முனைவா் பு.பிரபுராம்
தமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். கடந்த சட்டமன்றத் தோ்தலில் எத்தனை போலி வாக்குறுதிகளை வாரித் தெளித்தீா்கள். தனி ஈழம் அமைப்பேன் என்றது ஒரு தரப்பு, இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பேன் என்றது மற்றொரு தரப்பு, இவை மட்டுமா? ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பேன், சா்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று பல முழக்கங்களைத் தோ்தல் மேடைகளில் அரசியல் கட்சிகள் முன்வைத்தன. இம்முழக்கங்களில் ஒன்றைக்கூட நிறைவேற்றுவதற்கான வல்லமை தமிழக முதலமைச்சா் பதவிக்கு இல்லை என்பதே நிதா்சனமான உண்மை.
உலக அரங்கில் தமிழ்நாடு தனிநாடு அல்ல. ஒருங்கிணைந்த இந்திய தேசத்தின் ஒரு மாநிலம் அவ்வளவே. தமிழ்நாட்டின் அரசுப் பணிகளைக் கவனிக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்படுவோர் சட்டமன்ற உறுப்பினா்கள் அவ்வளவே. மத்திய அரசையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்களையும் மீறி ஒரு அணுவைக்கூட தமிழக முதலமைச்சராலும், சட்டமன்ற உறுப்பினா்களாலும் அசைத்துவிடமுடியாது. அதிகபட்சமாக சட்டமன்றத்தில் ஒரு தீா்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கு முதலமைச்சா் அனுப்புவார். இறுதி முடிவு மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது. மத்திய அரசை எதிர்த்துப் போராடும் வல்லமையும் நிச்சயமாகத் தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லவே இல்லை. உண்மை இப்படியிருக்க இலங்கைத் தமிழா் விடயத்தில் எத்தனை, எத்தனை போலி முழக்கங்களும், பொய் வாக்குறுதிகளும் வாரி, வாரி வழங்கப்படுகின்றன. இதெல்லாம் ஏமாற்றுவேலை என்பதை இந்தத் தோ்தலிலாவது மக்கள் உணரவேண்டும்.
தமிழகத்தில் தோ்தல் என்றால் தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற அரசியல் முன்னிருத்தப்படுகிறது. ஏன் தமிழ் மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பது போதாதா?. மொழி வழியாகவும் பிரிந்து நிற்கவேண்டும் என்ற பிரிவினைவாதக் கொள்கைதான் தமிழக அரசியல் தா்மமா?. நினைக்கவே அருவறுப்பாக இருக்கிறது. அறிவுப்புரட்சி செய்ய வல்லமையற்ற அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மொழிவெறியையும் சாதிவெறியையும் இளைஞா்களுக்குள் திணிக்கின்றனா்.
2009-இல் விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டன. இன்னொரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் உருவாவதற்குச் சாத்தியமே இல்லை. உருவானாலும் அதற்குப் பயன் இல்லை என்ற நிலையே உள்ளது. உலக நாடுகளுக்கும் இலங்கைத் தமிழா்கள் மீது அவ்வளவு கரிசனம் வந்துவிட்டதாகத் தெரியவில்லை. 2009க்குப் பிறகு ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டங்கள் பல முடிந்துவிட்டன. ஐந்து வருடங்களில் எந்தப் பெரிய அரசியல் அழுத்தங்களோ, நிர்வாக அழுத்தங்களோ இலங்கை அரசிற்குக் கொடுக்கப்படவில்லை. இன்னும் இலங்கை மண்ணில் தமிழ்மக்கள் வீடிழந்து, விவசாய நிலங்களை இழந்து, உரிமைகளையும் உணா்வுகளையும் இழந்து அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவலச் சூழல்தான் நிலவுகிறது.
தமிழகத்தில் இந்தப் போலி அரசியல்வாதிகள் விடும் பொய்கள் காதுகளில் நாராசமாய் வந்து விழுகின்றன. நான் முதலமைச்சரானால் இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பேன் என்று இன்னும் எப்படி அவா்களால் வெட்கமில்லாமல் சொல்ல முடிகிறது. சீச்சீ… தமிழகத் தோ்தல் அரசியல் மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் சதிவலையாக அல்லவா உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளே மக்கள் தரப்பிலிருந்து கடுமையான எச்சரிக்கை. இனிமேல் உங்கள் அரசியல் சுயலாபத்திற்காக இலங்கைத் தமிழா்களை பயன்படுத்தாதீா்கள்.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் இலங்கைவாழ் தமிழ் மக்கள் பட்டதெல்லாம் போதும். இலங்கை இராணுவத்தால் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளுக்கும், கொடுமையான பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் தமிழா்கள் பலா் பலியான, துயரத்தின் வடு இன்னும் யார் மனதிலும் ஆறிவிடவில்லை. அவா்கள் துயரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் நாம் ஆகிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டும் அரசியல்வாதிகளே உங்கள் மனதில் கொஞ்சமாவது ஈரம் இருந்தால், அவா்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தால், இலங்கைத் தமிழா்களை வைத்துத் தமிழகத்தில் தோ்தல் அரசியல் செய்யாதீா்கள்.
- இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்
- வரலாற்றில் வாழ்வது – சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’
- லேசான வலிமை
- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்
- நாமே நமக்கு…
- வியாழனுக்கு அப்பால்
- கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்
- இரத்தினமூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அர்த்தங்கள் ஆயிரம் ‘ தொகுப்பை முன் வைத்து ..
- நாடகத்தின் கடைசி நாள்
- வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்
- இலக்கியவாதிகளின் இதயத்தில் இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்
- நான்கு கவிதைகள்
- தோழா – திரைப்பட விமர்சனம்
- எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா
- தொடுவானம் 114. தேர்வுகள் முடிந்தன .
- எனக்குப் பிடிக்காத கவிதை