மனோன்மணி தேவி அண்ணாமலை
விரிவுரைஞர்
சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம் மலேசியா.
முன்னுரை
தொல்காப்பியம் தமிழ்ப் பழமை காட்டும் வரலாற்றுச்சுவடி; வருங்காலப் புத்தமிழுக்கு அறிவூட்டும் வழிகாட்டி என்கின்றார் வ.சுப.மாணிக்கனார். இருப்பினும், தொல்காப்பியருக்குப் பின் மொழிவளர்ச்சியால் நிகழ்ந்த மாற்றங்கள், இலக்கண வளர்ச்சி போன்றவை பிற்காலத்தவருக்குத் தொல்காப்பிய நூற்பாக்களுக்குப் பொருள் அறிவதில் இடர்ப்பாட்டை உண்டாக்கின. இந்த இடர்ப்பாட்டினைக் களையும் வகையில் தொல்காப்பிய நூற்பாக்களின் பொருளைத் தெளிவுபடுத்தும் முறையிலும், அதனுள் கூறப்படும் இலக்கணக் கூறுகளை இலக்கிய வழக்கு மேற்கோளைக் கொண்டு விளக்கும் நோக்கிலும் உரைகள் எழுந்தன. இவ்வகையில் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் உரையாசிரியர்களாக மட்டும் அல்லாமல் திறனாய்வாளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் நின்று தொல்காப்பிய ஆய்வினை வளர்த்து வந்துள்ளனர்.
இஃது ஒருபுறம் இருக்க, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் தொல்காப்பியத்தின் மூலப்பதிப்பு இன்று கிடைக்கவில்லை. மூலப்பதிப்பான சுவடிகளில் இருந்து பதிப்புமாற்றம் பெற்ற காலகட்டத்தில் மனிதத் தவறுகள் நிகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன என்பதை யாரும் மறுக்கவியலாது. இதனைப் பாடவேறுபாடுகள் என்று அறிஞர்கள் குறிக்கின்றனர்.
இந்நிலையில், தொல்காப்பிய மூலப் பதிப்பிலிருந்து சில நூற்பாக்கள் பாடவேறுபாடு அடைந்துள்ளதாகக் கருதுவோரும் உளர். அவ்வகையில், புள்ளிமயங்கியலில் காணப்படும் யகர ஈற்று நூற்பா ஒன்றில் பாட வேறுபாடு உள்ளதாகப் பாவலரேறு பாலசுந்தரம் கோடு காட்டியுள்ளார். பாடவேறுபாடு கொண்டமைந்ததாகக் கருதப்படும் அந்நூற்பா பின்வருமாறு:
‘தாயென் கிளவி யியற்கை யாகும்.’ (தொல்.359 இளம்பூரணர் உரை)
‘மகன்வினை கிளப்பின் முதனிலை இயற்றே’ (தொல்.360 இளம்பூரணர் உரை)
இந்நூற்பா(தொல்.360) குறித்து எழுந்துள்ள சிக்கலை மையமாகக்கொண்டு இவ்வாய்வுரை எழுதப்பட்டுள்ளது.
ஆய்வுரை
இந்நூற்பாக் குறித்து மேலும் ஆய்வை விரித்துச் சொல்லுமிடத்து, உரையாசிரியர்களின் விளக்கமும் நூற்பா பதிப்பும் ஆராயப்பட்டுள்ளன. இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பாவலரேறு பாலசுந்தரம், புலிக்கேசி, தமிழண்ணல், ஆகியோரின் உரை விளக்கம் தொடர்ந்து ஆராயப்பட்டுள்ளன.
இளம்பூரணர் உரை நூலில் காணப்படும் நூற்பாப் பதிப்பும் உரையும்
‘தாயென் கிளவி யியற்கை யாகும்’ (தொல்.359)
மகன்வினை கிளப்பின் முதனிலை இயற்றே. (தொல்.360)
உரைவிளக்கம்(தொல்.360)
இது, மேலதற்கு அடையடுத்து வந்தவழி இன்னவாறு முடியுமென எய்தாது எய்துவித்தல் நுதலிற்று.
(இ-ள்) மகன் வினை கிளப்பின் முதல்நிலை இயற்று – அத்தாய் என்னும் சொல் மகனது வினையைக் கிளந்து சொல்லுமிடத்து, இவ்வீற்று முதற்கண்(தொல்.359) கூறிய நிலைமையின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும்.
காட்டு: மகன்றாய்க் கலாம், செரு, தார், படை என வரும்.
மகன்வினை என்றது, மகற்குத் தாயாற் பயன்படும் நிலைமையின்றி, அவளொடு பகைத்த நிலைமையை.
இவ்வாறாக, இளம்பூரணர், ‘தாயென் கிளவி யியற்கை யாகும்.’ (தொல்.359)’ எனும் நூற்பாவைத்தொடர்ந்து, சிக்கலுக்குரிய இந்நூற்பாவிற்கு மேற்காணுமாறு உரையெழுதியுள்ளார்.
நச்சினார்க்கினியர் உரை நூலில் காணப்படும் நூற்பாப் பதிப்பும் உரையும்
‘தாயென் கிளவி யியற்கை யாகும்’ (தொல்.358)
‘மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே’ (தொல். 359)
உரைவிளக்கம்(தொல்.359)
இஃது எய்தாத தெய்துவித்தது, தாயென்பது அடையடுத்துழி வல்லெழுத்து மிகுக என்றலின்.
இதன் பொருள்: மகன்வினை கிளப்பின் – தாயென்னுஞ் சொல் தனக்கு அடையாய் முன்வந்த மகனது வினையைப் பின்னாக ஒருவன் கூறுமிடத்து, முதல் நிலை இயற்று – இவ்வீற்றுள் முதற்கட் கூறியநிலைமையின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
காட்டு: மகன்றாய்க்கலாம் செரு துறத்தல் பகைத்தல் என வரும். மகன் தாயோடு கலாய்த்த கலாம் என விரியும், ஏனையவற்றிற்கும் ஏற்கும் உருபு விரிக்க, வினை ஈண்டு பகைமேற்று.
இவ்வாறாக, நச்சினார்க்கினியர் ‘தாயென் கிளவி யியற்கை யாகும்.’ (தொல்.358)’ எனும் நூற்பாவைத்தொடர்ந்து, சிக்கலுக்குரிய இந்நூற்பாவிற்கு மேற்காணுமாறு உரையெழுதியுள்ளார்.
புலியூர்க்கேசிகன் உரை நூலில் காணப்படும் நூற்பாப் பதிப்பும் தெளிவுரையும்
‘தாயென் கிளவி யியற்கை யாகும்.’ (தொல்.359)
‘மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே’ (தொல். 360)
உரைவிளக்கம் (தொல்.360)
தாய் என்னுஞ் சொல், தனக்கு அடையாய் முன்வந்த மகனது வினையைக்கூறின், முன்பு கூறியவாறே வல்லெழுத்து மிக்கு முடியும்.(எ.டு) மகன்றாய்க்கலாம், செரு, துறத்தல், பகைத்தல் என வரும்.
தமிழண்ணல் உரை நூலில் காணப்படும் நூற்பாப் பதிப்பும் உரையும்
‘தாயென் கிளவி யியற்கை யாகும்.’ (தொல்.358)
‘மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே’ (தொல். 359)
உரைவிளக்கம்(தொல்.359)
“தாய் என்னும் சொல்லுடன் மகன் பற்றிய வினையைச் சேர்த்துச் சொன்னால் யகரவீற்றுக்கு முதற்கண் கூறிய தன்மைத்து, அதாவது வல்லெழுத்து வரின், வல்லெழுத்து மிக்கு முடியும். இச்சூத்திரம் மேலும் ஆராய்தற்குரியது.
மேற்காட்டிய அனைத்து உரையாசிரியர்களும் ‘மகன்வினை கிளப்பின்’ என்றே நூற்பாவைப் பதிப்பித்திருக்க, பாவலரேறு பாலசுந்தரம் அவர்கள் முதன்முதலாக, ‘மகன்வினை கிளப்பின்’ எனப் பிறழ்ந்தது பிழையான பாடம்”
என்று கூறி, இஃது அதன்வினை கிளப்பின் என்றிருத்தல் வேண்டும் என்கின்றார்.
பாவலரேறு பாலசுந்தரம் உரை நூலில் காணப்படும் நூற்பாப் பதிப்பும் உரையும்
‘தாயென் கிளவி யியற்கை யாகும்.’ (தொல்.358)
அதன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே (தொல். 359)
“ ‘மகன்வினை கிளப்பின் முதனிலை இயற்றே என்பது உரையாசிரியர் பாடம்.’ தாயென்பதன் வினையைக் கூட்டிக் கூறுமிடத்து மிகும் என்கின்றது.
‘மகன்வினை கிளப்பின்’ எனப் பிறழ்ந்த பிழையான பாடத்தை உண்மை எனக்கொண்டு மகனது வினையைக் கூறுமிடத்து வல்லெழுத்துமிகும் எனப் பொருள் கூறி, மகன்றாய்க்கலாம் என எடுத்துக் காட்டி அதற்கு மகன் தாயொடு கலாய்த்த கலாம் எனப் பொருள் கூறினர்.
மகன் வினையேயன்றி, மகள்தாய்க் கலாம் என மகன் வினைகிளப்பினும் வாளா தாய்க்கலாம் எனக்கிளப்பினும் வல்லெழுத்து மிகுதலாகும். தாய் என்பது விரவுப் பெயராகலான மகவு, பிள்ளை என அஃறிணைச் சொற்களைக் கூட்டிக் கூறினும் இவ்விதி பொருந்துமாகலானும் மகன் என வரைந்து கூறுதல் குன்றக் கூறலாம். அன்றியும் வல்லெழுத்து மிகுதற்கு மகன் என்னும் சொல் எவ்வாற்றானும் எதுவாகாமையானும் அது பாடமின்மை தெளியலாம். முதனிலை இயற்றே என்னும் பொழிப்பெதுகைக்கு அதன்வினை என்பது பொருந்தி யாப்பிசை சிறந்து நிற்றலையும் ஓர்ந்து கொள்க.”
இவ்வாறாக, பாவலரேறு பாலசுந்தரம், இந்நூற்பாவில் காணப்படும் ‘மகன்வினை’ என்பது ‘அதன்வினை’ என்றே வருதல் வேண்டும் என்று உறுதியாகக் கூறுகின்றார்.
புதிய கருத்து
இந்நூற்பா குறித்து, பல இரவுகள் ஆராய்ந்த எமக்கு, மேலும் ஒரு பாடவேறுபாடு இருக்க வாய்ப்பு இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. மகன்வினை என்பது அதன்வினை என்றிருத்தலைவிட, அஃறிணை என்றிருத்தலே இந்நூற்பா குறித்த சிக்கலுக்கு ஒரு தீர்வாக அமையும் போல தோன்றுகிறது. காரணம், தாய்வினை கிளவி இயற்கை யாகும் எனும் முதல் நூற்பாவில், தாய் எனும் கிளவி வல்லெழுத்து வரின் மிகாது இயல்பாகும் என்ற கருத்தில் அனைத்து உரையாசிரியர்களும் ஒத்த கருத்து கொண்டுள்ளனர்.
தொல்காப்பியர்,
உயிரீ றாகிய உயர்திணைப் பெயரும்
புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்
எல்லா வழியும் இயல்பென மொழிப (தொல். 153- தொகை மரபு)
என்று தொகைமரபில் கூறியுள்ளார். அதாவது, உயர்திணைப்பெயர்கள், அல்வழி, வேற்றுமை இரு நிலையிலும் இயல்பாகப்புணரும் என்பது தொல்காப்பியர் கருத்தாக இருந்துள்ளது. இந்நூற்பாவிற்குச் சிறப்பு விதியாக,
அவற்றுள்
இகர இறுபெயர் திரிபிடன் உடைத்தே (தொல். 154 – தொகைமரபு)
என்றவாறு, மேற்கூறிய உயர்திணைப் பெயருள் இகர ஈற்றுப் பெயர்கள் இயல்பாகாமல் திரிந்து முடியும் இடங்களும் உண்டு எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். அதாவது, சில இடங்களில் மட்டும், இகர ஈற்றுப்பெயர்கள் வலிமிகுத்துப் புணரும் என்று கூற விழைந்துள்ளார்.
தாய் என்பது விரவுப்பெயராகும். தாய் எனும் சொல் உயர்திணையைக்குறித்து வரும் போது இயல்பாகப் புணரும் என்பதையே ‘தாய்வினை கிளவி இயற்கை யாகும்’ எனும் நூற்பா குறிக்கிறது. தாய் கை, தாய் திட்டம் என்ற சொற்களைக் காட்டலாம்.
இதனைத்தொடர்ந்து வரும் அடுத்த நூற்பா, ‘அஃறிணை கிளப்பின் முதனிலை யியற்றே’ என்றிருப்பின், தாய் எனும் சொல், அஃறிணையைக் குறித்து வருமாயின் முதலில் கூறிய இயல்பில் இருந்து மாறி, வல்லொற்று மிக்கு புணரும் என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறு பொருள் கொண்டால், இன்று புணர்ச்சியில் நாம் காணும் சில சிக்கல்களுக்கு இஃது ஒரு தீர்வாக அமையும் போன்று எண்ணத்தோன்றுகிறது.
அதாவது, நிலைமொழியில் தாய் எனும் சொல் வருமொழியில் வரும் உயர்திணையைக் குறித்து வருமாயின் வல்லொற்று மிகாது. ஆனால் நிலைமொழியில் தாய் எனும் சொல், வருமொழியில் வரும் அஃறிணையைக் குறித்து வருமாயின், வல்லொற்று மிகும் என்பதையே தொல்காப்பியர் கூற முயன்றுள்ளாரோ என்ற சிந்தனை மேலோங்கி நிற்கிறது. இக்கால வழக்கை நோக்கின், இவ்வுண்மை தெளியவருகிறது.
தாய் + குரங்கு , தாய்க்குரங்கு
தாய் + சிறுத்தை , தாய்ச்சிறுத்தை
இங்கு, நிலைமொழியில் வரும் தாய் எனும் சொல், குரங்கு எனும் அஃறிணைப் பொருளை விளக்கி நிற்கிறது. அதுபோல, தாய்ச்சிறுத்தை என்பதில் தாய் என்பது சிறுத்தை எனும் அஃறிணைப்பொருளை விளக்கி நிற்கிறது. ஆக, இதுபோன்ற இடங்களில், நாம் வல்லொற்று மிக்கு இச்சொற்களை உச்சரித்தலைக் காணநேர்கிறது. இது தாய் என்ற சொல்லுக்கு மட்டுமின்றி, நிலைமொழியில் விரவுப்பெயராக வரும் அஃறிணைப்பெயர்கள் அனைத்துக்கும் பொருந்தி வருதலை இன்றைய வழக்கு நோக்கின் உணரலாம்.
காட்டு:
தந்தை + குரங்கு , தந்தைக்குரங்கு
தந்தை + சிறுத்தை , தந்தைச்சிறுத்தை
எனவே, மகன்வினை என்று இன்று பதிப்பில் உள்ள நூற்பா, தொல்காப்பியச் சுவடியில் அஃறிணை என்றே இருந்திருத்தல் வேண்டுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. மேலும், அஃறிணை எனும் சொல்லைப் பொருத்திப்பார்க்கும் போது, யாப்பிசையும் சிறந்து நிற்றலை காணமுடிகிறது. மேலும், இஃது உலகவழக்குக்கும் பொருந்தி வருவதைக் காணமுடிகிறது.
முடிவுரை
எனவே, சிக்கலுக்குரிய இந்நூற்பா, அஃறிணை கிளப்பின் முதனிலை யியற்றே என்றே மூலப்பாடநூலில் இருந்திருக்க வேண்டும். பின்னர், சுவடியிலிருந்து மாறிவந்த நிகழ்முறையில் பதிப்பாசிரியர்களின் மாறுபட்ட எழுத்துவாசிப்பில் இந்நூற்பா பிறழ்ந்து, மகன்வினை என மாறி வந்திருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. காரணம், தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திற்கும் இளம்பூரணர் உரை எழுதிய காலத்திற்கும் குறைந்தது ஓர் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுக் கால இடைவெளி உள்ளது என்பதை நாம் மறுக்கவியலாது. இன்று தொல்காப்பியத்தில் உள்ள சில நூற்பாக்கள் சிக்கல் நிறைந்ததாக உள்ளன என்று பலர் கருதுவதற்கு மூலத்திலிருந்து பிறழ்ந்து எழுதப்பட்ட சில செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம். தொல்காப்பியம், தமிழரின் அடையாளமாக மாறியமைக்குப் பதிப்பாசிரியர்களின் அரும்பணியும் பங்களிப்புமே காரணம் என்பது மறுத்தற்கரிது. இருப்பினும், தொல்காப்பியம் சிக்கல் நிறைந்தது அல்ல என்பதை நிறுவுவதற்குத் தமிழின் சுவடிப்பதிப்பு வரலாறுகள் மேலும் ஆய்வுசெய்யப்பட வேண்டுமோ என எண்ணத்தோன்றுகிறது.
பயன்கொண்ட நூல்கள்
1. தொல்காப்பிய உரை விளக்கம், இளம்பூரணர்.
2. தொல்காப்பிய உரை விளக்கம், நச்சினார்க்கினியர்.
3. தொல்காப்பிய உரை விளக்கம், தமிழண்ணல்.
4. தொல்காப்பிய உரை விளக்கம், பாவலரேறு பாலசுந்தரம்
5. தொல்காப்பிய உரைவிளக்கம், புலியூர்க்கேசிகன்.
- அவன், அவள். அது…! -8
- இந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்
- கரடி
- ஆல்பர்ட் என்னும் ஆசான்
- ஆயிரங்கால மண்டபம்
- பொன்னியின் செல்வன் படக்கதை – 10
- திரும்பிப்பார்க்கின்றேன் புனைகதைகளில் பேச்சுவழக்கினை ஆய்வுசெய்த திறனாய்வாளர் வன்னியகுலம்
- செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை
- நெத்தியடிக் கவிதைகள்
- தொடுவானம் – 92. பெண் தேடும் படலம்
- இளைஞர்களுக்கு இதோ என் பதில்
- கவிதைகள் – நித்ய சைதன்யா
- எல்லையைத் தொட்டபின்பும் ஓடு!
- சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.
- நித்ய சைதன்யா – கவிதைகள்
- எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர்
- பூச்சிகள்
- மகன்வினையா? அதன்வினையா?
- கல்லடி
- ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”
- வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்
- வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை
- அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்தை கதிரியக்கக் கழிவின்றி நிதிச் சிக்கனத்தில் இயக்கலாம்.