திரும்பிப்பார்க்கின்றேன் பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும் கலை – இலக்கிய பதிப்புலகமும்

author
3
0 minutes, 5 seconds Read
This entry is part 4 of 20 in the series 4 செப்டம்பர் 2016

Pathmanaba Iyer

அனைத்துலக  தமிழ்   இலக்கியப்பாலமாகத் திகழ்ந்தவரின்  வாழ்வும்   பணிகளும்

                                            முருகபூபதி —  அவுஸ்திரேலியா

 

” ராஜம் கிருஷ்ணனின்  அலைவாய்க்கரையில்  நாவலைப்படித்த பின்னர், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள்  சிறுகதைத்தொகுதி படிக்கக்கிடைத்தது.   இலங்கையில்  ஒரு  பிரதேசத்தில்  வாழும் கடற்றொழில்  புரியும்  மீனவ  மக்களைப்பற்றிய கதைகள்.  இந்த நூல் பற்றி  ‘தாமரை’ யில்  எழுதவிருக்கின்றேன்.” –  என்று எழுதப்பட்ட  ஒரு வாசகர்  கடிதம் 1975 ஆம் ஆண்டின்  இறுதிப்பகுதியில்  மல்லிகையில் வெளியானது.

அதனை  எழுதியிருந்தவர், தமிழக முற்போக்கு இலக்கிய விமர்சகர் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள்.

Pathmanaba IyerMallikai

அவரை நான் பார்த்ததுமில்லை. அதனால் பேசியதும் இல்லை. என் எழுத்துக்களை  எனது முதல் நூலின் ஊடாக அவருக்கு அறிமுகப்படுத்தியவர்தான் அண்மையில்  பவளவிழா நாயகனாக எம்மவர்களினால்  கொண்டாடப்படும்  நண்பர் பத்மநாப ஐயர்.

அண்மையில் நடந்த எமது 16 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக குவின்ஸ்லாந்து மாநிலத்திற்கு புறப்பட்ட தருணத்தில் அவருக்கு பவளவிழா  என்ற செய்தியை நண்பர் கிரிதரனின் பதிவுகளில் பார்த்தேன். உடனடியாக எனது நீண்ட கால நண்பர் பற்றிய பதிவை எழுதமுடியாதிருந்த  வேலைப்பளுவுக்கு மத்தியில் அவர் பற்றிய பழைய நினைவுகளுடன் விமானம் ஏறினேன்.

அங்கு சென்ற பின்னர் –  நண்பர் நடேசன் சொன்ன முகநூல் குறிப்புகள், என்னை வருத்தியது. என்னிடம் இந்த முகநூல் இல்லாதிருப்பது  எவ்வளவு  பெரிய  பாக்கியம்  என்று  மீண்டும் உணர்ந்தேன்.

ஒரு  வாழ்நாள்  சாதனையாளர் –  தொடர்ச்சியாக எமது கலை இலக்கியத்திற்காகவே  தனது  வாழ்வை  அர்ப்பணித்த  ஒருவர் கொண்டாடப்படும்   அரிதான  தருணம்  அவர்  கடக்கும்  வயதின் எல்லைகள்தான்.

அத்தகைய  ஒரு  எல்லையில்  அவரை  எவ்வாறு  அழைப்பது ?  எப்படி எழுதுவது ?  என்ன பெயர் சொல்லி விளிப்பது ?  முதலான சர்ச்சைகள் அவசியமற்றவை.

பத்மநாப ஐயரை நான் முதலில் சந்தித்தது நாற்பத்தியைந்து வருடங்களுக்கு முன்னர் நீர்கொழும்பில்தான்.  அவருடைய சகோதரியின் குடும்பம் அப்பொழுது எங்கள் ஊரில் தமிழர்கள் செறிந்துவாழும் கடற்கரை வீதியில் வசித்தனர்.

பத்மநாபஐயரின்  சகோதரியின்  குடும்பத்தினர்   ஊருக்கு  நன்மை செய்தவர்கள்.   சகோதரியின்  கணவர் சுந்தரம் ஐயர் கொழும்பில் ஒரு தனியார் துறையில் கணக்காளராக பணியாற்றியவாறே எங்கள் வித்தியாலயத்தின் அபிவிருத்திச்சங்கம், இந்து இளைஞர் மன்றம், கோயில்களில் முக்கிய பணியாற்றியவர். இந்த அமைப்புகளில் பொருளாளராகவும் கணக்காய்வாளராகவும் இயங்கியவர். பத்மநாப ஐயரின் சகோதரி எங்கள் ஊர் மகளிர் மன்றத்தில் அங்கம் வகித்தவர்.

அக்காலத்தில்  நீர்கொழும்பு சிறையில் வாடிய தமிழ் அரசியல் கைதிகளுக்கு, தைப்பொங்கல், புதுவருடம், தீபாவளி முதலான    பண்டிகை   தினங்களில் பலகாரம்  சிற்றுண்டிகள்  தயாரித்து வழங்கி உபசரித்தவர்கள்.

இவ்வாறு  சமூகப்பயன்பாட்டு  சிந்தனை கொண்ட ஒரு பெரியகுடும்பத்தைச்சேர்ந்தவர்தான்  பத்மநாப ஐயர்.  நான் அவரை அன்றும்  இதே  பெயரில்தான்  அறிந்தேன்.  இன்றும்  அதே பெயரில்தான் அழைப்பேன்.

எனவே,  எனக்கு  எந்தக்குழப்பமும்  இல்லை.

1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த இலக்கிய நண்பர் இந்திரா பார்த்தசாரதி,  எமதில்லத்தில்  தங்கியிருந்தவேளையில்  ஒரு சுவாரஸ்யமான  தகவலைச்சொன்னார்.

அவருடைய  குருதிப்புனல்  நாவலுக்கு  இந்திய  சாகித்திய  அக்கடமி விருது   கிடைத்தவுடன்  – அதனை சகித்துக்கொள்ள முடியாமல் – டில்லி பல்கலைக்கழக  தமிழ்ப்பேராசிரியர் இளந்திரையன்,                        ” இந்திராபார்த்தசாரதியுடைய    நூலுக்காக  இல்லாவிடினும்  அவருடைய   பூநூலுக்காகவாவது   இந்த விருதைக்கொடுத்திருப்பார்கள்.”  என்று  சொன்னாராம்.

“தான் பூநூலே அணிவதில்லை ” என்றார்  அந்தக்குலத்தைச்சேர்ந்த இ.பா.

ஆலயங்களில் பூசையை தொழிலாகவும் தொண்டாகவும் செய்தவருக்கு   மகனாகப்பிறந்த பத்மாநாப  ஐயர் ,  இலக்கியத்தொண்டனாகவே  எமக்கு  அறிமுகமானார்.  அத்துடன் குடும்ப  நண்பராகப்பழகினார்.  இவருடைய  உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்கள்  பலரை  நன்கறிவேன்.

எனக்கு  கணையாழி  இதழ்கள் தமிழகத்திலிருந்து கிடைப்பதற்கும்  சென்னை வாசகர் வட்டம்  வெளியிட்ட  தரமான நூல்களைப்பெறுவதற்கும்   வழிவகுத்தவர்  இவர்தான்.

எனது சுமையின் பங்காளிகள் 1975 இல் வெளியான காலப்பகுதியில்  பத்மாப ஐயரும் குலசிங்கம் என்ற நண்பரும் நீர்கொழும்பிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார்கள்.

அப்பொழுது ராமேஸ்வரம் மார்க்கமாக அவர்கள் கப்பலில் பயணித்தார்கள். எனதும்  மற்றும்  சிலரதும்  நூல்களை அவர் சுமந்துகொண்டு  எடுத்துச்சென்று  சென்னையிலும்  தாம் சந்தித்த தமிழகத்தின் இதரபிரதேசங்களில்  வசித்த  எழுத்தாளர்களிடமும் சேர்ப்பித்தார்.

அவ்வாறுதான்  எனது  நூலின்  ஒரு  பிரதி பேராசிரியர் நா.வானமாமலையிடம்  சேர்ந்திருக்கிறது.   தமிழகப்பேராசிரியர்கள் ,  எழுத்தாளர்கள்  ஈழத்துப்படைப்புகள் பற்றி விதந்து  பேசாத  அக்காலத்தில்,  எம்மவர்களை  தமிழகத்திற்கும்  தமிழக   இலக்கியவாதிகளையும்  இதழ்களையும்  ஈழத்துக்கும்   அறிமுகப்படுத்தி   இலக்கியப்பாலம்   அமைத்த முன்னோடியாகத்தான்  நாம்  அன்று  பத்மநாப ஐயரை  இனம்கண்டோம்.

இவர்   இலக்கியம்  படைக்கவில்லை.  இலக்கிய  சங்கங்கள் அமைக்கவில்லை.   இலக்கியக்கூட்டங்கள்  ஒழுங்கு  செய்யவில்லை. இவற்றை  அன்று  இலங்கையில்  செய்வதற்கு  பலரும்  இருந்தார்கள்.

ஆனால்,  பத்மநாப ஐயர்  மேற்கொண்ட  அயராத  பணியை அக்காலப்பகுதியில்   வேறு  எவரும்  தொடங்கவில்லை.  அதனால்தான் அவர்  அன்றே  தனித்துவமான  பிறவியாக  எம்மால் இனம்காணப்பட்டார்.

பல  படைப்பாளிகளின்  நூல்  வெளியீட்டு  முயற்சிகளுக்கு ஆதாரசுருதியாகத்திகழ்ந்தார்.   சில  இதழ்களின்  வெளியீட்டுக்கு பக்கத்துணையாக  விளங்கினார்.

இலக்கிய   நண்பர்களைத் தேடிச்செல்வது  அவருடைய  இயல்பு. நீர்கொழும்புக்கு   அவர்  வந்தால்,  சில  சமயங்களில்  இரவு வேளையிலும்   தொலைவில்  இருந்த  எனது  வீட்டுக்கு  வந்து  சில மணிநேரம்   உரையாடிவிட்டுத்தான் செல்வார்.   நீர்கொழும்பில் அன்று   இவருடைய  மற்றும்  ஒரு  நண்பர்  விக்னேஸ்வரன்.  நாம் மூவரும்  இரவிரவாக  இலக்கியப்புதினங்கள்  பேசுவோம்.

பாரதி  நூற்றாண்டு  காலத்தில் (1982-1983) பாரதி சம்பந்தப்பட்ட சில அரிய நூல்களை  எனக்குப் படிக்கக்கொடுத்தவர்  பத்மநாப ஐயர்.  இவர்   தந்த  பாரதி  சம்பந்தமான  ஒரு  சிற்றிதழ்,   அவ்வேளையில் பாரதியார்   காலத்தில்  வாழ்ந்த  ஒரு  முதியவரைச்சந்தித்து  நேர்காணல்   வெளியிட்டிருந்தது.

பாரதியும்   அந்த  முதியவரும்   காலையில்  எழுந்து  கொல்லைக்குச் சென்றுவிட்டு  ( காலைக்கடன் கழித்துவிட்டு)   வரும்பொழுது, பாரதியார்   முழு நிர்வணகோலத்தில்   சூரிய  நமஸ்காரம்  செய்து உயிர்சத்து D பெறுவாராம்.   இந்தத்  தகவலை  பாரதி  திரைப்படத்தில் அதன்   இயக்குநர்   மிகவும்  நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பிட்ட  சிற்றிதழுடன் பத்மநாப ஐயர் தந்த  மேலும்  சில  நூல்கள்,  இதழ்களை  எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பாரதி நூற்றாண்டு விழா கண்காட்சியில் வைத்துவிட்டு திருப்பிக்கொடுத்தோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையில் 1983 வன்செயல்களின் பின்னர்,  அதன் ஆசிரியர் ந.சபாரத்தினம் அவர்களினால் எழுதப்பட்ட  ஆசிரியத்தலையங்கங்கள் குறிப்பிடத்தகுந்த  பதிவுகளாக  விளங்கின.  வாசகர்களினால்  தினமும்  விரும்பிப்படிக்கப்பட்ட  பகுதியாக   அவருடைய  குறிப்புகள் சிலாகித்துப்பேசப்பட்டன.

அந்தத் தலையங்கங்கள் பற்றி ஈழநாடு உரிமையாளர் கே.ஸி. தங்கராசாவிடம்  மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா  பாராட்டிச்சொன்னதையும்   அருகிலிருந்து   கேட்டுள்ளேன்.

வாசகர்கள் அவ்வாறு பாராட்டிக்கொண்டிருந்தவாறு  தமது வாசிப்பு அனுபவத்தை  மட்டுப்படுத்திக்கொண்டனர். ஆனால்,  பத்மநாப ஐயர் அவ்வாறு  தன்னை வரையறுத்துக்கொள்ளாமல்  தேர்ந்தெடுத்த ஈழநாடு   ஆசிரியத்தலையங்கங்களைத் தொகுத்து –  ஊரடங்கு வாழ்வு என்னும்  தொகுப்பினை  தமிழியல்  வெளியீடாக ( 1985 இல்) வெளிக்கொணர்ந்தார்.  தமிழ்  ஊடகத்துறை  இதழியல்  மாணாக்கருக்கு  இதனை  ஒரு  பாடநூலாகவும்  பரிந்துரைக்கலாம்.

அதன்பின்னர்  இவ்வாறு  வேறும்  சில  பத்திரிகைகளின் ஆசிரியத்தலையங்க  தொகுப்பு  நூல்கள்  வெளிவந்தன.    இத்தகைய  வெளியீடுகளின்  முன்னோடியாக விளங்கியவர் பத்மநாப ஐயர். இளம் தலைமுறையினர்  வெளியிட்ட  இலக்கிய  சிற்றிதழ்களுக்கும் ஊக்கமளித்தார்.   அதில்  அருணாசலம்  ரவி  வெளியிட்ட  புதுசு  இதழ் முக்கியமானது.

லண்டனில்  வதியும்  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின்  ஒரு கோடை  விடுமுறை  நாவலை,  அலை வெளியீடாக கொணர்ந்தவரும் பத்மநாப ஐயர்தான். கொழும்பில் சரஸ்வதி மண்டபத்தில் இந்த நாவலை ப்பற்றிய விமர்சன உரைகளை நிகழ்த்தியவர்கள் நிர்மலா, செ.கணேசலிங்கன் ஆகியோர். நாவலாசிரியர் சபையில் இல்லாமலேயே  அறிமுக விமர்சன அரங்கு  அன்று  நடந்தமைக்கு அன்றிருந்த  இலக்கிய  ஆரோக்கியமும்   முக்கியத்துவமானது.

அக்காலப்பகுதியில்   வீரகேசரியில்    பணியாற்றிய  நண்பர்கள் தனபாலசிங்கம்,  ஜோன் ரெஜீஸ்  ஆகியோரும்  பத்தி  எழுத்துக்கள் எழுதினார்கள்.   ஜோன் ரெஜீஸ்,  உளியன்  என்ற  புனைபெயரிலும் தனபாலசிங்கம்  சத்தியன்  என்ற  புனைபெயரிலும்  வாராந்தம் எழுதிய  அரசியல்  சமூகம்  கல்வி  சார்ந்த  பத்தி   எழுத்துக்களையும் தொகுத்து  வெளியிடுவதற்கு  விரும்பிய  பத்மநாப ஐயர் அவர்களைச்சந்திப்பதற்காக  அடிக்கடி  அங்கு  வந்தார்.

ஆனால்,  அவருடைய  முயற்சி பலிதமாகவில்லை.  ஆயினும்  அவர் தளர்ந்துவிடாமல்  மேலும்  பல  தொகுப்புகள் வெளிவரக்காரணமாகத்திகழ்ந்தார்.   அவற்றுள்,  கவிஞர்  சேரன், அ.யேசுராசா,   மயிலங்கூடலூர்  பி. நடராசன்  ஆகியோருடன் இணைந்து   தமிழியல்  வெளியாடகக்கொணர்ந்த  மரணத்துள் வாழ்வோம் (1985)  கவிதைத்தொகுப்பு  காலத்தையும்  வென்று  வாழும் தகைமை பெற்றது.

அவ்வாறே   ஓவியர்  மாற்கு  சிறப்பு  மலரான  தேடலும் படைப்புலகமும்   நூலும்   குறிப்பிடத்தகுந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு  நான்  புறப்படுவதற்கு  முன்னர்  1986  இல் யாழ்ப்பாணத்தில்   இவருடைய   குடும்பத்தினரைச் சந்தித்தேன். மூன்று  பெண்  குழந்தைகள்.  மனைவி  ஆசிரியராக  பணியாற்றினார். 1987   பெப்ரவரியில்  நான்  அவுஸ்திரேலியா  வந்துவிட்டேன்.   சில  மாதங்களில் பத்மநாப ஐயரின்   மனைவி  காலமாகிவிட்டார்  என்ற  அதிர்ச்சியான தகவலை   கொழும்பிலிருந்து  நண்பர்  ராஜஶ்ரீகாந்தன் தெரிவித்தார்.

” தாயை இழந்தால் அன்பு போய்விடும்,   தந்தையை  இழந்தால்  அறிவு போய்விடும்.   மனைவியை   இழந்தால்  வாழ்வே  போய்விடும் ”  என்று எமது முன்னோர்கள் சொல்வார்கள். அது வெறும் உணர்ச்சிபூர்வமான வார்த்தைகள்  அல்ல.   அனுபவித்துபார்த்தால்தான்  அதன்  கொடுமை தெரியும்.

பத்மநாப  ஐயர்  அத்தகைய  ஈடுசெய்ய  முடியாத  இழப்புக்கு ஆளானபோது  அருகில்  இருந்து  ஆறுதல்   சொல்ல முடியாமல் தொலைவில்  இருந்தேன்.

பின்னர்  அவர்  இங்கிலாந்து  சென்று  தொடர்புகொண்டார்.

உள்ளார்ந்த  ஆற்றல்  மிக்கவர்கள்  உலகின் எந்தத்திசைக்குச்சென்றாலும்  தமது  ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே  இருப்பார்கள்  என்பதற்கு  பத்மநாப  ஐயர் மிகச்சிறந்த  உதாரணம்.

லண்டன்   சென்றும்  அவர்  ஓய்ந்திருக்கவில்லை.   இலங்கை – தமிழக  மற்றும்   தமிழர்  புலம்பெயர்ந்த   நாடுகளில்  வசித்த  கலை, இலக்கியவாதிகளுடன்  தொடர்புகளைப் பேணிவந்தார்.

அதன்   பெறுபேறுதான்  லண்டன்  தமிழர்  நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான –  கிழக்கும்  மேற்கும்,   இன்னுமொரு  காலடி,  யுகம் மாறும்,   கண்ணில் தெரியுது வானம்  முதலான  இலக்கியத்தொகுப்புகள்.   இவற்றில்  ஒரு  தொகுப்பில்  எனது சிறுகதையொன்றும்   இடம்பெற்றது.

கண்ணில் தெரியுது  வானம்  தொகுப்பில்  சில  பிரதிகளை வரவழைத்து  2003  ஆம்  ஆண்டு  மெல்பனில்  நடந்த  எமது  தமிழ் எழுத்தாளர்   விழாவில்  விமர்சன  அரங்கில் இணைத்துக்கொண்டோம்.

நித்தியகீர்த்தி  இத்தொகுப்பு  பற்றி  விமர்சன  உரையாற்றினார்.  பிரதிகள்   விற்ற  பணத்தை  பத்மநாப  ஐயர்  சொன்னவாறு கொழும்பில்   பூபாலசிங்கம்  புத்தகசாலைக்குச் சேர்ப்பித்தேன்.

இறுதியாக   நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்  2007  ஆம்  ஆண்டு இறுதியில்   லண்டன்  சென்றபொழுது,  நூலகர்  செல்வராசா  ஒழுங்கு செய்த   இலக்கியச்சந்திப்பில்தான்  இவரைச்சந்தித்தேன்.

மறக்கமுடியாத  அச்சந்திப்பில் – என்னுடன்  பயணித்த  நண்பர் நடேசனும்   கலந்துகொண்டார்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நவஜோதி  யோகரத்தினம், அனஸ் இளைய அப்துல்லா,  தாஸீசியஸ்,   தேசம்  ஜெயபாலன்,  நடா  மோகன், பஷீர்,   பாலசுகுமார்,   மு. நித்தியானந்தன்,  ஆனந்தராணி, பாலேந்திரா   ஆகியோருடன்  பத்மநாப  ஐயரும்  வருகை   தந்திருந்தார்.    குறிப்பிட்ட  பயணத்தால்  திரும்பியதும்  தினக்குரல் வார   இதழில்  வட்டத்துக்கு  வெளியே  என்ற  தொடர்  பயண இலக்கியம் எழுதினேன்.

அதில்  13, 14, 15, 16  அங்கங்களில்  லண்டன்  சந்திப்பு  பற்றியே எழுதியிருந்தேன்.

பத்மநாப ஐயர்  பற்றிய  குறிப்பில்,   நூல்கள்  வெளியிட்டதில் இலங்கையில்   ரூபாவில்  கடனிலிருந்தவர்,  லண்டனில்  பவுண்ஸில் கடனிலிருக்கிறார்   என்றும்  பதிவுசெய்திருந்தேன்.

இந்தத்  தமிழ்   இலக்கிய உலகில்   பொருளாதார   ரீதியில்  பல சுமைகளையும்   துயரங்களையும்  கடந்து  வந்தவர்தான்  பத்மநாப ஐயர்.

இம்மாதம்  வெளியான  ( ஓகஸ்ட்)  ஞானம்  இதழ்  இவருடைய படத்துடன்   வெளியாகியிருக்கிறது.   ஞானம்  ஆசிரியர்  தி. ஞானசேகரன்   மிகவும்  விரிவாக  இவருடைய  வெளியீட்டு  முயற்சிகள்   பற்றி  பதிவுசெய்துள்ளார்.

2004   நவம்பரில்  வெளியான  மல்லிகை  அட்டையை  அலங்கரித்தவர் பத்மநாப ஐயர்.    ஒரு  காலத்தில்  புதுசு  இதழை   இலங்கையில் வெளியிட்ட   அருணாசலம்  ரவி,   ஐயர்  பற்றி  அருமையான கட்டுரையை   அதில்  எழுதியிருந்தார்.

பத்மநாப ஐயர்   குறித்து  இவ்வாறு  பல  நினைவுக்கோலங்களை தொடர்ந்து     வரைந்து  செல்ல  முடியும்.

ஆயினும் –   இவரும்  மற்றும்  சிலரும்  நாம்  கொழும்பில்  2011  இல் நடத்திய   சர்வதேச  தமிழ்  எழுத்தாளர்   மாநாட்டுக்கு  எதிராக 2010 ஆம்   ஆண்டு  நடுப்பகுதி முதல்  நடத்திய   கையொப்ப வேட்டை அமர்க்களத்தையும்   அதற்காக     தமிழகத்தின்    உயிர்மை,  காலச்சுவடு   முதலான   இதழ்களையும்  தமது பிரசாரத்திற்கு பயன்படுத்தியதையும்   அந்த   நினைவுக்கோலங்களிலிருந்து   அழிக்கமுடியாது.

என்னையும்  மல்லிகை ஜீவாவையும் , ஞானம் ஆசிரியர்  ஞானசேகரனையும்   மற்றும் எம்மோடு அந்த  மாநாட்டில் இணைந்திருந்த   பலரையும்   பத்மநாப  ஐயருக்கும்  அவருடன் சேர்ந்து    அறிக்கை  விடுத்த  பலருக்கும்  நன்கு  தெரியும்.  எமது இயல்புகள்,  எமது  வாழ்க்கை   மற்றும்  செயற்பாடுகள்  நன்கு  புரியும்.

இவர்கள்   எம்முடன்  எந்தவித  கலந்துரையாடலும்  மேற்கொள்ளாமல், 2010  ஜனவரியிலிருந்து  சுமார்  ஆறுமாத  காலத்தின்  பின்னர்  நாம் சகல   ஏற்பாடுகளும்  செய்து  முடித்திருந்த  சூழலில்,  சன்னதம் ஆடத்தொடங்கியது    குறித்து   ஏமாற்றம்தான். ஆனால் இவர்களிடத்தில்   எமக்கு  எள்ளவும்   கோபமும்   இல்லை. வெறுப்பும்   இல்லை.   அதனால்தான் அவருக்கு   பவளவிழா   என்றவுடன் வாழ்த்துகின்றேன்.

தனிப்பட்ட    விருப்பு  வெறுப்புகளுக்கு  அப்பால்  ஒரு  மனிதரின்  மேன்மையை   இனம்  காண்பதில்  நாம்  தவறிழைத்துவிடக்கூடாது என்பதுதான்   இலக்கியம்  எனக்குப்போதித்த   பால பாடம்.

பத்மநாப  ஐயர்  எமது  தமிழ்  சமூகத்திற்காக  செய்த  அளப்பரிய சேவைகளை   நாம்  புறந்தள்ளிவிட  முடியாது.

வ.வே.சு. ஐயர்,   தேசபக்தன்  கோ. நடேசய்யர்,  கணேசய்யர்,                லக்‌ஷ்மண ஐயர்,   நா. சுப்பிரமணிய  ஐயர்,   ரத்தினசபாபதி  ஐயர், யாழ்ப்பாணத்தில்   இடது  சாரி  இயக்கத்தில்  முன்னோடியாகத்திகழ்ந்த   ஐயர்,  சுவாமிநாத சர்மா,  ஜெயராம சர்மா,  சந்திரசேகர  சர்மா, கைலாசநாதக்குருக்கள்,  இப்படிச்சிலரை  ஐயர்,  குருக்கள், சர்மா  என்ற   பெயர்களுடன்தான் அறிந்துவைத்துள்ளேன்.

இந்தப்பெயர்களுடன்   இவர்கள்  வாழ்ந்தமையால்,  வாழ்கின்றமையால்   எமது  சமூகத்திற்கு  இதுவரையிலும் எந்தக்கெடுதலும்   இல்லை.  இனியும்  இல்லை.

கோயில்களில்   பணியாற்றும்  ஐயர்மார்கள்  எதிர்நோக்கும் துன்பியலை  பதிவுசெய்த  பொற்சிறையில்  வாடும் புனிதர்கள்  நாவலை  எழுதிய   தெணியான்,   தலித்துக்களுக்கு எமது சமூகம் இழைத்த  அநீதிகளையும் படைப்பிலக்கியமாக  தனது நாவல்கள் சிறுகதைகளில்  தந்துள்ளார்.

எமது  நீண்ட கால  நண்பர்  பத்மநாப  ஐயர்  நல்லாரோக்கியத்துடன் மேலும்   பல்லாண்டு  வாழ  வாழ்த்துகின்றேன்.

(பிற்குறிப்பு: பத்மநாப  ஐயரை  நன்கு  தெரிந்த  பலரும்  உலகெங்கும் இருக்கிறார்கள்.   அவருக்கு  வாழ்த்து  தெரிவிக்க  விரும்புவோர் பின்வரும்   தொலைபேசி   இலக்கத்தில்  தொடர்புகொள்ளலாம்:

00 11 44 208  4715  636

—0—-

Series Navigationயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 8கவிஞர் அம்பித்தாத்தா
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  நல்ல கட்டுரை. திரு.முருகபூபதி அவர்களுக்கு நன்றிகள் பல.

  // அத்தகைய ஒரு எல்லையில் அவரை எவ்வாறு அழைப்பது ? எப்படி எழுதுவது ? என்ன பெயர் சொல்லி விளிப்பது ? முதலான சர்ச்சைகள் அவசியமற்றவை. //

  அனேகமாக அவரது பெயரின் பின்னொட்டு “ஐயர்” மேற்படி சர்ச்சையாளர்களுக்கு உறுத்தலாக இருந்திருக்கும் என்று புரிகிறது. தேவரோ நாடாரோ பிள்ளையோ வன்னியரோ கவுண்டரோ உறுத்தியிருக்காது போல.

  உறுத்துகிறதோ இல்லையோ பிராமணர்களி தமிழ்த்தொண்டு புரிவதில் யாவருக்கும் சளைத்தவர்களில்லை. அதேபோல தமிழ்ப்பண்பாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றில் சில திருப்புமுனைகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள் ; உ.வே.சாமிநாத ஐயர் போல, பாரதி போல. அதேபோல நவீனத்தமிழ் கலை இலக்கிய தளத்திலும் பெரும்பங்காற்றிய – ஆற்றிக்கொண்டிருக்கிற பிராமணர்களையும் வாசகர்கள் அறிவார்கள். அந்த வகையில் தமிழின் இருவேறு நிலங்களுக்கிடையில் இணைப்பை – உரையாடலை உருவாக்க அயராது பாடுபட்ட திரு.பத்மநாப ஐயர் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் உரியவரே. எவருக்கு அது உறுத்தினாலும் சரிதான்.

 2. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // ஆயினும் – இவரும் மற்றும் சிலரும் நாம் கொழும்பில் 2011 இல் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் நடத்திய கையொப்ப வேட்டை அமர்க்களத்தையும் அதற்காக தமிழகத்தின் உயிர்மை, காலச்சுவடு முதலான இதழ்களையும் தமது பிரசாரத்திற்கு பயன்படுத்தியதையும் அந்த நினைவுக்கோலங்களிலிருந்து அழிக்கமுடியாது. //

  எதனால் இப்படி இந்த எழுத்தாளார் மாநாட்டுக்கு எதிராக இயங்கினார் பத்மநாப ஐயர் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

  இலக்கிய மதிப்பீடுகளின்பாற்பட்டுதான் என்றால் அதுவும் ஒரு இலக்கிய / பண்பாட்டுப்புலத்தில் நிகழும் செயற்பாடே. ஆனால் தனி மனித பொச்சரிப்பு எனில் கண்டிக்கத்தக்கதே.

  கட்டுரை ஆசிரியரின் சொற்களின்மூலம் ஐயர் தனிப்பட்ட வன்மம் போன்ற கீழ்மை குணங்களால் இயக்கப்படுபவரல்லர் என்று புரிகிறது. ஆகவே இதை விளக்கும் பொறுப்பு திரு.முருகபூபதி அவர்களுக்கு உண்டு.

 3. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  தமிழின் மதிப்பு மிக்க விருதான கனடாவின் ”இயல் விருது” திரு.பத்மநாப ஐயர் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

  இவ்விருது 2008-ல் தகுதியற்ற ஒருவருக்கு வழங்கப்பட்டதாக எழுத்தாளர் ஜெயமோகன் விருது அமைப்பாளர்களை – நடுவர் குழுவினரை கண்டித்து எழுதிய கட்டுரையில் திரு.ஐயரைக்குறித்து மிக மதிப்புடன் இவ்வாறு எழுதியுள்ளார் :

  // பத்மநாப அய்யரின் பங்களிப்பு பற்றி நான் நிறையவே அறிவேன். இன்று அதைப்பற்றி சொல்லி புரியவைப்பது கடினம். 70களில் இலங்கையின் எந்த ஒரு எழுத்தாளரைப்பற்றியும் தமிழில் எவருக்குமே தெரியாது. தமிழ் தீவிர இலக்கியம் பற்றி – புதுமைப்பித்தனைப்பற்றிக்கூட- அங்கே பொதுவாகத் தெரியாது. இருநாடுகள் கடலாலும் பண்பாட்டாலும் பிரிந்துகிடந்தன. தனி ஒருமனிதனாக கைப்பொருள் இழந்து பலகாலம் மனம் தளராமல் முயன்று ஒரு பிணைப்பை உருவாக்கினார் அய்யர். ஒரு மனிதர் இரு இலக்கிய மரபுகள் நடுவே ஓர் உரையாடலை உருவாக்குகிறார் என்பதை கற்பனைசெய்து கொள்ளுங்கள். நாகர்கோயிலுக்கு வந்து சுந்தர ராமசாமியைக் கண்டு ஈழ நூல்களை அளித்து வாசிக்கவைத்தார். அசோகமித்திரனை கநாசுவை செல்லப்பாவை சென்று கண்டார். திருவனந்தபுரமும் மதுரையும் வந்தார். பலவருடங்கள். அங்கே நவீன தமிழிலக்கியம் சார்ந்த பூரணி, அலை போன்ற இதழ்கள் உருவாயின. தமிழ் இலக்கிய உரையாடலில் ஈழ இலக்கியம் பேசப்பட்டது. ஒரு மறுமலர்ச்சியே உருவானது என்று சொல்லலாம். அது ஒரு வாழ்நாள் பங்களிப்பே. அதற்கு எந்த ஒரு அங்கீகாரமும் இல்லை. ஒரு எளிய நூலாசிரியனுக்கு உரிய புகழ்கூட. இம்மாதிரி தியாகங்களை அடையாளம் காணும்போதுதான் ஒரு பண்பாடு வலிமை பெறுகிறது.
  //

  பவளவிழா காணும் திரு.ஐயர் அவர்களுக்கு வணக்கங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *