தொடுவானம் – 124. தேசிய கீதத்தில் திராவிடம்

This entry is part 11 of 13 in the series 20 ஜூன் 2016

திராவிட நாடு வேண்டும் என்ற அண்ணாவின் கோரிக்கைக்கு சட்ட திருத்தம் மூலம் பண்டிதர் ஜவகர்லால் நேரு தடை போட்டார். திராவிட இயக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். காங்கிரசார் கொண்டாடியதோடு கேலியும் பேசினர். திராவிட நாடா அது எங்கே உள்ளது என்று கேட்டனர். அது வெறும் மாயை என்றனர்.எங்குமே இல்லாமல்தான் பாகிஸ்தான் என்ற நாடு என்பது மதத்தின் அடிப்படையில் தோன்றியதை அவர்கள் அறியவில்லை.
திராவிடர் இனம் பற்றி இந்திய மக்கள் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். திராவிடர் இனமும் நாகரிகமும் 5000 ஆண்டுகள் பழமை மிக்கது என்பதால் சரித்திரம் தெரியாதவர்களுக்கு அதை அறிந்துகொள்ள முடியாதுதான். பாட நூல்களில் திராவிடர் நாகரிகம் குறித்து எழுதப்படவில்லை.
மொழியியல், அறிவியல், அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியும்கூட அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இந்திய மக்களுக்கு இல்லை. எதற்கு இந்திய மக்கள்? திராவிடர் இனத்தவரே தங்களை திராவிட இனத்தவர் என்று ஒப்புக்கொள்ளவில்லையே? தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தாங்கள் அனைவரும் திராவிட இனத்தவர் என்பதை ஏற்க மறுத்தனர்.
இவர்கள் அனைவரும் ஓர் உண்மையை மறந்துபோயினர். இந்திய மக்கள் அனைவருமே திராவிடர் என்ற சொல்லுக்கு தங்களையும் அறியாமல் மரியாதை செலுத்துவதை அவர்கள் இன்றுவரை அறியாமல் இருப்பது கேலிக் கூத்தாகும்! அதற்கு நாம் வங்காளத்துக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கு நன்றி சொல்லவேண்டும்.
சுதந்திர இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர் தாகூர். திராவிடர் இனம், திராவிட நாடு பற்றி அவர் அறிந்திருந்தார். தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய நான்கும் திராவிடம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அதனால்தான் அவர் அவர் எழுதிய இந்திய தேசிய கீதத்தில் மற்ற மாநிலங்களின் பெயர்களைச் சேர்த்தபோது இந்த நான்கையும் சேர்த்து “திராவிட ” என்று எழுதினார்.
” பஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா திராவிட …” என்று அவர் தேசிய கீதம் எழுதியபோதே இந்தியாவின் தென் பகுதியை திராவிடர் நாடு என்றே கூறிவிட்டார். தேசிய கீதம் பாடும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்தும்போது இந்திய மக்கள் அனைவருமே திராவிடத்தையும் அங்கீகரித்தே அதற்கு மரியாதை செலுத்துகின்றனர் என்பதை இதுவரை யாரும் எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள்!
திராவிட நாடு இல்லை என்பதற்காக இனிமேல் திராவிட என்ற வார்த்தையை எடுத்துவிட்டு வேறொரு புதிய தேசிய கீதமா எழுதுவார்கள்? ஆதலால் திராவிட நாடு என்பது இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருந்து வருவதை யாராலும் மறுக்க இயலாது.
பெரியாரும் அண்ணாவும் திராவிட இயக்கத்தினரும் திராவிடர் என்ற என்ற பெயரில் முதன்முதலாக ஒரு இயக்கம் தோற்றுவித்தபோது ஒரு பெரும் தவற்றைச் செய்துவிட்டனர். அதை சுயமரியாதை இயக்கம் என்றும் பகுத்தறிவு பாசறை என்றபோதும் அதை தமிழகத்தில் மட்டுமே பறைசாற்றியது பெரிய குறையாகும். அது போன்ற கருத்துள்ள மற்ற திராவிட மாநிலங்களிலும் அதை ஆர்வமுடன் ஏற்கும் படித்த தலைவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலம் அங்கேயும் திராவிடக் கொள்கைகளைப் பரப்பியிருக்க வேண்டும். அங்குமட்டும் மக்கள் சுயமரியாதையுடன்தான் வாழ்ந்தனரா. அங்கெல்லாம் மூடப் பழக்க வழக்கங்கள் இல்லையா? அங்கேயும் பகுத்தறிவுச் சிந்தனை தேவையில்லையா? அப்போதெல்லாம் கேரளாவை ஆட்சி செய்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். நாத்திகக் கொள்கையுடைய பெரியாரும் அண்ணாவும் நம்பூதிரிபாட் போன்ற கேரளாவின் முதல்வரைச் சந்தித்து திராவிட நாடு பற்றியாவது கூறியிருக்கலாம். எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படங்களில் திராவிடக் கொள்கைகளைப் பரப்பியவர்கள் அதே பாணியில் ஆந்திராவில் என்.டி. ஆரையும் பயன்படுத்தியிருக்கலாம். அவருக்கும் அரசியலில் குதிக்கும் ஆர்வம் இருந்துள்ளது. தனியாகவே ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி ஆட்சியைப் பிடித்து ஆந்திர முதல்வர் ஆனவர் என்.டி. ஆர். அப்படிச் செய்திருந்தால் திராவிடர் இயக்கம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் வேரூன்றி மாபெரும் தென்னிந்திய இயக்கமாக உருவெடுத்திருக்கும்.
அப்படி திராவிட இயக்கம் வளர்ந்திருந்தால், அன்று அண்ணா பாராளுமன்றத்தில் தனி திராவிட நாடு கோரிக்கை வைத்தபோது ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக ஆதரவு தந்து குரல் கொடுத்திருப்பார்கள். திராவிட நாடு கோரிக்கைக்கும் வலுவான ஆதரவு கிடைத்திருக்கும். தடைக் சட்டம் கொண்டுவருவதற்குப் பதிலாக நேருவும் யோசித்திருப்பார். தெற்கு மாநிலங்கள் அனைத்தையும் இழ்ந்து போவதா என்றும் தடுமாறியிருப்பார். வேறு வழியின்றி ஒரு வேளை பரிசீலனையாவது செய்திருப்பார். தனித்து தமிழகம் மட்டுமே குரல் கொடுத்தால் எளிதில் சட்டத்தின் மூலம் தடை போட முடிந்தது.
செல்வராஜ் ஆசிரியர் மாலையில் என்னைப் பார்க்க வருவது எனக்கு ஒருவகையில் பயனுள்ளதாகவே அமைந்தது. அவர் தினசரி தமிழ்ப் பத்திரிகைகள் படிப்பவர். அதனால் தமிழகத்தின் அரசியல் நிலவரங்களை நன்கு அறிந்தவர்.
அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் உண்டாகும் மாற்றங்களை நாங்கள் ஒவ்வொன்றாக அலசி ஆராய்வோம். தமிழக மக்களிடையே இனப்பற்றையும் மொழிப்பற்றையும், அரசியல் விழிப்புணர்வையும் திராவிட இயக்க ஆட்சியின்போது அண்ணாவால் உருவாக்க முடிந்தது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் அரசு அலுவலங்களில் சாமிப் படங்களை அகற்றும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அலுவலகங்களில் பூஜை செய்வது தடை செய்யப்பட்டது. கோப்புகள் தேங்கி நிற்காமல் துரிதமாக நகர அதிகாரிகளின்மீது கண்காணிப்பு அதிகமானது. அதன்மூலம் அரசு இயந்திரம் சிறப்புடன் செயல்படலாயிற்று.
தமிழக மக்களின் ஒற்றுமையைக் குலைத்தது சாதி வேற்றுமை. சாதிகள் இல்லை என்பது பகுத்தறிவுப் போதனை. தந்தை பெரியார் மேடைகள்தோறும் சாதிகளை ஒழிக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். சாதியை உருவாகியவன் ஆரியன் என்று அவர் அவர்களின் வேதங்களின் மூலமே ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினார். பெரியாரின் துணிவான பிரச்சாரத்தால் தமிழகத்தில் சாதிகள் பற்றிய விழிப்புணர்வு உண்டாயிற்று.
சாதியை விரட்டியடிக்க இதுவே ஏற்ற தருணம். பகுத்தறிவு சிந்தை படைத்தவர்கள் இப்போது தமிழகத்தை ஆள்கின்றனர். ஆதலால் சட்டங்கள் மூலமாகவும், அறிவுப்பூர்வமான விளக்கங்கள் மூலமாகவும் சாதியை அடியோடு போக்க இதுவே நல்ல நேரமாகவும் அமைந்தது.
சாதியை ஒழித்து அனைவருமே சமம் என்று கூறும் வகையில் அண்ணா இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் . அது சுயமரியாதைத் திருமணம். இதில் ஜாதகம் பார்க்கத் தேவையில்லை. இத்தகைய திருமணங்கள் நடைபெற சமய சடங்குகளும், புரோகிதர்களும், பிராமணர்களும் தேவை இல்லை.சமுதாயத் தலைவர்களின் சொற்பொழிவுகளும் மணமக்களுக்கு அறிவுரைகளும் சொல்லி பொது மேடையில் திருமணங்கள் நடைபெறலாயின.இது மாபெரும் சமுதாய புரட்சியாகும். இதன் மூலம் பல கலப்பு திருமணங்கள் நடந்தன.காதல் திருமணங்களுக்கும் ஆதரவு பெருகியது. சீர்திருத்தத் திருமணங்கள் சாதி ஒழிப்பில் முதல் படியாக மாறியது.
சுயமரியாதைத் திருமணங்களால் இன்னொரு நன்மையையும் உண்டானது. வரதட்சணைக்கு எதிராக குரல் தந்தவர் பெரியார். சுயமரியாதைத் திருமணங்களில் வரதட்சணைக்கு இடம் இல்லாமல் போனது. காதல் கலப்பு திருமணங்களிலும் அவ்வாறே வரதட்சணை கிடையாது. சமுதாயத்தில் புரையோடிய ஒரு கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சீர்திருத்தத் திருமணங்கள் உதவின.
அண்ணாவின் தலைமையின்கீழ் தமிழகம் தமிழ் மாநிலமாக மாறியது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தமிழுக்கு சிறப்பு உண்டாயிற்று.
சில நாட்களில் செல்வராஜ் என்னுடனே விடுதி உணவகத்தில் இரவு உணவு உண்டு திரும்புவார், அவர் வேட்டியும் முழுக்கை சட்டையும் அணிந்து ஒரு அரசியல்வாதிபோல் காட்சி தருவார். அவருடன் நான் அரசியல் பேசுவதாக விடுதி மாணவர்கள் நினைப்பதுண்டு. அதனால் என்னை அவர்கள் டி.எம்,.கே. என்றே அழைப்பதுண்டு!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationசூரிய குடும்பத்தின் புதிய ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் வானியல் விஞ்ஞானிகள்கனவு இலக்கிய வட்டம் ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

9 Comments

 1. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  ///அது சுயமரியாதைத் திருமணம். இதில் ஜாதகம் பார்க்கத் தேவையில்லை. இத்தகைய திருமணங்கள் நடைபெற சமய சடங்குகளும், புரோகிதர்களும், பிராமணர்களும் தேவை இல்லை.சமுதாயத் தலைவர்களின் சொற்பொழிவுகளும் மணமக்களுக்கு அறிவுரைகளும் சொல்லி பொது மேடையில் திருமணங்கள் நடைபெறலாயின.இது மாபெரும் சமுதாய புரட்சியாகும். இதன் மூலம் பல கலப்பு திருமணங்கள் நடந்தன.காதல் திருமணங்களுக்கும் ஆதரவு பெருகியது. சீர்திருத்தத் திருமணங்கள் சாதி ஒழிப்பில் முதல் படியாக மாறியது///

  தந்தை பெரியார், பகுத்தறிவுவாதியின் கிழவர்-குமரி சீர்திருத்தத் திருமணம் சுய மரியாதைபடி நடக்க வில்லை.

  செத்துப்போன திராவிட நாட்டுக் கோரிக்கைக்கு மீண்டும் மூச்சுக் காற்று ஊட்டி, உயிரெழுப்ப முயல்கிறார் மருத்துவ நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன். இந்தியாவில் ஒட்டு மொத்தமாகத் தமிழர்தான் திராவிடர், தமிழ்நாடுதான் திராவிட நாடு என்னும் அழியாத முத்திரை விழுந்து விட்டது.

  தமிழர் எல்லோரும் திராவிடரா ? எத்தனை பேர் தம்மைத் திராவிடர் என்று கூறிச் கறுப்புச் சட்டை அணிந்து கொள்வார் ? டாக்டர் ஜி. ஜான்சன் கறுப்புச் சட்டை அணிந்து கொள்வாரா ?

  இந்தி மொழியை, சமஸ்கிருதத்தை வெறுப்போம் என்று திராவிடக் கட்சிகள் முழக்குகின்றன ! தமிழ்நாட்டில் இரயில் நிலையங்கள் அனைத்திலும் இந்தி மொழியில் ஊர் பெயர் எழுதப் பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கேந்திரிய வித்தியாலங்கள் அனைத்திலும் சமஸ்கிருதம் முக்கிய பாடம். தமிழ் மொழியே கிடையாது ! சட்ட சபைக்குப் போகும் திராவிட அமைச்சர்கள் இந்தி தெரியாமல், அங்கு நடப்பது என்னவென்று தெரியாமல் திண்டாடுகிறார். இந்தி வேண்டாம் ஆங்கிலம் போதும் என்னும் திராவிடர்கள் ஆங்கில அறிவை, எழுத்து / பேச்சுத் திறமையைச் சோதித்துப் பாருங்கள்.

  இந்தியாவில் திராவிடக் கட்சி ஆட்சியால் தமிழ்நாடு தனித்துப் போய்விட்டது. தனித்து விடப் பட்டது. இப்போது தமிழகம் தனிநாடுபோல்தான் இயங்கி வருகிறது.

  சி. ஜெயபாரதன்

 2. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  சிங்கப்பூரில் வாழும் ஒரு தமிழர் இந்திய தேச ஒருமைப் பாட்டைச் சீர்குலைக்கும் திராவிட நாட்டுப் பிரிவினையை நியாயப் படுத்துவது, இந்தியத் தமிழரால் ஏற்றுக் கொள்ளப் படாது.

  சி. ஜெயபாரதன்

 3. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  ////தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தாங்கள் அனைவரும் திராவிட இனத்தவர் என்பதை ஏற்க மறுத்தனர்.
  இவர்கள் அனைவரும் ஓர் உண்மையை மறந்துபோயினர். இந்திய மக்கள் அனைவருமே திராவிடர் என்ற சொல்லுக்கு தங்களையும் அறியாமல் மரியாதை செலுத்துவதை அவர்கள் இன்றுவரை அறியாமல் இருப்பது கேலிக் கூத்தாகும்! ///

  அப்படியானால் இந்தியா திராவிட நாடா ? இந்தியா திராவிட நாடானால், தனித் திராவிட நாடு கோரிக்கை எதற்கு ?

  சி. ஜெயபாரதன்

 4. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // பெரியாரும் அண்ணாவும் திராவிட இயக்கத்தினரும் திராவிடர் என்ற என்ற பெயரில் முதன்முதலாக ஒரு இயக்கம் தோற்றுவித்தபோது ஒரு பெரும் தவற்றைச் செய்துவிட்டனர். ….. அது போன்ற கருத்துள்ள மற்ற திராவிட மாநிலங்களிலும் அதை ஆர்வமுடன் ஏற்கும் படித்த தலைவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலம் அங்கேயும் திராவிடக் கொள்கைகளைப் பரப்பியிருக்க வேண்டும் ….. நாத்திகக் கொள்கையுடைய பெரியாரும் அண்ணாவும் நம்பூதிரிபாட் போன்ற கேரளாவின் முதல்வரைச் சந்தித்து திராவிட நாடு பற்றியாவது கூறியிருக்கலாம். எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படங்களில் திராவிடக் கொள்கைகளைப் பரப்பியவர்கள் அதே பாணியில் ஆந்திராவில் என்.டி. ஆரையும் பயன்படுத்தியிருக்கலாம். ….. அப்படிச் செய்திருந்தால் திராவிடர் இயக்கம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் வேரூன்றி மாபெரும் தென்னிந்திய இயக்கமாக உருவெடுத்திருக்கும். //

  இதெல்லாம் வெறும் விருப்பக்கற்பனை மட்டுமே. உண்மை என்னவென்றால் கேரளர்களோ, கன்னடர்களோ, ஆந்திரர்களோ இதில் துளியும் ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை. ஒருவேளை அவர்கள் தமிழர்கள் போல இளிச்சவாயர்களாகவோ மேடைப்பேச்சுக்கு ஆவென வாய்பிளந்துகொண்டு உட்கார்ந்துகொண்டிருப்பவர்களாகவோ இல்லாமல் இருந்திருக்கலாம்.

  ஆனாலும் சொன்னீர்கள் பாருங்கள் இ.எம்.எஸ்-ஸிடம் சொல்லியிருக்கவேண்டும் என்று. ஆசனவாய் வழியே சிரித்திருப்பார். தமிழகத்தில் நடந்துகொண்டிருந்த இந்த ஆபாசக்கூத்தை அவர் அறியாமலா இருந்திருப்பார் ? ஐயமிருந்தால் எழுத்தாளர் ஜெயமோகனது தளத்தில் “ இ.எம்.எஸ்ஸும் தமிழும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. படியுங்கள், இதுபோன்ற கேவலங்களெல்லாம் தீண்ட இயலாத அவரது ஆளுமை எப்படிப்பட்டதென்று.

 5. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  இதோ ஈ.வே.ரா-வே சொல்கிறார் ஏன் ”திராவிடநாடு திராவிடருக்கே” என்பது ”தமிழ்நாடு தமிழருக்கே” என மாறியது என்று, படியுங்கள் :

  **********

  ”முன்பு திராவிட நாடு கேட்டார். இப்போது அதை விட்டு விட்டார். தமிழ்நாடு கேட்கிறார்” என்று சிலர் சொல்லுவார்கள். இது பெரும்பாலும் குறும்புக்காகக் கேட்கப்படுகிற கேள்வியாகும்.

  • தமிழ்நாடு என்பதும் திராவிட நாடு தான். முன்பு தெலுங்கன், மலையாளி, கன்னடியன் எல்லாம் நம்முடன் சேர்ந்து இருந்தான். அவர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படி ‘திராவிட நாடு’ என்று சொன்னோம். இப்போது அவனவன் பிரிந்து அவனவன் தனித் தனி மாநிலம் பெற்று இருக்கின்றான். ‘தமிழ்நாடு’ என்று சொல்லும்படி இப்போது தமிழகம் இருக்கிறது. ஆகவே ‘தமிழ்நாடு’ என்று சொல்லுகிறோம்.

  • இப்போது திராவிட நாடுகளான நான்கு நாடுகளும் சேர்ந்து தான் ஆக வேண்டுமென்றால் அவர்களுக்குப் பிரிய வேண்டும் என்ற உணர்ச்சி உண்டா? ஏற்பட்டிருக்கிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படியே திராவிட நாடு பிரிந்தால் நமக்கென்ன இலாபம்?

  • இன்று எப்படி தமிழ்நாடு பார்லிமெண்டில் மற்ற 14 நாடுகளுக்கும் அடிமையாக இருக்கிறதோ, அதே போல், நாளை மற்ற 3 நாடுகளுக்கும் அடிமையாகத்தான் இருக்க வேண்டி வரும்.

  • தமிழ்நாடு 3 கோடி ஜனத் தொகை; மலையாளி ஒன்றே கால் கோடி; கன்னடியன் 2 கோடி; ஆந்திராக்காரன் மூன்றரைக் கோடி. இவர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நிலை? மற்றவர்கள் ஆறே முக்கால் கோடி, தமிழன் மூன்று கோடி. நாம் மற்றவர்களுக்கு மைனாரிட்டியாகத் தானே இருப்போம்?

  • அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பார்லிமெண்ட் மெம்பர்கள் 87 பேர். நம் தமிழ்நாட்டுக்கு 41 பேர் தான். அதே மாதிரி சட்டசபை மெம்பர்கள் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்தால் சுமார் 600 பேர்கள். நமக்கு 207 பேர் தான்.

  • மற்றபடி, கடவுள், மத, சாஸ்திர, இழிவு ஒழிப்பு உணர்ச்சியோ, இந்தியை எதிர்க்கும் உணர்ச்சியோ, அந்த (ஆந்திரம், கேரளம், கன்னடம்) நாட்டுக்காரர் களுக்குக் கிடையாது. அப்புறம் எதற்காக ஒரே இராஜ்ஜியம் (நாடு)? எதற்காகக் கூட்டு வேணும்?

  • ஆகவே தான், சும்மா திராவிட நாடு என்று சொல்லுவது நம்முடைய காரியத்தைக் கெடுக்கத் தான் பயன்படுமே தவிர, வேறு எதற்கும் பயன்படாது என்பதை அறிய வேண்டும்.

  **********

 6. Avatar
  ஷாலி says:

  //சிங்கப்பூரில் வாழும் ஒரு தமிழர் இந்திய தேச ஒருமைப் பாட்டைச் சீர்குலைக்கும் திராவிட நாட்டுப் பிரிவினையை நியாயப் படுத்துவது, இந்தியத் தமிழரால் ஏற்றுக் கொள்ளப் படாது.//

  என்று ஒரு கனடிய குடியேறிய தமிழர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
  பேராசிரியர் ஸார்! இதை ஏற்றுக்கொள்வதா அல்லது எடுத்தெறிவதா? என்பதை இந்திய தமிழர்களாகிய நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.கனடிய குடிமகனாகிய நீங்கள் அல்ல.
  அப்படி என்னதான் டாக்டர் தவறாகப் பேசி விட்டார்? ஒன்றும் இல்லை எல்லாம் இந்திய நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட வரலாறுகள்தான்.திமுக கேட்ட பிரிவினையின் பொருள் என்ன?இதோ அண்ணா ராஜ்ய சபாவில் பேசுகிறார்.

  “ …நான் இந்த சபையில் பிரிவினை பற்றி பேசுகிறேன் என்றால், விழிப்புற்றவர்களின் சார்பில் பேசுகிறேன். பிரிவினைத் தத்துவம் அதற்குரிய சரியான மொழியில் கூறவேன்றுமென்றால் “சுய நிர்ணய உரிமை” உலகப் புகழ் பெற்ற தலைவர்களால் ஏன்- இந்த உப கண்டத்தின் நமது பிரதம மந்திரியாலே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

  என் நினைவு சரியாக இருக்குமானால்,”காபுர்தாலா” மைதானத்தில் நேரு அதிகாரப்பூர்வமாக கூறினார். “ ஒரு நிறுவனம் என்ற முறையில் காங்கிரஸ் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய யூனியனில் இருக்க வேண்டும் என்றே முயற்சி செய்யும்.ஆனால் ஏதாவது ஒரு பகுதி பிரிந்து போக வேண்டுமென்றால் அதற்குக் காங்கிரஸ் சம்மதம் தரும்.”

  இவ்வகையில் காங்கிரஸ் சுயநிர்ணய உரிமையை ஒப்புக்கொண்டிருக்கிறது.பிரதமரானபோதும் நேருவிடம் தாராள சிந்தையும், ஜனநாயக உணர்வும் நெஞ்சில் இன்னும் கனன்று கொண்டிருப்பதாக நினைத்து,இந்தத் துணிவான வேண்டுகோளை விடுக்கிறேன்.

  பிரிவினையால் இந்தியா தரித்திர நாடாகி விடாது என்று உறுதி இருக்கும்போது, ஏன் தீபகற்பத்திற்குச் சுயநிர்ணய உரிமை தரக்கூடாது? அப்படி முடிவெடுப்பது இந்தியாவின் தரத்தை உயர்த்துவதாக இருக்கும்.
  இந்தியா ஒன்று என்று நினைப்போருக்குச் சொல்வேன்,அது இங்குமங்கும் குழப்பமிகுந்த கதம்பப் பகுதிகளாக இருப்பதைக் காட்டிலும் நேசப்பான்மையுள்ள பல நாடுகளாக இருப்பது நல்லதல்லவா?

  …நான் ஒரு தேசியக் கொள்கைக்காக வாதாடுகிறேன்.குறுகிய மனப்பான்மைக்காக அல்ல.கட்சிக் கொள்கைக்காக அல்ல.என்னுடைய பெருமைக்குரிய நாட்டிற்கு சுயநிர்ணய உரிமையைக் கேட்கிறேன்.அதன் மூலம், அந்த நாடு உலகிற்குத் தான் பங்கை செலுத்தவிருக்கிறது.
  மன்றத் தலைவர் அவர்களே! கன்யாகுமரியிலிருந்து இமாலயம் வரை ராமனும்,கிருஷ்ணனும் தொழப்படுவதால், இந்தியா ஒற்றுமைப்பட்டுள்ளது என்று தாங்கள் முன்பொருதடவை கூறிய பாண்டித்ய மிக்க வாசகங்கள் என் நினைவுக்கு வருகிறது.
  அதேபோல,உலக முழுவதும் மரியாதையுடனும்,பயத்துடனும் ஏசுநாதர் தொழப்படுகின்றர்.
  இருந்தாலும்,ஐரோப்பாவில் பலபல தேசிய நாடுகள் இருக்கின்றன. புதிய புதிய தேசிய நாடுகள் உலகில் வந்துகொண்டே இருக்கின்றன.ஆகையால் தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசிய இனம் பற்றிக் குடியரசுத் தலைவர் எதுவும் குறிப்பிடாதது பற்றி நான் மேத்த வருந்துகிறேன்.

  ஜனநாயகம்,சோசலிசம்,தேசியம்—ஆகிய இந்த மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது; சோசலிசம் சாரமற்றதாக்கப்பட்டிருகிறது;தேசியம் தவறான பொருளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

  வரும் ஆண்டுகளில் புது எண்ண ஓட்டத்தின் விளைவாகத் தென்னகத்தின் தேவையும்,தத்துவமும் புனராலோசனை செய்யப்படும் என்று நினைக்கின்றேன். நான் சார்ந்திருக்கும் திராவிட நாட்டிற்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்படும் என்று கருதுகிரீன்.”
  — அறிஞர் அண்ணா அவர்கள் 1-5-1962 அன்று ராஜ்ய சபாவில் பேசிய கன்னிப் பேச்சின் சிறு பகுதி.

 7. Avatar
  ஷாலி says:

  //தமிழர் எல்லோரும் திராவிடரா ? எத்தனை பேர் தம்மைத் திராவிடர் என்று கூறிச் கறுப்புச் சட்டை அணிந்து கொள்வார் ? டாக்டர் ஜி. ஜான்சன் கறுப்புச் சட்டை அணிந்து கொள்வாரா ?//

  திராவிடர் வேறு, திராவிடர் கழகம் வேறு திராவிடக்கழகத்தை சார்ந்த அதன் தொண்டர்களை,தாங்கள் சூத்திரன்,பஞ்சமன் எனும் இழிவு படுத்தும் உயர் ஜாதிப்போக்கை கண்டிக்க கருப்புச்சட்டை சட்டை அணியும்படி பெரியார் கேட்டுக் கொண்டார்.டாக்டர் ஜான்சன் அவர்கள் திராவிடக் கழகத்தின் உறுப்பினராக இருந்தால் நிச்சயம் கறுப்புச் சட்டைதான் அணிவார்.

 8. Avatar
  ஷாலி says:

  //இந்தியாவில் திராவிடக் கட்சி ஆட்சியால் தமிழ்நாடு தனித்துப் போய்விட்டது. தனித்து விடப் பட்டது. இப்போது தமிழகம் தனிநாடுபோல்தான் இயங்கி வருகிறது.//

  பேராசிரியர் திரு.ஜெயபாரதன் அவர்கள் சொல்வது உண்மைதான்.தமிழ்நாடு இந்திய அரசில் இல்லையோ என்ற எண்ணமே சில வேளைகளில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

  குஜராத் மாநில மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்து பாகிஸ்தான் கடற்படை கைது செய்யப்பட்டால், “ இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது!” என்று செய்தி போடப்படுகிறது.

  அதேசமயம் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தால் “தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது” என்றே செய்தி போடப்படுகிறது.

  தமிழ் மீனவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல.தமிழ் நாடு எனும் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்ற எண்ணமே அரசால் மக்கள் மத்தியில் பதியப்பட்டு வருகிறது.

  ராமேஸ்வர மீனவத் தமிழன் குடியரசு தலைவராகி முப்படைக்கும் பொறுப்பாளராக இருந்த நாளிலும்,இராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் தள்ளும் கொடுமை நிற்க்கவில்லை என்றால் என்ன பொருள்.

  தமிழ் மீனவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல.இதைத்தான் பேராசிரியப் பெருந்தகை கூருகின்றார் என்று நினைக்கின்றேன்.

  ஒரு ஆறு ஓடினால் அதன் கடைமடைக்கு தண்ணீர் போய்ச் சேரும் உரிமையை யாரும் மறுக்க முடியாது என்பது ஆதிகாலச் சட்டம்.ஆனால் இந்தியாவில் உள்ள கர்நாடகா அரசு குறுக்கே பல அணைகள் கட்டி ( தனித் )தமிழ்நாட்டிற்கு வழங்க மறுக்கிறது.இந்தப் பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு நடுவண் அரசால் முடியவில்லை.ஒரு வேளை ஐக்கிய நாடுகள் சபைதான் இப்பிரட்சினையை தீர்க்க வேண்டும் என்று,பேராசிரியர் கூறுவது இந்திய அரசும் நினைக்கிறதோ தெரியவில்லை.

 9. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  திரு. ஷாலி அவர்களே

  ///சிங்கப்பூரில் வாழும் ஒரு தமிழர் இந்திய தேச ஒருமைப் பாட்டைச் சீர்குலைக்கும் திராவிட நாட்டுப் பிரிவினையை நியாயப் படுத்துவது, இந்தியத் தமிழரால் ஏற்றுக் கொள்ளப் படாது.///

  ///என்று ஒரு கனடிய குடியேறிய தமிழர் பேசுவது வேடிக்கை யாக உள்ளது. பேராசிரியர் ஸார்! இதை ஏற்றுக் கொள்வதா அல்லது எடுத்தெறிவதா? என்பதை இந்திய தமிழர்களாகிய நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.கனடிய குடிமகனாகிய நீங்கள் அல்ல. அப்படி என்னதான் டாக்டர் தவறாகப் பேசி விட்டார்? ஒன்றும் இல்லை எல்லாம் இந்திய நாடாளு மன்றத்தில் பேசப்பட்ட வரலாறுகள்தான். திமுக கேட்ட பிரிவினையின் பொருள் என்ன?///

  இந்திய ஒருமைப்பாட்டை முறிக்க முயலும் திராவிட நாட்டுப் பிரிவு இயக்கங்களைச் சுட்டிக் காட்டி எச்சரிக்க எனக்கு முழு உரிமை உள்ளது. காரணங்கள் இரண்டு:

  முதலாவது என்னருமைத் தந்தையார், காந்திஜியுடன் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து சிறை சென்றவர்.

  இரண்டாவது நான் இந்திய அணுவியல் துறையகத்தில் [Dept of Atomic Energy] 25 ஆண்டுகள் பணிசெய்து NRI [NON-RESIDENT INDIAN] என்ற வகுப்பில் இந்திய ஓய்வு ஊதியத்தில் இருப்பவன்.

  இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் நேரிட்டால், இப்போதும் என் இதயம் துடிக்கிறது. என்னுதிரம் கொதிக்கிறது.

  சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *