தியானம் என்பது….

This entry is part 8 of 22 in the series 24 ஜனவரி 2016
thiyaanam 2
தியானம் என்பது
மூச்சுகளில் தக்கிளி நூற்றல்.
காற்றை
சோறு சமைத்து
குழம்பு தாளித்து
சாப்பிடுதல்.
ஆக்ஸிஜனின் “வேலன்ஸி-பாண்ட்”
மோல்யூக்யூலர் ஸ்ட்ரக்ச்சர் என்று
வேண்டுமானால்
நுறையீரலுக்குள் புகுந்து
பாடம் எடுக்கலாம்.
பாடம் படிக்கலாம்.
உங்களை
மயிரிழையாக்கி
உங்கள் மூக்கின் வழியே
சுருட்டி நுழைத்துப்பாருங்கள்.
உங்கள் நெருடல்கள்
அங்கே
ஆயிரம் மலைகளின்
பனிக்குடம் உடைக்கும்.
சுகமாய் மரணம்.
சுகமாய் ஜனனம்.
மீண்டும் மீண்டும்
வேதங்கள்
எச்சில் பட்டு
புழுதின்று
உங்களுக்குள்
தகனம் ஆகி
சாம்பல் மேடு தட்டும்.
காதுப்பறைகளுக்குள்
காண்டா மணி ஒலிகள்
நார் நாராய் உரிந்து போகும்.
சங்கரர் போல்
எந்த ராஜாவாவது செத்துப்போனால்
அவர் கூட்டுக்குள் நுழைந்து
ராணிக்குள்ளும் அங்குலம் அங்குலமாக‌
சவ்வூடு பரவல் ஆகி
சௌந்தர லஹிரியாய் கசியும்.
இதற்கு முற்றுப்புள்ளி இல்லை.
மான் தோல் விரித்து
அந்த புள்ளிகளில்
புலியின் வரிகளை
உயிர்ப்பித்துக் கொல்லுதல்
ஒரு இனிய பயிற்சி.
அனிமல் ப்ளேனட்டின்
கோரைப்பல் கிழிப்பும்
ரத்த சதை விளாறுகளும்
காமிராலென்ஸ் வழியே
டாலர் காய்ச்சி மரங்களாய்
கிளை விடுவதைப்போல‌
இந்த‌
நுரையீரல் முறுக்கல்களும்
நரம்பு சொடுக்கல்களும்
“ஃபௌண்டேஷன்” ஆகி
பண மழை கொட்டும்.
நீண்டு வளரும் தாடியில்
பல்முளைத்து
லட்சம் ஸ்லோகங்களை
பிய்த்து பிய்த்து தின்பதில்
ஒலிவிழுதுகள்
இருள் விழுதுகளோடு
பின்னியிருக்கும்
ஆரண்ய மூட்டங்களே
தியானம் என்பது.
தியானம் முடியவில்லை.
வரட்டிகள் மூடிக்கொண்டபோதும்
அரைவேக்காட்டின் ஆத்மச்சதை ருசி தேடி
ஆந்தைகளும் வல்லூறுகளும்
வந்து சேருகின்றன.
தியானம் இன்னும் முடியவில்லை.
நாபிக்கமலமும் தொப்பூள் கொடியும்
சடைக்குள்ளிருந்து பீய்ச்சப்படும்
கங்கைப் பிரவாகங்களும்
தியானத்தின்
மூட்டு தெறித்த நரம்புகளில்
மின்னல் உமிழ்கின்றன
“க்ராஃபிக்ஸ்”களில்!
பாம்பு படுக்கையை
“மார்ஃப்” செய்து
மல்லாந்து கிடந்தே
நிமிர்ந்து முதுகுத்தண்டை
விறைத்துக்கொண்டிருப்பதும்
தியானமே…
கீழ்ப்பாக்கத்தின் ஸ்பெஷல் வார்டுகளில்
பிரம்மசூத்திரம்
கழுவி ஊற்றப்படுவது
தியான வெள்ளம்.
தியானமே இங்கு மெர்ஸல் ஆவதே
தியானம்.
இன்னும் தியானம் என்பது…..
நியூரான் முடிச்சுகளில்
சினாப்டிக் ஜங்கஷன்களின்
பர்கிஞ்ஜே செல்கள்
பரங்கிக்காய்களாய் உடைக்கப்பட்டு
கூழாகின்றன…
தியானம் என்பது யாதெனில்…
“சட்”….
யார்
என் உதடுகளை  ஊசி கொண்டு
தைப்பது?….
Series Navigationதொடுவானம் 104 பாவ்லோவ் நாய்கள்நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை சிறுவர் நூல் வெளியீடு
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *