இரத்தினமூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அர்த்தங்கள் ஆயிரம் ‘ தொகுப்பை முன் வைத்து ..

This entry is part 8 of 16 in the series 3 ஏப்ரல் 2016

.
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

திருப்பூர் இரத்தினமூர்த்தி ஒரு தொழிலதிபர் , நாவலாசிரியர் , கவிஞர் ஆவார். இவருடைய முதல்
கவிதைத் தொகுப்பு ‘ ஆத்மாவின் சுவாசங்கள் ‘ இது இரண்டாவது தொகுப்பு . புதிய சிந்தனைகள் மூலம்
படிமங்கள் அமைந்துள்ளன. சமூக அக்கறை , விமர்சனப் பார்வையுடன் பதிவாகியுள்ளது.
‘ மலர்கள் ‘ தொடர் படிமக் கவிதை. ஆழமான சிந்தனைகள் கவித்துவத் தெறிப்புகளுடன் காணப்படுகின்றன.
வேரின் கனவுகள்
காம்பின் கௌரவம்

காயம்பட்ட தென்றலுக்கு
ஒத்தடம் கொடுக்கும்
செடியின் உதடுகள்
மேற்கண்ட பத்தியை ‘ தென்றலுக்கு ‘ என்று தொடங்கினாலே போதுமானது என் நினைக்கிறேன்.
மணத்தைப் பரப்பும்
ஒலிபெருக்கிகள்

நேரு மாமாவின்
சட்டையில் பூத்த இதயங்கள் !
— என்று தொடர்கிறார்.
பூப்பெய்தியதைச் சொல்ல
வண்டுக்கு மட்டும்
தூதனுப்பும் புதிர்கள்
—- எதிர்பாராத நயம். மலர்களைப் பற்றி இத்தனை படிமங்களுடன் வேறு கவிதை உண்டா ?
‘ திருப்பூர் குமரன் ‘ என்றொரு கவிதை.
தேச வெளிச்சத்திற்காக
சுதந்திர விளக்கை
ஏற்றிட நினைத்துத்
தன் வாழ்வை
தியாகம் செய்த
தீப்பொறி !
—- என்று தொடங்குகிறது கவிதை. திருப்பூரை நினைத்துப் பெருமைப்படுகிறார்.

அந்தக் கதிரவன் விழுந்த
மண்ணிலிருந்துதான்
எங்கள் உலகம் விடிகிறது
வாழ்வும் தொடங்குகிறது
— ஒரு சிறு கவிதை வித்தியாசமான சிந்தனையைக் காட்டுகிறது.
மண் மாதா
அணிந்த மகுடம்
சிகரம் !
— எனப் பார்க்கிறார் இரத்தினமூர்த்தி !
‘ ஏக்கங்கள் ‘ என்ற கவிதை வறண்ட ஆற்றை எண்ணிக் கவலைப்படுகிறது.
அந்த நதியில் எப்போதும்
மணல் புயலே ஓடிக்கொண்டிருக்கிறது
—- என்று கவிதை திறக்கிறது.
சமமாய்ப் படுத்துக் கிடந்த
நதியின் முதுகில் மேடுபள்ளங்கள்
—- என்பது புதிய பார்வை. நீர் இல்லாத வெறுமையைக் கீழ்க்காணும் வரிகள் பதிவு செய்கின்றன.
நண்டுகளின் ஓடுகளை
காக்கைகள் புரட்டிக்கொண்டிருக்கின்றன
—- ஏதோ ஓரிடத்தில் சிறிது தேங்கியுள்ள நீரில் மீன் குஞ்சுகள் அலைகின்றன.
நாளையோ மறு நாளைக்கோ
வாழ்வு முடியும் நிலையில் அலையும்
மீன் குஞ்சுகளைக் கொத்த
தான் முந்திக்கொள்ளும்
நீர்க்காக்கைகள்
ஆனாலும் நம்பிக்கையுடன்
வலையைச் செப்பனிடுகிறான் மீனவன்
—- நீர்நிலைகள் செழிப்புடன் இருக்க வேண்டும் என்னும் கவிஞரது அவா ‘ ஏக்கங்கள் ‘ என்ற
தலைப்பில் கவிதையானது மகிழ்ச்சிதான்.
புத்தகத்தின் தலைப்புக் கவிதையான ‘ அர்த்தங்கள் ஆயிரம் ‘ ஒரு பக்திக் கவிதை. முருகப் பெருமானை
முன் வைத்துப் பேசப்படுகிறது. கடவுளின் மௌனத்தில் அர்த்தங்கள் ஆயிரம் உள்ளன என்பதுதான்
கவிதைக் கரு.
ஒரே நிலையில்
உலகளக்கும் பார்வையில்
மௌனங்களைப் போதிக்கிறாய்
—- என்பது நல்ல பதிவு .
நான் வெற்றிக் களிப்பில்
ஆனந்தக் கவிபாடும் போதும்
மகிழ்ச்சி மலர் தூவும் போதும்
மௌனம்
முத்தாய்ப்பில் பக்தியின் கனிவு அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.
உனது நினைவுகளைவிட
உயிருக்குப் பிடித்தது வேறெதுவுமில்லை
எனை ஆட்கொண்ட இறைவனே !
வெள்ளி மலை முருகனே !!
புதுக்கவிதையில் பக்திக்குரல் கேட்பது அரிது அரிது !
பாட்டியின் பாசத்தைச் சொல்கிறது ‘ அழுக்கில்லா அன்பு ‘ என்ற கவிதை.
சுண்ணாம்பையும்
இடித்து வைத்த
வெற்றிலை பாக்கையும்
கலந்து கலந்து
காவியேறிய
சுருக்கம் நிறைந்த
விரல்களின் வருடலில்
என் தேகத்தின்
அலுப்பு அழியும்
— எனத் தன் பாட்டியை நம் கண்முன் நிறுத்துகிறார்.

எலும்பு குத்தும்
மடியில் படுத்துச் சுகப்படுவேன்
—- என்னும் போது பாட்டியின் முதுமை புலப்படுகிறது. ஒரு கவலையோடு கவிதை முடிகிறது.
என் பெயரை
உச்சரிக்கவே உயிர் வாழும்
என் பாட்டிக்கு
மரணம் வந்திடுமோ ?
‘ வயோதிகம் ‘ பற்றிப் பேசுகிறது ஒரு கவிதை. தொடக்கம் ‘ பளிச் ‘ சென இருக்கிறது.
தளிர்களைத்
தாலாட்ட வரும்
காற்று வீசினாலே
தள்ளாடித் தோற்றுப் போகும்
தோற்றம்
—- முதுமையின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகின்றன சில வரிகள்.
காற்றை அல்லாது
மரணத்தையே
சுவாசிக்க விரும்பும்
இதயம்
—- முதுமையில் உடல் எப்படி இருக்கும் ?
கோணலாய்
திருகலாய்
குறுகிப் போன உடல்
—- முதுமையைப் பிறர் எப்படிப் பார்க்கிறார்கள் ?
சொந்த பந்தம்
வெறுத்து ஒதுக்கிய
தன்மானப்
பூக்களுதிர்ந்த
வெறும் நார்
— என்கிறார். காலம் உறிஞ்சிக் குடித்துத் தூக்கிப் போட்ட பாடில்களாகத்தானே மனிதர்கள்
இருக்கிறார்கள்.
இவர் மேலும் வளர , இன்னும் பல நல்ல கவிதைகள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு

Series Navigationகவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்நாடகத்தின் கடைசி நாள்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *