மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 13 of 22 in the series 24 ஜனவரி 2016

mayura

மயூரா ரத்தினசாமி ‘ நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை ‘ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார்.

தலைப்பே வித்தியாசமானது; சிந்திக்க வைக்கிறது. இச்சொற்கள் உருவாக்கும் தொனி ஒருவித தவிப்பை

வாசகன் மனத்தில் உருவாக்குகிறது.

” கவிதையெழுதுவதை அவஸ்தை என நான் உணரவில்லை. சமூகத்தின் மீதான . என் சுயநலம், என்

வக்கிரம் மீதான என்னுடைய எதிர்வினை கவிதையாக உருக்கொள்கிறது எனலாம். ” என்கிறார் மயூரா

இவரது கவிதைகள் அவசியமான சொற்கள் வழியாக நேர்த்தியான வெளிப்பாடு கொண்டவை.

‘ செகப்பு ‘ என்ற பேச்சு வழக்குச் சொல் கவிதைத் தலைப்பாகியுள்ளது. இதில் வாழ்க்கையைக் கேள்விக்

குறியாக்கும் சோகம் கருப்பொருளாக அமைந்துள்ளது. மருதாணிச் சிவப்பு மணமான ஒரு பெண்ணின்

கண்களில் படிந்து நிற்கிறது.

எல்லாருக்கும்

அக்காதான்

மருதாணி

வச்சு விடுவா

—– என்று கவிதை தொடங்குகிறது.

செகப்பு நகத்தடியிலெ

வெள்ளை முளைச்சப்ப

மத்தியான பஸ்சுலெ

அக்கா வந்தா

தனியா

—- ‘ மணமான சில நாட்களில் ‘ என்ற தகவலை வெள்ளி முளைச்சப்ப என்றவரி வித்தியாசமாக

வெளிப்படுத்துகிறது.

ஆரு வச்சுவிட்டது

அக்கா கண்ணுக்கு

மருதாணி

—- என்ற வினா முத்தாய்ப்பாகக் கவிதையை முடித்து வைக்கிறது. வாசகன் மனத்தில் ஆக்கிரமிப்பாக

நிறைகிறது; பின் உறைகிறது.

‘ ஒளிக்கோடு ‘ ஒரு புதிய படிமத்துடன் தொடங்குகிறது.

இருட்டை இறைத்து

வெளியூற்றிக் கொண்டிருந்தேன்

விடியலை நோக்கி

 

இறைக்க இறைக்க

ஊறிக் கொண்டே

இறைத்து இறைத்து எங்கும்

பரவிக்கிடக்கிறது

கருப்புப் பிசாசாய்

தூக்கம் தொலைந்ததால் , விழித்திருக்கும் அவஸ்தை இரவை பிசாசோடு ஒப்பிட வைக்கிறது.

இறைத்துக் களைத்து

மயங்கிச் சாய்கையில்

பாதை துலக்கிப்

பறந்து கொண்டிருக்கின்றன

அக்னித் தலையுடன்

மின்மினிப் பூச்சிகள்

—– என்று கவிதை முடிகிறது. இக்கவிதையில் குறியீடுகளும் பொருட்செறிவுடன் அமைந்துள்ளன.

எல்லோரும் கடந்து போகும் மையப் புள்ளியே இக்கவிதையில் கருவாக உள்ளது.

‘ நெடுஞ்சாலை ‘ என்ற சில சொற்களே புத்தகத்தின் தலைப்பாக மாறியுள்ளன. நெடுஞ்சாலை முக்கிய

கவனம் பெற்றுப் பேசப்படுகிறது. கருத்த டயர் பதிவுகளும் , கூழான நாயின் உடலும் தடயமாய்ச்

சுட்டப்படுகின்றன.

அதிகாலையில் விழித்த பறவைகள்

பதற்றத்துடன் அழுகின்றன

நெடுஞ்சாலையில்

நடை வண்டியோட்டிப் போகும்

குழந்தையைப் பார்த்து

—– என்ற பத்தி நம்மை உஷார்ப்படுத்துகிறது. கவிதையின் முத்தாய்ப்பு உரைநடைத் தன்மைகொண்டு

நிற்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

சற்றுமுன் பார்த்த அந்த நத்தை

நெடுஞ்சாலையைக்

கடந்திருக்கலாமென்ற

எனது நம்பிக்கைக்கான

காரணங்கள் மூன்று

என மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. பட்டியல் போல் அல்லாமல் அவை தகவல்களாகவே

சொல்லப்பட்டிருக்கலாம்.

‘ உறவு ‘ என்ற சிறு கவிதை நிறைவேறாமல் போன காதல் உறவைக் காட்டுகிறது.

உன் மகன் என்னை

‘ அங்கிள் ‘ என்றும்

என் மகள் உன்னை

‘ ஆன் டி ‘ என்றும்

அழைக்கும் போது

கலவரமாயிருக்கிறது

நாளை

அவர்களுக்கும் நேர்ந்துவிடுமோ

நம் கதி என்று

—– ‘ தன் ஓவியக்காரன் ‘ கவிதையில் சில அசாதாரணப் புனைவுகள் காணப்படுகின்றன.

விரல் நகங்களால்

சுண்ணாம்புச் சுவர்களில்

வரைந்து கொண்டிருந்தவன்

பிறகு

தன் ரோமங்களால்

தூரிகை செய்துகொண்டான்

—– பித்துநிலை மனிதன் ஒருவனின் செயல்பாடுகளென எண்ண இடமளிக்கிறது கீழ்வரும் பத்தி !

இவனிடமிருந்த ரத்தம் முழுவதும்

தீர்ந்துவிட்டிருந்த பொழுதில்

தன் ஓவியத்தை

எழுத வேண்டுமென்று

பெருவிருப்பம் கொண்டான்

—- முத்தாய்ப்பாக நிற்கும் ஒரு யோசனை விபரீதமாக அமைந்துள்ளது.

உங்களுக்கு விருப்பமாயின்

மணிக்கட்டு நரம்பை

கத்தியால் கீறி….

‘ பால் ‘ என்ற கவிதை , கள்ளிப்பால் சிசுக்கொலை பற்றிப் பேசுகிறது. இதில் கவித்துவம் சார்ந்த நயம்

ஒன்று அமைந்துள்ளது.

புதைத்தவிடத்தில்

செழித்துக் கிடக்கிறது

கள்ளிச்செடி

மடி நிறைய பாலைச் சுமந்தபடி

—– நம் மனத்தைக் கனக்கச் செய்யும் புதிய படிமம் இது !

‘ அறியப்படாத அந்தரங்கம் ‘ — குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஒருவரைப்பற்றிப் பேசுகிறது.

தனிப்பட்ட ரகசியங்களுக்குள்

நுழைந்துவிடாதபடி

காவலிருப்பதே பெரும்பாடு

—– என்கிறார் மயூரா ! குட்டு வெளியானால் என்னவாகும் ? அவர் தரும் பதி , ” நம்பிக்கை இல்லாத்

தீர்மானம் வெற்றி பெறலாம் .”

‘ திசை மயக்கம் ‘ என்ற கவிதை தத்துவமும் பூடகத்தன்மையும் கொண்டுள்ளது. கட்டமைப்பு சொல்

நெருக்கத்துடன் அமைந்துள்ளது.

திசைகளைச் சென்றடைவது

இறுதிவரை கனவாகவேயிருக்கிறது

—- என்று தொடங்குகிறது கவிதை; வாழ்க்கைப்பாதை பற்றிப் பேசுகிறது.

ஒன்றுக்கொன்று தொலை தூரத்தில்

சஞ்சரித்துக் கொண்டிருந்தாலும்

ஒவ்வொரு முறையும்

திசைகளின் சந்திப்பு மையத்தை

தீர்மானிப்பவனாக

நான் இருந்துகொண்டிருக்கிறேன்

—- என்பது கவிதையின் முத்தாப்பு ! வாழ்க்கை பற்றிய வித்தியாசமான கவிதையிது !

‘ செருப்பு வர்ணம் ‘ — ஒரு யதார்த்தக் கவிதை; யாரும் கையாளாத கரு.

செருப்பு ஸ்டாண்டுகளில்

வீற்றிருக்கும்

சமத்துவ தெய்வங்களை

மனிதர்கள் அறிந்திருக்கவில்லை

—- என்ற வரிகளுக்குள் மனித வர்க்க பேதத்தைக் காண்பது நல்ல புதிய சிந்தனை !

 

மயூரா ரத்தினசாமி கவிதைகள் வாசகர் கவனம் பெறவேண்டியது அவசியம் !

 

Series Navigationஉன்னைப் பற்றிமனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *