தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்

author
1 minute, 6 seconds Read
This entry is part 8 of 12 in the series 22 மே 2016

ல. புவனேஸ்வரி

முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்

இலாஸ்பேட்டை, புதுச்சேரி – 605008

 

முன்னுரை:

சஞ்சிகைகளிலோ (Journals) அல்லது மாநாடுகளிலோ (Conference) ஆய்வுக்குறிப்புகளை கட்டுரையாக வெளியீடு செய்வது என்பது ஒரு ஆய்வாளரின் தலையாய கடமையாகும். இதன்மூலம், தத்தம் துறையில் ஆய்வு மேற்கொள்பவர்களை அறிந்து, தம் ஆய்வுத் திட்டத்தை மேம்படுத்தி மேலும் ஆய்வை நெறிப்படுத்த முடியும். கல்வியியல் சார்ந்த சஞ்சிகைகள் (Academic Journals) ஆய்வாளர்களின் பொதுவான கட்டுரை ஏற்பு இடமாக கருதப்படுகிறது. ஆய்வு நோக்கிற்கான சஞ்சிகையை இனம் காண்பதும், கட்டுரையை அவர்களின் வார்ப்புருவில் (Template) மற்றும் விரும்பிய நடையில் எழுதி சமர்ப்பிப்பதும், கட்டுரை பிரசுரமாவதற்கு அதிக வழி வகுக்கும். தமிழ் சார்ந்த சஞ்சிகைகள்பற்றியும், அவைகளில் ஆய்வுக்கட்டுரைகளை வெளியீடும் முறை பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

 

ஆய்வுக்கட்டுரை எழுதுதலின் படிகள் (Steps involved in writing research paper):

நேர்த்தியான ஆய்வுக்கட்டுரையை எழுதி வெளியிடக் கீழ்க்காணும் ஏழு படிகளைப் பின்பற்றவேண்டும்.

படி 1: பொருத்தமான வெளியீட்டை இனம் கண்டு பழக்கல் (Familiarizing with the potential Journals)

எடுத்துக்கொண்ட ஆராய்ச்சிக் கரு மற்றும் கட்டுரையின் முந்தைய மற்றும் தற்போதைய பதிப்பு நிலையை அறிதல் ஒரு ஆய்வாளரின் தலையாய கடமையாகும். தங்களின் ஆய்வுத்திட்டம் சார்ந்த சக ஆய்வாளர்களின் கட்டுரைகள், ஆய்வுக்குறிப்புகள், இதழ்கள், மின்னிதழ்கள், செய்திக்குறிப்புகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை சேகரித்து, அவற்றில், ஆய்வாளர்களின் வார்ப்புரு, ஆய்வுத் திட்டம், ஆளுமை, சொல்லாடல், பொருளாடல் மற்றும் அவர்களின் ஆய்வுவகை அறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக,

  • ஒருவர் எடுத்துக்கொண்ட ஆய்வுக்களம் சார்ந்த கல்வியியல் சஞ்சிகைகளை ஆர்ந்து மற்றும் ஆய்ந்து படித்து குறிப்பெடுத்தல்
  • இணையவழி ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகை, மாநாடு மற்றும் தொலை மாநாட்டு கட்டுரைகளை அறிந்து ஆய்தல்
  • ஆய்வு நெறியாளர், சக ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் கருத்துகளைப் பெறுவதோடு அவர்கள் கூறும் வாசிப்புப் பட்டியலை (Reading List) ஆய்தல்

போன்றவை சிறப்பான கட்டுரை வரைய வழி வகுக்கும்.

 

படி 2: ஆய்வுக் கட்டுரைக்கு மிகவும் பொருத்தமான சஞ்சிகையை தேர்ந்தெடுத்தல் (Choosing the publication that best suits the research paper)

ஒவ்வொரு வெளியீடும் (Publisher) அதற்கே உரித்தான வாசிப்புக் கூட்டத்தையும் (Audience), எழுத்து தொனியையும் (Tone of writing) பெற்றுள்ளது. ஆய்வுக்கட்டுரைக்கு மிகப்பொருத்தமான மற்றும் கற்றறிவாளர்களின் (Scholars) ஆதரவு பெற்ற சஞ்சிகையைத் தேர்ந்தெடுத்து அகன்ற வாசிப்பைப் (Broader Reading) பெற முனைய வேண்டும்.

 

படி 3: ஆய்வுக் கட்டுரை உருவாக்கல் (Preparing the research paper)

வெளியீட்டாளரின் வழிகாட்டலின்படி, அவர்களின் வார்ப்ப்ருவில் கட்டுரையை வடிவமைக்க வேண்டும்.  அமைப்புத் திட்டம் (Layout), எழுத்துரு வகை (Font type)  மற்றும் கட்டுரை அளவு (Length) போன்றவற்றை ஒவ்வொரு வெளியீடும் “கட்டுரை ஆக்க வழிகாட்டி (Authors’ Guidelines) அல்லது ஆக்கியோன் குறிப்புகள் (Instruction to Authors)” போன்ற தலைப்பில் அறிவுருத்துவார்கள். மேலும், கட்டுரை சம்ர்ப்பிக்கும் முறை (Submission method), மதிப்பாய்வு (Review process) மற்றும் மறுசீராய்வு (Revision process) முறைகள் போன்றவைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

படி 4: நெறியாளர் மற்றும் பேராசிரியர் வழி கட்டுரை மறுசீராய்வு (Paper review through Research Supervisor and/or Professor)

இலக்கணப் பிழை (Granmmar), எழுத்துப் பிழை (Spelling errors), சொற்பிழை, அச்சுப் பிழை (Typos), துலக்கம் (Clarity) மற்றும் திட்பம் (Conciseness) போன்றவற்றை சக ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், நெறியாளர் மற்றும் மற்ற கற்றறிவாளர்களின் மூலம் திருத்தியமைத்து பிழையற்ற கட்டுரையை உறுதி செய்ய வேண்டும். அத்தோடு, அவர்களின் மூலம் கட்டுரையின் உட்கருத்தையும் (Content) உறுதிசெய்ய வேண்டும். ஒவ்வொரு ஆராய்ச்சிக் கட்டுரையும் உத்கருத்துவளம் (Significant) செறிந்ததாகவும் மற்றும் தொடர்புடையனதாகவும் (Relevant) இருக்க வேண்டும்.  மேலும், அவைகள், தெளிவான (Clearly Written), எளிதில் தழுவும்படியான (Easy to follow), தொடர்புடைய ஆய்வாளர்களுக்கு உரிய கட்டுரையாகவும் அமைதல் சிறப்பு. இரண்டு அல்லது மூன்று மறுசீராய்வுக்கு கட்டுரையை உட்படுத்துவது பிழையற்ற கட்டுரை உருவாகவும், சஞ்சிகையில் தேர்வாகவும் அதிக வழி வகுக்கும்.

 

படி 5: கட்டுரையை மறுபார்வையிடல் (Revising the paper)

கட்டுரையின் மறுசீராய்விற்குப் பிறகு கட்டுரையை இறுதியாக சமர்ப்பிப்பதற்குமுன் (Final Submission) மூன்று அல்லது நான்கு முறை கட்டுரையை மறுபார்வையிடல் வேண்டும். மேலும், மறுபார்வையிட்ட கட்டுரையில், தனிக் கவனம் (Special attention) செலுத்தி தெளிவான, கவனிக்கத்தக்கக் (Engaging) கூடிய மற்றும் எளிதில் வாசிப்போரைத் தழுவக்கூடிய வகையில் கட்டுரையை இறுதி நிலைக்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறு செய்தல் கட்டுரை வெளியாவதற்கான வாய்ப்பை அதகரிக்கும்.

 

படி 6: கட்டுரையை சமர்ப்பித்தல் (Submitting the paper)

கட்டுரை இறுதிநிலையை எட்டியவுடன் வெளியீட்டாளரின் ஆசிரியர்க்கான வழிகாட்டியின்படி தகுந்த வழியில் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாகக் கட்டுரை சமர்ப்பித்தல் இணைய வழியாகவும் (Online submission), சில தபாலில் குறுந்தகடு வழியாகவும் மற்றும் வெகு சில தபாலில் அச்சுத்தாள் (Hard copy submission) வழியாகவும் உள்ளன.

படி 7: மீள் முயற்சி (Keep Trying)

இரண்டு முதல் ஐந்து திறனாய்வாளர்கள் (Reviewers) மூலம் வெளியீட்டாளர்கள் சமர்ப்பித்த கட்டுரையை திறனாய்வுசெய்து அவர்களின் நிலைப்பாட்டை ஒப்பிட்டு கட்டுரையின் தேர்வு நிலையை (Acceptance status) கட்டுரை ஆசிரியருக்கு தகுந்த வழியில் தெரிவிப்பர். சிலநேரங்களில் வெளியீட்டாளர்கள் கட்டுரையை மறுசீராய்வுச் (Revision) செய்து மறுசமர்ப்பிப்பிற்கு வேண்டுவர். இந்நிலையில் பதட்டம் மற்றும் சோர்வடையாது திறனாய்வை எதிர்கொண்டு கோரப்பட்ட திருத்தங்களை செய்து குறிப்பிட்ட நேரத்தில் மறுசமர்ப்பிப்பு (Re-submission) செய்ய வேண்டும்.

ஒரு ஆராய்ச்சியாளராக தங்களின் சகல திறமைகளையும் (Skills) பயன்படுத்தி ஒரு மேம்பட்ட ஆய்வுக்க்க்ட்டுரையை (Superior research paper) உருவாக்க முற்பட வேண்டும். நீங்கள் தேர்வுசெய்த வெளியீட்டாளர் ஒருவேளை உங்களின் கட்டுரையை விலக்கினாலும் (Reject), “வீழ்வதில் இல்லை தோல்வி, வீழ்ந்துகிடப்பதில்தான்” என்ற கோட்பாட்டிற்கிணங்க தளராது மறுமுறை எழுதி ஏனைய சஞ்சிகைகளில் (Other Journals) சமர்ப்பிக்க வேண்டும்.

 

மேலும் சில சிறுவிவரக் குறிப்புகள்:

      ஆய்வுக்கட்டுரை உருவாக்கத்திற்கு அப்பாற்பட்ட, நம் கட்டுரையை தேர்வுசெய்ய ஏதுவாக்கும் பயனுள்ள சில சிறுவிவரக்குறிப்புகள் கீழ்க்கண்டவாறு:

  • கல்லூரி அல்லது பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரி மூலம் கட்டுரையை அனுப்புதல் வெளியீட்டார்களிடம் ஒரு நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவதோடு ஆராய்ச்சிக்கு கூடுதல் பலன் கொடுக்கும்
  • திறந்த நிலை சஞ்சிகைகளில் (Open access Journals) கட்டுரைகளை வெளியிடுவதின் மூலம் அவை கட்டணமின்றி ஆய்வாளர்கள் வாசிக்க உதவுவதால் துரிதமாக தங்களின் வாசகர் வட்டத்தை அதிகரிக்க முடியும்
  • வெளியீட்டாளரின் சரியான வார்ப்புருவில் கட்டுரையை நேர்த்தியாக உருவாகுவதன் மூலமாகவும் வெளியீடாக சாதகமான சூழ்நிலையை உருவாக்கலாம்

 

முக்கிய தமிழ் இதழ்களின் பட்டியல்:

  • தமிழாய்வு, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை
  • அறிவியல் பூங்கா, மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், சென்னை
  • வல்லினம், புதுச்சேரி
  • அரிமா நோக்கு, சென்னை
  • அழகு, தூத்துக்குடி
  • தமிழ் நேயம், கோவை
  • திசை எட்டும், குறிஞ்சிப்பாடி
  • தாமரை, ஜனசக்தி அச்சகம், சென்னை
  • தமிழியல் ஆராய்ச்சி, புலமை மன்றம், சென்னை
  • மக்கள் சிந்தனை, குன்றக்குடி ஆதினம், குன்றக்குடி
  • கவிதா மண்டலம், சென்னை
  • சமூக விஞ்ஞானம், சென்னை
  • பனுவல், சென்னை
  • மாற்றுவெளி, பரிசல் புத்தக நிலையம், சென்னை
  • செந்தமிழ்ச் செல்வி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
  • இலக்கியப் பீடம், சென்னை
  • தமிழ்ப் பொழில், தஞ்சாவூர்
  • செந்தமிழ், தமிழ்ச் சங்கம், மதுரை
  • புலமை, சென்னை
  • தமிழ்க் கலை, சென்னை
  • தன்னானே, சென்னை
  • மணற்கேணி, சென்னை
  • சிற்றேடு, பெங்களூர்
  • தமிழ் மாருதம், மதுரை
  • காலச் சுவடு, மதுரை
  • Asian Studies, Chennai
  • Indian Literature, New Delhi
  • IJDL, Kerala
  • Journal of Tamil Studies, Chennai

 

இணையவழி கட்டுரை சமர்ப்பித்தல்: எடுத்துக்காட்டு

      ஒவ்வொரு இதழும் தன்னகத்தே ஒரு ISSN (International Standard Serial Number) அல்லது ISBN (International Standard Book Number) போன்ற சிறப்பு எண்ணைப் பெற்றிருக்கும். பொதுவாக, வெளியாகும் ஒவ்வொரு கட்டுரைக்கும் DOI (Digital Object Identifier) வழங்கப்படும்.

இணையவழி இதழ்கள் அனைத்தும் ஒரு வலைதளத்தைக் கொண்டிருக்கும். இணையமுகவரி மூலம் இதழை அடையலாம். அதில், குறைந்தபட்சம் Home, About, Log In, Register, Search, Current, Archives, Contact மற்றும் Announces போன்ற ஒன்பது பக்கங்கள் இருக்கும்.

  • Home என்பது இதழின் தலைப் பக்கமாகும். இதில் வலைதளத்தில் உள்ள பொதுவான விடயங்கள் “TAB” மூலம் இருக்கும்.
  • About என்ற வலைப் பக்கத்தில் இதழைப் பற்றிய அறிமுகம், ஏற்றுக்கொள்ளப்படும் கட்டுரைவகை மற்றும் துறை போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
  • Register என்ற பக்கத்தில் ஆய்வாளரின் பெயர், படிப்பு மற்றும் ஆய்வுத்துறை போன்ற விவரங்களை உள்ளீடு செய்து பதியவேண்டும்.
  • Log In என்ற பக்கம் முன் பதிந்த ஆய்வாளரின் தகவலைப் பொருத்து உள் நுழைவு பெயர் மற்றும் கடவுசொல் பயன்படுத்தி உள் நுழைவு செய்து கட்டுரை சமர்ப்பிக்க வழிவகை செய்யும். பொதுவாக கட்டுரை .pdf அல்லது .doc வடிவில் பதிவேற்றம் செய்யும் வகையில் இருக்கும்.
  • Search என்ற பக்கத்தில் திறவு சொற்களைப் பயன்படுத்தி தேவையான கட்டுரையைதேடிப் பெற முடியும்.
  • Current, Archives என்ற பக்கங்களில் தற்போதைய முந்தைய வெளியீடுகளில் வந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பைக் காணலாம்.

 panu1

படம் 1: இணையதள முகப்பு

 

 

 panu2

 

 

 

 

 

படம் 2: உள்நுழைவு

panu3

படம் 3:  வெளியீட்டு விளக்கப்படம்

 

முடிவுரை:

      ஆய்தலும் ஆய்ந்ததைப் பகுத்தலும் பகுத்தலைப் பகிற்தலும் ஒரு ஆய்வாளரின் முதனிலைக் கடமையாகும். அவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியமான ஆய்வுச் சமூகத்தை (Healthy Research Community) உருவாக்க முடியும். அத்தகைய சமூகத்தை உருவாக்க, ஆய்வாளர்கள் கட்டுரையை உருவாக்கிச் சமர்ப்பிக்கும் முறைகளை இக்கட்டுரையில் கண்டோம். அனைவரும் ஆரோக்கியமுறை ஆராய்ச்சி செய்து கட்டுரைகளை வெளியிட்டு வரும் தலைமுறைக்கு வெளிச்சம் தருவோம்.

 

மேற்கோள் பட்டியல்:

  1. http://www.ijser.org/howtopublishpaper.aspx
  2. http://www.apa.org/monitor/sep02/publish.aspx
  3. http://www.canberra.edu.au/library/research-gateway/research_help/publishing-research
  4. http://www.cs.indiana.edu/how.2b/how.2b.community.html
  5. http://www.jisc.ac.uk/media/documents/publications/briefingpaper/2010/bppublishingresearchpapersv1final.pdf

 

 

 

 

Series Navigationபழைய கள்தொடுவானம் 121. சிங்கப்பூரில் நேதாஜி.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *