என் செல்வராஜ்
இலக்கிய சிந்தனை அமைப்பு ஆண்டு தோறும் வார, மாத மற்றும் தீபாவளி மலர்களில் வரும் சிறுகதைகளில் இருந்து பன்னிரண்டு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு எழுத்தாளரிடம் தந்து அவரது தேர்வில் முதல் இடத்தை பிடிக்கும் சிறுகதையின் தலைப்பில் வானதி பதிப்பகம் மூலம் சிறுகதை தொகுப்பாக வெளியிட்டு வருகிறது. அந்த தொகுப்பை ஏப்ரல் 14 அன்று வெளியிட்டு சிறந்த கதைகளின் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி வருகிறது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்.
- புத்தருக்கும் அடி சறுக்கும் – வைரமுத்து – குமுதம்
- மேன் மக்கள்- அய்க்கண் – நமது செட்டி நாடு
- தந்தை – பா சந்திரசேகர் – தினமணி கதிர்
- எதிர்பாராத உதவி – க சங்கர் – கல்கி
5, கானல் நீர் கனவுகள்- எஸ் செல்வசுந்தரி – கணையாழி
- ஊர்மிளை – எஸ்.எம்.ஏ.ராம் – கணையாழி
- அது தான் பரிசு – இ வில்சன் – தினமணி கதிர்
- விழல் – கீதா சீனிவாசன் – தினமணி கதிர்
- அவரவர் தர்மம் – பா சந்திரசேகர் – தினமணி கதிர்
- அழுக்கு – பொன்னீலன் – ஓம் சக்தி தீபாவளி மலர்
- இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள – ஹரணி – தினமணி கதிர்
- கைமாத்து – உஷா தீபன் – தினமணி கதிர்
இந்த பன்னிரண்டு கதைகளில் 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக “கானல் நீர் கனவுகள் ” என்ற கதையை நெல்லை ஜெயந்தா தேர்வு
செய்துள்ளார். இந்த கதையின் தலைப்பில் வானதி பதிப்பகம் இந்த 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்த நூலில் நெல்லை ஜெயந்தா ஒவ்வொரு கதையையும் விமர்சித்து அதை ஒரு சிறு கவிதையால் நிறைவு செய்திருக்கிறார். கவிஞர் என்பதால் இது அவருக்கு சாத்தியமாகி இருக்கிறது.
இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகள்
மேன்மக்கள்- அய்க்கண், அதுதான் பரிசு – இ வில்சன் , கான நீர் கனவுகள் – எஸ்
செல்வ சுந்தரி. கைமாத்து – உஷா தீபன், அவரவர் தர்மம் – பா சந்திரசேகர்.
மேன்மக்கள்- கதையில் பர்மாவில் சிறப்பாக வாழ்ந்து மற்றவர்களுக்கும் வாரிக்கொடுத்த தந்தை அழகப்ப செட்டியார் மரணமடைந்ததாலும் இரண்டாம் உலகப்போரின் போது சொத்துக்கள் சூறையாடப்பட்டதாலும் நாடு திரும்பும் மெய்யப்ப செட்டியார் வறுமையில் வாடும் கதை தான். கோயிலில் நடக்கும் லட்சார்ச்சனைக்கு குருக்களிடம் பணம் தர தன் மகனின் பரீட்சைக்காக கட்ட வைத்திருந்த ஐந்து ரூபாயையும் எடுத்து கொடுத்து விடுகிறார். வயதுக்கு வந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறார். அப்போது மருத்துவன் சோலையன் அவரைப் பார்க்க வருகிறான். அவன் செட்டியாரின் தந்தையிடம் வேலை செய்தவன் என்று அறிமுகம் செய்து கொள்கிறான். அவனை சலூன் வச்சி பொழைச்சுக்கோ என்று சொல்லி அழகப்ப செட்டியார் ஆயிரம் ரூபாய் பர்மாவில் கொடுத்திருக்கிறார். இப்போது மிகவும் வசதியாக இருக்கிறான். மெய்யப்ப செட்டியார் பற்றி கேள்விப்பட்டு அந்த பணத்தை வட்டியும் முதலுமாக சேர்த்து ஐயாயிரம் தர வந்திருப்பதாக சொல்கிறான். பர்மாவில் தந்தை அழகப்ப செட்டியார் எழுதி வைத்திருக்கும் கொடுக்கல் வாங்கல் கணக்கை மெய்யப்ப செட்டியார் பார்க்கிறார். அந்த பேரேட்டில் சோலையன் பெயர் இல்லை. தனது தந்தை கடன் கொடுத்திருந்தால் அதில் எழுதியிருப்பார் என்றும் தர்மம் கொடுப்பதை எழுதுவது வழக்கமில்லை என்றும், சோலையனுக்கு தன் தந்தை தர்மமாக கொடுத்ததை கடனாக எண்ணி திரும்ப வாங்கிக்கொள்ள முடியாதென்றும் மறுத்து விடுகிறார். வீட்டில் அவருக்காக இருந்த ஒரே குவளை மோரையும் சோலையனுக்கு கொடுக்கிறார். இவர் போன்ற நல்ல மனிதர்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தக் கதையை அய்க்கண் எழுதி இருக்கிறார்.
அது தான் பரிசு – இந்த சிறுகதையை இ.வில்சன் எழுதி இருக்கிறார். நூறு நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் ஏமாற்று வேலைகளையும் அதில் மாற்றம் கொண்டு வரும் பஞ்சாயத்து தலைவி தமயந்தியின் திட்டங்களையும் விவரிக்கிறார். நூறு நாள் திட்டம் என்பது வேலை இல்லாத நாட்களில் தொழிலாளர்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அது பெயரளவில் இலவசமாக சம்பளம் தரும் திட்டமாக மாறி விட்டது. வேலையே செய்ய முடியாதவர்கள் கூட இந்த திட்டத்தில் சேர்ந்து வேலையே செய்யாமல் பணம் பெறுவதை மாற்ற முயலும் தலைவி தமயந்தி மாற்று திட்டத்தை முன் வைக்கிறார். வேலை செய்ய முடியாதவர்களுக்கு பாதி சம்பளம் தரப்படும் என்றும் அந்த மீதி பாதி பணத்தை கிராமத்து விவசாயிகளின் வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கிறார். விவசாயிகளின் வயலில் வேலை செய்பவர்களுக்கு அந்த விவசாயி டீ, வடை வாங்கி கொடுத்தால் போதும் என்று அறிவித்து செயல்படுத்துகிறார். மிஷின் வைத்து செய்ய வேண்டிய வேலைகளை மிஷின் வைத்து செய்து கொள்ளலாம் என்கிறார். நூறு நாள் திட்ட பணத்தில் அவற்றை செயல்படுத்துகிறார். கிராமம் முன்னேறுகிறது. அந்த தலைவிக்கு சிறந்த சிறந்த கிராமத் தலைவர் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்து கிராமம் இருக்கும்போது பொது திட்ட பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அந்த தலைவி தண்டிக்கப்படுகிறார். தமயந்தியின் இந்த திட்டத்தை நாம் பாராட்டவேண்டும். அரசாங்கமும் விவசாயிகள் வேலையாட்கள் கிடைக்காமல் படும் அவதியை கவனத்தில் கொண்டு நூறு நாள் வேலை திட்டத்தை விவசாயத்துக்கு உதவியாக மாற்றி அமைக்க வேண்டும்.
கானல் நீர் கனவுகள் – ஆண்டின் சிறந்த கதையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கதையை எஸ் செல்வசுந்தரி எழுதி இருக்கிறார்.
கல்யாணத்துக்கு தேவைப்படும் பணத்துக்காக திருப்பூருக்கு மூன்று வருட ஒப்பந்தத்தில் பஞ்சாலை செல்லும் பதினாறு வயது பெண்ணின் கதை. அந்த பெண்கள் முதலாளிகளால் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை விரிவாக விவரிக்கும் கதை. மாதவிடாயின் போது வரும் வலிக்காக அதைத் தடுக்க ஹார்மோன் இஞ்செக்க்ஷன் போடப்படுவதையும் அதனால் அவள் மூன்று வருடம் முடிந்து அறுபதினாயிரம் பணத்துடன் வீடு திரும்பியதும் அவள் கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாவதையும் வேதனையுடன் விவரிக்கிறது. கல்யாண கனவு கானல் நீராவது தான் கதை. கொத்தடிமைகளாக சுமங்கலி திட்டம் என்ற பெயரில் பல பெண்களின் வாழ்வில் வலிகளைத் தரும் திருப்பூர் ஆலை அதிபர்களிடமிருந்து அரசாங்கம் தான் இளம் பெண்களைக் காப்பாற்ற வேண்டும்.
கானல் நீர் கனவுகள் என்ற இந்த தொகுப்பை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ . 90/
- காப்பியக் காட்சிகள் 3.சிந்தாமணியில் சமய நம்பிக்கைகளும் சமய உரிமைகளும்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலய ஓவியங்கள் – 4
- ‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !
- உரிமையில் ஒன்றானோம்
- இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்
- அடியில் உறங்கும் அறச்சீற்றம் [சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலை முன்வைத்து]
- உன்னை நினைவூட்டல்
- தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..
- ”வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்”
- மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ –