காப்பியக் காட்சிகள் 9. சிந்தாமணியில் விழாக்கள்

This entry is part 9 of 13 in the series 20 ஜூன் 2016

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

உடலும் உள்ளமும் சோர்வடைந்த மக்கள் ங்களின் சோர்வைப் போக்கிக் கொள்வதற்காகவும் உற்சாகப்படுத்தி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி முன்பைவிடத் தொழிலைச் செம்மையாகச் செய்வதற்கு உதவும் தூண்டுகோல்களாக விழாக்கள் விளங்குகின்றன. இவ்விழாக்களைச் சமய விழாவென்றும் சமுதாய விழாவென்றும் குடும்ப விழாவென்றும் மூவகையாகப் பகுக்கலாம். சீவகசிந்தாமணியில் பெயர்சூட்டுவிழா, திருமணவிழா, முடிசூட்டுவிழா ஆகிய குறிப்பிடத்தக்க விழாக்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. பிற விழாக்கள் பலவாறு சிந்தாமணியில் இடம்பெற்றிருந்தாலும் இம்மூவகை விழாக்களும் ஆசிரியரால் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.

பெயர்சூட்டுவிழா

பெயர்சூட்டு விழா என்பது குடும்ப விழாவாகும். இவ்விழா குழந்தை பிறந்த 12-ஆவது நாளில் நடக்கும்(2705). குழந்தை பிறந்த மகிழ்ந்சியான செய்தியை உறவினர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் முறையாக அறிவித்தனர்(2702). உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்தவுடன் குழந்தைக்குப் பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெறும். குழந்தைக்குத் தம் முன்னோர்கள் பெயரையும் தமக்கு உதவிய நண்பர்களின் பெயரையும் தெய்வத்தின் பெயரையும் இடுவது மரபாகக் கொள்ளப்பட்டது(2705).

குழந்தைகள் பேரும் புகழும் பெற்று விளங்க ஏழை எளியவர்களுக்குத் தானம் வழங்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர்கள் மன்னர்களாக இருப்பின் அரண்மனைக் கருவூலத்தில் இருந்த பொருள்களையெல்லாம் எடுத்துச் செல்வதற்கு உரிமை வழங்கப்பட்டது. அரண்மனைக்கு வந்து பொருள்களை எடுத்துச் செல்ல இயலாதவர்களுக்கு அவர்களின் இல்லம் தேடிப் பொருள்கள் சென்றடையுமாறு செய்தனர். இவ்வாறு பெயர்சூட்டுவிழா கொண்டாடப்பட்டதை சிந்தாமணி எடுத்தியம்புகிறது.

திருமண விழா

தனி மனிதர்களைச் சிறு சிறு குடும்பங்களாக உருவாக்குவதற்குத் திணரமணங்கள் இன்றியமையாததாக விளங்குகின்றது. திருமணங்களுக்குப் பிறகு குடும்பம், பிள்ளைப்பேறு முதலிய இன்றியமையாச் சிறப்புகள் ஏற்படுகின்றன. ஆகையால் திருமணங்கள் சமுதாயக் கூறுகளில் இன்றியமையாத கூறாக விளங்குகின்றது. சீவகசிந்தாமணியில் பத்துத் திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. சச்சந்தன் விசயை திருமணம், பதுமுகன் கோவிந்தை திருமணம், சீவகனுக்கும் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகியோருக்கும் இடையே நடக்கும் திருமணங்கள் பற்றிய செய்திகள் சிந்தாமணியில் சிறப்பாக ஆசிரியரால் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.

திருமணத் தொடக்கம்

திருமணங்கள் பெரும்பாலும் சுயம்வரத்தின் அடிப்படையில் அமைந்தன. சில திருமணங்கள் போட்டியை மையமாக வைத்தும், சில திருமணங்கள் காந்தருவம், சோதிடம் போன்றவற்றின் அடிப்படையிலும் நடைபெறலாயின. வேடர்களை வெல்லுதல், இசைப்போட்டியில் வேல்லுதல், பாம்பின் விடத்தை நீக்குவதில் வெல்லுதல், திரிபன்றியை வீழ்த்துவதில் வெல்லுதல் என்று திருமணத் தோட்க்கம் அமைகின்றது. உறவுமுறையை மையமிட்டுச் சீவகன் குணமாலை, கனகமாலை ஆகியோரின் திருமணங்கள் நடைபெறுகின்றன. நண்பர்களின் வற்புறுத்துதலால் சீவகன் சுரமஞ்சரி திருமணம் நடைபெறுகிறது. சோதிடக்கலையின் தூண்டுதலால் சீவகனுக்கும் கேமசரி, விமலை ஆகியோருக்கும் திருமணங்கள நடைபெறுகின்றன. இவ்வாறு தொடங்கும் திருமண நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் மணமகனாகக் கருதப்பட்டனர்.

திருமண அறிவிப்பு

திருமணத்திற்கான சுயம்வர அறிவிப்பையோ திருமணத்தின்போது வழங்கும் சீதனப்பொருள்களைப் பற்றிய குறிப்புகளையோ முரசறைந்து மக்களுக்கு அறிவித்தனர்(440). முரசறையாமலும் திருமணம் நடந்தது. போட்டித் திருமணங்கள் அனைத்தும் முரசறைந்த பின்னரே நடைபெற்றன. காதல் திருமணங்கள் பெண்ணின் பெற்றோர்கள் ஆடவர்களின் இல்லத்திற்குத் திருமணம் தொடர்பாகப் பேச, மொழி வல்லார்களை அனுப்பிப் பேசச் செய்தனர்(1058). கணியன் குறிப்பிட்ட நல்ல நாளில் திருமணம் நடைபெற்றது(1062)

திருமண நிகழ்ச்சிகள்

திருமணத்தில் மங்கல நீராட்டல், வேள்வித்தீ வளர்த்தல், சீர்வழங்குதல், விருந்திடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முல்லையும் இருவாட்சியும் சூழ்ந்த பந்தல் மணமன்றமாகக் கருதப்பட்டது(485).

மங்கல நீராட்டல்

மணமகனை மங்கல நீருாட்டுதற்கு அமரச் செய்து, பெண்கள் நாழி உழக்கிலிருந்த நெய்யை அருகம்புல்லால் தோய்த்து முடியில் தடவுகின்றனர்(488). மங்கல மொழி கூறிச் சீவகனை நீராட்டுகின்றனர். பின்னர் ஏறுகோட்பறை முழங்க மணமகன் மணமகள் இல்லத்திற்கு அழைத்து வரப்படுகின்றான்(489).

வேள்வித்தீ வளர்த்தல்

திருமணத்தில் வேள்வித்தீ வளர்த்தல் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது(823). காந்தருவதத்தையின் திருமணத்தில் வேள்வித்தீக்கு நான்கு நூறாயிரம் குடங்களில் நெய் கொண்டு வருகின்றனர்(823). வேள்வித்தீயை நன்கு எரியச் செய்வதற்குப் பலா மரக்கரண்டியால் நெய்யைச் சொரிந்தனர்(834). மணமக்கள் வேள்வித்தீயை வலம் வருகின்றனர்(835). நன்னீரை மணமகனின் கைகளில் சொரிந்து பெண்ணோடு இவற்றையும் கொள்க என்று மணமகளின் பெற்றோர் அறிவித்தனர்(489,835).

சில திருமணங்களில் தருப்பைப் புல் மோதிரம் அணிவித்தலும், அருந்ததி பார்ப்பதும் பசுவின் பாலால் காலடிகளைப் கழுவுதலும் இன்னடிசிலை கண்ணால் காண்பதும், திருமணச் சடங்குகளாயின(2464,2465). இக்காப்பியத்தில் இடம்பெறும் அனைத்துத் திருமணங்களும் தீவலம் வந்து, காப்பு நாண் கட்டித் திருமணம் செய்வதாகவே அமைந்துள்ளன.

சீர் வழங்குதல்

திருமண விழா நிறைவு பெற்றதும் மணமக்களுக்குப் பெண்ணின் பெற்றோர் பெருஞ்செல்வங்களை வழங்கிச் சிறப்பித்தனர்(2079,479,490,555). கோவிந்தையின் திருமணத்தின்போது நந்தகோன் சீதனப்பொருளாக இரண்டாயிரம் பசுக்களும் எழு பொற்பவைகளும் வேண்டிய அளவு நெய்யும் பாலும் கொடுக்கிறான்(490). குணமாலையின் தந்தை குபேரதத்தைன் 700 சேடிப்(பணிப்) பெண்களையும் கோடிப் பொன்னையும் 5 ஊர்களையும் சீதனமாக வழங்குகிறான்(1064).

சுரமஞ்சரியின் தந்தை குபேரதத்தன் பெண்ணோடு 108 பெண்களும் ஒன்றரைக் கோடிப் பொன்னையும் மூன்று ஊர்களையும் சீதனமாகக் கொடுக்கின்றான்(2079). மணமக்களுக்கு உறவினர்களும் பரிசுப் பொருள்களை வழங்கிச் சிறப்பிக்கின்றனர்(830). வந்த பரிசுப் பொருள்களை எழுதிக் குறித்து வைத்துக் கொள்ளும் வழக்கமும் அந்நாளில் நடைமுறையிலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது(829)

விருந்திடுதல்

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்திடுதல் என்பது முக்கிய நிகழ்ச்சியாக அந்நாளில் இடம்பெற்றிருந்தது(830). ஆனால் திருமணத்தில் எவ்வகையான உணவு வழங்கப்பட்டது என்பது பற்றிய குறிப்புகள் சிந்தாமணியில் இடம்பெறவில்லை. ஆனால் விதுந்திடும் நிகழ்ச்சியில் எச்சில் இலை எடுப்பவர்கள், சமையல் தொழில் செய்பவர்கள் தங்கள் கால்களில் சிலம்பு, கிண்கிணி என்ற மணிகள் நிறைந்த அணிகலன்களை அணிந்திருந்தனர் என்பதிலிருந்து விருந்திடுதல் என்பது மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கும் என்பதை அறியலாம்(832)

மணமக்கள் புத்தாடை அணிந்து காப்பு நாண் கட்டித் திருமணத்தில் பங்கு பெற்றனர். திருமணத்தில் மணமகளுக்குத் தாலியோ, பிறவகை அணிகலன்களோ சிறப்பாக அணிவிக்கப்படவில்லை என்பதைக் கொண்டு அக்காலத்திருமணம் பல புதுமைகளைக் கொண்டதாக விளங்கியது என்பது நோக்கத்தக்கது.

முடிசூட்டுவிழா

மன்னர்கள் தங்களை நாடாளும் மன்னனாக அறிக்க எடுக்கப்படும் விழா முடிசூட்டுவிழாவாகும். இது நாடு தழுவிய விழாவாக வடைபெற்றது(2388). மன்னனின் முடிசூட்டுவிழா மக்களுக்கு முரசறைந்து அறிவிக்கப்பட்டது. முரசறைவோன் ஆடை அணிகலன்களையும் பால்சோற்றையும் சுமக்கும் அளவு கொள்க என்று அறிவித்தான்(2401,2390). சோதிடர்கள் குறிப்பிட்ட நல்ல நாளில் முடிசூடு விழா நடைபெற்றது(2362) 108க் குடங்களில் பாற்கடலில் இருந்து நீரைக் கொண்ர்ந்து மன்னனை நீராட்டினர்(2366).

தூய அழகிய பட்டாடை மன்னனுக்கு அணிவிக்கப்பட்டது(2358). மல்மழை பொழிய உறவினர்கள் சூழ முடிசூட்டுவிழா இனிதாக நிகழ்ந்தது(2366). முடிசூடிக்கொண்ட மன்னனைச் சிற்றரசர்கள் காணிக்கையிட்டு வணங்கினர்(2367). கடிகையர் மங்கல வாழ்த்துக் கூறினர்(2367).முடிசூடிய மன்னன் சிறைக்கோட்டத்தை இடித்துத் தள்ளினான்(2372). பதினாறு ஆண்டுகளுக்கு வரிவசூலிப்பதை நிறுத்தினான்(2372). கோவில்களுக்கும், அந்தணர், சோதிடர் ஆகியோருக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன(2373). பார்வையற்றவர், நோயுற்றவர், கணவனைப் பிரிந்தவர் ஆகியோருக்குப் பெருஞ்செல்வம் வழங்கப்பட்டது(2376).

இவ்விழாக்கள் அனைத்து மக்களும் விரும்பும் விழாக்களாக, ஏழை எளிய மக்களுக்குப் புதுவாழ்வு வழங்கும் விழாவாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பதுடன் அவர்களுக்குச் சீதனம் வழங்கும் வழக்கமும் தற்காலத்தைப் போன்று இருந்துள்ளதும் சிந்தாமணிக் காப்பிய வாயிலாக புலப்படுவது நோக்கத்தக்கதாகும். (தொடரும்-10)

Series Navigationதமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்சூரிய குடும்பத்தின் புதிய ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் வானியல் விஞ்ஞானிகள்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *