்குப் பரிமாறினால் பக்தர்களிடையே இறை நம்பிக்கை
பிறக்குமே. அதோட அரசாங்கம் தற்போது அமல் படுத்திவரும் ஜி.எஸ்.டி. எனும்
பொருள்வரியினால் பொருட்களின் விலைகள் எல்லாம் நாளுக்கு நாள்  மலை போல்
ஏறியிருக்கும் இந்த நேரத்தில நம்ம செலவைக் குறைச்சிகலாமே… எனது இந்தப்
பரிந்துரையைப் பரிசீலிக்குமாறு செயலவையைக் கேட்டுக்கொள்கிறேன்”
கோட்டையப்பன் என்ற புதிதாகப் பொறுப்புக்கு வந்த கமிட்டி
கருத்துரைக்கிறார்.
பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் தமது திட்டம் புதிய கமிட்டியாக
நியமனம் பெற்ற கோட்டையப்பனால்  சிதறுண்டு போய்விடுமே என்ற திகைப்பால்
தலைவர் ஒரு கணம்  ஆடிப்போகிறார். திடுதிப்பென எழுந்த கேள்விக்குப் பதில்
சொல்ல தலைவர் முத்து ஒரு கணம் தடுமாறுகிறார்.
அருகில் அமர்ந்திருக்கும் தனது செயலாளர் காளியைப் பார்க்கிறார்முத்து.
செயலாளர் அதர்ச்சியில் உறைந்து போயிருப்பதைக் காணமுடிந்தது. நிலைமையைச்
சமாளிக்க வேண்டுமே? தம்மை சுதாரித்துக்கொண்டு தலைவருக்கே உரிய
பந்தாவோடுப்  பேசுகிறார் முத்து.
“இதுநாள் வரையிலும் திருவிழாவுக்கு கிடா வெட்டி பக்தர்களுக்கு அசைவ
உணவைப் படைப்பதுதான் வழக்கம்.வருசத்துல ஒரு நாள் கூட ஆட்டுக்கறி
உணவைச்சாப்பிடாத பல குடும்பங்கள் நம்ம கம்பத்துல இருப்பதினால நாமாவது
அவர்களுக்கு ஒருநாள் சுவையான  உணவைக் கொடுக்கலாமே என்ற எண்ணத்துலதான்
இதுநாள் வரையிலும் கிடா வெட்டி விருந்து படைச்சோம்.அந்த அடிப்படையில இந்த
ஆண்டும் கிடா வெட்டி விருந்து கொடுக்க எல்லா ஏற்பாடுகளும்
செய்தாச்சு.இருந்தாலும் புதுசா வந்திருக்கிற கோட்டையன் ஒரு கருத்த முன்
வைத்திருக்கிறாரு. மற்ற கமிட்டிகள் கோட்டையப்பன் சொல்றதப் பற்றி
மற்றவர்கள் என்ன சொல்றீங்க?” தலைவர் முத்து கூட்டத்தில் கலந்து
கொண்டோரைக் அழுத்தமுடன் கேட்கிறார்.
“தலைவரே…..கோட்டையப்பன் சொல்றது சரி என்றே எனக்குப்படுது.செலவைக்
குறைக்க  சைவ சாப்பாடு போட்டால் பெரும் பகுதிப் பணத்தை
மிச்சப்படுத்தலாம்.மிச்சப்படும் அந்தப் பணத்தை  இந்தக் கம்பத்துல
படிக்கிற  ஏழை மாணவர்களுக்குக்  கல்வி நிதி கொடுக்கலாம்” என்கிறார்
மற்றொரு புதிய கமிட்டி மருதமுத்து.
இது நாள் வரையிலும் இப்படிப்பட்டக் கேள்விகளைக் கேட்டறியாதத் தலைவர்,
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சில உறுப்பினர்களின் கேள்வியால்
அதர்ச்சியில் அதிர்ந்து போகிறார். தலைவர் சொல்லப் போகும் கருத்தைக் கேட்க
கமிட்டிகள் அனைவரும்  அவரின் முகத்தையே கூர்ந்து பார்க்கின்றனர்.
“கமிட்டிகளே….நீங்க சொல்ற எல்லா கருத்துகளும் தப்புனு நான் சொல்ல
மாட்டேன். ஆனா,காலங்காலமாக வழக்கத்தில இருக்கிற ஒன்றை திடீரென மாற்றதுனா
அத உடனடியாக ஏற்றுக்கமாட்டாங்க. அதோட, இந்த ஆண்டு திருவிழாவுக்கு ஒய்பி
வீரக்குமார் வர்ராரு.அவரை வரவேற்கப் பெரியக் கூட்டத்தை நாமக் கட்டாயம்
சேர்த்தாகனும். நமக்குக் கூட்டம் சேரனும்னா…..கிடா வெட்டிச் சாப்பாடு
போட்டு பீர் போத்தல்கள தாராளமா திறந்தாதான் மக்கள் கூட்டம் சேரும்.நமக்கு
இளைஞர்களோட சப்போட்டுக் கண்டிப்பா வேணும்.அவர்கள்தாம் இந்தக் கம்பத்துல
அதிகமா இருக்காங்க!” தலைவர் தெளிவுடன் கூறுகிறார்.
“தலைவர் சொல்றத நான் முழுமையா ஆதரிக்கிறேன்.ஆட்டுக்கறிச் சாப்பிட வசதி
இல்லாத பல குடும்பங்கள் நம்ம கம்பத்துல நிறையப்பேரு இருக்காங்கத்
தலைவரே.இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை ஆதாரத்தோடு என்னால் சொல்ல
முடியும்.அதோட வருசத்துல  ஒருநாள்…. விருந்துல சந்தோசமா ‘தண்ணீ’
சாப்பிட்டு…. ஆடிபாடி கூத்தும் கும்மாளமும் போட்டாதான் நம்ம கோவில்
திருவிழா கலைகட்டும். அப்பத்தான் பக்கத்துக் கம்பத்துக்காரங்க நம்மைக்
கண்டு மதிப்பாங்க” மற்றொரு கமிட்டி உத்தாண்டி உறுதியுடன் கூறுகிறார்.
“முட்டாள் தனமா, தலைவருக்குத் தாளம் போடுற உங்களப்போன்ற கமிட்டிகளால
இந்தச் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் விளையப் போறதில்ல….! காலங்காலமா
நாம குடிகாரச் சமுதாயமாகத்தான் இருக்கனுமா? இந்த நாட்டுல வாழ்ற மற்ற
இனத்து மக்கள் நம்ம சமயத்தைப் பற்றி என்ன நினைப்பாங்க?” மருதமுத்து
ஆவேசமுடன் கூறுகிறார்.
“வாய மூடு மருதமுத்து….! பத்து வருசமா தலைவரா இருக்கிற எங்கத் தலைவரையா
எதிர்த்துப் பேசுற…?இந்த வருசம்தான் நீ கமிட்டிக்குப் புதுசா
வந்திருக்க. நாங்கெல்லாம் பத்து வருசமா தலைவரோட இருக்கிறோம்.தலைவர்
சொல்றதுதான் இங்குச் சட்டம்.அவர எதிர்த்துப் பேசினா ஒழுங்கா நீ வீடு
போய்ச்சேர மாட்டே…..!” ஆத்திரமுடன் இருக்கையை விட்டு எழுந்த உத்தாண்டி
மருதமுத்துவைத் தாக்கப் பாய்கிறான்.
“கருத்துச் சொல்ல வந்தா…..என்னை அடிக்கவா வர்ரே….!” அங்கு கையில்
கிடைத்த தடியால் உத்தாண்டியின் தலையில் ஓங்கி அடிக்குகிறான் மருதமுத்து.
“அய்யோ….!” என்ற அலறலோடு தலையைப் பிடித்தபடி தரையில் சாய்கிறான்
உத்தாண்டி. சிறிது  நேரத்தில் மயக்கமுற்று அவன் சுயநினைவை இழக்கிறான்.
மண்டையிலிருந்து இரத்தம் பீரிடுகிறது.
“மருதமுத்து…. என்னப்பா இது? பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுமேல
கையவைக்கிற?….நீ புதுசா வந்த கமிட்டின்னு பார்க்கிறேன். இல்லாட்டி
நடக்கிறதே வேற!” தலைவரின் கைகள் துடிக்கின்றன. ஆத்திரத்தில் அவரது கண்கள்
சிவந்து போகின்றன.கடுங்கோபத்துடன் கூட்டத்தைக் கலைத்துவிட்டு கீழே
சாய்ந்து கிடக்கும் உத்தாண்டியைத் தூக்க  ஓடுகிறார்.
அவசரகதியில்  வழங்கப்பட்ட எந்த முதலுதவியும்  உத்தாண்டியைச்
சுயநினைவுக்குக் கொண்டு முடிய வில்லை.பதறிப்போன தலைவர் முத்து
உத்தாண்டியைக் காரில் ஏற்றி உடனடியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்.
அரை மணி நேரம் கடந்த பின்னரும் உத்தாண்டியைப் பற்றிய எந்த தகவலும்
இல்லை.தனக்கு வலது கரமாக இருக்கும் உத்தாண்டியைப் புதிதாக வந்தவன்
அடித்து வீழ்த்திவிட்டானே என்ற ஆத்திரம் மன  அமைதியை இழக்கச் செய்துக்
கொண்டிருந்தது.அவரும் பழைய கேடிதான்.பெரிய சண்டீராக அவரது இளமைக்
காலத்தைக் கரைத்தவர் முத்து.வயது போன காலம்; சுமந்து நிற்கும் தலைவர்
பதவி.இதுவெல்லாம் அவரது கோபத்தைச் சற்று தணிக்கவே செய்தன. எனினும் தனது
பெரும் நம்பிக்கைக்குரிய உத்தாண்டி தாக்கப்பட்டதால் ஏற்பட்டது அவருக்குப்
பெருத்த அவமானமாகப்போகிறது.எனினும்,அதுத்து மேற் கொள்ள வேண்டிய
நடவடிகைகள் பற்றி அவர்  தனது அறையில் மற்ற கமிட்டிகளோடு ஆலோசனை
நடத்துகிறார்.
இரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.அப்போது கோவில் வளாகத்தினுள்
காவல் துறையின் வாகனம் ஒன்று வேகமாக நுழைகிறது.வாகனத்தை நிறுத்திவிட்டு
சிலர் அலுவலகத்தை நோக்கி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் காவல் துறையினர் ஏன் இங்கு வருகிறார்கள்? உத்தாண்டியைப்
பற்றி விசியமாக இருக்குமோ? மனதுக்குள் எண்ணிபடி, காவல் துறையினரை
எதிர்கொள்கிறார் தலைவர்.
வந்த நோக்கத்தைக் கூறிய காவல் துறையினர்,தலைவர் முத்துவையும் அவரது
கமிட்டிகளையும் வாகனத்தில் ஏற்றுகின்றனர்.அடுத்த வினாடி வாகனம்
அங்கிருந்து  வேகமாகப் புறப்படுகிறது!
இடி முழக்கத்தோடு புறப்பட்ட வானவேடிக்கையின் பஞ்சவர்ண ஒளியில் ‘கம்போங்
மிஸ்கின்’ முனியாண்டிசாமி  இப்போது சைவத்துக்கு  மாறி இருந்தார்!

முற்றியது

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலவெளி மரண விண்மீன் அண்டக் கோளைச் சிதைக்கிறதுதிருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *