தொலைந்து போன கடிதம்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 22 in the series 24 ஜனவரி 2016

அழகர்சாமி சக்திவேல்

 

முகநூலில் என் காதலனுடன்

அரட்டைக் கச்சேரி…

குழந்தை அழறான் பாருங்க…

என் மனைவி கத்தினாள்…

என் சிந்தை ஓடையில்

சங்கடப்  புழுக்கள்.

 

கிலுகிலுப்பை தேடினேன்

என் பழைய அலமாரிக்குள்.

கிலுகிலுப்பை கிடைத்தது…

கூடவே என் அம்மாவின்

தொலைந்து போன கடிதம்.

 

கடிதம் பிரித்தேன்…

பழைய வாசனை.. பழைய நினைவுகள்..

என் நினைவுக் குழந்தை அழுதது..

அந்த அழுகை…

என் நிஜக் குழந்தையின் அழுகையில்

அமுங்கிப் போயின..

 

குழந்தையின் அழுகையை அடக்கினேன்.

அடக்க முடியாத அம்மாவின்

கடித வார்த்தைகள்.

 

நீ ஒரு நல்ல ஆண் இல்லையா?

கடிதத்தில் அம்மா கேட்டாள்.

என் குதிரை உடம்பு ஆமாம் என்றது.

என் கோவேறுக்கழுதை மனதோ

இல்லை என்றது.

 

வடதுருவம் தென்துருவத்தோடுதான் இணைய முடியும்.

அம்மாவின் காந்தத் தத்துவங்கள்…

பலவேளைகளில் நான்

காந்தப்புலன் குறைந்த வடமேற்கு துருவம்..

சில வேளைகளிலோ

காந்தத்திற்கு அகப்படாத கண்ணாடித் துண்டுகள்..

 

ஆண் பெண் என்ற வாழ்விலக்கணம் புரிந்துகொள்.

அம்மா அதட்டியிருந்தாள்.

எனக்குள் கேள்வி..

வல்லினமும் மெல்லினமும் மட்டுமே  வாழ்விலக்கணமா?

இடையினம் என்பது எழுத்து இலக்கணத்தில் மட்டும்தானா?

 

குழந்தை தூங்கிப் போனான்.

மறுபடியும் நான் முகநூலில்…

மறுபடியும்..

அம்மாவின் கடிதம்

தொலைந்து போனது.

 

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

Series Navigationபீப் பாடலும் பெண்ணியமும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *