கவி நுகர் பொழுது- அன்பாதவன்

This entry is part 11 of 14 in the series 14 ஆகஸ்ட் 2016

Anbaadhavan

(அன்பாதவனின்,’உயிர் மழை பொழிய வா!’, கவிதை நூலினை முன் வைத்து)

 

தமிழ் இலக்கியச் சூழலில் அன்பாதவன்  தொடர்ந்து  இயங்கி வருபவர்.கவிதை,சிறுகதை,கட்டுரை,விமர்சனம் என்று அனைத்துத் துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்து வருபவர். அண்மையில், அன்பாதவனின், ’உயிர் மழை பொழிய வா!’, என்னும் கவிதை நூலினை நறுமகை வெளியிட்டிருக்கிறது. அந்த நூலின் வெளியீட்டு விழா 06-08-2016 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. அவ்விழாவினில் பங்கு கொண்டு உரையாற்றினேன்.

Wrapper(2)

நூலின் முன்னுரையில், சக்திஜோதி முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

“பொதுவாக ஆண்கள் அனைவருமே தாயின் கருவறை நோக்கித்தான் தொடர்ந்து பயணப்படுகிறார்களோ என்று தோன்றும்படியாகவே நிகழ்வாழ்வில் வாழ்கிறார்கள்.பெண் என்பவள் ஆணைச் சார்ந்தவளாக வாழ்கிறாள் என்கிற சமூகவாழ்வின் அடிப்படையான எண்ணத்திலிருந்து மாறுபட்டது அகவாழ்வின் நிலை.தாயிடமிருந்து அவன் உணர்ந்த வெதுவெதுப்பை காலம் முழுக்க உணர்த்தக்கூடிய மனைவி அல்லது இணையைத் தேடுகிறவனாகவே ஓர் ஆண் மடிகிறான் என்பது தான் உண்மை”.

இயல்பாக, ஆண்கள் குறித்த பார்வையிலிருந்து, அதுவும் பெண் மீது ஆண் கொண்டிருக்கும் அபிப்ராயம் குறித்து பெண்படைப்பாளியான சக்தி ஜோதியின் மேற்கண்ட கருத்து கவனிக்கத்தக்கது.

பொதுவாக, பெண்களைத்தான் நிலத்தோடு ஒப்பிடுவது வழக்கம்.நிலத்திற்கான மழையைப் பொழிகிறவனாகவே ஆண் சித்தரிக்கப்படுவது வழக்கம். அதற்கு மாறாக அன்பாதவன், ’உயிர்மழை பொழிய வா’, என்று பெண்ணை நோக்கி அழைப்பவராகத் தென்படுகிறார்.மனைவியை மறுதாயாகக் கருதுகிறார்.

முத்தங்கள் ஈந்து மகிழும் மறுதாயை

சித்தம் முழுதும் கலந்தாளை—நித்தமும்

பாடாத நாவொன்றும் நாவில்லை; அன்னவளின்

ஈடாக யாருமிலைக் காண்.

அவளைப் பாடாத நாவொன்றும் நாவில்லை என்று சொல்வதோடு நிற்காமல், அன்னவளின் ஈடாக யாருமில்லை என்பதில் அழுத்தம் தருவதைக் கவனிக்க வேண்டியுள்ளது.

இத்தொகுதியில் உள்ள கவிதைகளை, காதல்,காமம்,பிரிவு என்னும் மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்க முடியும்.

காதலினால் மானுடர்க்கு கலவியுண்டாம்

கலவிலே மானுடர்க்குக் கவலைதீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்?

என்பான் பாரதி.காதலைத் தலைமையின்பம் என்கிறான்.பிறிதெல்லாமே இதன் கீழ் அல்லது இதனையொட்டி வருகின்ற இன்பங்களேவாம். காதல் உணர்வும் காமமும் தான் ஐந்து புலன்களாலும் அனுபவிக்கத்தக்கது.இன்னும் சொல்லப்போனால் ஆறாம் அறிவான சிந்தனையிலும் சுகம் தருவது இவையே.

தவி(ர்)ப்பு என்றொரு கவிதை.

கேட்டுப்பெறுவதல்ல காதல்

யாசித்து அளிப்பதல்ல அன்பு

பிச்சை போடுவதல்ல காமம்

காதலும் காமமும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டிய உணர்வு. ஒரு புறம் இருந்து மறுபுறம் இல்லையெனில் சிக்கல்தான். ஒருதலைக் காதல் மிகவும் ஆரோக்கியமற்றது.தன்னளவில் ஆரோக்கியமற்றதாக இருப்பதோடு மட்டுமன்றி, யார் மீது வயப்படுகிறார்களோ அவர்களுக்கும் தொல்லை தரத் தூண்டுவது.

உயிர்க்கொலை செய்யவும் அமிலம் ஊற்றவும் தூண்டக்கூடிய மனப்பிறழ்வை ஏற்படுத்தக்கூடியது. எனவே, ஒருதலைக் காதல் பொல்லாதது. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது.

யாசித்து அளிப்பதல்ல அன்பு

பிச்சை போடுவதல்ல காமம்

என்னும் வரிகள் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். ஆமாம். பெறுவதல்ல காதல் ;வருவது.இருவருக்கும் வருவது;ஒரு சேர வருவது;ஒன்று சேர வருவது.

 

”காதல் அன்பைத்தவிர வேறெதையும் தருவதில்லை. தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை.காதல் அன்பு எதனையும் தனக்கெனப் பற்றிக் கொள்வதில்லை.அதை எவரும் காப்பாற்ற முடிவதில்லை.ஏனெனில் காதல் அன்புக்குக் காதல் அன்பே போதுமானது”,என்கிறார் கலீல் கிப்ரான்.

காதலுக்கு சமூகத்தில் எப்போதும் எதிர்ப்புகள் இருந்த வண்ணமே உள்ளது.சமூகம் அதற்கு ஏதேனுமொரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டேதான் இருக்கிறது.ஆயினும், காதலுக்கான நியாயங்கள் உயிரிக்கத்தின் நியாயம்.உலகத்தின் எந்த ஒரு நியதியையும் தாண்டி தனக்கான நியதியை உருவாக்கிக்கொண்டுள்ளது.

காதல் உணர்வு இயல்பிலேயே கொண்டாட்ட உணர்வைக்கொண்டது. சமூகம் தான் அதனை பலகரணங்களால் சோக முடிவுக்கு ஆளாக்குகிறது.முத்தம்காதலின் செயல் அடையாளங்களில் ஒன்று. அந்த முத்தத்தில்,

காதலின் வாசம் வீசுமொன்றில்

காமத்தின் வேகம் பிறிதொன்றில்

பாசத்தின் பதிவுமுண்டு:

முத்தத்தின் இயல்பு காதலின் வழிப் பிரயோகமாயினும்,இறுதியாக,

மென்னழுத்தத்தில்

அம்மாவின் பரிவுமுண்டு

என்று காதல் உணர்விருந்து தாய்மை உணர்வின் ஊடாக தொடர்ந்து பயணித்துக்கொண்டேயிருக்கிறார் அன்பாதவன்.

முத்தத்தின் உச்சபட்ச இன்பம் என்னவாக இருக்கும்?

உச்சத்தில் கொசுறாய் ஒத்தி எடுக்குமொன்று

உள்நாக்கு வழியாய் ஊடுருவி

உயிர்கலக்கு மின்னொன்று

உள் ஊடுருவி உள் நாக்கின் வழி உயிரோடு கலக்குமெனில் அம்முத்தம் எத்தனை ஆழமானதாய் இருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.

முத்தம் குறித்து வாசிக்கும்போது சுரதாவின் கவிதை வரி நினைவுக்கு வருகிறது.

முத்துச் சிரிப்புதனை

மூடிவைக்கும் என் உதட்டை

கொத்துங்கள் அத்தான்  வாய்க்

கோவைப் பழத்தாலே

என்பார்.

ஜான் மில்டன் ,இழந்த சொர்க்கம்(paradise lost), மீண்ட சொர்க்கம் எழுதினார்.அன்பாதவன் தொலைந்த சொர்க்கம் எழுதுகிறார்.

நினைவிலிருக்கிறதா…

முன்னொரு காலத்தில்

உரையாடலின் செல்லங்களாய் இருந்தோம்

இப்படித் தொடங்கும் ’தொலைந்த சொர்க்கம்’, கவிதை. அவ்விதமாயின், இப்போது இல்லை. இருந்த காலம் சொர்க்கம். இப்போது சொர்க்கத்தை இழந்திருக்கிறோம். மேலே செல்லுமுன் இந்த மூன்று வரிகளிலிருந்து அறியவருவது இது.

சொர்க்கத்தை இழந்ததற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார்.நமக்கான சொர்க்கத்தைத் தீர்மானிப்பவர்களாக பிறர் இருப்பது எத்தனை சோகம்.எனினும் அது தான் சமூகம்.அதுதான் வாழ்க்கை.என் செய்வது?

மிச்சமிருக்கும் காலத்தை

கழிப்பது எப்படியென

மிதக்கும் கேள்வி தூண்டில் தக்கையென

அயர்ச்சியுடன் வெறிக்கின்றன

வாழ்க்கையின் மீது நான்கு கண்கள்

என்று முடிகிறது தொலைந்த சொர்க்கம்.

 

திருப்பாற்கடலில் ஆதி சேஷன் என்னும் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்கிறார் திருமால்.மந்திரமலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடல் அமுதம் கடையும் போது பாம்பு விஷம் கக்குகிறது. அதனை சிவபெருமான் பருகும் போது,அந்த ஆலகால விஷம் உள்ளே சென்றுவிடாது பார்வதி பிடிக்க நீலகண்டன் ஆன புராணம் அறிவோம்.

புராணத்தின் செய்திகளையும் நிகழ்வுகளையும் ஒரு புறம் நினைவிருத்திக் கொண்டு அன்பாதவனின் பாற்கடைசல் கவிதையை வாசிக்கும்போது சமகாலத்திற்கான புனைவு வெளியை அடைய முடியும்.

 

சோமபானம் சுராபானம் என்று இரண்டு கவிதைகள்.தனித்தனியே வாசிக்கும் போது ஒன்று நேர்மறையாகவும் பிறிதொன்று எதிர்மறையாகவும் இருப்பதை கவனிக்கையில்,ஒரு வேளை அது இயல்பாய் அமைந்ததெனினும், சோமபானத்தை ஆதரிக்கும் மனோ நிலையை உருவாக்குகிறது .

காமம் குறித்த கவிதைகள் சில குறிப்பிடத்தக்கவையாய் உள்ளன. ’வனத்தீ’,என்னும் கவிதை முக்கியமானது

 

தீராக் காமத்தின் பெரும் பசியில்

தெரு நாயெனத் திரியும்

அடங்கா மனசின் ஆவேசம்

பொங்குமே ஆழிப் பேரலையாய்

 

இச்சையெனும் வனத்தீயில்

தப்பிக்கத்தெரியாமல்

சிக்கிக் கருகி கிடக்கிறாள்/ன்

அடையாளமழிந்து

என்னும் கவிதை பொதுவான காமத்தின் வெளி குறித்தபதிவாக அமையும் அதேசமயம் ஒரு பெண்ணின் விரகதாபத்தின் வெளியில் அவளின் குரலாகவே அமையப்பெற்றிருக்கிறது, ‘சுகி’, என்னும் கவிதை.

எனது யோனித் தீபத்திலிருந்து

எரியும் சுடரில்

கரிந்து பொடியாகிறது

சிரைக்காத கருவனம்..

கனன்றெழும் புகை சுழலுள்

பூக்கிறது காமத்தின் காம்பூ

போதவில்லை

பொங்குமோர் நதியின் புதுவெள்ளமும்

எரியும் தீயடக்க..

பிறிதொன்றில்,

தண்ணென்ற தனிமை: வெப்பமதுவாய்

உஷ்ணமூட்டுமுன் அண்மை

வரவேற்பாளர்களா காவலாளிகளா ஆடைகள்

குழப்பத்திலிருப்பவன் மேலமர்ந்து

புரவியோட்டுமுன் சாதகம்

வேட்டைக்கு வந்தவன்

வேட்டையாடப்பட்டதை

இசைக்குறிப்புகளாக்கும் கட்டில்

என்பதனை, முதல் கவிதையான, ’சுகி’, யின் ,’பூக்கிறது காமத்தின் பூ’, என்னும் குரலோடு இணைக்கத் தோன்றுகிறது.

விடியாத இரவொன்றுக்குத் தவமிருக்கச் சொல்லும் கவிமனத்தின் இரவுக்குறிப்புகள் எதன்பாற்பட்டதாக இருக்கும் என்பது யூகிக்க முடிந்தது தானே.

விடியாத இரவொன்றுக்காய்த்

தவமிருப்போம்

தீண்டத் தீண்ட இசைபொங்கும்

மீட்டலில் மலருமே

சுவைகூடிய இசைக் கோர்வைகள்

இரவில் இசைபொங்கும் இசைக் கோர்வைகள் அற்புதமானது தான்.கவித்துவமானது தான்.ஆயினும் நீளும் பகலில்,

காத்திருப்போம்

ஒளி நீண்ட பகலொன்றுக்காய்

சமமாய்ச் சமைப்போம்

ஊட்டி பகிர்ந்து

மடிமாற்றி சாய்ந்து

துளித்துளியாய் கவிசொல்லி

துய்த்துறங்குவோம் அணைத்தபடி

என்னும் சித்திரம் பரஸ்பர அன்பின் பரிமாற்றமாகவும் மடிமாற்றி, சாய்ந்து கவிதை சொல்லி உறங்குவது எத்தனை பேரின்பம். தலைமையின்பம் ஆயிற்றே…

 

பிரிவு குறித்தான சிலகவிதைகள் உள்ளன. கவிஞர் பணியின் பொருட்டு கடல் கடந்து இருக்கிறார்.அவருக்கு இடர் தானெனினும், தனித்து வாழும் சூழல் தமிழுக்கு சில நல்ல கவிதைகளைத் தந்திருக்கிறது.

அங்கு மழை

இங்கு வெயில்

 

அங்கு குளிர்

இங்கு கூதல்

 

அங்கு நீ

இங்கு நான்

 

பிரிக்கும் பூமி

இணைக்கும் வானம்

எப்படி பூமி பிரிக்க வானம் இணைக்கிறது.நீ பார்த்த நிலா தானே நான் பார்ப்பது என்பதால், என நினைப்பது பழசு.பல மைல் தூரம் கடந்து வாழும் சூழலை பூமி கொடுத்தாலும் ’எமிரேட்ஸ்’ விமானம் மூலம் வந்துசேரவும் இணைக்கவும் செய்வது வானம் தானே என எண்ணத்தோன்றுகிறது.

 

நள்ளென்றன்றே யாமம் கொல் அவிந்து

இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சாதானே.

என்பது நெய்தற்திணையில் பதுமனார் எழுதிய குறுந்தொகைப் பாட்டு.

அன்பாதவன் எழுதுகிறார் இப்படி.

வருமா …உறக்கம்?

உன் வார்த்தைகள் தருமா தூக்கம்?

 

விசும்பலும் மென்புன்னகையும்

கூடவே தொடரும் நிழலாய்

*****************   ********    *****

குளிர் துணையாய் வருவாயா?

உணர்வனலைப் பகிர்வாயா…?

என்றெல்லாம் பிரிவாற்றாமையின் வெளிப்பாடுகளாய்ப் பாடுகிறார்.

இத்தொகுப்பில் பாரதி குறித்த சில மீள் பார்வைகளை செல்லம்மாவின் வழி கொண்டும் கண்ணம்மாவின் மொழி கொண்டும் நிகழ்த்திப்பார்க்கிறார்.

 

தொகுப்பில் வெண்பா, ஹைக்கூ, சந்தம், நவீன கவிதையென பல வகைப்பாடுகளில் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அன்றாடம் எழுதிக் கொண்டிருப்பவர் அன்பாதவன். எழுத்தினை ஓர் இயக்கமாக கொண்டிருப்பவர். அவ்வியக்கம் எப்போதும் தொடர்ந்து மேலும் பல படைப்புகளைத் தமிழுக்குத் தர தமிழ்மணவாளனின் வாழ்த்துகள்.

Series Navigationகற்பனையும் விளையாட்டும் – செந்தில் பாலாவின் ‘இங்கா’-திரும்பிப்பார்க்கின்றேன் ஆளுமைகளின் உள்ளத்துணர்வுகளை பதிவுசெய்த கடித இலக்கியம்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *