கவி நுகர் பொழுது சீராளன் ஜெயந்தன் (சீராளன் ஜெயந்தனின், “மின் புறா கவிதைகள் “, நூலினை முன்வைத்து)

This entry is part 9 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

seeraalan

  • தமிழ்மணவாளன்

படைப்பாளி தான் உணர்ந்தவற்றை உணர்ந்தவாறு வெளிப்படுத்த, எழுத்தினை ஓர் ஊடகமாகப் பயன்படுத்துகிறான். அதிலும், கவிஞன் தன் அனுபவத்தை வாசக அனுபவமாக மாற்றும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான்.”உள்ளத்து உள்ளது கவிதை, உண்மை உரைப்பது கவிதை’, என்றாலும், உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறு உரைப்பதை விடவும் உணர்ந்தவாறு வாசகன் உணருமாறு உரைக்கும் போது அது சிறந்த படைப்பாக மாறிவிடுகிறது.

“ஒவ்வொரு கோணத்திலும் கவிதை என்பது உணர்ச்சிகளின் மொழி,”என்பார் வின்செஸ்டர்.

சீராளன் ஜெயந்தனின் ,’மின் புறா கவிதைகள்’, ஏற்படுத்திய வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக கருதுகிறேன்.

நவீன தமிழ்க் கவிதைகளை வடிவம் சார்ந்தும் உள்ளீடு சார்ந்தும் ஏதோவொரு வரையறைக்குள் கொண்டு வருவது சாத்தியமன்று.

அவ்விதத்தில், சீராளன் ஜெயந்தனின் கவிதைகள் சமூகப் பார்வை கொண்டவை.பேசும் விதத்தைப் பார்க்கும் போது, அநேகமாய் நேர்படப் பேசுபவையாய் இருக்கின்றனவெனலாம்.வலிந்து திணிக்கும் பூடகத்தன்மையில்லை.

சீராளனின் தந்தை, மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் , எனக்கு நன்கு பழக்கமானவராகவும் என் மதிப்பிற்குரியவராகவும் இருந்தார். அப்போதே சீராளன் எழுதிய கவிதைகள் இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் வெளிவந்தன. அதை என்னிடத்தில் மிகவும் .மகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார்.வெகு காலமாக சீராளன் ஜெயந்தன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு, ‘மின் புறா கவிதைகள்’, என்னும் நூலாக வந்திருக்கிறது.

wrapper(1)

எந்த ஒரு படைப்பாளியும் சமூகத்தோடு தன்னை இணைத்துக் கொள்பவனாகவே இருக்க வேண்டும். சீராளன் அவ்விதம் இருக்கிறார். தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களை உற்று நோக்குகிறார். நோக்குவதோடு அவை குறித்து கருத்தினை உருவாக்குகிறார். உருவாக்கிய கருத்தை படைப்பாக்குகிறார். விழுமியங்களுக்கு எதிரான விஷயங்கள் இவரைக் கோபமுறச்செய்கின்றன. கோபம் வார்த்தைகளாய்க் கொதிக்கிறது.

கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள் தீக்கிரையான சம்பவத்தை பாடு பொருளாக்குகிறார். அதன் வேர் என்னவெனத் தோண்டிப்பார்க்கிறார்.’இருள் செய் நெருப்பு ‘, என்னும் தலைப்பே சினங்கொண்ட படிமமாய் மாறுகிறது.

காரணமென்ன? ஒளிவு மறைவின்றி உரக்கப் பேசுகிறார்.

பணம் தின்னும்

பேய்கள்

பிள்ளைக்கறி

வேண்டி நின்றது

பற்றிப் படர்ந்தது தீ

பணம் தின்னும் பேய்கள் பிள்ளைக்கறி வேண்டி நின்றதால் நேர்ந்த சம்பவம். விபத்தல்ல அது; தப்பிக்க வழியின்றி வைத்து எரித்த கொடூரம் .                                          விதிமுறைகள் ஏதுமின்றி

விதிமுறைகள் ஏமாற்றி

பள்ளிச் சட்டங்கள்

அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்

இருள் சூழ் பாதுகாப்பு

அல்லவா? கோபமாய் பேசிக்கொண்டே வந்தவர் இறுதி வரியாக

காணாமல் போனது

நாளைய சரித்திரம்

என்கிறார். ஒரு சரித்திரத்தை உயிரோடு கொளுத்தும் அக்கறையின்மையின் கேவலத்தை உச்சமாய் முடிக்கிறார்.

 

விமர்சனப் பார்வை என்பது பிறர் மீது மட்டுமன்றி சுயமானதாகவும் அமைவது அபூர்வம்.இவருக்கு அது சாத்தியமாகியிருக்கிறது.

தேதித்தாள்

காலையிலும்

மாத்திரை அட்டை

இரவிலும்

கிழிகையில் தெரியும்

நாட்கள் கிழிவது

இடையில்

நானொன்றும்

கிழிக்கவில்லை.

நாள் தொடங்குவது தேதித்தாள் கிழிப்பதால் தெரியும்.மாத்திரைத்தாள் கிழிவது நாளின் இறுதியில் நம்மின் நலமான வாழ்க்கை தெரியும். நானொன்றும் கிழிக்கவில்லை என்பது சுய விமர்சனச் செய்தியல்ல. அழகான அங்கதக் கவிதைக்கோர் சான்று. இவருக்கு அங்கதக் கவிதைகள் வெகு லாவகமாய்க் கைவரப் பெற்றிருக்கின்றன.

இந்தக்கவிதையைப் பாருங்கள். ஹைக்கூ வடிவிலான கவிதையிது.

எனக்கான அரிசியில்

என்பெயரெழுது இறைவா

பசிக்கிறது.

அவ்வளவுதான். மிகச்சிறிய கவிதை. ஆயினும் இது குறித்துப் பேச நிறைய இருக்கிறது.இறைவனிடம் முன் வைக்கிற வெறும் கோரிக்கையா இது.

முதலில் உள்ளீடு குறித்துப் பார்க்க வேண்டும். பசிக்கிறது எனவே கேட்கிறார். ‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்’, என்பதைப்போல.அரிசியில் பெயர் எழுதித் தருபவர்களப் பார்த்திருக்கிறீர்களா? கண்காட்சிகளில் எல்லாம் இருப்பார்கள். நம் பெயரை அரிசியில் எழுதிக்கொடுத்துவிட்டு பத்து அல்லது இருபது ரூபாய் பெற்றுக்கொள்வார்கள். நல்ல கலைஞர்கள். அரிசியில் நம் பெயரை எழுதி வாங்கிக் கொண்டு ,உள்ளபடியே அவர்களின் அரிசியில் பெயர் எழுத நாம் பணம் கொடுக்கிறோம் என்று பொருள். இருக்கட்டும். இவர் கவிதையில், ’ ’எனக்கான அரிசியில், என் பெயரெழுது இறைவா’,என்கிறார்.எத்தனை கவனமான வார்த்தை. எத்தனை நியாயமான வார்த்தை. ‘எனக்கான அரிசியில்’, என்னும் போது அவரவர்க்கான அரிசியில் அவரவர்க்கான பெயரை எழுது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்

என்னும் பாரதியோடு ஒத்துப் போகிற சீராளன்,

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்

என்னும் தொனியில் எழுதுவது கவனிக்கத்தக்கது.

 

சாணம் தெளித்து கோலமிட்ட

வாசல் தரையில்

மாலை நீர் தெளித்து

ஏழுக்கு ஏழு

நேர்ப்புள்ளி வைத்த

நெளி கோலத்தின் மேல்

பாய் விரித்து

கிடத்திக் கொண்டாள்

பாட்டி

 

அரிக்கன் விளக்கு கண்ணாடியை

சாம்பல் தேய்த்து துடைத்து

விளக்கேற்றி

இரவை வரவேற்பாள் அம்மா

 

ஒவ்வொன்றாய்

பாட்டியின் வாயை கிளர

கூடி விடும் பக்கத்து வீட்டுப்

பெண்கள்

என்றெல்லாம் காட்சிகளின் சித்தரிப்பின் வாயிலாக,  கிராமத்தில் பிறந்து வளர்ந்த பால்ய வாழ்க்கை குறித்து சிலாகிக்கிற கவிமனம் தற்போதைய நகர வாழ்வின் வெறுமையான பக்கங்களை சுட்டிக்காட்டும் விதமாக, ’நகரம்’, என்னும் கவிதையில், ’எத்தனையோ வசதிகள் நகரத்தில் கிடைக்கின்றன. மறுப்பதிற்கில்லை.எல்லாமே இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் வீடிருக்கும் பெருமையும் இருக்கிறது. கடைத் தெரு, காய்கறிச்சந்தை, ரயில் நிலையம்,மருத்துவர்,மருந்துக்கடைகள், ஜவுளிக்கடல்கள் எல்லாம் இருக்கிறது’,என்று கூறிவிட்டு, கவிதையின் இறுதி வரியாக,

என்னைக் கிடத்தியிருந்த

அவசர ஊர்தி அலறியதே தவிர

நகரவில்லை

என்பது ஏதோ சாலை நெரிசலைச் சுட்டுவதாகத் தோன்றினாலும் மேலோட்டமான பொருள் ஒரு வேளை அதனை உரைத்தாலும் அது மட்டுமன்று. நலமற்றுக்கிடக்கும், நகரமறுக்கும் நகர வாழ்வின் குறியீடாகவேக் கொள்ளமுடிகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டின் அவஸ்தையை நகரில் வாழும் மக்கள் நன்கறிவர். தண்ணீருக்காக வரிசையில் இடம் பிடித்து பாத்திரங்களை வைக்கிற வழக்கம் உண்டு. அதை எத்தனை அங்கதமாய்ச் சொல்கிறார்.

பிளாஸ்டிக் குடமெல்லாம்

பேர்வச்சுக் கேட்டதுண்டா

என.

 

’எந்தை ஜெயந்தன்’, என்னும் கவிதையில், தந்தையின் பால் அவருக்கிருக்கும் அன்பு, பாசம், மரியாதை,அவரைத் தந்தையெனப் பேசுகையில் கிட்டும் கம்பீரம் எல்லாம் ஒரு சேரக் கிடைப்பதைக் காணமுடிகிறது.

எல்லோரையும் போலவும்

வாழ்ந்ததில்லையே நீ!

எந்த நிமிடமும் ஓய்ந்ததில்லையே

உன் ஞானத்திற்குத்தான்

எத்தனை காற் சக்கரங்கள்!

உனது சிந்தனை ஓட்டம்

தொடாத எல்லைகள் இல்லை

உன்னைச் சுற்றி சூடு பரப்பும்

அறிவுச் சுடரில்

குளிர் காய்ந்தோர் ஆயிரம்

என்னும் வரிகளே அவற்றின் வெளிப்பாடாகிறது. தந்தை குறித்த மனவோட்டம் மற்றும் வெளிப்பாடு குறித்த இக்கவிதையை வாசித்த உணர்வின் நீட்சியாக,

முதுகில் உருண்டு

நதியில் விழுந்தது கலயம்

சாம்பலாய்க் கரைந்தார்

கையில் தாங்கி

நீந்தச் சொன்ன தந்தை

என்று பிறிதொரு கவிதையில் மன அழுத்தத்தோடு நிறைவு பெறுகிறது.

காதல் குறித்த வெகு சில கவிதைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.இன்றைய அறிவியல் வளர்ச்சியில், காதலைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை முற்றிலுமாக மாறிப் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். மின் புறா கவிதை பேசுவது இது குறித்தே.இந்த மின்னூடகக் கருத்துப்பகிர்வினால் உள்ள நன்மைகளை மிகுந்த அங்கதமாக,

ஆளில்லை அம்பில்லை

அடி உதையில்லை

இவ்வூடகத்தில் எதிரியில்லை

முகம் தெரியா பெண்ணோடு

முட்டாள் தனமாய்

முனகினாலும்

முழம் நீளம் பதில் வரும்

என்கிறார்.

 

’அகராதி’,என்னும் தலைப்பிட்டு, தெறிப்புகளாக சிலவற்றை எழுதியிருக்கிறார்.

கவிதை,காதல்,நிலா,அழகு,முத்தம்,ஊடல்,காமம்,கடற்கரை,தனிமை,கணகள்,சிரிப்பு,

அன்பு,பூக்கள்,திருமணம்,வாழ்க்கை,கனவு இவற்றைப்பற்றி ஓரிரு வரித் தெறிப்புகள்.

 

அவற்றுள்சில.

”காதல்”

கவிதையைத் தூண்டும்

மதுக்கஷாயம்

 

”அழகு”

கண்ணின் பிழை

 

”முத்தம்”

நிறைய நெருப்பைக் கருக் கொண்டு

உரசிப் பார்க்கும்

ஈர தீக்குச்சி.

 

”கடற்கரை”

சுவர்களற்ற தனிமை

 

”தனிமை”

தேடினால் மாயை

இப்படியாக.

 

‘மௌனமொழி’, என்னும் குறுங்காவியம் என்னும் தலைப்பிட்டு நீள்கவிதை ஒன்றினையும் இணைத்துள்ளார்.

தொடக்கத்திலேயே குறிப்பிட்டது போல நேர்படப் பேசும் தன்மையிலான கவிதைகள்.பாடு பொருளை வாசகனிடம் வெளிப்படையாக கடத்திவிட வேண்டும் என்கிற முனைப்பு கவிதையாக்கத்தின் முக்கியத்தன்மையாகக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.மனத்தில் உருவாகும் ஏதோவொன்று தான் படைப்பாக மாறவும் எழுதவும் துண்டுகோலாகிறது. கவிதையாக மாறும் தருணம் கவிஞன் ஆற்றும் பங்கு கவிதையென்னும் பொருள் உருவாக்கத்தில் முக்கியமானது. கவிதையாக மாறும் பொழுதில் குறைந்த பட்ச சொற்பிரயோகத்தில் புனைவு,உவமை,உருவகம்,படிமம்,மறைபொருள் என கூறுகளைக் கொள்ளுவதும் உணர்வெழுச்சியை வார்த்தைகளில் அல்லாது வாசகனிடத்தில் உருவாக்குவதும்

சிறப்புடையதாகும்.

 

சீராளன் ஜெயந்தனின் பாடுபொருள்கள் சத்தியமானவை.படைப்புகள் உள்ளார்ந்த உண்மைத் தன்மை கொண்டவை.தொடரும் கவிதைச் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்கக் கவிதைகளைத் தமிழுக்குத் தருவார் என்னும் நம்பிக்கையை இவரின் முதல் தொகுதி தருகிறது.

 

சீராளன் ஜெயந்தனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

Series Navigationகவி நுகர் பொழுது ஈழவாணி (ஈழவாணியின்,’ மூக்குத்திப்பூ’, கவிதை நூலினை முன்வைத்து)திருப்பூரில் 21/8/16 ஞாயிறு ஒரு நாள் குறும்பட விழா ” கனவு “ சார்பில்..
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Comments

  1. Avatar
    விஜயகுமார் says:

    அருமையான விமர்சனம்…..நாங்களெல்லாம் அவரது கவிதையை வாசித்தோம் …..நீங்கள் சுவாசித்து, சிலாகித்து உங்கள் அழகு நடையில் பிரித்து மேய்ந்து விட்டீர்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *