ஆத்மாவின் கடமை

author
0 minutes, 25 seconds Read
This entry is part 16 of 21 in the series 10 ஜூலை 2016

என்.துளசி அண்ணாமலை

  பாகம் 1

“இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”

 

கேட்ட கதிரவனின் குரலில் பொறுமை காணாமல் போயிருந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த இரண்டு மணி நேரமாகக் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் அலுப்பும் சோர்வும் அவனுடைய பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது.

 

உடன் அமர்ந்திருந்த பரமன், மெலிதாக சிரித்தான். “இந்தப்பாதை கொஞ்சம் சிரமம்தான். என்ன செய்வது? நமக்கு வேண்டுமென்றால் நாம் மெனக்கிடத்தான் வேண்டும்.” என்றான். காரை மிக இலாவகமாக ஓட்டிக்கொண்டிருந்த முருகன், தனக்குள் சிரிந்த்துக் கொண்டான். கடந்த ஒருமணி நேரமாக பரமன் கூறிக்கொண்டு வரும் சமாதானங்களையெல்லாம் அவனும் கேட்டுக் கொண்டுதானே வருகிறான். கதிரவனுக்கு பரமன்மீது கோபம் வந்தது. ஆயினும் பொறுமை காத்தான். காரணம் அவனால் தானே தன்னுடைய தேவையை நிறைவு செய்ய முடியும்!

 

செம்பனை மரங்கள் வழியனுப்பி வைத்த மண்சாலையைக் கடந்து, காட்டுமரங்கள் அடர்ந்திருந்த பாதை தொடர்ந்தது. பத்து நிமிடங்கள் கழித்து, வேப்பமரங்களும், அதனையடுத்து மா, ரம்புத்தான் மரங்களும் சூழ்ந்த சோலை தெரிய, கதிரவன் சற்று  நிமிர்ந்து அமர்ந்தான்.

 

“அதோ பாருங்கள். அதுதான் நாம் தேடிவந்த இடம்.” என்று சுட்டிக் காட்டினான் பரமன். அங்கே சுமார் பத்து வீடுகள் தெரிந்தன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் விதவிதமான பூச்செடிகள், மரங்கள். சற்றுத் தள்ளி தாழ்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்கள் குலைகளோடும் குருத்துகளோடும் அவர்களை வரவேற்றன.

 

ஆறு வயதிலிருந்து பத்து வயதுவரையுள்ள சிறார்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த மாளிகை போன்றதொரு விசாலமான வீட்டின் வாயிலில் கார் தேங்கி நின்றது. வாயிலின் முகப்பில் ‘பூவண்ணன் இல்லம்” என்ற பெயர்ப்பலகை தொங்கியது.

 

காரிலிருந்து இறங்கி, உடலை முறுக்கி அசதியைத் துரத்த முயன்றான் கதிரவன். அவனைத் தொடர்ந்து இறங்கிய பரமன், விளையாடிக் கொண்டிருந்த சிறார்களில் ஒருவனைப் பெயர் சொல்லி அழைத்தான். முருகன் காரை ஒரு மர நிழலில் நிறுத்திவிட்டு இறங்கி வந்தான். அவனுடைய விழிகள் சிறார்களுடைய விளையாட்டுப் பொருளைப் பார்த்துத் திகைத்தான்

 

‘அது என்ன? ஒய்ஜா பலகை போல்லாவோ தெரிகின்றது! இவர்கள் எப்படி?….’ அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே பரமன் சிறுவனிடம் விசாரித்தான்.

 

“தம்பி, அப்பா எங்கே இருக்கிறார்? போய் அழைத்து வாயேன்” என்றான் கட்டளையும் கெஞ்சலுமாக.

 

சிறுவன், கண்ணுக்குத் தெரியாத துவிச்சக்கர வண்டியை ஓட்டிக் கொண்டு பறந்தான். மற்ற சிறார்கள் விட்ட விளையாட்டைத் தொடர்ந்தனர். கதிரவன் அவர்களை வியப்புடன் பார்த்தான். வட்டமாக சுற்றி அமர்ந்திருந்த சிறுவர்களுக்கு மத்தியில் தரையில் பால் மஞ்சள் நிறத்தில்

 

சதுரமான ஒய்ஜா பலகை தெரிந்தது. பலகையில் வட்டமும், அந்த வட்டம் இருகூறாக நடுவில் பிரிக்கப்பட்டு, அதில் எழுத்துக்களும் எண்களும் தெரிந்தன. கதிரவனுக்கு ஒன்றுமே

 

புரியவில்லை. ‘இது என்ன? இவர்கள் என்ன செய்கிறார்கள்?; என்ற கேள்விகளுக்கு விடை காண முயன்றபோது, தந்தையைத் தேடிச் சென்ற சிறுவன் திரும்பி வந்தான்.

 

மூச்சிறைத்தவாறே, “ அப்பா உங்களை வரச் சொன்னார். போங்க” என்றவன், விட்ட விளையாட்டைத் தொடர, தன் நண்பர்களிடம் இணைந்து கொண்டான்.

 

பரமன், கதிரவனையும் முருகனையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கமாகச் சென்றான். அங்கே சிறிய ஓலைக்கூரை வேய்ந்த வீடு தெரிந்தது., வீட்டுக்கு வெளியில் இருந்த பெரிய வட்டமான கல்தொட்டியில் குளிர்ந்த நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து நீரைச் சேந்தி, கைகால்களை அலம்பிக் கொண்டு வீட்டுக்குள் சென்றனர்.

 

வீட்டுக்குள்….வட்டமான கூடம். ஈசானிய மூலையில் இரண்டடி நீள அகலத்தில் மேடை ஒன்று கம்பீரமாகப் பொன்மஞ்சள் நிறத்தில் பட்டுத்துணியைப் போர்த்திக் கொண்டிருந்தது. அதன் மேல் நடுநாயகமாக அகலமான மண் அகல் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.

 

பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நடுத்தர வயதில் ஒரு மனிதர் வீட்டுக்குள் வந்தார். மெல்லிய வெண்மையான கதர் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். நெற்றியில் திருநீறு துலங்கியது. புருவ மத்தியில் மனதை சுண்டியிழுக்கும் சிவப்புக் குங்குமம்.

 

மெல்லிய புன்சிரிப்புடன் அவர்களை வரவேற்றார். கூடத்தின் நடுவில் பாய் விரிக்கப்பட்டிருந்தது. அதில் அவர்களை அமரச் சொன்னார். அவர்களுக்கு நேர் எதிரில் அவர் அமர்ந்து கொண்டார். மத்தியில் கணமானதொரு பலகை வைக்கப்பட்டது. அதேவேளையில், பரமன் தாங்கள் வந்த வேலையைப்பற்றி விவரித்தான்.

 

“அண்ணா, இவர் பெயர் கதிரவன். வீடமைப்பு மேம்பாட்டாளர். நல்ல வசதியான மனிதர். தற்போது ஒரு நிலத்தை காடு அழித்து, ஆயிரம் வீடுகளைக் கட்டும் ஒரு பெரிய திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் பாருங்கள், தொடங்கிய நாளில் இருந்து இதுவரை ஒரு வேலையும் நடக்கவில்லை. என்ன காரணம் என்றே புரியவில்லை. எதை தொட்டாலும் தடங்கலாகவே இருக்கின்றது. அதுதான் உங்களுடைய உதவியை நாடி வந்தோம்.”

 

‘அண்ணா’ என்று அழைக்கப்பட்ட அந்த மனிதர், புன்சிரிப்பு மாறாமல், “இன்னும் ஏதாவது செய்தி இருக்கின்றதா?” என வினவினார்.

 

அந்தக் கேள்வியால் கதிரவனும் தடுமாறினான். பரமன் பதில் சொல்லும் முன்பே, வாசலில் நிழலாடியது. தொடர்ந்து சற்று வயதான தோற்றதில் ஒரு மனிதர் உள்ளே வந்தார். அவரும் தூய வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். தலைமுடியும் தாடியும் வெண்பஞ்சையும் வென்றிருந்தது.

 

“என்ன பூவண்ணா, எதற்காக வரச் சொன்னாய்?” என்றவாரே, பூவண்ணன் அருகில் அமர்ந்தார். அவரிடமிந்து பச்சைக்கற்பூர வாசனையும் சந்தன வாசனையும் வந்தது.

 

“இதோ, இந்தப் பரமன் சொல்லுவான். கேளுங்கள்” என்றார் பூவண்ணன்.

 

பெரியவர் பரமனைப் பார்த்தார். சற்று சங்கோஜத்துடன் உடலை நெளித்தவாறே, பரமன் விளக்கத் தொடங்கினான்.

 

“என்ன காரணம் என்றே தெரியவில்லை, அய்யா. ஒரு வேலையும் நடக்கமாட்டேன் என்கிறது. இங்கு வந்தால் ஒரு விடிவு பிறக்கும் என்று  நான் தான் இங்கு அழைத்து வந்தேன். பூவண்ணன் அண்ணாவை எனக்கூ முன்பே தெரியும்” என்றான்.

 

 

பெரியவர் புரியாமல் அவனைப் பார்த்தார். அந்தப் பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்கமுடியாமல் பரமன் மேலும் தொடர்ந்தான். “நிலத்துக்கு சரிபாதி உரிமயாளரான பங்குதாரர் ஆறு மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடந்துவிட்டார். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் செய்வினை செய்திருப்பார்களோ……..என்று….”

அவன் முடிக்கும் முன்பே பெரியவர் இடைமறித்தார். “ ஒரு சந்தேகம் வந்து விட்டதாக்கும்”

 

பரமனுக்கு தொண்டை காய்ந்து விட்டது. “ ஆ..ஆ…ஆமாம்…அதுதா…..” என்று நாக்குழறினான்,

 

பெரியவர் சிரித்தவாறே, “இதற்கு ஏன் இப்படி தடுமாறுகிறாய்?….பூவண்ணா! இறந்து போன மனிதரின் பெயர், இறந்த தேதி, அவருடைய தாய், தந்தையரின் பெயர் எல்லாவற்றையும் எழுதிக் கொள். நான் தயாராகி வருகிறேன்.” என்றவாறே எழுந்து விளக்கின் அருகே சென்று அமர்ந்தார். பத்மாசனம் இட்டு, கைகளை நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் கூப்பினார். சப்தம் ஏதும் இல்லாமல் அவர் தியானத்தில் ஈடுபட்டார்.

 

பரமன், பெரியவர் கேட்ட விபரங்களை ஒரு தாளில் குறித்துக் கொடுத்தான். பூவண்ணனும் பரமன் கொடுத்த விபரங்களை ஒய்ஜா பலகையின் அருகில் வைத்து விட்டு, பெரியவருக்காகக் காத்திருந்தார்.

 

பல நிமிடங்கள் கரைந்தன. பெரியவர் விளக்கின் அருகே இருந்தவாறே அவர்கள் அனைவரையும் பார்த்த நிலையில் திரும்பி அமர்ந்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த  முருகன், ‘இது என்னக் கூத்து?’ என்பது போல நம்பிக்கை அற்றவனாக அமர்ந்திருந்தான்.

 

பெரியவர் கைகாட்ட, பூவண்ணன் தன்னிடமிருந்த குறிப்பை வாசித்தார்.

 

“இறந்தவரின் பெயர் கந்தவேலு. சரியாகச் சொன்னால், அவர் பெயரில் அறுபது ஏக்கர் நிலமும், மீதி அவருடைய பங்காளிகளுக்குமாக நிலம் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நூறு ஏக்கர் நிலம். தற்போது அதைத்தான் கதிரேசன் வீடமைப்பு மேம்பாடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறார்.”

பூவண்ணன் வாசித்த குறிப்பைக் கேட்டு முருகனுக்குத் திகைப்பாகவும் குறுகுறுப்பாகவும் இருந்தது. ஆயினும், பிறகு கேட்போம் என்று  பேசாதிருந்தான்.

 

பூவண்ணன் வாசித்து முடித்தவுடன், பெரியவரிடமிருந்து பெரும் மூச்சுகளாக வெளி வந்தது. உடலில் விவரிக்க முடியாத ஆவேசம் தெரிந்தது.

 

“உண்மை அதுதானா?” என்று இரைச்சலாகக் கேட்டார். கேட்ட தொனியே சற்று வித்தியாசமாக இருந்தது. சற்றுமுன்பு பேசிய குரலல்ல அது! பரமனும் கதிரேசனும் முருகனும் அச்சத்துடன் அவரைப் பார்த்தனர்.

 

மீண்டும், “உண்மை அதுதானா?” என்று கோபத்துடன் பெரியவர் கேட்க, இப்போது பூவண்ணன் வாயைத் திறந்தார்.

 

“அய்யா, தாங்கள் யாரென்று அறியலாமா?”

 

பெரியவரிடமிருந்து இன்னும் ஆவேசமான மூச்சு வெளிப்பட்டது. எல்லாரையும் கோபமான பார்வையால் அளந்தார். விழி இமைகள் பெரிதாக விரிந்தன. விழிகளின் வெண்மையான பகுதியில் சிவப்பு ஏறியது. முன்னூற்று அறுபது டிகிரியில் சுழன்ற விழிகள் முருகனிடம் வந்தபோது நிலைகுத்தின.

 

அந்தப்பர்வையின் உக்கிரம் பரமனுக்கும் கதிரவனுக்கும் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சினாற் போலிருந்தது. பெரியவரின் பேச்சைக் கேட்டு கதரவன், பரமனை நெருங்கி தன் வாயருகே கையை வைத்து மறைத்துக் கொண்டு இரகசியமாகக் கேட்டான்.

 

“என்ன நடக்குது? பெரியவர் மேல் ஆவி ஏதும் வந்து இறங்கிவிட்டதோ?”

 

பரமன் உடனே பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். அதற்குள், பூவண்ணன் பேசினார்.

 

“அய்யா, நீங்கள் யாரென்று சொல்லுங்கள்.”

 

பெரியவரின் பார்வை பூவண்ணனிடம் திரும்பியது. இப்போது கதிரவன் வாயைத் திறந்தான்.

“எதனால் அந்த நிலத்தில் என்னால் எதையும் செய்யமுடியவில்லை?”

பெரியவர் சில வினாடிகளை மௌனத்தில் கரைத்தார். பின்னர் விழிகளை மூடிய நிலையில் பேசத் தொடங்கினார்.

“அந்த நிலத்தில் ஒரு வில்லங்கம் இருக்கிறது. அதுதான் உங்களால் மேற்கொண்டு நகரமுடியல்லை. அதை நீக்கிவிட்டால்….”

 

பெரியவர் சொல்லிமுடிக்கும் முன்பே, பரமன் குறுக்கிட்டான். “நீக்கிவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா? அப்படியானால் அதை செய்து விடுங்கள்”

பரமன் சொன்னதைக் கேட்ட மற்ற அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் பெரியவரோ சிரித்தார். “நீ சொன்னால்……… நான் உடனே செய்துவிட வேண்டுமா?….. ஹஹ்ஹஹ்ஹா.”

 

பெரியவரின் சிரிப்பினால் வீடே அதிர்ந்தது. சிரிப்பின் அதிர்வலைகள் அடங்குமுன்பே கேட்டார். “கதிரவா….அந்த  நூறு ஏக்கர் நிலமும் கந்தவேலுவுக்குத்தான் சொந்தம். பங்காளிகள் வழக்காடு மன்றத்துக்குப் போனார்கள்.  தோற்றுப் போனார்கள். அதன் பிறகு? அதர்வணத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். நூறு ஏக்கர் நிலத்தில் ஆறு வயது தலைச்சன் பெண்குழந்தையை நரபலி கொடுத்து, புதைத்து விட்டார்கள். பிறகு நயவஞ்சகமாக கந்தவேலுவிடமிருந்து  நாற்பது ஏக்கரைப் பறித்து விட்டார்கள். மீதியையும் பறிக்க ஆசைப்பட்டுத்தான், கந்தவேலுவுக்கு விசம் கொடுத்தார்கள். மெல்ல மெல்ல கொல்லும் விசம்….கொடூரமான எண்ணம் கொண்ட மனிதர்களின் செய்த அநியாயத்துக்கும் வஞ்சகத்துக்கும் பலியாகிவிட்டான். அந்தப் பாவம் சும்மா விடுமா?…என்ன பரமா? செய்தபாவம் எங்கே போய் நிற்கும்? ம்… சொல்லு! எங்கே போகும்? அது உன்னிடமே திரும்பி வந்து விட்டது !”

 

பரமன் திகைத்துப் போனான். பயந்துபோய் கதிரவனைப் பார்க்க, கதிரவன் ‘காப்பாற்றுங்கள்’ என்பது போல பூவண்ணனைப் பார்த்தான்.

 

பூவண்ணனுக்கு ஓரளவுக்கு விசயம் விளங்கி விட்டது. பெரியவரைப் பார்த்தார்.

“கதிரவா, உனக்கு என் உதவி வேண்டும், நிலத்தில் வீடு கட்டவேண்டும் என்றால், உடனே போய் தெற்கு மூலையில் நான் குறிவைக்கும் இடத்தை தோண்டிப்பார். அங்கு கிடைக்கும் பொருளை எடுத்து…..இதோ இந்தப் பரமனிடம் கொடுத்துவிடு. பரமா! முள்ளை முள்ளால்தான்

 

எடுக்கமுடியும். இல்லையா?. நீயே உடன் இருந்து ஆகவேண்டிய காரியங்களைப் பார். அமாவாசைக்கு இன்னும் ஒருவாரம் தான் இருக்கின்றது. அமாவாசை கழிந்து நான்காம் நாள் எல்லோரும் இங்கே வாருங்கள். மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம். பூவண்ணா, உனக்கு ஒரு வேலை இருக்கின்றது. அதோ விளக்கின் அருகில் இருக்கும் வெள்ளைத்தாளையும் எழுதுகோலையும் எடுத்துக் கொடு” என்றார்.

 

 

பூவண்ணன் அவ்வாறே செய்தார். அதில் எதையோ எழுதி, பூவண்ணனிடம் கொடுத்தார். “இன்றிரவு இதை எடுத்துப் பார்த்து விட்டு, அதன்படி செய்” என்றார். பூவண்ணன் தலையசைத்தார். தொடர்ந்து பெரியவர், சட்டென்று தொய்வு கணடவர்போல, மெல்லத் தரையில் சாய்ந்தார்.

 

பூவண்ணன் பெரியவரை அப்படியே விட்டு விட்டு, மற்றவர்களைப் பார்த்தார். “ நீங்கள் சென்று அவர் சொன்னவாறு செய்யுங்கள். பரமா! இந்த விவகாரத்தில் உன்னுடைய பங்கு என்ன என்று உனக்குத்தான் தெரியும். அதைப்பற்றி நான் எதுவும் கேட்கப்போவதில்லை. அமாவாசைக்குப் பிறகு வரும் சதுர்த்தி அன்று பார்க்கலாம். போய் வாருங்கள்” என்று அவர்களுக்கு விடை கொடுத்தார்.

 

கதிரவன் எதையோ கேட்க வந்து, தயங்கி நின்றான். அவனுடைய உள்ளக் குறிப்பை உணர்ந்தவராக, மூவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்து, சற்று தூரத்தே தெரிந்த மரத்தடிக்கு அழைத்து வந்தார். மரத்தடியில் மர இருக்கைகள் கிடந்தன. அவற்றின் மீது அமர்ந்தனர்.

 

“வந்தது ஆவியா என்பதுதானே உங்களுடைய குழப்பம்?”

 

“ஆமாம்….அவர் சொன்னதில் சில  விசயங்கள் புரியவில்லை. அது யாருடைய ஆவி? பரமனுக்கு எல்லம் தெரியும் என்பது போலப் பேசினாரே? அப்படியானால், அந்த ஆவிக்கும்  பரமனுக்கும் ஏற்கனவே பழக்கம் உண்டா? இல்லை, பரமா!  நீ எங்களுக்கு ஏதாவது விளையாட்டு காட்டுகிறாயா? ஒழுங்கா உண்மையைச் சொல்லிவிடு” கதிரவன் சற்றுக் கோபத்துடன் பரமனைப் பார்த்துக் கேட்டான்.

 

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த பரமனுக்கு, கதிரவனின் குற்றச்சாட்டு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. தொண்டை வறண்டு போயிற்று. நாவை ஈரப்படுத்திக் கொண்டான்.

 

“கதிர்,  என்மீது சந்தேகப்படாதே. எனக்கே பெரியவர் பேசிய பேச்சு புரியவில்லை. முதலில் அவர் சொன்னமாதிரி செய்வோம். பிறகு அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே? அண்ணா, கதிரவன் கேட்டது போல அது யாருடைய ஆவி என்று சொல்லுங்களேன். “

 

பூவண்ணன் புன்னகைத்தவாறே, “பெரும்பாலும் பிரச்னை என்று வருபவர்களுக்கு பெரியவர் மீது ஆவியை வரவழைத்து தான் கேட்டு சொல்லுவேன். ஆனால் இன்று அந்த ஆவி யாரென்று பலமுறை கேட்டும் அதற்கான பதில் வரவில்லையே. அதனால் அடுத்தமுறை வரும்போது கண்டிப்பாகக் கேட்டு சொல்கிறேன். இப்போது புறப்படுங்கள்” என்றார்.

 

மேற்கொண்டு அவரிடம் வாதிடாமல் புறப்பட்டுப் போனார்கள்.

**********************************************************************************

“ நான் முருகனின்  தாத்தா, சுந்தரவேலு. ஒரு வருடத்திற்கு முன்புதான் இறந்து போனேன். என்னுடைய ஆத்மா இன்னும் சாந்தி அடையவில்லை. காரணம், என் குடும்பத்தாருக்கு நான் செய்யவேண்டிய கடமைகள் இன்னும் நிறைவேறாமல் இருக்கின்றன. அதையெல்லம் பரிபூரணமாக நிறைவேற்றிய பிறகுதான் நான் நிம்மதியாகப் போய்ச் சேரமுடியும். அதுவரை யிலும் இப்படித்தான் அலைந்து கொண்டிருக்க வேண்டும். என் தந்தை விட்டுச் சென்றது பத்து ஏக்கர் நிலம். மீதி தொண்ணூறு ஏக்கர் நிலம் என் சொந்த உழைப்பில் வந்தது. அதற்கு ஆசைப்பட்டு என் தங்கையும், சித்தப்பா மகன்களும் என் மகனோடு எப்போதுமே சண்டை

பிடித்துக் கொண்டு அவனுக்கு நிம்மதி இல்லாமல் செய்து கொண்டிருந்தார்கள். என் தங்கையின் தொல்லை தாங்காமல், அவளுக்கு  நாற்பது ஏக்கர் நிலத்தை எழுதிக்கொடுத்து விட்டான் என் மகன். ஆயினும் தொல்லை விட்டபாடில்லை. நிலத்தில் தலைச்சன் பிள்ளையைப் பலிகொடுத்துப் புதைத்தார்கள். அவ்வாறு புதைத்தது யார் தெரியுமா? காசுக்கு ஆசைப்பட்டு பரமன்தான் அந்த வேலையைச் செய்தான். என் மகனுக்குக் கைகால் விளங்காமல் போகவேண்டும் என்று அதர்வண முறையில் ஏதேதோ செய்து பார்த்தார்கள். என் மகன் இறைவழியில் நின்றதனால் எப்படியோ தப்பித்தான். கடைசியில், உறவாடிக் கெடுக்க முடிவு செய்தார்கள். என் மகனுக்கு விருந்து வைப்பதாகக் கூறி, மெல்ல மெல்லக் கொல்லும் விசத்தை உணவில் கலந்து கொடுத்து விட்டார்கள். இப்போது என் மகனும் நிம்மதி இல்லாமல்தான் அலைந்து கொண்டிருக்கின்றான். நான் என் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். இன்னும் ஒன்று. அந்த நிலத்தில் ஒரு முருகன் கோயிலும் கட்டவேண்டும். இதுவும் என் ஆசைதான்.”

 

அவருடைய பேச்சைக் கேட்டு முருகன்  திகைத்து திடுக்கிட்டுப் போனான். விழிகளில் தாமாகக் கண்ணீர் சுரந்தன. பேசவும் திறனற்றுப் போய் அமர்ந்திருந்தான்.

 

அங்கே ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியது. பூவண்ணன் தான் அந்த இறுக்கத்தைக் கலைத்தார்.

 

“அய்யா, நீங்கள் முருகனின் தாத்தா என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். சொல்ல முடியுமா?”

 

“தம்பி பூவண்ணா, இவன் என் மகன் கந்தவேலுவின் ஐந்தாவது பிள்ளை. உண்மையான

பெயர் சக்திவேலு. இவனுடைய ஏழாவது வயதில் கொய்யா பழம் பறிக்கப்போய் மரத்தில் இருந்து கீழே விழுந்ததால், வலது கால் சுண்டு விரல் முறிந்துபோய் ஊனமாகி விட்டது. வலது தொடையின் மேற்பகுதியில் சதை கிழிந்து பள்ளமாகி விட்டது. இது என் மகனுக்கும் வேலுவின் தாயாருக்கும் மட்டுமே தெரிந்த விசயம். இன்னமும் அந்த வடுக்கள் மாறவில்லை. அது மட்டுமில்லை. அடிக்கடி சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததால், பத்துமலை முருகனுக்குக் காவடி எடுத்து, ;முருகன்’ என்ற பெயர் சொல்லி அழைக்கத் தொடங்கினோம். உண்டா, இல்லையா என்று கேள்.”

 

பூவண்ணன் திரும்பி முருகனைப் பார்த்தார். அவனும் பரவசமும் அழுகையுமாக “ஆமாம் ….உண்மைதான்……..தாத்தா…” என்றவாறே பெரியவரை நெருங்க எத்தனித்தான்.

 

அதற்குள், “ வேண்டாம். இப்போது நீ அவரைத் தொட முடியாது. மேற்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் தேவைப்பட்ட கேள்விகளைக் கேட்கலாம்.” என்றார் பூவண்ணன்.

 

“ஆமாம். அன்று உன்னுடன் வந்தவர்களின் முன்னிலையில் எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. அதனால்தான் உன்னைத் தனிமையில் பார்க்கவேண்டும் என்று சீட்டு எழுதி பூவண்ணனிடம் கொடுத்தேன். இப்போது நான் சொல்கிறபடி நீ நடந்தால் போதும்.  நீ இங்கு வந்ததையோ, பார்த்ததையோ, பேசியதையோ எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளவேண்டாம். மீதியை நான் பார்த்துக் கொள்வேன்.” பெரியவர் கட்டளைபோலக் கூறினார்.

“சரி அய்யா. நீங்கள் எப்படி சொல்கிறீர்களோ, அப்படியே செய்து விடுகிறேன். உங்களுடைய பேரனுக்கும் அவர் குடும்பத்துக்கும் என்ன கிடைக்கவேண்டுமோ, அது நிச்சயம் கிடைக்கும். அதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ, அதையெல்லாம் உங்களுடைய கட்டளைப்படியே நிறைவேற்றி வைப்பேன். இது உறுதி” என்றார்  பூவண்ணன்.

********************************************************************************************

பாகம் 2

நேரம் இரவு எட்டுமணி.

 

பூவண்ணனின் பூசை அறை. பெரிய அகல் விளக்கின் ஒளிவெள்ளக் கீற்றுகள் அனைவரின் முகங்களின் மீதும் பட்டு மின்னின. பெரியவரின் வாயிலிருந்து வரப்போகும் வாக்குக்காக கதிரவனும் பரமனும் வேலுவும் பூவண்ணனும் மிக ஆவலோடு காத்திருந்தனர்.

 

பல நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன. ஆழ்ந்த தியான நிலையில் அமர்ந்திருந்த பெரியவரிடத்தில் ஒரு திடுக்கிடல் தெரிந்தது. ஆவேசமாக உடலைச் சிலிர்த்தார். விழிகள் பெரிதாகின. உதடுகள் துடித்தன.

 

“எங்கேடா, நான் கேட்ட பொருட்கள்? எடுத்து இப்படி வை.” என்றார் பெருத்த உறுமலோடு.

 

பரபரப்புடன்  ஒரு நெகிழிப்பயைப் பிரித்து, அதிலிருந்து ஒரு சிறிய மண்குடுவையை எடுத்து,  பூவண்ணன் காட்டிய அகலமான வாழை இலையில் பரப்பினான் பரமன். சிறிய மண்டை எலும்பும், இன்னும் சில எலும்புத்துண்டுகளும் தகடும் இரும்பு ஆணிகளும் சிவந்த மண்ணும் வந்தன. அதனோடு இன்னதென்று விவரிக்க இயலாத பொருட்கள் பல தெரிந்தன. நைந்த ஆடை ஒன்றும் வந்தது. அனேகமாக அது அந்தக் குழந்தையின் ஆடையாகக் கூட இருக்கலாம். அதைப்பார்த்த முருகனுக்கு உடல் பதறியது. தன் உள்ளத்தில் எழுந்த ஆத்திரத்தையும் வெறுப்பையும் அடக்கமுடியாமல் சட்டென்று எழுந்து வெளியில் சென்றுவிட்டான். பெரியவரும் பூவண்ணனும் அதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், பரமனும் கதிரவனும் அவன் பயந்து போய் வெளியே போய்விட்டதாக எண்ணினர்.

 

பெரியவர் சைகை செய்ய, பூவண்ணன் அந்தப் பொருட்களின்மீது வெள்ளை நந்தியாவெட்டை மலர்களையும் பிச்சகத்திப் பூக்களையும் தூவினார். வாசனைத் திரவியங்களைத் தெளித்தார். ஒரு கிண்ணத்தில் இருந்த பாலை அதன்மீது கொட்டினார். சுற்றிலும் ஐம்பத்தோரு மண் அகல் விளக்குகளை ஏற்றிவைத்தார். ஜவ்வாது ஊதுபத்திகளைக் கொத்தாக ஏற்றிவைத்தார்.

 

பெரியவர் அந்த அமைப்பைப் பார்த்து மனம் திருப்தி அடைந்தவராக, இருகரங்களையும் தலைக்கு மேலே உயர்த்தி வணங்கினார். பூவண்ணன் கற்பூரத்தை ஏற்றிக் காட்டினார்.

 

பெரியவரிடமிருந்து ஒரு ஆவேசமான பிளிறல் வெளியாயிற்று. பின்னர் குரலில் அன்பைக் குழைத்து யாரையோ அழைத்தார்.

 

எங்கிருந்தோ மெலிதாக ஒரு அழுகை ஒலி கேட்டது. அது ஒரு சிறுமியின் கேவலோடு கூடிய அழுகை. மனதை வெகுவாகப் பிறாண்டியது. கதிரவனைவிட பரமன்தான்  வெகுவாகப் பாதிப்புற்றான். பச்சிளங்குழந்தையைக் கதறக் கதறக் கழுத்தை அறுத்துப் புதைத்தவன் அவன்தானே! பயத்தினாலும் குற்ற உணர்வினாலும் அங்கமெல்லாம் பதறின. ஓவென்று அலறவேண்டும் போலிருந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பெரிதும் சிரமப்பட்டான்.

 

“குழந்தே… அம்மாடி, உனக்கு நடந்தது பெரும் கொடுமைதான். ஆனாலும் நீ மனம் அமைதியாகி சிவனை வேண்டு. உனக்காக நான் வேண்டுகிறேன். மனம் அமைதியாகனும். அழாதே கண்ணு” என்று பலவாறு வேண்டினார். அவருடைய வேண்டுதல் உயிரையே உருக்குவதாக இருந்தது. வெகு நேரம் மன்றாடினார். சிலமணி நேரங்கள் ஓய்ந்தபின்னர், அழுகையொலி மெல்ல மெல்ல அடங்கியது.

 

ஒரு தட்டில் பாலையும் இனிப்புப் பலகாரங்களையும் பழங்களையும் வைத்து, இருககளிலும் ஏந்திப் பிடித்தார். “குழந்தே! எடுத்துக்கோம்மா. இதைப் பசியாறி மனசு குளிர்ந்து போ தாயீ!” என்று மேலும் பலவாறு வேண்டினார்.

 

எல்லோரும் பார்க்க, தட்டு உயரே சென்று பின் கீழே வந்தது. தட்டில் எந்த உணவுப் பொருட்களும் மிச்சமில்லை!

 

நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கதிரவனுக்கும் பரமனுக்கும் உடல் வியர்த்துக் கொட்டியது. பரமன் ஏறக்குறைய அழும் நிலைக்குச் சென்றிருந்தான். உதறும் கரங்களைக் கட்டுப்படுத்த, நெஞ்சுக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு பயம் நிறைந்த விழிகளால் பெரியவரைப் பார்த்தான்.

 

அதன்பின்னர் பெரியவர் கதிரவனின் பக்கம் திரும்பினார்.

 

“தம்பி, அந்த நிலத்தில் இருந்த வில்லங்கம் ஒரளவுக்கு விலகி விட்டது. இருந்தாலும் தலைச்சன் பிள்ளையைப் புதைத்த இடம். ஏறக்குறைய சுடுகாடு. அந்த  நிலையை சீர்செய்ய, நீ அங்கு ஒரு கோயிலைக் கட்டவேண்டும். நிலத்துக்கு சொந்தக்காரனுக்கு ஒரு பங்கு நீங்கள் தரவேண்டும்தானே. அவனுடைய பங்காக ஈசானிய மூலையில் பத்து ஏக்கரை ஒதுக்கிவிடு.

அங்கே  நாலு ஏக்கரில் ஒரு கோவிலையும், பெரிய கல்யாண மண்டபத்தையும் கட்டு. மீதமுள்ள ஆறு ஏக்கரில் தென்னை, வாழை என்று பழத்தோட்டத்தை அமைத்துக் கொடுத்துவிடு. நடுவில் ஒரு பெரிய குடும்பம் வாழும் அளவுக்கு ஒரு வீட்டைக் கட்டு. உனக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்தால், கந்தவேலுவுக்குப் பாத்தியதையான அறுபது ஏக்கரில்  நீ கட்டும் வீடுகளில் ஒரு பங்கை அவன் குடும்பத்துக்குக் கொடு. கொடுக்கவேண்டும். அப்போதுதான் நீ எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் அங்கே வீடமைப்பு செய்ய முடியும். இப்போது நான் சொன்ன இத்தனைக்கும் நீ சம்மதித்து ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தால், உனக்கு நான் மேலும் உறுதுணையாக இருந்து, உன் வேலைகள் சுமூகமாக நடக்க உதவி செய்வேன். இல்லை என்றால், நீ மட்டுமல்ல, அடுத்து யார் வந்தாலும் அங்கு காலை

 

ஊன்றமுடியாது……..பூவண்ணா, எனக்குக் களைப்பாக இருக்கிறது.  நான் போகிறேன். நாளை பஞ்சமி திதி. நாளைக்கு இதே நேரத்துக்கு அழை. நான் வருவேன்……”

 

பெரிவரின் தலை துவண்டது. அவர்  மயங்கிச் சாயும்போது, பூவண்ணன் சட்டென்று தாங்கிப் பிடித்துத் தரையில் கிடத்தினார்.

 

 

********************************************************************************************

பாகம் 3

 

ஒப்பந்ததைக் கையில் வாங்கிய முருகனின்  விழிகளில் கரகரவென்று கண்ணீர் பெருகி

ஓடியது அதைத் துடைக்கவும் தோன்றாமல் கேவினான். அவனை நெஞ்சோடு அணைத்து, முதுகில் ஆதரவாகத் தடவிக் கொடுத்தார் பூவண்ணன்.

 

“உன் தாத்தாவின் ஆத்மா இப்போது அமைதி அடைந்திருக்கும். கோவிலைக்கட்டி, அதற்கான கும்பாபிஷேகத்தை முடித்து, நித்திய பூசைகள் தொடங்கும்வரை நீ யாரென்று கதிரேசனிடமோ, பரமனிடமோ காட்டிக் கொள்ள வேண்டாம்.  நீ அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனிமேல் அவர்களுக்கு நீ காரோட்டப்போகக் கூடாது. நான் சொல்லும்வரை  நீ நிலத்துக்கு அருகில் போகவே கூடாது. . கோவிலும் வீடும் கட்டி முடிக்கும்வரை நீ கவனமாக இருக்கவேண்டும். பிறகு நிலத்தையும் கோவிலையும் பராமரித்து வந்தால் போதும். அதுதானே உன் தாத்தாவின் விருப்பமும்கூட! புரிகிறதா? இந்த  நிலவிவகாரம் வெற்றிகரமாக முடியும்வரை உன் தந்தையின் சார்பில் நான் தான் கதிரேசனோடு தொடர்பில் இருப்பேன்.  நீ என்னை முழுமையாக நம்பவேண்டும். எந்த நேரத்திலும் எந்த உதவி வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளத் தவறாதே. இன்னும் ஒன்று. வந்தது உன் தாத்தாவின் ஆவி என்பது யாருக்குமே தெரியக் கூடாது. வீட்டில் அம்மாவிடம் கூட சொல்லக்கூடாது. இனிமேல் நல்லதே நடக்கும். போய்வா”

 

பூவண்ணனின் வார்த்தைகள் புதுத்தெம்பைத் தர, கையில் பத்திரத்தோடும் நெஞ்சுக் கூட்டுக்குள் தாத்தாவைப் பற்றிய இனிய நினைவுகளோடும் நடந்தான் முருகன் என்ற சக்திவேலு.

 

Series Navigationயானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4புதிய பயணம் – லாவண்யா சுந்தரராஜனின் ‘அறிதலின் தீ’ –
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *