சோறு மட்டும் வாழ்க்கையில்லை
சுதந்திரம் வேண்டுமென்று
பல வண்ணக் கொடியேந்தி
பவனிகள் வருகின்றார்.
சுதந்திரம் கண்ட பின்னே
அடிமைத்தனம் வேண்டுமென்று
பொய்க்கவர்ச்சிக் காடுகள்
வீழ்ந்து கிடக்கின்றார்.
வறுமை இன்னும் ஒழியவில்லை
அறியாமையும் தீரவில்லை
சமுதாய நீதி என்னும்
மலர்ச்சி இன்னும் கூடவில்லை.
தேர்தல்கள் வந்தனவே
தேர்தல்கள் போயினவே
ஆகஸ்டுகளும் வந்தனவே
ஆகஸ்டுகளும் போயினவே
ஆண்டுகளுக்கும் கூட இங்கு
நரைத்தது தான் மிச்சம்.
நூறு ஆண்டு நோக்கி
வேகங்கள் காட்டுகிறோம்.
இன்னும் இன்னும் இங்கு
பெரும்பான்மை மக்களுக்கு
ஜனநாயக சிந்தனையோ
சிறுபான்மை சிறுபான்மையே!
ஒரு ஓட்டு என்பதும்
கூர் தீட்டினால் இங்கு
மாற்றத்தின் வெள்ளம் தான்.
நம்பிக்கை வெளிச்சம் தான்.
பிச்சையாய் விழும் சில
சில்லறைச் சத்தங்களில்
தேசிய கீதமும் இங்கு
மூழ்கிப் போனதுவே.
தலை நிமிர்ந்து நில்லடா எனும்
தமிழன் முழக்க மெலாம்
தலை கவிழ்ந்து போனதுவே
நிலை குலைந்து வீழ்ந்ததுவெ
ஊழல் அழிக்க இங்கு
தேர்தலே ஆயுத மென்றார்.
தேர்தலே ஊழல் என்றால் இனி
ஊழலே நம் வாழ்க்கை !
கோடி கோடி அவர்கள்
குவிக்கட்டும் நமக்கென்ன?
சில நூறு நமக்கு அவர்கள்
தந்து விட்டு ஜெயிக்கட்டும்.
ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்ன?
நாமே இங்கு அம்பெய்தி
நம்மையே அழிக்கின்றோம்.
இலவசங்கள் கொட்டுகின்றார்
இதுவும்கூட “டாஸ்மாக்” தான்.
இலவச போதையிலே இனி
எல்லாம் இங்கு தள்ளாடும்.
கடன்சுமை நமக்கில்லை என
கனவுசுமை தாங்காது
கதைகள் பல பேசுவதில்
காலம் நமை உதைத்தேகும்.
லாலிபாப் நீட்டுகின்றார்..நமை
சிறுபிள்ளை ஆக்கி விட்டார்.
காலி என்பார் கஜானா இனி
காட்டுவார் பொம்மை பட்ஜெட்டை.
இயலாத மக்களுக்கு பல
திட்டங்கள் போடுவதும்
திட்டங்கள் நிறைவேற்றி
ஆளுவதே நல் ஆட்சி.
அடிக்கல்லை நாட்டிவிட்டு
அடியோடு மறப்பதுவும்
வளர்ச்சிப்பாதையின் வழி
மறிப்பதுவும் நன்றல்ல.
இருப்போன் இல்லான்
இருவரிடையே பெரும்பிளவு
இருப்பதுவும் நாட்டுக்கு
நன்றன்று!நன்றன்று!
தொழில் பெருக வளம் பெருகும்
தொழிலாளர் நலம் பெருகும்
தொல்லை தரும் வேலையின்மை
தொலைந்தே போகும்.
பொதுவளர்ச்சி செழித்தோங்கி
பங்கிட்டு எல்லோரும் அந்த
வறுமைக் கோடு தனை
நொறுக்கிடலே நல்லாட்சி.
மத்தாப்பு பிரகாசம் நம்
வழிகாட்ட வாராது..ஒரு
நிலையான ஒளிச்சுடரே
நலமான வாழ்வு தரும்.
வாக்கு வங்கி நம் வங்கி
பொன் முட்டை வாத்துதனை
தந்திரமாய் அவர் அறுக்க
நாம் கத்தி நீட்டுவதோ?
சிதறிடிக்கும் புராணங்கள் அல்ல
சிந்தனை ஒன்றே நம் விடியல்.
வேட்டை விளம்பரங்கள் இனி
நமைத் தாக்க விடலாமோ?
தொலைக்காட்சி ஊடகம் எனும்
வௌவ்வால்கள் அடையுமிடம்
ஆக்காதீர் நம் வீடுகளை அன்பு
இல்லறங்கள் தழைக்கட்டும்.
எல்லோரும் நல்லவரே எனும்
மானிட அபிமானம்
ஊற்றெடுத்து எங்கும்
பாயட்டும் பரவட்டும்.
சாதி மத வேற்றுமைகள்
சாகட்டும் சாகட்டும் புது
சரித்திரங்கள் படைக்கின்ற
எண்ணங்கள் மலரட்டும்!
=============================
- முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்
- வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….
- கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016
- சோறு மட்டும்….
- ராப்பொழுது
- இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7
- வீண்மழை
- காப்பியக் காட்சிகள் 6.வீடுபேறடையும் வழி
- வாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்
- செங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக
- மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்
- தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்
- வௌவால்களின் தளம்