வைகைச் செல்வியின் இயற்பெயர் ஜி.ஆனி ஜோஸ்பின் செல்வம். சென்னையில் அரசுப் பணியில்
உள்ளார்.கவிதை தவிரபெண்ணியம் தொடர்பான கட்டுரைகள் , சிறுகதைகள் எழுதியுள்ளார். பல
இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ‘ அம்மி ‘ என்னும் இக்கவிதைத் தொகுப்பு இவரது
முதல் கவிதை நூலாகும். மனிதம் , காதல் , சுற்றுச் சூழல் , வாழ்க்கை உறவுச் சிக்கல்கள் இவரது
கவிதையின் பாடு பொருட்கள் ஆகும்.
வைகைச் செல்வி, ” நிறைய உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்தவை என் கவிதைகள் ” என்று
தன் கவிதைகளை விமர்சிக்கிறார். கவிதைகள் எளியவை ; நேர்படப் பேசுபவை !
‘ சின்ன வித்தியாசம் ‘ என்ற கவிதை நம் சமூகச் சூழலைப் பதிவு செய்துள்ளது.
அன்று
அடிமைச் சிறையில் இருந்தோம்
காந்தியும் , நேருவும் , பட்டேலும்
சந்திர போஸும் , பாரதியாரும்
வீர சுதந்திரம் வேண்டிப் பாட
கதவுகள் திறந்தன
தலைமுறைகள் கடந்தோட
இன்றும் நாங்கள் சிறையில்தான்
ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்
சாவி —
எங்களிடமே இருக்கிறது
—- ‘ இன்னும் நாங்கள் சிறையில்தான் ‘ என்பது பெண்ணியச் சிந்தனையாக அமைந்துள்ளது . ‘ சாவி ‘
விடாமுயற்சி என்பதன் குறியீடு !
‘ உள்ளே ஒரு வானவில் ‘ என்ற கவிதை தன்னம்பிக்கை பற்றிப் பேசுகிறது.
தாழ் திறக்கும் என்றால்தான்
காத்திருத்தல் சுகம்
இல்லையெனில்
மரண அவஸ்தை
—– என்பது கவிதையின் தொடக்கம். தன்னிலை சார்ந்த ஒரு பரிசீலனை தொடர்கிறது.
பகலென்று தெரிந்தால்
சிறகுகளை விரிக்கலாம்
இரவென்று தெரிந்தால்
கூட்டிற்குள் ஒடுங்கலாம்
தாழ் திறக்காவிட்டாலும்
இந்த மரண அவஸ்தை
அந்திப் பொழுதின் வானவில்
— ‘ வானவில் ‘ என்பது திடமான வெற்றிகரமான தன்னம்பிக்கையாக அமைந்துள்ளது. இக்கவிதையிலும் பெண்ணியச் சிந்தனை பதிவாகியுள்ளது.
‘ காட்டு வெளியினிலே ‘ ஒரு மெல்லிய நீண்ட காதல் கவிதை !
அடர்ந்த காட்டில் ஒரு காதல் ஜோடி ! பெண் கூற்றாகக் கவிதை அமைந்துள்ளது.
ஒரு மான் குட்டியைப்போல நான்
அங்குமிங்கும் துள்ளியோடினேன்
மண் வாசனையை முகர்ந்தேன்
ஒவ்வொரு இலையாகத் தொட்டேன்
—- என்ற வரிகளில் இயற்கை நேசம் பளிச்சிடுகிறது.
எல்லா மரங்களும்
நம்மைச் சுற்றி நிற்கையில்
நான் உன்னைச் சுவாசித்தேன்
—- என்ற வரிகள் காதலை வெகு அழகாக உணர்த்துகின்றன. அப்போது காதலன் ஒரு கவிதை சொல்கிறான்.
மரம் தனது கைகளை உயர்த்தி
வானில் எழுத ஓயாமல் போராடுகிறது
ஆனால் பூமியோ விடுதலை தருவதில்லை
—- பின்னர் காதலன் பிரிந்து போகிறான்.
மரங்கள் —
இலைகளை
என் கண்களின் வழியாக
உதிர்த்துப் போட்டன
—- நயமான புதிய அழகான படிமம் நம்மை வசீகரிக்கிறது.
அன்று நீ
அந்தக் காட்டிற்குள் என்னை
அழைத்துச் சென்றிருக்காவிட்டால்
இன்று என் மனசும் அல்லவா
கன்னியாக வாழ்ந்து கொண்டிருக்கும்
—- என்று கவிதை முடிகிறது.காதலில் மனங்கலந்து மகிழ்தல் ஒரு கவிதையாகத் தங்கிவிட்டது புலப்படுகிறது.
புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ அம்மி ‘ ! அது தற்போது பயன் இல்லாமல் இருப்பது கவிஞருக்கு
வருத்தம் தருகிறது. அம்மா பயன் படுத்திய அம்மி இப்போது வெறுங்கல்லாகக் கிடக்கிறதாம். மின்சாரம்
இல்லாத ஓர் இரவில் அவள் அம்மியைப் பயன்படுத்துகிறாள் . பருப்புத் துவையல் அரைக்கிறாள். அப்போது வீடே மணக்கிறது… அதுவும் அம்மாவின் வாசனையில் …எனக் கவிதை முடிகிறது.
‘ புள்ளிகள் ‘ என்றொரு கவிதை ! இதில் புள்ளிகள் என்ற சொல் மையப்பட்டுச் சில கருத்துகள் அதை
நோக்கிக் குவிக்கப்படுகின்றன. சமுதாயச் சாடலும் இதில் உள்ளது.
வானத்தில் பறக்கையிலே
கீழே பார்த்தால்
காலைக் கதிரொளியில்
மனிதர்களும்
அசைகின்ற புள்ளிகளாம்
—- என்பது கவிதையின் தொடக்கம்.
கரும்புள்ளி … செம்புள்ளி
அவமானச் சின்னங்கள்
—- என்கிறார்.
ஒன்றுக்கும் உதவாமல்
வீண் ஆர்ப்பாட்டம் செய்கின்ற
‘ பெரும் புள்ளி ‘ பலருண்டு
என்ற வைகைச் செல்வி முற்றுப் புள்ளி பற்றியும் கருத்து சொல்லியிருக்கலாம்.
உன்னால்
மானின் புள்ளிகளை
அழித்திடத்தான் இயலுமா?
—- என்று கவிதையை முடிக்கிறார்.
‘ உயிரின் ஒலி ‘ என்ற கவிதை , காதல் பிரிவைப் பற்றிப் பேசுகிறது. காதலைச் சொல்ல முடியாத
தவிப்பும் பதிவாகியுள்ளது.
இரவிலே
மொட்டானது மலரும் ஒலியை
நீ கேட்டுவிட்டால் கூட
எனக்குப் போதும்
அவ்விருளிலே நிலழாய்
நானும் சாய்வேன்
‘ பூப்பூக்கும் ஓசை , அதைக் கேட்கத்தான் ஆசை ‘ என்பது சினிமா பாடல் வரி! முதல் சிந்தனைப் பதிவு
யாருடையது ?
இரும்புக் கரமெனை இழுப்பதற்குள்
அவ்வார்த்தைகளை
ஒரே ஒரு முறை
உன் விரல்களைப்பற்றிக் கூற
என் ஆன்மா துடிக்கிறது
—- ‘ இரும்புக் கரம் ‘ எதைக் குறிக்கிறது ? பெற்றோர் பார்த்த வரனையா ? அல்லது விதியையா ?
கவிதையின் முத்தாய்ப்பு , காதல் யாசித்தலை வித்தியாசமாகக் கவித்துவப்படுத்துகிறது.
அறைக்குள் அசைந்தாடும்
உன் நிழலை மட்டும்
எனக்குத் தருவாயா ?
—- இத்தொகுப்பின் சிறந்த கவிதையாக இதை நான் நினைக்கிறேன்.
இத்தொகுப்பு 2002 – இல் வெளியானது. அதன் பிறகு கவிஞர் அடுத்த தொகுப்பு வெளியிட்டாரா
எனத் தெரியவில்லை . சாராசரிக்கும் மேலான கவிதைகளைக் கொண்டது இத்தொகுப்பு.
- முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்
- வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….
- கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016
- சோறு மட்டும்….
- ராப்பொழுது
- இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7
- வீண்மழை
- காப்பியக் காட்சிகள் 6.வீடுபேறடையும் வழி
- வாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்
- செங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக
- மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்
- தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்
- வௌவால்களின் தளம்