என்.துளசி அண்ணாமலை
“வணக்கம். பொழுது புலர்ந்து விட்டது. திரு.சுந்தரபாண்டியன் அவர்களே, எழுந்திருங்கள்”
டிஜிட்டல் அழகுக்குயிலியின் கொஞ்சல் அழைப்பில் சுந்தரபாண்டியனின் விழி மலர்கள் அசைந்தன. நெற்றியில் இலேசான சுருக்கம் ஏற்பட்டு மறைந்தது.
விழிகளை மூடிய நிலையிலேயே கட்டிலினின்று எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தான். கைகளை ஒன்றோடொன்று அழுத்தித் தேய்த்துக் கொண்டு முகத்தைத் தடவினான். சுவாசத்தை நன்கு உள்ளிழுத்து சுவாசப்பைகளைக் காற்றினால் நிரப்பி, பின்னர் வெளியில் விட்டான்.
“இறைவா!
எப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்றாத
வைப்பைஅழி யாநிலையா வையாய் பராபரமே”.
தாயுமானவரின் பாடல் வரிகள் மனதுக்குள் வரிவரியாய் ஓடி, அமைதி அலைகளை நிரப்பின. மனதில் உற்சாகம் பெருகத் தொடங்கியது. கட்டிலை விட்டிறங்கி சில அடிகள் நடந்து, கிழக்கு மூலையில் சுவரோடு ஒட்டியிருந்த நீல நிற விசையைத் தட்டினான். உடனே, தரையில் ஓர் ஓடுபாதை ட்ரேட்மில் போல எழுந்தது. சுந்தரபாண்டியன் அதன்மீது ஏறி நிற்கவும், ட்ரேட்மில் ஓடத்தொடங் கியது. அவனும் ஓட ஆரம்பித்தான். பத்து நானோ நிமிடங்களுக்குப் பின்னர், அருகிலிருந்த குளியலறைக்குள் புகுந்தான். தந்தசுத்தி செய்தபின்னர் கூரையில் தெரிந்த வட்டமான உலோகத்தை நோக்கிக் கை நீட்டினான். மறுகணம் வெதுவெதுப்பான குளியல் காற்று அவன் மேனியை நனைத்தது. அந்தக் காற்றில் கலந்திருந்த டோல்ச் கபானா வாசனையும் நோய் எதிர்ப்புச் சாரலும் மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குளித்து முடித்து, தோட்டாவோ, உலோகமோ பாதிக்காத வெண்ணிற சட்டையும் கருநீல நிறத்தில் காற்சட்டையும், அதே நிறத்தில் கழுத்துப்பட்டையையும் அணிந்த பின்னர், கண்ணாடியில் தன்னுடைய பிம்பத்தைப் பார்த்து திருப்தியடைந்தான். அதேவேளையில், முதல்நாள் நடந்த காராசாரமான விவாதமும், அதற்குக் காரணமாய் அமைந்துவிட்ட தன்னுடைய ஆய்வுக்கட்டுரையின் சாராம்சமும் உயிர்ப்பெற்று நினைவலைகளில் அலைமோதின.
அங்கிருந்து கூடத்துக்கு வந்தான். அவனுடைய சுவாசக் காற்று பட்டதுமே, சுவரை ஒட்டி அமைக்கப்படிருந்த ஸ்டீரியோ உயிர்பெற்று வயலினின் மெல்லிசை எழுந்தது. அதை செவிமடுத்தவாறே, காற்றில் கையை வீச, எதிரே பெரிய ஹோலோகிராம் திரை விரிந்தது. அகப்பக்கத்தில், வளையணிந்த பெண்ணின் இருகரங்கள் தோன்றி, உடன் “வணக்கம்” எனும் ஒலி எழுந்தது. தொடர்ந்து, சிவந்த பழமாக சூரியன் எழுந்து திரையை முழுவதுமாக ஆக்கிரமித்து மறைய, பிரபஞ்சத்தின் நீலமும் பச்சையும் வெள்ளையும் கலந்த படிமம் பளிச்சென்று மத்தாப்பாய் வெடித்து, பொடிப்பொடி வைரங்களாய் மறைந்தது, இந்தக் கிரகத்தின் தேசிய சின்னமான தாமரை மலர் விரிந்தது. தொடர்ந்து, “இரண்டாவது பிரபஞ்ச சாலையின் இராசேந்திரபூமி. திருவள்ளுவர் ஆண்டு 3015 ஆடித்திங்கள் திகதி 10, காலை நானோ மணி 6.30.” என்ற எழுத்துகள் தோன்றி, நீல நிறப்பொடியாய் கரைந்தன. மறுகணம் வரிசையாக செய்திகள் தெரிந்தன. அதேவேளையில் ஒலியின் அடையாளத்தைக் காட்டும் குமிழ் திறந்தது. பனிக்கட்டியின்மீது சிலமணி நேரங்கள் வைக்கப்பட்டிருந்த அல்வாவைத் துண்டுகளாக்கினாற் போல ஹோலோகிராம் அழகி பேசினாள்.
‘வணக்கம். முதலாவது பிரபஞ்சசாலையின் பூமிக்கிரகத்திலிருந்து தங்களுக்கு ஒரு
அழைப்பு வந்துள்ளது. ஆவணித்திங்கள் திகதி 10ஆம் திகதி, காலை நானோ மணி 9 அளவில், மலையகத்தின் தலைநகராம் புத்திராபுரியில் தமிழர் திருநாள் இயலிசை, நாடகம்
மற்றும் தமிழர் பாரம்பரியப் போட்டிகள் நடைபெற உள்ளன. இவ்விழாவில் கலந்து கொள்ள மற்ற கிரகவாசிகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே, நம்முடைய கிரகத்தைப் பிரதிபலித்து தாங்களும் மற்றும் தமிழர் கலை,பண்பாட்டுக் குழுவின் மேல்நிலை ஆய்வாளர்களும் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்.’
“ஆகா, இனிய செய்தி. தேன் உண்ணத் தயக்கமா, என்ன? ‘கலந்து கொள்ள விருப்பம்’ என்று பதில் அனுப்பினான்.
“அடுத்து, நாளை ஆடித்திங்கள் 11ஆம் நாள், மறைந்த மாபெரும் அறிஞரும், சிறந்த தமிழறிஞரும் உலகத்துக்கே நம்முடைய தமிழ் இனத்தின் பெருமையை உச்சாணிக்கொம்பில் உயர்த்தி வைத்தவருமான அக்கினிப் புத்திரன், ஏவுகணை நாயகன் அமரர் மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் ஆயிரமாவது ஆண்டு நினைவு நாள் என்பதனை நினைவு கூர்கிறேன்.”
செய்தியைக் கேட்டு கொண்டிருக்கும்போதே சுந்தரபாண்டியனின் விழிகளில் கண்ணீர் பெருகியது. மேலும் துன்பம் வந்து மனதை கவ்வ, அடுத்த செய்தியைக் கேட்கத் தயாரானான்.
“அடுத்து, இன்று காலை நானோ மணி 10க்கு, பாரி வளாகத்தில் ‘குழந்தைகள் பாதுகாப்பு’ பற்றிய உங்களுடைய ஆய்வுக் கட்டுரைப் படைப்பும் பாதுகாவலர்களுக்கான பயிற்சிப் பட்டறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டுரையின் படிவம் இன்னும் பத்து நானோ வினாடிகளில் உங்களுடைய மூளையில் பதிக்கப்பட்டிருக்கும் ஐஸோடோப்பில் பதிவாகிவிடும்.”
“நன்றி, அழகி”’ என்று புன்னகையுடன் அடுத்த செய்தியின்மீது ஆள்காட்டி விரலை வைத்தான். ‘’சரி, அடுத்து?’’
‘‘அடுத்து…..மன்னிக்கவும். அவசர செய்தி ஒன்று தகவல் பெட்டிக்கு வந்துள்ளது!’’
‘‘எங்கே, பெட்டியைத் திற!’’
தகவல் பெட்டியின் தாமரை இதழ் கதவு திறந்ததும், அந்தச் செய்தி தெரிந்தது. உடன் ஆறு வயது சிறுமி ஒருத்தியின் சிரித்தமுகம் அவன் மனதைக் கொள்ளை கொண்டது. ஊதாநிறத்தில் அழகிய ஆடையை அணிந்திருந்தாள். கூந்தலின் இடப்பக்கத்தில் இந்த பூமியில் அதிகமாக விளையும் செந்தாமரை மலர் ஒன்றினைச் சூடியிருந்தாள்.
உடன் தெரிந்த செய்தியை வாசித்தான்.
“சரகம் 59, வணிகர் குடியிருப்பு வரிசை 2. உலோக வணிகர் தீபநாயகரின் மகள் எழிலினி, வயது ஆறு. பள்ளிக்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டுள்ளாள். வழக்கமாக எழிலினியை ஏற்றிச் செல்லும் பபள் (bubble) வண்டியையும் காணவில்லை. தீபநாயகரின் தொழில் எதிரிகளின் கடத்தல் நாடகமாக இருக்கலாம் என்று சரகம் 59 காவல் அலுவலகம் தகவல் தந்துள்ளது. உங்களுடைய உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்.’
சுந்தரபாண்டியன் ஒருகணம் யோசித்தான். பின் சரகம் 59ஆம் காவல் அலுவலகத்தின் தலைவர் சேனாபதியின் தொடர்பு எண்களைத் தேடி அழுத்தினான். அடுத்த கணமே சேனாபதியின் இறுக்கமான முகம் திரைக்கு வந்தது. முகத்தில் மருந்துக்குக்கூடப் புன்னகை இல்லை.
‘‘வணக்கம்!’’ சொன்னார்.
மேற்கொண்டு சுந்தரபாண்டியன் எதுவும் கேட்குமுன்பே, சேனாபதி விபரங்களைக் கூறினார்.
‘வீட்டிலிருந்து ஒரு கல் தூரத்தில் எழிலினி கடத்தப்பட்டுள்ளாள். சம்பவம் நடந்த நேரம் இன்று காலை நானோ மணி 7. அப்போது சாலையில் போக்குவரத்து ஏதுமில்லை. சரகத்தின் சாலைக்காவலர்கள் தங்களுடைய பணிகளை அடுத்துவரும் காவலர்களிடம் ஒப்படைக்கும் அந்தப் பத்து நானோ நிமிட இடைவெளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடத்தல்காரர்களிடமிருந்து இதுவரை எந்தத் தகவலுமில்லை.
சேனாபதி விபரங்களைத் தந்து கொண்டிருக்கும்போதே, ஹோலோகிராமின் கீழ்ப்பகுதியில் ஒரு செய்தி மின்னியது. அந்தச் செய்தியின்மீது விரலை வைத்து அழுத்தினான். “துப்பறியும் கண்” திறந்தது. அதன்வழியாகப் பார்த்தபோது, சரகம் 71ல் இருந்து வட்டவட்டமாக சிவப்புநிற ஒலி அலைகள் சிறியதாகத் தொடங்கி பெரிதாகின. அங்கிருந்து அம்புக்குறி ஒன்று “எழிலினி” என்ற பெயருடன் மிளிர்ந்தது. அம்புக்குறி காட்டிய இடம் வரவர பெரிதாக, சோலார்கதிர்களை உள்வாங்கும் உலோகப்பட்டைகள் தெரிந்தன. அவற்றையும் ஊடுருவி ‘துப்பறியும் கண்’ மின்னல் வேகத்தில் விரைந்து சென்று ஒரு பெரிய உலோகப்பெட்டிக்குள் தேங்கியது.
அங்கே….சிறுமி எழிலினி மயங்கிய நிலையில் படுத்திருந்தாள்! மெல்லிய சுவாசம் ஓடுவதை உணர முடிந்தது. பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, உள்ளுணர்வு எதையோ உணர்த்த, ‘துப்பறியும் கண்பார்வையை’ நாலாபுறமும் செலுத்தினான்.
பார்த்தவனுக்கு அதிர்ச்சி! அதேவேளையில் சேனாபதியின் பதற்றமான குரல் அவனை உசுப்பியது. விரைந்து அவருக்குக் கட்டளைகளை அனுப்பினான்.
அடுத்த இருபதாவது நானோ நிமிடங்களில் எழிலினியும், அவளோடு சேர்த்துக் கடத்தப் பட்டிருந்த நூறு சிறார், சிறுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இடம், பாரி வளாகம். சுந்தரபாண்டியனின் உரை தொடங்க இன்னும் சில நானோ நிமிடங்களே இருந்தன.
அதேவேளையில், அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தன்னைத் தாக்கி விடுக்கப்பட்ட வினாக்கணைகளும் கண்முன்னே படம் போல விரிந்தன. வலப்பக்கக் காதின் பின்புறத்தே மூளையை ஒட்டிப் பொருத்தப்பட்டிருந்த ஐஸொடோப்பின் விசையின்மீது ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தினான். முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகள் மீண்டும் கண்முன்னே விரிந்தன.
“உங்களுடைய புதிய அறிமுகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மனித உயிர்களுக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய ஒரு ஆராய்ச்சி என்பதை ஏன் உணர மறுக்கிறீகள், சுந்தர பாண்டியன்? இந்த ஆராய்ச்சியை மேலும் தொடர அனுமதி இல்லை.”
“ஆமாம். இது மனித குலத்தை மழுங்கடிக்கும் விசயம். வேண்டாம். விட்டு விடுங்கள். இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளைக் கொழுத்தி விடுங்கள். நாம் இன்னும் அந்த அளவுக்கு அறிவியலில் முன்னேறவில்லை. அதெல்லாம் அமெரிக்கா, இரஷ்யா போன்ற வல்லரசுகளுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். நமக்குப் பொருந்தி வராது!”
பொறுமையாக அவர்களுடைய கேள்விகளையும் குறை கூறல்களையும் செவிமடுத்த சுந்தரபாண்டியன், இறுகிய முகத்துடன் அவர்களையெல்லாம் பார்த்தான்.
“அந்த அளவில் நாம் அறிவியலில் முன்னேறவில்லையா? அப்படியானால், இயற்கையை எதிர்த்து, இயற்கை நமக்குத் தந்த வரப்பிரசாதமான இந்த உடலுக்குள் நாம் எத்தனையோ மின்னணு சாதனங்களைப் பொருத்தியுள்ளோமே, அதை எதில் சேர்ப்பதாம்? நம்முடைய உடம்பிலேயே உணர்ச்சி இல்லாத, மிகவும் மென்மையான, அதே சமயத்தில் மாற்று உறுப்பு பொருத்த முடியாத ஒரு தலையாய பகுதி நம்முடைய மூளை, இல்லையா? அப்படிப்பட்ட மூளைக்குள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஐஸோடோப்புகளை ஏன் பொருத்தவேண்டும்? அது மட்டும் ஆபத்தில்லையா? ஏன் என்றால் மற்றவனின் மூளைக்குள் பதிந்திருக்கும் செய்திகள் நமக்கு வேண்டும் என்ற சுயநலந்தானே உங்களுக்கு?”
சுந்தரபாண்டியன் எவ்வளவு வாதாடியும், ஆய்வியல் குழு அவனுடைய ஆய்வை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. அவர்களுடைய மறுப்பு அவனுக்கு அனாவசியமாகப் பட்டது. தெள்ளத் தெளிவாக மேலிடத்தின் பாராமுகம் ஒருதலைப் பட்சமான கருத்து என்பது புரிந்தது. அவர்களுக்கு, சுந்தர பாண்டியனின் கண்டுபிடிப்பு பிடிக்கவில்லை. ஆயினும், சுந்தரபாண்டியனுக்கு நம்பிக்கை தளரவில்லை.
‘சரி, இன்று என்ன சொல்லப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.’
ஆய்வரங்கத்துக்குள் செல்ல முயன்றவனை சேனாபதியின் குரல் அழைத்தது. அவன் கேட்குமுன்னமே சேனாபதி முந்திக்கொண்டார்.
“எல்லா சிறார்களும் நலமாக இருக்கின்றார்கள். ஆனால், ஒரு விசயத்தை மட்டும் எனக்குத் தெளிவு படுத்தி விடுங்கள். கடத்தப்பட்ட சிறார்களை ஒரு குறுகிய கால அவகாசத்துக்குள் எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது? எனக்கு மட்டும் சொல்லி விடுங்கள். அதை தெரிந்து கொள்ளாவிட்டால் என்றால் என் தலையே வெடித்து விடும். தயவு செய்யுங்கள்” என்றார் கெஞ்சும் குரலில்.
அவருடைய கைகளைப் பற்றிக் கொண்ட சுந்தரபாண்டியன், குறும்பாகச் சிரித்தான்.
“சொல்கிறேன். நான் என்னுடைய ஆய்வைப்பற்றி மேலிடத்தில் சொன்னபோது, எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, கன்னி முயற்சியாக, எழிலினி பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் உதவி கேட்டேன். என்னுடைய விண்ணப்பத்தை அவர் தீபநாயகர் போன்ற பெரும் வணிகர்களிடம் பரிந்துரை செய்தார். அதன்படி, அந்தப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் முன்னங்கைகளிலும் ஒரு டார்ட்டை (Dart)ப் பதித்தோம். அந்த டார்ட்டில் ஆயிரம் கோப்புகளைச் சேமிக்கலாம். அந்த டார்ட்தான் எழிலினியின் இருப்பிடத்தை துல்லியமாகக் கண்டுபிடித்துக் கொடுத்தது!”
சேனாபதியின் விழிகள் வியப்பில் விரிந்தன. அதேசமயத்தில், அவர் முகத்தில் தயக்க ரேகைகள் விரிந்தன.
அதைப்பார்த்து மேலும் சிரித்தான் சுந்தரபாண்டியன். “ உங்களுக்குக் குழப்பம் வேண்டாம். இந்த டார்ட்ட் வழி, ஒரு நபரின் அனைத்து விபரங்களையும் நாம் அவருடைய உடலிலேயே சேமிக்கலாம். இதனால் அந்த நபருக்கு எந்த விதமான கெடுதியும் நேராது. இதோ, என்னுடைய கையைப் பாருங்கள்.” என்றவாறு, தன்னுடைய புறங்கையைக் காட்டினான். மணிக்கட்டிலிருந்து இரண்டு அங்குல இடைவெளியில், கடுகு போன்றதொரு மச்சம் தெரிந்தது.
“இது என்ன, மச்சமா?” அதைத் தடவிப் பார்த்தவாறே கேட்டர் சேனாபதி.
“இது மச்சமில்லை. நம்முடைய தோலின் வெளித்தோலான எப்பித்தீலியத்துக்கும் அதன்கீழ் உள்ள எண்டோதீலியத்துக்கும் நடுவில் உள்ள மீசோதீலியத்தில் இந்த டார்ட்டைப் பதித்து விடுவோம். அது மிகவும் பாதுகாப்பாக அங்கேயே இருந்து, நாம் கேட்கும்போது செய்திகளை அனுப்பிவிடும்.”
சேனாபதியின் விழிகள் பனித்தன. “ஆரம்பத்தில் நானும் உங்களுடைய ஆய்வைப் புறக்கணித்தேன், விபரம் புரியாமல். ஆனால் இப்போது தெளிந்து விட்டேன். உங்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். உங்களுடைய ஆய்வுக்கட்டுரைக்கு இனி எவ்விதமான எதிர்ப்பும் இருக்காது என நம்புகிறேன்.” என்றார்.
“நன்றி. என்னுடைய ஆய்வுக்கட்டுரை ஏற்றுக் கொள்ளப்பட்டால், எதிர்காலத்தில் எண்ணற்றோர், குறிப்பாகக் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கலாம் என நம்புகிறேன்.” சுந்தரபாண்டியனின் நம்பிக்கையான வார்த்தைகள் சேனாபதியின் முகத்தில் பரவசத்தை ஏற்படுத்த, மேலும் தாமதியாமல் ஆய்வரங்க அறைக்கு விரைந்தான் சுந்தரபாண்டியன்.
ஆய்வரங்கில் இந்தக் கிரகவாசிகளோடு மேலும் பல கிரக ஆய்வாளர்களும் அமர்ந்திருப்பதைப் பார்த்து தனக்கும் சிரித்துக் கொண்டான்.
மிகவும் அமைதியான முறையில் தன்னுடைய கட்டுரையை வாசித்தான். ஐஸோடோப்பின் உதவியால் ஆதாரக் காட்சிகள் எல்லோர் மின்னிலையிலும் தெளிவாகத் தெரிந்தன.
கட்டுரையின் இறுதி முடிவில், ஐஸோடோப் திரை விலகியது.
அவையினரைப் பொதுவாகப் பார்த்தான்.
“ இன்று ஒரு துக்கமான அதேசமயத்தில் நாம் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய நாள். இந்தப் பிரபஞ்சத்தில் மனித இனம் வாழும் அனைத்துத் கிரகங்களிலும் உள்ள தமிழர்களின் சிரங்களில் தங்கக் கிரீடம் சூட்டிய மகான், தமிழன்னையின் அன்புமைந்தன், பேரறிவாளன், அமரர் ஏ.பி.ஜே.அப்டுல் கலாம் அவர்களின் ஆயிரமாவது நினைவு நாள்.
வானில் ஆயிரங்கோடி நட்சத்திரங்கள் வலம் வந்தாலும்,
வனத்தில் எண்ணாயிரங்கோடி வண்ண மலர்கள் மலர்ந்தாளும்,
பண்பான அறிவியல்மேதை, பண்முக வித்தகன், பேர் அறிஞன்,
பார்போற்றும் அப்துல் கலாம், உமக்கு ஈடில்லை! இணையில்லை!
உன்போல் இனிப்பிறக்க யாருமில்லை! உண்மை இது!
வாராது வந்த மாமணியே! நீ மறைந்தாலும், எங்கள் மனங்களில்
என்றென்றும் மறையாமல் வாழ்ந்திருப்பாய்! இனிய தமிழாக, அறிவாக,
உயர்தமிழ்ப்பண்பாக, பாசமிகு அண்ணனாக, பார்போற்றும் பெருந்தலைவனாக!
அன்னாருக்கு இக்கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.
இந்தக் கண்டுபிடிப்புக்கு “டாக்டர் “அப்துல் கலாமின் ஐஸோகண்கள்” என்று அவருடைய பெயரையே சூட்டுகின்றேன். வணக்கம்.”
தன்னுடைய உரையை முடித்துக் கொண்ட சுந்தரபாண்டியன், மேடையின் இடப்பக்கமாக இருந்த வழியாக விரைவாக வெளியேறினான். அவனுக்கு தற்போது யாரிடமும் டர்க்கம் செய்யவோ உரையாடவோ மனதில் இடமில்லை. இதயம் எங்கும் அந்த அக்கினி நாயகனின் நினைவே வியாபித்திருந்தது. தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஓய்வறைக்கு விரைந்தான்.
வணக்கம்.
எழுத்து:
என்.துளசி அண்ணாமலை
- நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- இதோ ஒரு “ஸெல்ஃபி”
- இலக்கிய வட்டம் வானொலி ஒலிபரப்பின் இரண்டாம் பகுதி
- சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது
- திரை விமர்சனம் தாரை தப்பட்டை
- நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள்
- ரிஷியின் 3 கவிதைகள்
- தாரை தப்பட்டை – விமர்சனம்
- தொடுவானம் 103. உடலியல் அறிமுகம்
- நல்வழியில் நடக்கும் தொல்குடி!
- மருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்தி
- சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா
- ஒலியின் வடிவம்
- சிந்தனை ஒன்றுடையாள் ஸம்ஸ்க்ருதம்-தமிழ் பாலம் (தொகுப்பாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்)
- தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி
- “அப்துல் கலாமின் ஐஸோகண்கள்”