நித்ய சைதன்யா – கவிதைகள்

author
0 minutes, 1 second Read
This entry is part 18 of 18 in the series 3 ஜனவரி 2016

நித்ய சைதன்யா

1.நான் தர விரும்பும் ஒன்று

நீ விரும்புவது

ஒரு செடியின் அத்தனை மலர்களை

ஒரு வனத்தின் அத்தனை கனிகளை

ஒரு காதலின் அத்தனை வலிகளை

ஒரு பிரிவின் அத்தனை துயர்களை

ஒரு கூடலின் அத்தனை உச்சங்களை

ஒரு துரோகத்தின் அத்தனை வாய்ப்புகளை

ஒரு ஆறுதலின் அத்தனை இதங்களை

ஒரு குரோதத்தின் அத்தனை வெறிகளை

ஒரு சுயநலத்தின் அத்தனை ஆசைகளை

ஒரு இச்சையின் அத்தனை நிறைவுகளை

ஒரு காமத்தின் அத்தனை நிறங்களை

ஒரு கர்வத்தின் அத்தனை நிழல்களை

பசுமையே உடலாய் உள்ள இவ்வனத்தின்

சிறுபுல்லின் நுனியில்

தனித்துள்ளது அத்தனை பரிசுத்தமாய்

ஒரு பனித்துளி

 

 

 

  1. உனதன்பை பற்றி

செல்லும் இடம் எங்கும்

நான் சுமக்கும் சிறுகூட்டில்

உடன்வருகிறது

சின்னஞ்சிறு பறவை

பறத்தலை துறந்து

ஒற்றைச்சொல்லில் தியானிக்கும்

அதன் மௌனம்

நீண்டு தீண்டுகிறது தொடுவானத்தை

காலமற்ற வெளியில்

அரூபமாய் அமர்ந்தபின்

அதன் சுவாசத்தில் ஒலிக்கிறது

உன் பெயர்

சிறகசைப்பில்

கலைந்தாடுகிறது முக்காலமும்

ஒத்திசைவை கூரலகால்

தள்ளிப்பறக்க

மீண்டும் இளமையென என் பருவம்

தீராத்தருணங்களில் ஒன்று

என்னை இட்டுச்செல்கிறது

உன் பறவை உறையும்

அதே விதியின் வழியே

பா.சங்கரநாராயணன் (நித்ய சைதன்யா)

117 0 தாமிரபரணிநகர் விக்கிரமசிங்கபுரம்

7418425626

 

 

Series Navigationதொட்ட இடமெல்லாம்…..
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *