கே.எஸ்.சுதாகர்
காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.
செய்தி இதுதான்.
|காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|
●
எத்தகைய இருட்டடிப்பு இது!
இதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது—குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.
அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.
●
ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்—இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை—கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.
இந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம் ‘குவாலிற்றி சேர்க்கிள்’ என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும்.
அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஐவரும் ஒன்றாக ஒரு குழுவில் இணைந்தோம். குழுவிற்கு ‘PEACE’ என்று பெயரிட்டோம். நான் எமது குழுவின் தலைவர் ஆனேன்.
முதலில் மூளைச்சலவை (பிறெய்ன் ஸ்ரோம்) செய்தோம்.
’மச்சான்’ என்றபடியே என் தோளில் கை போட்டான் பிங் பொங் ஹாவ். வியட்நாமியனாகிய அவனுக்கு நிறையவே தமிழ் சொற்கள் தெரியும்.
“நான் ஒரு ஐடியா வைத்திருக்கின்றேன்” அவன் சொல்லப் போவதை கூர்ந்து அவதானித்தோம்.
“காரின் பெயின்ரின் தரத்தைக் கண்டுபிடிக்க மவுஸ் ஒன்று டிசைன் பண்ணலாம். மவுசை காரின் உலோகப் பகுதியெங்கும் நகர்த்துவதன் மூலம் இதனை நாங்கள் கண்டறியலாம்.”
ஹாவ் மிகவும் புத்திக் கூர்மை கொண்டவன். ஆனால் ஆங்கிலத்தில் தெளிவுபடச் சொல்ல மாட்டான்.
“வர்ணம் அடிக்கப்பட்ட ஒரு காரில் எத்தனை வகையான பிழைகள் இருக்கு என்று உனக்குத் தெரியுமா?” நையாண்டித் தனத்துடன் கேட்டாள் சியாங் சை.
“ஒரு காரில் வரக்கூடிய வர்ணம் சார்ந்த அத்தனை பிழைகளையும் மவுசில் பதிவு செய்வோம். பல நூற்றுக்கணக்கான நுண்ணிய கமராக்களைக் கொண்ட அந்த மவுஸ், தவறுகளை தன்னிடமுள்ள பதிவுகளுடன் ஒப்பிட்டுத் தரவுகளைத் தரும்” விலாவாரியாகச் சொன்னான் ஹாவ்.
“ஆமாம்… கண் தெரியாத கபோதிகளும் இதனைப் பாவிக்கலாம்” ஹாவிற்கு கண்பார்வை கொஞ்சம் மந்தம் என்பதைப் புட்டுக் காட்டிச் சிரித்தாள் துஜி.
“நமது புலன்கள் வேறு திசை சென்றாலும் மவுஸ் தவறுகளைத் துல்லியமாகக் கண்டு பிடித்துவிடும்” கண்டுபிடிப்பிற்கு மீண்டும் வலுச் சேர்த்தான் ஹாவ்.
“நாங்கள் ரொப்கோற்றில் வேலை செய்கின்றோம். நீ என்னவென்றால் அடுத்த பகுதியில் உள்ளவர்களுக்கு திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொடுக்கின்றாய்” மறுதலித்தாள் சியாங் சை. ஹாவ் தன் பூஞ்சைக் கண்களால் அவளை உற்றுப் பார்த்தான்.
நான் ஒன்றும் பேசாமல் மெளனமாக இருந்தேன். என்னுள் வேறு ஒரு திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.
ஹாவின் அலுப்புத் தாங்காத துஜி, அவனின் இடுப்பின் கீழ் தொட்டுக் காட்டி
“கடைசியில் நீ இந்த மவுசைத்தான் அவிட்டு விடப் போகின்றாய்” என்றாள். சியாங் சை வெட்கம் தாளாமல் கண்களைப் பொத்தியபடியே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
அதன் பின்னர் வேறு திட்டங்கள் பற்றியும் ஆராய்ந்தோம்.
போட்டி நடைபெறுவதற்கு முன்பு அதன் நகல் வடிவத்தை போட்டி அமைப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அமைப்பாளர்களில் ஒருவராக எமது பகுதி மனேஜர் கார்லோஸ் இருந்தார். கார்லோஸ் குள்ளமான மனிதர். குறும் தாடி வைத்திருப்பார். பார்ப்பதற்கு ஒரு விஞ்ஞானி போல இருப்பார். மிகவும் சாந்தமானவர். ஆனால் குரல் மாத்திரம் அவரது தோற்றத்திற்குச் சம்பந்தமற்று கணீரென்று இருக்கும். எங்களுக்கு நடக்கும் தொடர்பாடல் கூட்டங்களில், சிலவேளைகளில் வேலை செய்யும் ஊழியர்களில் ஒருவராகக் கலந்து நிற்பார். திடீரென அவரைக் காணும்போது திகைத்து விடுவோம். அவரின் இப்படிப்பட்ட திடீர் விளையாட்டினால் கூட்டம் நடைபெறும் போதெல்லாம் மிகவும் அவதானமாக இருப்போம். தேவையில்லாத எவற்றையுமே எங்களுக்குள் அப்பொழுது கதைப்பதில்லை.
ஹாவ் வரிக்கு வரி மிகவும் மகிழ்ச்சியாக தனது திட்ட்த்தை விவரித்தான். அதை மிகவும் உன்னிப்பாக கேட்டறிந்த கார்லோஸ்,
“இந்தத் திட்டத்திற்கு நிறையச் செலவாகும். வேறு ஒன்றைப்பற்றி யோசியுங்கள்” என்று திடமாக மறுத்துவிட்டார்.
அதன் பின்னர் எனது திட்டத்தை அவர்களிடம் சொன்னேன். நீண்ட கலந்துரையாடலின் பின்னர் எனது திட்டத்திற்கு ஆதரவு தந்தார்கள்.
|ஓடும் கொன்வேயரில் வைத்துக் காரின் உதிரிப்பாகங்களுக்கு, மிகக் குறைவான செலவில் பெயின்ற் அடிக்கும் முறை.|
பெயின்ற் ஷொப்பில் காரின் வெற்றுடலுக்கு பிறைமர், ரொப் கோற் என்ற இரண்டுவிதமான வர்ணங்கள் அடிக்கப்படுகின்றன.
சந்திரமண்டலத்திற்குப் போனவர்களை விஞ்சிய ஆடை அணிகலங்களுடன், அவர்களைப் பழிக்கும் நடையில் ஸ்ப்பிறே பெயின்ரேர்ஸ் தோற்றமளிப்பார்கள். முகமூடி அணிந்து, ஒக்சிசன் உயிர்ப்பேற்ற அவர்கள்தான் இங்கே ஹீரோக்கள்.
ஒரு காரிலிருந்து அகற்றப்படக்கூடிய பொனற், ஃபென்டர், கதவுகள், பூற் லிட் என்பவற்றிற்கும் றூவ் மற்றும் உட்பாகங்களுக்கும் வர்ணம் அடிக்கப்பட வேண்டும்.
ஒரு கண்ணாடி அறை. அறையின் உட்புற சுவரோரமாக நீளப்பாட்டிற்கு, மூன்று மூன்று ரோபோக்கள் என மொத்தம் ஆறு ரோபோக்கள். நடுவே கொன்வேயரினால் கார்கள் இழுத்து வரப்படும்.
ரோபோக்களால் அடைய முடியாத காரின் உட்பாகங்களை, வரிசைக்கு இரண்டு பேர்களாக மொத்தம் நான்கு ஸ்பிறே பெயின்ரேஸ் கவனித்துக் கொள்வார்கள். ஆக மொத்தம் பத்துப்பேர்கள் இந்தக் கண்ணாடி அறைக்குள் வேலை செய்கின்றார்கள். இங்கு ரோபோக்களின் ஆதிக்கம் அதிகம். அவைகள் முரண்டு பண்ணினால் தொழில் நாறிப் போய்விடும்.
காரிலிருந்து அகற்றப்படக்கூடிய பகுதிகளில் ஏதாவது ப்ழுது வந்தால், அவற்றைத் திருத்தி மீண்டும் வர்ணம் அடிப்பார்கள். அகற்றப்பட முடியாத றூவ் போன்ற பகுதிகளில் பாரதூரமான பழுதுகள் வந்தால் அந்தக்காரை ஸ்கிறப் பொடிக்கு அனுப்பி விடுவோம்.
இதுவரை காலமும் இருந்துவந்த நடைமுறை இதுதான்—ஒரு கதவிற்கு வர்ணம் அடிக்கவேண்டி இருந்தாலும், அதனைக் காரினில் பூட்டி முழுக்காரிற்குமே வர்ணம் அடித்தார்கள். இதனால் பெருமளவு வர்ணம் வீணாகியது.
நாங்கள் முதலில் ’கவசாக்கி’ ரோபோவில் உள்ள புரோகிறாமைத் திருடினோம். அதுவே எமது செயற்திட்டத்தின் உயிர்நாடி. அந்தப் புறோகிறாமில் முற்றுமுழுதாக என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய போதுமான அறிவு இல்லாவிடினும், Trial & error மூலம் எமக்கு வேண்டியதைச் செய்யலாம் என்று நினைத்தோம்.
பிங் பொங் ஹாவ் தவிர ஏனைய மூன்று பேருக்கும் கொம்பியூட்டர் அறிவு சுத்த சூனியம். அவர்கள் அணில் ஏறவிட்ட நாயைப் போல எங்களின் வாயைப் பார்த்தபடி இருந்தார்கள்.
நாலைந்து நாட்கள் இரவு பகல் முயன்று புறோகிராமை மாற்றி எழுதினேன். ஹாவ் அதைச் சரி பிழை பார்த்தான்.
செயன்முறையில் பரீட்சிக்க நாங்கள் வேலை முடிந்த பின்னரும் உழைக்க வேண்டி இருந்தது. தினமும் ஒருமணி நேரம் எல்லோரும் வேலை முடித்துப் போனபின்னர் பரீட்சித்துப் பார்த்தோம்.
முதல்நாள் வெள்ளோட்டத்தில் கார் நகரவேயில்லை. எல்லாக் கார்களும் வரிசையாய் அணிவகுத்து வந்து கண்ணாடிறூமிற்கு முன் கைகட்டி நின்றன.
“கமோன்… கமோன்” என்று துஜி சத்தமிட்டாள்.
“ஏய்… நீ எந்த பாஷையில் கமோன் சொல்கின்றாய்?” என்று சீனத்துப்பெண் துஜியிடம் கேட்டாள். வியட்நாம் பாஷையில் ‘கமோன்’ என்றால் ‘நன்றி’ என்று பொருள்படும்.
அன்றைய தினம் அவை நகரவே மாட்டோம் என்று அடம் பிடித்தன.
மறுநாள் சில திருத்தங்கள் செய்த பின்னர், கார்கள் நகர்ந்தன. ஆனால் ரோபோக்கள் அசைய மறுத்தன. தமக்கு முன்னாலே கார்கள் போகின்றனவே என்ற பிரக்ஞை அற்று மொக்கையாக நின்றன. பலமணி நேரம் போராடி ரோபோக்களை அசைய வைத்தோம். இருப்பினும் அவை ஊமைப்படம் காட்டி உடற்பயிற்சி செய்தனவேயன்றி துளி பெயின்றும் அடிக்கவில்லை.
போட்டி நடைபெறும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.
“இந்தப் புறொயெக்றைக் கைவிட்டு இன்னொன்றை ஆரம்பிப்போமா?” சியாங் சை கேட்டாள். பாம்பு படமெடுத்து ‘பென்சீன்’ வளைய்த்தைக் கேர்க்குளேயிற்குக் காட்டிக் கொடுத்தது போல ஒரு அதிசயத்திற்காகக் காத்துக் கிடந்தோம். கனவு காண்பதற்குக் கண்ணை மூடினால், பாம்பும் வரவில்லை கீரியும் வரவில்லை. சியாங் சை என் கண் முன்னே வந்து நின்றாள்.
கொம்பியூட்டரில் இருந்த அடிப்படை அறிவைக் கொண்டு, பல நாட்கள் உழைப்பின் பின்னர் எல்லாம் சரியாக வந்தது.
போட்டி கொன்வென்சன் சென்ரரில் மாலை மூன்று மணிக்கு ஆரம்பமானது. நாங்கள் மூன்றாவது குழுவாகப் பங்குபற்றினோம். எல்லாப்பகுதி மனேஜர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களின் மத்தியில் சில ஜப்பானியர்களும் இருந்தார்கள். நாங்கள் புறயெக்ரர் போட்டுக் காட்டி விளக்கம் கொடுத்தோம். ஒவ்வொரு குழுவினருக்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. சிலர் உதிரிப்பாகங்களைத் தூக்கிக் கொண்டு வேடுவர்கள் போல வரிசையில் நின்றார்கள். சிலர் நடித்துக் காட்டினார்கள். இவர்கள் மத்தியில் எம்முடையது எடுபடுமா என்பது எங்கள் சந்தேகம்.
எங்களுடைய பிறசென்ரேசனைப் பலரும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். ஹாவ் பயக் கெடுதியில் ‘லேடீஸ் அண்ட் ஜென்ரில்மன்’ என்ற வார்த்தைகளை பல தடவைகள் சொல்லிவிட்டான். போட்டி முடிவடைந்த பின்னர் நடுவர்கள் எங்களைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். முதல் பரிசு எங்களுக்குத்தான் என்று அப்போதே புரிந்து கொண்டோம்.
இறுதியில் சாப்பாடு தந்தார்கள். ஒவ்வொரு குழுக்களாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தார்கள்.
“நான் உங்கள் செயல்திட்டத்தை ஜப்பானிற்கு எமது தலைமையகத்திற்கு அனுப்பலாமா?” நடுவர்களுக்குப் பொறுப்பான ஜமசான் என்ற ஜப்பானியர் கேட்டார்.
“இது எல்லாம் ஒரு கேள்வியா?” என்று ஹாவ், துஜியின் காதிற்குள் சொல்லிவிட்டு திரும்பி நின்று சிரித்தான். அதை அவதானித்த யமசான்,
“லேடீஸ் அண்ட் ஜென்ரில்மன்… நீர் என்ன நினைக்கின்றீர்?” என்று ஹாவைப் பார்த்துச் சிரித்தபடியே கேட்டார். எல்லாரும் ஒருமித்த குரலில் ‘ஆம்’ என்றோம்.
அதன்பின்னர் போட்டியின் பரிசுகள் பற்றித் தினமும் ஆராய்ந்தோம்.
முதல் பரிசு – ஒரு வாரம் ஜப்பான் சென்றுவருவதற்கான மொத்தச் செலவு (விமானச் செலவு, மற்றும் தங்குமிட வசதிகள் உணவு உட்பட)
இரண்டாம் பரிசு – 50 டொலருக்கான பணிங்ஸ் வவுச்சர்
மூன்றாம் பரிசு – சான்றிதழ்
வீட்டிற்குப் போய் அன்றைய நடப்புகளை மனைவிக்குச் சொன்னேன்.
“இலங்கையில் இருந்து ஜப்பான் போவது பெருமையாக இருக்கலாம். ஆனால் அவுஸ்திரேலியாவில் இருந்துகொண்டு ஜப்பான் போவது பெருமைக்குரிய விஷயமா? ஏன் அமெரிக்காவிற்குத் தரமாட்டினமோ?”என்று கேள்வி எழுப்பினாள். உண்மைதான்.
ஒருகாலத்தில்—நாற்பது வருடங்களுக்கு முன்னர்—எனது மாமா ஸ்கொலஷிப்பில் இலண்டன் போனபோது அது ஒரு செய்தியாக வீரகேசரியில் கொட்டை எழுத்தில் வந்து பெரும் பரபரப்பூட்டியது.
திடீரென்று ஒரு யோசனை வர பாஸ்போட்டை எடுத்துப் பார்த்தேன். அது காலாவதியாகுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. உடனே அதனைப் புதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். 250 டொலர்கள் செலவாகியது.
முடிவுகள் வந்தபோது பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானோம்.
வெறும் சான்றிதழ் பரிசான மூன்றாவது இடமே எங்களுக்குக் கிடைத்தது. இந்த ஏமாற்றம் எங்களுக்கு மாத்திரமல்ல, முழுப் பெயின்ற் ஷொப்பிற்குமே உரித்தானது. அன்று முழுவதும் அதைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதன் பின்னர் ஜெனரல் போர்மன் வந்து எங்களுக்கு ஆறுதல் சொன்னார். முதலாவது இடத்திற்கு வராததன் காரணத்தை மனேஜரிடம் அறிந்து வருவதாகச் சொல்லிச் சென்றார்.
அவர் சொன்ன காரணம் இதுதான் –
|நாம் எடுத்துக் கொண்ட செயற்திட்டம் எமது தகுதிக்கு அப்பாற்பட்டது. அதில் உள்ள புறோகிறாம், கை தேர்ந்த புறோகிறாம் விற்பன்னர்களைக் கொண்டு அது தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும்.|
ஆக மொத்தம் நாங்கள் அந்தச் செயற்திட்டத்தைத் தயாரிக்கவில்லை என்பதுதான் நடுவர்களின் தீர்மானம் என கார்லோஸ் சொன்னார்.
●
ஆனால் இன்று ‘பெயின்ற் அண்ட் பேப்பரில்’ இருந்த அந்தச் செய்தி? எமது அடிப்படை அறிவை அவர்கள் திருடிவிட்டார்கள்!
●
இந்த விடயம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டதால் பெரிதுபடுத்தப்பட்டது. தொழிற்சங்கம் (யூனியன்) இதில் தலையிட்டு சமரசம் செய்து வைக்க முனைந்தது. அதன் பிரகாரம் கார்லோஸ் எங்கள் ஐவருடனும் கதைக்க விரும்புவதாக தெரிவித்தார். நாங்கள் அவரின் கதவைத் தட்டினோம்.
“உள்ளே வாருங்கள்” அவரது கம்பீரமான குரல் உள்ளிருந்து கேட்ட்து.
மேசைமீது ஃபைல்கள் கன்னா பின்னாவென்று கிழறிவிடப்பட்டுக் கிடந்தன. கொம்பியூட்டருக்கு முன்னால் வேர்த்து விறுவிறுக்க இருந்தார் அவர். விசைப்பலகைக்கு அருகே பல மவுஸ்கள் வரிசையாக இருந்தன.
“விசர் மனிசன்… ஒரு கொம்பியூட்டருக்கு எத்தினை மவுஸ்கள் வைத்திருக்கின்றார் பார்…” நான் ஹாவின் கால்களைச் சுரண்டினேன்.
“நீங்கள் குவாலிற்றி சேர்க்கிளுக்காகச் செய்த்தும், ஜப்பானியர்களின் இந்தக் கண்டுபிடிப்பும் எதேச்சையாக நிகழ்ந்தவை. இது ஜப்பானில் பல பொறியியலாளர்கள் விஞ்ஞானிகள் புறோகிறாமேர்ஸ் சேர்ந்து பல வருடங்களாகச் செய்த திட்டம். உங்கள் புரயெற் ஆரம்ப படிநிலைகளை மாத்திரம் கொண்டது. இருப்பினும் உங்கள் முயற்சியைப் பாராட்டி ஒவ்வொருவருக்கும் தலா 100 டொலர்களை கொடுக்கும்படி ஜமசான் எனக்குப் பணித்துள்ளார்” சொல்லியபடியே ஜமசானின் கடிதத்தை எடுத்துக் காட்டுவதற்காக இருக்கையைவிட்டு எழுந்தார். தவறுதலாக அவரது கை மேசையில் இருந்த மவுஸ் ஒன்றைத் தட்டிவிட்டது. நிலத்தில் விழுந்து வெடித்த மவுசிற்குள்லிருந்து முத்துப்பரல்கள் போல சில சிதறி ஓடின. துஜி அதைக் குனிந்து எடுக்கப் போனாள்.
“அப்படியே இருக்கட்டும் அது. பிறகு நான் பார்த்துக் கொள்கின்றேன்” முகம் வெளிறியபடி கோபமானர் கார்லோஸ். மேசை லாச்சிக்குள்ளிருந்து ஒரு கடிததத்தை எடுத்த அவர் எங்களின் பார்வைக்குத் தந்தார்.
“இத்தோடு இந்த விடயத்தை மறந்துவிடுங்கள். உங்கள் பணத்திற்கான வவுச்சர் அடுத்த கிழமை வந்துவிடும். அடுத்த தடவை புரயெக்ற் செய்யும்போது உங்கள் தகுதிக்குள் நின்றுகொண்டு செய்யப்பாருங்கள். நீங்கள் சாதாரண ஊழியர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார் கார்லோஸ்.
ஆனால் ஹாவின் பார்வை அந்த விழுந்து வெடித்த மவுஸ் மீது வெறித்துக் கிடந்தது. அது அவனுக்கு ஆயிரம் கதைகளைச் சொல்லின. அதற்குள்ளிருந்து ஓடிச்சிதறிய நுண்ணிய கமராக்கள் அவனின் கனவுகள்.
அவன் நிமிர்ந்து கார்லோசைப் பார்த்தான். ‘எதையுமே விட்டுவிட முடியாது’ என்பது போல. அப்போது மேசை மீதிருந்த ஏனைய மவுஸ்களை மேசை லாச்சிக்குள் ஒழித்துக் கொண்டிருந்தார் கார்லோஸ்.
●