குமரி எஸ். நீலகண்டன்
இரவு ஒரு மணி…
மயான அமைதி…
ஆம்புலன்ஸ் சப்தம்…
எங்கும் நிசப்தம்…
இலைகளெல்லாம்
சிலைகளாய் விறைத்து
நின்றன..
வாகனங்கள் முக்கி முக்கி
முன்னேறிக் கொண்டிருந்தன..
மழை அழுது கொண்டே
இருந்தது..
உண்மையை உரக்கச்
சொன்னது இயற்கை….
உணவில்லை…உடையில்லை..
பணமில்லை…மதமில்லை
சாதியில்லை..
பதவி இல்லை…பகட்டு இல்லை..
ஆண், பெண் பேதமில்லை…
மழை தன் கத்தியால்
கீறிக் குதறியது..
பூமியை பிய்த்து
எறிந்து வீறாப்புடன்
என்றோ இழந்த
இடங்களையெல்லாம்
மீட்டெடுத்தது.
இயற்கையின் ருத்ர தாண்டவம்..
மழையின் மகாபாரதம்….
காங்கிரீட் காடுகளைச் சுற்றி
காட்டாற்று வெள்ளம்…
பெரிய பெரிய குளங்கள்
பெருமிதத்துடன்
எழுந்து தனது வெற்றியை
கூவிக் கொக்கரித்தன…
கரப்பான் பூச்சி, எலி,
பூனை, ஆடு, மாடு,
காக்காய் குஞ்சு, நாய்
என எல்லாவற்றோடு
ஏதுமறியா மனிதர்களும்
மிதந்தனர்..
கொசுப் பறவைகளுக்கெல்லாம்
கோடிக் குடியிருப்புகள்
உருவாயின…
ஒரு மேட்டுப் பகுதியில்
வீழ்ந்து கிடந்த
மிதிவண்டியின் முகப்பு
விளக்கின் மேல்
பாதுகாப்பாய் ஒரு வெட்டுக்கிளி
தனது முன்னங்கால்களை
தட்டித் தட்டி
தடுமாறிக் கொண்டிருந்தது…
பறவைகள் பறந்து
கொண்டிருந்தன..
ஒரு எலி குடும்பத்துடன்
என் வீட்டிற்குள்
நுழைந்து விட்டது..
அடைக்கலம் கேட்டு
வந்த எலிக் குடும்பத்தை
வழக்கம் போல்
பொறி வைத்து பிடிக்க
மனம் ஒப்பவில்லை..
ஒரு பூனை கைக்குழந்தை போல்
எங்கோ
கதறிக் கொண்டிருந்தது…
இதயமற்றவர்கள்
ஏரிகளின் இதயங்களில்
இதயக் கோபுரங்கள்
கட்டினார்கள்.
பணங்களெல்லாம்
பிணங்களாயின…
கல் இதயக் காரர்கள்
குளங்களிலெல்லாம்
கற்கோபுரங்கள் கட்டினார்கள்..
கற்கோபுரங்கள் எல்லாம்
கல்லறைகளாயின…
இங்கும்
கல்லறைகளுக்குள் ஏழைகள்.
மெழுகுவர்த்தி விலை 100 ரூபாய்…
மெழுகுவர்த்தி அழுதது..
கல் இதயங்களை
கரைக்க இயலவில்லை என்று.
வானம் எவ்வளவு அழுதும்
இதயங்களில் கொஞ்சம் கூட
ஈரம் ஒட்டவில்லை.
நீ அழுது கொண்டே இரு
நாங்கள் கோபுரங்கள்
எழுப்பிக் கொண்டே
இருப்போம் என்றன
நான்காம் இனத்து
நஞ்சு உள்ளங்கள்…
தேறுதல் சொல்ல வேண்டியவர்கள்
தேர்தலை எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள்…
பணம் தின்னிகள்
பிணத்தின் மேல் விழும்
பணத்திற்காகவும்
காத்துக் கிடக்கிறார்கள்.
சாவுக்கு பின் அழுவார்கள்..
மழை அழுதது
சாவுக்கு முன்னமேயே..
punarthan@gmail.com
குமரி எஸ். நீலகண்டன்
பழைய எண்-204, புதிய எண் – 432.
பார்சன் குரு பிரசாத் ரெசிடென்ஷியல் காம்பிளக்ஸ்,
ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
செல்-94446 28536
- யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு
- இடுப்பு வலி
- மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி
- தொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்
- செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்
- துளிதுளியாய்… (ஹைக்கூ கவிதைகள்)
- என் இடம்
- துன்பம் நேர்கையில்..!
- அழைப்பு
- பாதிக்கிணறு
- திருக்குறளில் இல்லறம்
- எனது ஜோசியர் அனுபவங்கள் – 1
- சென்னை, கடலூர் குடும்பங்களை தத்தெடுக்கும் செயல்திட்டம்..
- இருட்டில் எழுதிய கவிதை