பவள சங்கரி
பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சில துறைகளைத் தவிர வேறு எதிலும் தலையிடுவது என்பது அரிதாக இருந்த காலமும் ஒன்று இருந்தது என்று நினைவுகூரும் அளவிற்கு இன்று பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை என்ற நிலையே உள்ளது. இன்று தொழில் நிமித்தம் உலகம் முழுதும் தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக இருப்பினும் அதனை உடைத்தெறிந்துவிட்டு முன்னேற்றப் பாதையை எட்டிப்பிடிக்கத் தயங்காத தங்கத் தாரகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் பெண்கள் ஆண்களைப் போன்று நினைத்த நேரத்தில் கிடைத்த இடங்களில் தங்குவதும், லாரிகளில் தொற்றிக்கொண்டோ, லிஃப்ட் கேட்டோ பயணம் செய்ய முடியாது என்பதால் சற்று மெனக்கெட்டு முன்னேற்பாடுகளுடன் பேருந்து, ரயில், விமானம் என்று மக்கள் கூட்டம் உள்ள போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது. தங்குவதற்கு வசதியானது என்பதைக்காட்டிலும் பாதுகாப்பான தங்கும் விடுதிகளையே நாட வேண்டியுள்ளது. காந்தி மகான் சொன்ன அந்தப் பொன்னான காலம் இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.
1975-85ஆம் ஆண்டு காலகட்டங்களில் பெண்கள் பெரும்பாலும் பெண்களுக்கான தனிக்கல்லூரி, தனிப்பேருந்து என்று இருந்த குறுகிய வட்டத்திலிருந்து இன்று பாலின வேறுபாடின்றி இரு பாலரும் சேர்ந்தே கல்வி, பயணம் என தங்களுக்கான பாதுகாப்பான எல்லையை வகுத்துக்கொள்ள முடிகிறது. ஆனாலும் ஒரு சிறு கவனக் குறைவால் பெரும் கொடுமைகளும் நடக்கத்தான் செய்கின்றன. சில காலம் முன்பு நம் தலைநகர் தில்லியில் (கடந்த 2012-ஆம் ஆண்டு திசம்பர் 16-ஆம் தேதி இரவு) ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கும், குற்றவாளிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகி சில நாட்களுக்குப் பின் மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவை மறக்கவும் முடியுமா.. ஆயினும் இந்த வழக்கில் போதிய நீதி வழங்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் இன்னும் பல வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் பொதுவான கருத்தாகவும் உள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பெண்களுக்கான தனிப்பட்ட போக்குவரத்து வாகனங்கள் இருப்பதும் நல்லது என்பது நிதர்சனம். மேற்கு வங்காளத்தில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் சிறப்பு ரயிலில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்ற செய்தியும் இதற்கு ஆதாரமாக உள்ளது. சென்ற ஆண்டு (ஆகஸ்ட் 2015) அங்குள்ள பரசட் மற்றும் செலடா பகுதிக்கு இடையில் மாத்ரிபூமி பெண்கள் சிறப்பு ரயிலில் இரண்டு நாட்கள் முன்பு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதாவது அந்த ரயிலின் 3 பெட்டிகளில் ஆண், பெண் இரு பாலாரும் செல்லலாம் என வெளியான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என அப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில் அந்த போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்ற ரயில்வே போலீசார் மீது சில பெண்கள் கல்வீசி தாக்குதலும் நடத்தியுள்ளனர். இந்நிலையில், மாத்ரிபூமி பெண்கள் சிறப்பு ரயிலின் அனைத்து பெட்டிகளும் பெண்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீண்டும் மத்யம்கிராம், டட்டாபுக்கூர், பிராட்டி, பமங்காச்சி, ஹிரிதயப்பூர் ஆகிய ரயில் நிலையங்களின் அருகாமையில் தண்டவாளத்தை மறித்து அமர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் ரயில்வே அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றிருக்கின்றனர். தங்கள் பாதுகாப்பு குறித்து தெளிவான கருத்து கொண்ட பெண்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
சென்ற ஆண்டு (அக்டோபர் 2015) அனைத்து கைபேசிகளிலும் பெண்கள் பாதுகாப்புக்காக ‘பேனிக் பட்டன்’ பொருத்தும் யோசனையை மத்திய அரசு தெரிவித்திருந்தது. அந்த ‘பட்டன்’, ஜி.பி.எஸ். சாதனம் பொருத்தப்பட்டதாக இருக்கும் என்றும் அந்த பட்டனை அழுத்தினால், சம்பந்தப்பட்ட பெண் இருக்கும் இடம் பற்றிய தகவலுடன் சில குறிப்பிட்ட எண்களுக்கு குறுந்தகவல் போய்ச் சேருவதன்மூலம், அப்பெண் காப்பாற்றப்படும் வாய்ப்பு ஏற்படும். இந்த ‘பட்டன்’ சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டது.
இதெல்லாம் ஒரு புறமிருக்க இன்று சுதந்திரம் என்ற பெயரில் சில பெண்கள் தங்களுக்கு தாங்களே பிரச்சனையாகிவிடுகின்றனர். சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெண்களைக் குறிப்பிடும்போது பெரும்பாலும், திருமணம் ஆகாத பெண்களை செல்வி என்றும் திருமணம் ஆனவர்களை திருமதி என்றும் அழைப்பார்கள். ஆனால் இன்று அது மட்டும் போதவில்லை. இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலும் மங்கலச் சின்னங்கள் அணிவதை பாரமாகக் கருதுகின்றனர். இதனால் சாதாரணமாக ஒரு பெண்ணை மரியாதை நிமித்தம் பெயருக்கு முன்னால் குறிப்பிடும் சொல்லில் தற்போது திருமிகு என்ற ஒரு சொல் அதிகமாக புழக்கத்தில் வரவேண்டியுள்ளது. இது பாலின வேறுபாடின்றி இரு சாராருக்கும் பொருந்தக்கூடிய சொல்லாகவும் இருப்பதால் இன்னும் வசதி.
ஒரு பத்தாண்டுக்கு முன்னர் கூட ஒளிப்படங்கள் திருமணம், பிறந்த நாள் விழா, திருவிழா அல்லது குடும்ப விழா என ஏதாவது ஒரு விழாவை முன்னிட்டுதான் பெரும்பாலும் எடுப்பார்கள். அதையும் ஆல்பமாகவோ அல்லது சுவற்றில் தொங்கும் வகையிலோதான் வெளியிடுவார்கள். நெருங்கிய உறவுகள், நட்புகள் வட்டாரத்தில் மட்டுமே காணப்பெறும். ஆனால் இப்போது சமூக வலை தளங்களில் தாங்களே வெளியிட்டுக்கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளது. இதனால் புதிது புதிதாக பல பிரச்சனைகளும் உருவாகத்தான் செய்கின்றன. கலாச்சாரத்திலேயே பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்றாலும் அது மிகையாகாது. அன்றாடம் பல விதமான சம்பவங்கள் ஊடகங்களுக்கு தீனி போட்ட வண்ணம்தான் உள்ளன. நாகரீக வளர்ச்சி என்பதா அல்லது காணாததைக் கண்டதைக் கொண்டாடும் குதூகலம் என்பதா என்று தெரியவில்லை. தத்தளிக்கும் படகு ஒரு காலகட்டத்தில் நிலைபெறும் என்று நம்புவோமாக!
1960 – 65களில் பிரபல எழுத்தாளர், சமூக சேவகி, அரசு ஊழியர், நாடகக் கலைஞர் என்ற பன்முகத் திறன் கொண்ட துணிச்சலான பெண்மணி ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். அவர் தமது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது இன்றைய நவீன உலகம் மற்றும் நம் நாட்டு, குறிப்பாக நம் தமிழகப் பெண்கள் நிலை குறித்த விவாதம் வந்தது. அப்போது அவர் சொன்ன சில தகவல்கள் ஆச்சரியமேற்படுத்தியது. எந்த காலத்தும் மன விகாரங்களும், தவறான உறவுகளும் இருக்கத்தான் செய்திருக்கின்றன. அன்று இலை மறை காய் மறைவாகத் தவறுகள் காக்கப்பட்டதற்கு ஊடகங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி இன்று உள்ள அளவிற்கு இல்லாததுதான் என்பது புரிந்தது. இன்று பல விசயங்கள் வசதியாக நவீனத்துவம் என்ற அலங்கார வடிவம் பூசப்பட்டு வினயமாக வலம் வருவதைக் காண முடிகிறது.
அந்த அம்மையார் தொழில் நிமித்தம் பல அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகள் என அடிக்கடி சந்திக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர். மிகக் கண்டிப்பான அதிகாரியும்கூட. அவர் தமது துறையில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றிய ஒரு பெண்ணை அவருடைய பணி சார்ந்த தவறுகளுக்காக வன்மையாகக் கண்டித்திருக்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு அப்பெண் இந்த அம்மையாரைப் பற்றி அவதூறாக, அவப்பெயர் ஏற்படும் வகையில் மொட்டைக் கடிதம் எழுதி துறையில் பலருக்கும், மேலதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார். விசயம் அறிந்த அம்மையார் இந்தப் பிரச்சனையின் சூத்திரதாரி யார் என்பதை எளிதாகக் கண்டுபிடித்தவர், அதே பெண்ணை அழைத்து அந்த மொட்டைக் கடுதாசியை அறிவிப்புப் பலகையில் ஒட்ட வைத்ததோடு, அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். இங்கு இவர் பதிவு செய்யும் விசயம்தான் முக்கியமானது. கழிப்பறைகள் சரியாக இல்லாத காலகட்டம் அது. பெண்களும் வயல், வரப்புகள், காட்டுப்பக்கம் ஒதுங்கும் நிலை. அந்தச் சூழலில் பல தவறான தொடர்புகளைத் தான் காண்பதையும், அவர்கள் யார் யார் என்று தமக்கு நன்றாகவேத் தெரியும் என்றும், அப்படி தவறு செய்பவர்களை புகைப்படம் எடுத்து வெளியிடவும் தன்னால் முடியும் என்று சத்தமாகப் பேசியிருக்கிறார். குறிப்பிட்ட அப்பெண் அச்சத்தில் ஆடிப்போனவர் ஒருவாறு சமாளித்திருக்கிறார்.
இதே அம்மையார் அதே காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஒரு நாடகம் பற்றியும் குறிப்பிட்டார். இரண்டு மாறுபட்ட கோணத்திலான தாய்மார்கள். மது அருந்துதல், தவறான பழக்க வழக்கங்கள் போன்றவற்றிற்கு அடிமையான ஒரு குடும்பத் தலைவியினால் அழிந்து போன மகளின் வாழ்க்கை மற்றும் குடும்ப நிம்மதி. இறுதியில் மொத்த குடும்பமும், ஊராரும் அத்தாயின் மீது குற்றம் சாட்டவும், செய்த தவறும், மகளின் துர்பாக்கிய நிலையும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தி அத்தாய் மூளை கலங்கிய நிலைக்குச் செல்கிறாள். இதே சமயம் ஒரு நல்ல தாய், மகன் கல்லூரியில் போராட்டம் நடத்துவதையும் தடுத்து நிறுத்துவதோடு, குடும்பத்தை கட்டுக்கோப்பாக கொண்டுவருவதையும் விவரமாகக் காண்பிக்கின்றனர்.
இதனால் சகலரும் அறிவது, ஒரு காலத்தில் மறைவாக நடந்த சில விசயங்கள் இன்று ஊடகத்தினால் விரிவாக அலசப்பட்டு, பெரிதுபடுத்தவும்பட்டுவிடுகின்றன. எங்கோ நடக்கும் ஓரிரு சம்பவங்கள் நாடு முழுவதும் நடப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. காலப்போக்கில் அதுவே யதார்த்த நிலையாகவும் ஆகிப்போகும் அபாயமும் உண்டு என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். பெற்றோரும், இளைஞர்களும், ஊடகங்களும் மேலும் பொறுப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே சீர்மிகு நம் பாரம்பரியக் கலாச்சாரம் சிதைவில்லாமல் காக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
- பெண்கள் நிலை – அன்றும் இன்றும்!
- அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்
- 19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்
- முரசொலி மாறனை மறந்த திமுக.
- ‘முசுறும் காலமும்’
- அம்மா நாமம் வாழ்க !
- பழைய கள்
- தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்
- தொடுவானம் 121. சிங்கப்பூரில் நேதாஜி.
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6
- காப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்
- உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’