முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com
மனிதனையும் அவனது வாழ்வையும் வழி நடத்துபவைகளாக நம்பிக்கைகள் விளங்குகின்றன. சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் மக்களிடம் காணப்பட்ட பலவகையான சமய நம்பிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நல்வினை, தீவினை, சொர்க்கம் நரகம், தேவ வாழ்க்கை, மந்திரங்கள், கடவுளுக்கு பொருள்களைக் கொடுத்தல், தெய்வம் மனித உருவில் வருதல் உள்ளிட்ட பல சமய நம்பிக்கைகள் திருத்தக்கதேவரால் தெளிவுறுத்தப்பட்டுள்ளன.
இருவினை, நரகம்
மனிதன் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கேற்ப அவனுக்குப் பலன் கிடைக்கும். தீவினை செய்தவர்களை எமன் தன் பாசக்கயிற்றால் கட்டி இழுத்துச் செல்வான். அவர்கள் செய்த கொடுமைகளுக்கேற்ப அவர்கள் உடலைத் துன்புறுத்தி அழிப்பான்(1487) என்ற நம்பிக்கை மக்களிடம் மிகுந்திருந்தது. தேவர்கள் மண்ணுலகில் நடப்தை அறிவர். அவர்கள் இறப்பும் பிறப்பும் அற்றவர்கள். காமத்தில் உழல்பவர்கள் நரகத்தை அடைவர்(636).
ஊனை உண்பவர்கள் தேவ வாழூக்கையைப் பெற இயலாது(1551) மந்திரங்கள் உயர்ந்த தேவ வாழ்க்கையைத் தரும். நாய் வடிவில் இருந்த சுதஞ்சணனுக்கு ஐம்பத மந்திரத்தைக் காதில் ஓதியவுடன் நாய் உடல் மறைந்து தேவ உடல் கிடைத்தது(951). இத்தேவர்கள் வான்வழிச் செல்லும் வல்லமை படைத்தவர்கள்(1156). கடல்வளில் பெரும் கொந்தளிப்பையும் புயல்காற்றையும் உருவாக்கக் கூடியவர்கள்(508) மண்ணுலகில் வந்து மக்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் நன்றியை மறக்காத நற்பண்பினர் ஆவர்.
மந்திரங்கள்
மந்திரங்களின் உதவியால் இனிய குரல், கொடிய விடத்தை நீக்குதல், வேண்டிய வடிவை எடுத்தல் ஆகிய மூன்று வலிமைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தது(1217). போர் வீரர்கள் போர்க்களங்களில் மந்திரங்களைக் கூறி அம்புகளுக்கு வலிமையை ஏற்றினர்(1676). ‘ஆகாயகாமினி’ என்னும் மந்திரம் தொலைவில் நடப்பதை, இருந்த இடத்திலிருந்தே பார்க்கக்கூடிய வல்லமையைத் தரும்(1709). இம்மந்திரத்தைக் காந்தருவதத்தை பயன்படுத்துகிறாள்.
நந்தட்டன் சீவகனைக் காணாமல் புலம்பும்போது அவனுக்கு இம்மந்திரத்தைப் பயன்படுத்தி, சீவகன் இருக்கும் இடத்தை காந்தருவதத்தை காட்டுகிறாள்(1709). அண்ணனைக் கண்ட மகிழ்ச்சியில் அவனிடம் செல்லவேண்டும் என்று நந்தட்டன் விரும்பியபோது அவனை ஒரு தரைவிரிப்பின் மேல் படுக்க வைத்து அவன் முகத்தருகே கையை நீட்டி காந்தருவதத்தை மந்திரம் கூறுகிறாள்(1713). அவன் மயங்கி கண்களை மூடுகிறான். அப்போது அங்கு வந்த ஒரு தெய்வம் அவனைச் சீவகன் இருக்கும் இடத்திற்கு வான்வழியாகத் தூக்கிச் செல்கிறது(1715). அவன் சீவகனைக் கண்டு மகிழ்கிறான். இவ்வாறு மந்திரங்கள் மக்கள் வாழ்க்கையில் நற்பலன்களைத் தரவல்லன என்ற நம்பிக்கையைச் சீவகசிந்தாமணி எடுத்தியம்புகிறது.
தெய்வங்கள் வீடுகளில் வாழ்தல்
தெய்வங்கள் வீடுகளில் வாழ்வதாக இன்றும் மக்கள் நம்புகின்றனர். வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட்டால் தெய்வம் வரும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுவது குறிப்பிடத்தக்கது. இருளடைந்து வீடு காணப்பட்டால் தெய்வம் வீட்டைவிட்டு நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே வழக்கில் உள்ளது.
வீடுகளில் தெய்வங்கள் வாழ்ந்ததை சிந்தாமணிக் காப்பியம் தெளிவுறுத்துகிறது. அத்தெய்வங்களை இல்லுறை தெய்வம் என்று மக்கள் அழைத்தனர். அத்தெய்வங்கள் வீடுகளில் வசிப்போர் துன்புற்று வருந்தும்போது அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தன என்பதைக் கேமசரியார் இலம்பகம் தெளிவுறுத்துகிறது. இவ்விலம்பகத்தில் கேமசரி சீவகன் பிரிவை எண்ணி எண்ணி வருந்திக் கிடக்கிறாள். இதைக் கண்ட தெய்வம் கணவன் பிரிவால் இவள் இறந்து போவாள் என்று அஞ்சியது. அதனால் அவளின் துன்பத்தைப் போக்கக் கருதிய தெய்வம் வண்டுரு எடுத்து அவள் முன்பு பறந்தது(1531). அவ்வண்டைக் கண்ட கேமசரி தன் இறப்பு கணவனுக்கு ஊனத்தை உண்டாக்கும் என்று கூறுவதாக நினைத்துக் கொண்டு உயிர்விடாமல் வாழ்ந்தாள்(1531). மேலும் அவ்வண்டைத் தன் துயர் நீங்குவதற்காகத் தன் வீட்டில் வந்து உறையுமாறு வேண்டுகிறாள். இவ்வாறு தெய்வங்கள் தங்களுக்கு உதவிசெய்வதற்காகவே வீடுகளில் தங்கி இருக்கும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்ததை சிந்தாமணி புலப்படுத்துகிறது.
கடவுளுக்கு பொருள்களைக் கொடுத்தல்
இறைவனுக்குப் பொருள்களைக் கொடுப்பது நேர்த்திக் கடன் என்று வழக்கில் வழங்குவர். தான் நினைத்த செயல் வெற்றியுடன் நன்கு முடிந்துவிட்டாலும் மக்கள் தாம் வேண்டிக் கொண்ட கடவுளுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி வைப்பர். இது தொன்றுதொட்டு மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கை சார்ந்த பழக்கமாகும். காமதேவனுக்குக் கொடியும் தோரணமும் கொடுத்து வழிபட்டால் தான் விரும்பிய கணவனைப் பெற முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவியது.
சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் இடம்பெறும் சுரமஞ்சரி இலம்பகத்தில் சுரமஞ்சரி தன் காதல் கணவனாகிய சீவகனைப் பெறவேண்டும் என்று காமக்கோட்டத்தை அடைந்து வழிபடுகின்றாள். அவ்வாறு வழிபடும்போது காமதேவனே என்னுடைய எண்ணம் நிறைவேறினால் உனக்குக் கொடியும் தோரணமும் கொடுக்கின்றேன் என்று கூறி வணங்குகின்றாள்(2055). சுரமஞ்சரியின் செயலை வைத்து மக்களின் நம்பிக்கையை திருத்தக்கதேவர் தெளிவுறுத்தியிருப்பது நோக்கத்தக்கதாகும்.
தெய்வங்கள் தோழி வடிவு கொண்டு உதவி செய்யும் என்பதை விசயை சுடுகாட்டில் இருக்கும்போது ஒரு சுடுகாட்டுத் தெய்வம் அவள் தோழி வடிவில் வந்து அவளுக்கு ஆறுதல் கூறி வரும்பொருள் உரைத்து ஆற்றுப்படுத்தியதைக் கொண்டு உணரமுடிகிறது(314). சீவகசிந்தாமணியில் இடம்பெறும் நம்பிக்கைகள் அனைத்தும் அறத்தினை அடிப்படையாகக் கொண்டவைகளாகும். இந்நம்பிக்கைகள் முத்தியைப் பெறுவதற்குரிய வழியைக் காட்டுவனவாகவும் உயர்ந்தோரை மதிக்கும் பண்பை வளர்க்கும் வகையிலும் அமைந்துள்ளன.
சமய உரிமை
சிந்தாமணிக் காப்பியத்தில் சமயக்காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வைதீக நெறியைச் சார்ந்தவர்கள் தங்களுடைய நெறிகளை மேற்கொள்ளவும் சமண நெறியை மேற்கொண்டவர்கள் அதை எவ்விதத் தடங்கல்களும் இல்லாமல் பின்பற்றவும் அக்காலச் சமயநெறி உரிமைகளைப் பெற்றிருந்தனர். தாம் பின்பற்றும் எநறிகள் முத்திப்பேற்றிற்கு வழி வகுக்காது என்பதை உணர்ந்தவுடன் அந்நெறியைக் கைவிட்டு முத்தி நெறியைத் தரும் சமயத்தில் சேர்வதற்கு அக்காலத்தில் எந்தவிதமான இடையூறும் இருக்கவில்லை. இஃது அக்கால மக்களுக்கு இருந்த சமய உரிமையை எடுதுக்காட்டுவதாக உள்ளது.
கோவில்களும் வழிபாட்டு முறைகளும்
சீவகசிந்தாமணியில் சமயக்கடவுளர்களை வழிபடுவதற்குப் பொது இடங்களில் கோவில்கள் இருந்தன. அக்கோவில்கள் பெரும்பாலும் அருகனது கோவிலாக விளங்கின. ஒரோயொரு கோவில் மட்டும் காமதேவனுக்கு உரியதாக விளங்கியது. மலையின் உச்சிகளில் அருகனது கோவில்கள் இருந்தன என்பதைச் சீவகன் அரணபாத மலையிலும் சித்திரக்கூட மலையிலும் இருந்த கோவில்களில் வழிபாடு செய்தான் என்பதைக் கொண்டு மலைகள் தோறும் சமணக்கோவில்கள் இருந்தன என்பதையும் அம்மலைகளில் சமணர்கள் வாழ்ந்தனர் என்பதும் புலனாகின்றது.
கோவில்களிலும் மலைகளிலும் இருந்த தெய்வங்களை வழிபடும் முறை அக்காலத்தில் இருந்தன. தெய்வங்களை வழிபடும்போது வெண்ணிற ஆடையுடுத்தி, நறுமணப் புகையிட்டு அழகிய மலர்களைத் தூவி வழிபட்டனர் என்பதை, காந்தருவதத்தை சீவகளைக் காட்டுவதற்குத் தெய்வத்தை வழிபட்ட முறைகளிலிருந்து தெளியலாம்(1713).
விமலையார் இலம்பகத்தில் சோலையில் உறங்கி விழித்த சீவகன் வாய்கொப்பளித்துக் கண்களைக் கழுவி, மலர்தூவி அருகனை வழிபட்டான். அரணபாதமலையில் உறைந்திருக்கும் அருகனை, மலையை வலம் வந்து அருகக் கடவுளின் புகழைப்பாடி வழிபட்டான்(1943).
சீவகன், பவணமாதேவன் ஆகியோர் பல மன்னர்கள் புடைசூழ மனைவியர் உடன்வர மிகப்பெரிய அறிவிப்போடு வந்து வழிபட்டனர்(3044) என்பதிலிருந்து வழிபாட்டு முறை மிக மிக எளிய முறையிலும் புறச்சடங்குகளில் ஆர்வம் இல்லாமலும் இருந்ததை இந்நிகழ்ச்சிகள் தெளிவுறுத்துகின்றன.
சமயச் சான்றோர்கள்
சமயக்கருத்துக்களை மக்களுக்கும் மன்னனுக்கும் அறிவைப் புகட்டும் சான்றோர்களைச் சமயச்சான்றோர்கள் என்று அழைக்கின்றனர். இவர்களில் ஆடவர்களும் பெண்களும் அறஉபதேசம் செய்தனர். மணிவண்ணன், சுதர்மர், பம்மை ஆகிய மூன்று சமயச்சான்றோர்கள் இடம்பெற்றுள்ளனர். மக்கள் கூட்டம் கூட்டமாக அறஉபதேசக் கருத்துக்களைக் கேட்பதிலும் தவ வாழ்க்கையை மேற்கொள்வதிலும் விருப்பம் உடையவர்களாக விளங்கினர்(3040).
சிந்தாமணி காட்டும் சமயமானது மக்களோடு நெருங்கிய தொடர்புடையதாக விளங்கியது. மக்களின் வாழ்க்கையை விலங்கு நிலையிலிருந்து உயர்த்துவதற்கு மிகவும் பாடுபட்டது. சமயக் காழ்ப்புணர்ச்சியை அதிக அளவில் வெளிப்படுத்தாமல் அமைதியான சூழ்நிலையில் இறைவழிபாடு நிகழ்வதற்கு உதவியது. மக்கள் தாங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு சமயத்தைப் பின்பற்றி சமுதாயத்தின் மேன்மைக்கு உறுதுணையாக விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. (தொடரும்…..4)
- காப்பியக் காட்சிகள் 3.சிந்தாமணியில் சமய நம்பிக்கைகளும் சமய உரிமைகளும்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலய ஓவியங்கள் – 4
- ‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !
- உரிமையில் ஒன்றானோம்
- இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்
- அடியில் உறங்கும் அறச்சீற்றம் [சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலை முன்வைத்து]
- உன்னை நினைவூட்டல்
- தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..
- ”வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்”
- மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ –