“பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?”

author
0 minutes, 4 seconds Read

நவீன் சீதாராமன்

இந்த பாட்ட எப்ப கேட்டாலும், எனக்கு மனசுக்குள்ள ரொம்ப வலிக்கும். ஆமா ! எல்லாருக்குமேதான். ஆனா, எனக்கு கொஞ்சம் அதிகமாவே….. கனத்த மனசையும், கண்ணீரையும் என்னால கட்டுப்படுத்த முடியறதில்ல. 1990-ன்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரிலீஸ் ஆனது 1985-ன்னாலும், எங்க ஊருக்கெல்லாம் லேட்டாதான் படம் வரும், நல்ல படம்’னா அடிக்கடி திரையிடுவாங்க. சிவகங்கை ஸ்ரீராம் தியேட்டர் இப்போதைய ரவிபாலா. பொதுவா நடிகர் திலகத்தின் நடிப்பை அதிகம் சிலாகிச்சு பேசுற எங்க அப்பா, அவரு சின்ன வயசுல பாத்த படங்கள், ரசிச்ச பாடல்கள் எல்லாம் எனக்கு இப்பவும் அத்துபடி. கம்யூனிஸ்ட் இயக்கத்துல ரொம்ப தீவிரமா, பரபரப்பா இருந்த காலகட்டங்கறதால அதிகமா படங்கள் பாக்க மாட்டார். எனக்கு பள்ளி விடுமுறைன்னா எங்கப்பா கலந்துக்கற எந்த பொதுக்கூட்டம், போராட்டம், சாலை மறியலா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டு போறது வழக்கம். இரவு சிவகங்கைல ஒரு பொதுக்கூட்டத்துல பேசி முடிச்சுட்டு, நள்ளிரவாயிட்டதாலயும், அப்பதான் மழை பேஞ்சு விட்டிருந்ததாலயும், எங்க கிராமத்துக்கு பேருந்து போக்குவரத்து இல்லாததாலயும், இப்ப என்ன செய்யலாம்’னு கேட்டார். நான் படத்துக்கு போகலாம்’னு சொன்னேன். அப்போ சிவகங்கைல மூணு தியேட்டர்னு ஞாபகம். அதுல ஒரு தியேட்டர்ல “முதல் மரியாதை”னு சொன்னேன். படம் பாக்க அவருக்கு உடன்பாடு இல்லன்னாலும், எனக்காகவும், சிவாஜி கணேசன் படங்கறதாலயும் எங்கப்பா ஒத்துக்கிட்டாரு. போறதுக்கு முன்னாடி ரோட்டுக் கடைல ஆட்டுக்கறி தோசையும், ஆம்லேட்டும் சாப்பிட்ட ஞாபகம். மழை விட்டிருந்த நள்ளிரவும், அந்த மணமும் அப்பப்பா… இன்னிக்கும் என்னால உணர முடியுது. அப்பறம் சைக்கிள்ல தியேட்டருக்கு போனோம். தியேட்டருக்கு ஒரு நூறு அடிக்கு முன்னால சைக்கிள நிறுத்தினாரு. எங்கப்பா தோள்ல எப்பவும் கம்பீரமா காட்சியளிக்கும் சிவப்புத்துண்டு மடிக்கப்பட்டு அவருடைய சிவப்பு பேக்’குக்குள்ள ஐக்கியமானது. என்னப்பா’ன்னு கேட்டேன். “யாராவது தெரிஞ்சவங்க இருப்பாங்க, நான் பொதுவா இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வர்றதில்ல இல்லயா?”ன்னாரு. ஒரு வழியா திரையரங்குக்குள்ள போயி, கடைசி சீட், எங்க தலைக்கு மேல ஆபரேட்டர் ரூம்ல இருந்து படம் வர்ற ரெண்டு துளைகள். எத்தனையோ படங்கள் ஊர்ல திரையிடும்போது சேந்து பாத்திருக்கோம். ஆனா தியேட்டர்ல அப்பாவோட சேந்து பாத்ததா எனக்கு ஞாபகம் இல்ல. அதுனால, இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். படம் பாத்திட்டுருக்கோம்.

“பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?” இந்த பாட்டு திரையில ஓடிட்டு இருக்கு. ஏதோ சரசர’ன்னு சத்தம். எங்கப்பா திடீர்னு எந்திரிச்சு ஆபரேட்டர் துளைக்கு பக்கத்துல செவுத்துல தட தடன்னு தட்டினாரு. லைட்டெல்லாம் போட்டுட்டாங்க. லைட் போட்டதால அணைக்கச் சொல்லி ஒரே விசிலும், சத்தமும் காத கிழிச்சது. எனக்கு ஒன்னும் புரியல. ஓரத்து சீட்டுல ஒக்காந்திருந்த எங்கப்ப எந்திரிச்சாரு. பக்கத்துல ஒருத்தர் கீழ கெடந்து துடிக்கிறார். கை கால் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது, சிமெண்ட் தரைல தேச்சு தேச்சு கை கால் எல்லாம் ரத்தம் ஒழுக ஆரம்பிக்கிது. திடீர்னு எங்கப்பா அவர அப்படியே அலேக்கா தூக்கிட்டு வெளியே போறாரு. லைட் எல்லாம் அணைச்சிட்டாங்க…. பாட்டு ஓடிட்டு இருக்கு. எனக்கு ஒன்னும் புரியல. நானும் எந்திரிச்சு அப்பா பின்னாடியே போறேன். அவர தூக்கிட்டுப் போன எங்கப்பா நேரா ஆபரேட்டர் ரூமுக்குள்ள போயி, ஏதோ ஒரு இரும்புக் கம்பிய கொடுத்து, அவர ஆசுவாசப்படுத்தி ஒக்காற வைக்கிறாரு. கொஞ்ச நேரத்துல கோலி சோடா, டீ எல்லாம் வருது.

ஆபரேட்டர் எங்கப்பாகிட்ட, “காக்கா வலிப்பு தோழர், நீங்க எப்படி இங்கே…?”, “இப்பதான் பொதுக்கூட்டம் முடிஞ்சது. பஸ் இல்ல, தம்பி படம் பாக்கணும்னான். வந்தேன்.

சரி, தோழர் ! நீங்க போயி பாருங்க. அவர நம்ம பக்கத்து ஊருதான். நான் பாத்துக்கறேன்” என்று அந்த நண்பரை ஆபரேட்டர் ரூமிலிருந்தே படம் பாக்க வச்சாரு. வலிப்பால் அவதிப்பட்டவரு என் அப்பாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, “ரொம்ப நன்றிய்யா, நீங்க மட்டும் இல்லன்னா, நான் பொழச்சிருக்க மாட்டேன்” என்று நெகிழ வைக்க, “அதெல்லாம் ஒன்னுமில்லப்பா, இது ஒரு சின்ன விசயம், பயப்படாத, காலைல போயி வைத்தியரப் பாத்துட்டு வீட்டுக்குப் போகணும் என்ன?” என்றவாறு அங்கிருந்து கிளம்ப, என் அப்பாவின் வெள்ளை வேட்டி சட்டை எல்லாம் இரத்தக்கறை. சரி, போகலமா’ன்னு எங்கிட்ட கேட்க, ஆபரேட்டர் கொடுத்த தண்ணீரில் அப்பா வேட்டி, சட்டைய கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு, ஆபரேட்டர் எனக்காக சிபாரிசு செய்ய மறுபடியும் படம் பாக்க தியேட்டருக்குள்ள போனோம். எனக்கு படம் முழுசா பாக்க முடியலயேங்கிற வருத்தம் ஒருபக்கம். உள்ள நுழையும்போது மறுபடியும் லைட் போட்டாங்க. தியேட்டர்ல ஒரே சத்தம். படம் நிறுத்தப்பட்டது. மீண்டும் மீண்டும் சத்தம், விசில். அருகில் சிந்தியிருந்த ரத்தம் என்னோட கண்ணுல பட்டது. ஒருவழியா உள்ளே போய் ஒக்காந்தோம்.

“என்ன ஆச்சரியம் ! “பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?” மறுபடியும் ஓட ஆரம்பிச்சது. எனக்கு ஒரே சந்தோசம், தியேட்டருக்குள்ளயும் ஒரே சந்தோச விசில் மட்டும் குரல். அந்த லேசான முகம் தெரியிற வெளிச்சத்துல அப்பா முகத்த பாத்தேன். என்னைப்பாத்து அவர் சிரிச்ச அந்த அழகு முகம் இப்பவும் என் மனசுக்குள்ள நிக்கிது. ஒரு வழியா படம் பாத்துட்டு அங்கருந்து ஜெயவிலாஸ் பஸ்ல காளையார்கோயில் வந்து இறங்கி, நானும் என் அப்பாவும் ரத்தக்கறையோடும், மன நிறைவோடும் கிட்டத்தட்ட 15 கி.மீ சைக்கிள்ல வீடு வந்து சேந்தோம்.

அந்த சிவப்புக்கறையும், என் மனசுல பதிஞ்சிருந்த நிறைவும், இன்னிக்கு ஏற்பட்டிருக்கிற வலியும் எப்படி மறையும் ?

நானும் என் அப்பாவும் சேர்ந்து தியேட்டர்ல பாத்த முதலும் கடைசியுமான அந்தப் படம்தான் “முதல் மரியாதை”. “பூங்காத்து திரும்புமா ?” எப்பல்லாம் இந்தப் பாட்ட கேக்குறேனோ அப்பல்லாம் இந்த காட்சி என் கண்ணை நனைச்சுட்டு போயிடும். அதுமாதிரிதான் இன்னிக்கும் அதிகாலைல எந்திரிக்கும்போது என்னையறியாமலே இந்தப் பாட்டு என்னோட மனசுக்குள்ள ஒலிச்சுகிட்டே இருந்துச்சு… இதயம் கனக்க ஆரம்பிச்சது….. இதோ… என் தொண்டை அடைக்கிது…

ஏன்னா… இதே நாள்… 2005 நவம்பர் 2, என்னோட அப்பா எங்ககிட்டேருந்தும், அவர் நேசிச்ச இந்த மண்ணுகிட்டேருந்தும், அடித்தட்டு வாழ் சக தோழர்களிடமிருந்தும் விடுப்பு எடுத்துக்கொண்ட நாள்….

“பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?”

இசைஞானிக்கு இளையராஜாவுக்கு என் நன்றி

பூங்காத்து திரும்புமா பாடலுக்கான லிங்க் :
https://youtu.be/-9kaLJZhJIE

author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *