கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்

This entry is part 9 of 15 in the series 25 செப்டம்பர் 2016

 

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

 

நான் மாற்றுத்திறனாளி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரிய வில்லை. ஆனால் நானே என்னை ஊனமானவள் என்று ஏற்றுக்கொள்ள அநேக வருடங்கள் தேவையாய் இருந்தன. குழந்தையாய் இருக்கும்போது நானும் போலியோ நோய் தீர்ந்து நன்றாக நடந்துவிடுவேன் என்ற எதிர்பார்ப்பும், மற்ற குழந்தைகளைப் போல் நானும் விளையாட வேண்டும் என்றஆசையும் இருந்தது.

 

இந்த பகிர்தல் உங்கள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக அல்ல. ஒரு மாற்றுதிறன் படைத்த குழந்தையின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அறிந்தவளாய்ப் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே!

ஒரு பக்கம் சமூகம் நான் ஊனமுற்றவள் அல்லள் என்று மார்தட்டிச் சொன்னாலும், மறுபக்க சமூகம் என் உடல் குறைபாட்டைப் பெரிது படுத்தி என்னை ஏளனம் செய்து வருத்தியதை என்னால் மறக்க முடியவில்லை.

 

என்னிடத்தில் இருந்த திறமைகளைப் பார்த்தவர் எண்ணிக்கை குறைவாகவும், என்னிடத்தில் உள்ள குறைபாடுகளைப் பார்த்தவர் (அலுவலக வட்டங்களில்) அதிகமாகவும் ஆன போது,ஆம் நான் ஊனமுற்றவள் தான்,என்னால் இதைத் தான் செய்ய முடியும். இந்த வேலையை மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று எதிர்த்துப் பேசத் துவங்கியது இந்த இரண்டுவருடங்களாகத்தான்.

 

எனக்குக் குழந்தைப் பருவம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. எட்டு மாதத்திலேயே போலியோ வந்துவிட மருத்துவமனை வாசம் தான் அதிகம்.ஒன்றாம் வகுப்பு சேர்ந்த போது எனக்கும் அந்த வகுப்பு ஆசிரியருக்கும் ஒத்துவரவில்லை. அவர் வகுப்பறை விட்டு அடிக்கடி மாணவர்களை மரத்தடிக்கு அழைத்துச் சென்று விடுவார்.நானோ நகரக்கூட முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை அப்போது! அதனால் படிப்பு என்பதுஅந்த ஒரு வருடம் எட்டாக்கனி தான்.பொழுதுகள் வகுப்பறை உள்ளிருந்தபடி விளையாடும் அணிலை வேடிக்கைப் பார்ப்பதும், மரக்கிளைக் கிளிகளின் அழகைப் பார்ப்பதும், ஓடும் மேகங்களைப் பார்ப்பதுமாகக் கழிந்தன நாட்கள்.

 

அதன் பிறகு என்னைப் பள்ளிக்குத் தூக்கிச் செல்லும் தேவேந்திரன் அண்ணாவிடம் சொல்லிவிடுவேன். நோ ஸ்கூல், நீ ஸ்கூலுக்கு போ! நான் மரத்தடிப் பிள்ளையாரோடு விளையாடிட்டு இருக்கேன். அப்படி நகர்ந்தநாட்களின் இனிமை மட்டுமே இன்னும் நெஞ்சில் நீங்காமல் உள்ளது.பிள்ளையார் எனக்கு நண்பனாய் விளையாட்டுத் தோழனாய், இருந்த நாட்கள்.

 

அதையும் கண்டுபிடித்து அம்மா அடித்தாள்! நான் சொன்ன எந்த கருத்தும் அவளுக்குப் புரியவில்லை. நான் படிக்கவில்லை என்பதே நான் தண்டனை அனுபவிப்பதற்கானக் காரணியாக இருந்தது.

 

அதன் பிறகு ஜாஸ்மினின் தந்தையாரின் சிபாரிசில் “ஒர்த் டிரஸ்ட்” காட்பாடியில் சேர்க்கப்பட்டேன். அங்கு மருத்துவத்திற்கே முக்கியத்துவம், படிப்பிற்கு அவ்வளவு கெடுபிடி இல்லை.எழுத படிக்க கற்றுக்கொண்டதுஅங்குதான். 3 வருடங்கள், நகர முடியாத தமிழ்ச்செல்வி முட்டி போட்டது. ஊன்று கோல் வைத்து நடக்க முயன்றது. விளையாடியது எல்லாம் அங்கு தான்.ஊனத்தைக் கடந்து வாழ்க்கையை அடையாளமாகக் கற்றதும்அங்குதான்.

 

அம்புலி மாமாவில் இருந்து வேதாகமம் வரை பரிச்சயமானதும், புத்தகங்கள் நண்பர்களானதும் அங்கு தான். அங்கு இருந்தவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் ஆனபடியால்ஆண் பெண் பாகுபாடென்பது இல்லை.

 

தனித்தனி அறைகள் இருந்த போதும் சிறுவர்கள் கலந்து பழக எந்தத் தடையும் இல்லை. நட்பு பரிட்சயமானதும், ஒவ்வொருவரின் கனவுகள் கலந்தாலோசிக்கப் பட்டதும் அந்த இடத்தில்தான்.

 

பெற்றோர் இல்லாத தனிமை அனுபவித்ததும் அங்குதான், நட்பின் தோழமை, நண்பர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்ததும் அங்குதான்.

 

நடப்பதற்காகக் கால் அறுவை சிகிச்சை செய்து மாவுக்கட்டு போட்டுவிட ஒரு தாய் செய்யக் கூடிய அத்தனை உதவிகளையும் செய்தது ஆண் பெண் இனப்பாகுபாடற்று நட்பு வட்டத்தில் பழகிய மழலைச் சிறுவர்கள்தான்.

 

விடுதி வாழ்க்கைக்கும் வெளி உலக வாழ்க்கைக்கும் அநேக வித்தியாசம் இருந்தது. விடுதியில் எங்களால் செய்ய முடிந்த செயல்களை எடுத்துக் காட்டினார்கள். செய்யவும் எங்களை உற்சாகப்படுத்தினார்கள்.

 

வெளி உலகம் எங்களால் முடியாததைக் கேலி செய்து பெரிது படுத்தியது. நான் தொழிற் கல்வியில் இயந்திரப்பட வரைவாளர் (Draftsman Mechanic) பிரிவில் சேர்ந்து தேர்ச்சிப் பெற்றிருந்ததும் அதற்கான வேலைக்குமுயற்சி செய்ய வில்லை. அதற்குக் காரணங்கள் இருந்தன.

 

  1. நான் ஒரு பெண்ணாக இருந்த மாற்றுத்திறனாளி
  2. பஸ் போக்குவரத்தில் ஏறி இறங்குவதில் உண்டான சிரமம்

3.ஒத்தாசைக்கு அருகில் ஆளின்றி என்னால் எங்கும் நடமாட முடியவில்லை.

  1. குடும்பத்தில் என்னைத் தனித்துவிடப் பயந்தார்கள்.

 

உள்ளூர்க் கடைகளில் கணக்கெழுதும் வேலை கூட கிடைக்கவில்லை எனக்கு. இதென்ன சுய புராணம் என்கிறீர்களா? அதுதான் இல்லை; நான் இதுவரையில் சந்தித்த ஒவ்வொரு மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கும்இதை ஒத்த ஒரு கதைதான் இருந்தது. போக்கு வரத்தில் சிரமம் இருந்தது. வேலை செய்யும் இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கழிப்பறை வசதியற்ற சூழல் இருந்தது. இது சராசரி மனிதர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை என்ற போதும், மாற்றுத்திறனாளிகள் தனிக் கவனத்துடன் இதை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது.

 

1999 ஆண்டில் வேலை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போது 400 ரூபாய் சம்பளத்தில் மாற்றுத்திறனாளிகள் தகுதிக்குச் சிபாரிசு செய்யப்பட்டேன். அப்போதிருந்த கோபத்தில் அந்த தொகை எனக்குத்தேவை இல்லை என்று நான் வெளியே வந்த போது அங்கிருந்த ஒரு அதிகாரி கூறினார். “இது உனக்கு கொஞ்சம் பயன் படும்; இதைஅடிப்படையாகக் கொண்டு நீ மேலும் வேறு வேலைக்கு முயற்சி செய்! என்று அறிவுரைகூறினார்.

 

அப்போது எனக்கிருந்த தேவைகள் அதிகம். நான் தனி மனுஷி அல்ல. என் குழந்தைக்காக நான் அதிகம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அவளுக்கான உணவு, உடை,மருத்துவம், கல்வி என்று தேவைகள்பட்டியல் நீண்டது. பெற்றோரால் ஓரளவிற்கே உதவி செய்ய முடிந்தது.

 

ஒரு கோணத்தில் அது அப்போது எனக்கு கௌரவக் குறைச்சலாகப் பட்டது. உழைத்துச் சம்பாதிக்க திராணி இருக்கும் போது நான் ஏன் குறைந்த ஊதியம் வாங்க வேண்டும் என்ற திமிர். இலவசம் தேவை இல்லை,வேலையும் அதற்கான கூலியும் கொடு, அரசாங்கத்திடம் எனக்கான எதிர்பார்ப்பு. ஒரு சராசரி மனிதன் செய்யும் வேலையை நானும் செய்வேன் என்றேன்; அப்போது, அதிகாரி முன்பு பைலை தூக்கிக் கொண்டு நீ நடக்கமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட வலி இன்னும் அடி நெஞ்சில் துடிக்கிறது.

 

அதே ஆண்டில் நான் சுயமாக என் உழைப்பால் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தேன். அதற்கு நரிக்குறவர்கள் உதவினார்கள், மணிக்கட்டும் தொழில். 1999-ல் இருந்து 2008 டிசம்பர்வரையிலும் மணிக்கட்டும் தொழில் செய்துதான் என் மகளையும் நான் படிக்க வைத்தேன். கணவர் இறந்த பிறகு அவரவர் குடும்ப பாரமே அவரவருக்குப் பெரியதாக இருந்த போது,யாரையும் நான் சாராது இருக்க இந்த மணிக்கட்டும் தொழில் எனக்கு  உதவியது.

 

இந்த காலக் கட்டத்தில் 2006 – லிருந்து 2008 வரை பகுதி நேரமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் செக்ஷன் ரைட்டராகப் பணியாற்றினேன். அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட ஊதியம்500 ரூபாய் இதில் 200 ரூபாய்ஆட்டோவிற்குப் போய்விடும்; அதிலும் பயணிகள் பின்புறம் இருக்க ஓட்டுநர் அருகில் அமர்ந்து வர வேண்டும். அதிக சிரமம் தான்; வேறு மாற்று ஏதும்அப்போது இருக்க வில்லை.

 

2008 ஆகஸ்டில் பாலாஜி ஸாருக்குப் பிறகு வந்தவர், எனக்கு ஊதியம் தர முடியாது நின்று விடு என்று கூறினார். அதன் பிறகு அந்த சொற்ப வருமானத்திற்கு வந்த தடங்கலை அதிகநேரம் மணிகட்டுதலினால் ஈடுசெய்தேன்.

 

2008 டிசம்பரில் ஊனமுற்றோர் தினத்தன்று 3 சக்கர சைக்கில் வாங்கப் போய், அப்போதிருந்த வருவாய் கோட்டாட்சியர் வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பவராக என்னைநியமித்தார். 3000 ரூபாயில் துவங்கிய என்ஊதியம் 2014 – இல் 5000 ரூபாய் மாத வருமானத்தில் நிற்கிறது. இந்த ஊரில் இது பெரிய தொகை என்ற போதிலும், சராசரி வாழ்க்கைக்கும் இது பற்றாக்குறை ஊதியம்தான்.

 

இந்த வேலை அதிக மக்களை நான் சந்திக்கும்படி வைத்தது. அதில் மாற்றுத் திறனாளிகளும் அடங்கினார்கள். ஒவ்வொருவரின் கதையைக் கேட்ட போதும் எதோ ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றுமனதில் ஆணித்தர மான ஓர் எண்ணம் எழுந்தது. மாற்றுத் திறனாளி தோழி, நிர்மலாவைச் சந்தித்த பிறகு அது இன்னும் அதிகமாக வலுப்பட்டது. 2009 மார்ச்சில் ஹார்ட்பீட் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தைப் பற்றித்திட்டமிட்டு, 2009 செப்டம்பர் 24 அன்று தான் அதை எங்களால் பதிவு செய்ய முடிந்தது.

 

அதன் பிறகு, சக்தி, கல்பனா, பிரதா, ஜோதி, தமிழரசி, என்று எங்கள் நட்பு வட்டம் நீண்டது. நாங்கள் அங்கும் இங்குமாகச் சிதறிக்கிடந்த போதிலும், அடிக்கடி ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை.

 

ஒவ்வொரு முறை மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சென்ற போதும் ஒரு புதிய அறிமுகம் கிடைக்கப் பெற்றோம், அவர்களின் பின்னணியில் ஒரு வலி நிறைந்த கதையோடு.

 

2011 இல் வாக்காளர் படங்களை ஸ்கேன் செய்து தரக் கணினி அறிவில்லாத தோழி நிர்மலாவைப் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன். இதற்குக் கொடுக்கப்படும் தொகை கொஞ்சமாக இருந்தாலும் அவளின்வாழ்வாதாரத்திற்கு ஒரளவு பயன்படும் என்பது எனது எண்ணம்.

 

ஆனால் அப்போதிருந்த தேர்தல் துணை வட்டாட்சியர் இது வேண்டாத வேலை நேரத்தை இழந்து கொண்டிருக்கிறாய் என்ற போதிலும் உன்பாடு என்று ஒதுங்கிக் கொண்டார். என்முயற்சியில் 5ஆவது வரையேபடித்திருந்த நிர்மலாவை 10ஆம் வகுப்பு தேர்வு எழுத வைத்து, கம்யூட்டர் வகுப்பிற்கும் அனுப்பி இப்போது அவள்தான் எனக்குப் படங்களை ஸ்கேன்செய்து தருகிறாள். இந்த நிகழ்வு மாற்றுத் திறனாளிகளைவேலைக்காக உருவாக்குவது சாத்தியம் தான் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது.

 

அதன் பிறகு சக்தி, கலைச்செல்வி, என்று மாற்றுத்திறனாளி அல்லாத மற்ற பெண்களும் எங்களோடு இணைந்தார்கள். இதில் தாரிணி பதிப்பக அதிபரும் என் இனிய நண்பரும், நான்செய்யும் காரியங்களுக்கெல்லாம்துணையிருந்து ஊக்குவித்து வழிகாட்டி உதவி செய்து வருபவருமான, திரு. வையவன் அவர்கள் ஒரு லேப்டாப்பைத் (மடிக் கணினி) தந்து, தட்டச்சு செய்யப் புத்தகங்களையும் தந்து எங்களுக்கான ஒரு நிரந்தர வருவாய்கிடைக்கும்படி செய்தார்.

 

ஓரளவு நடக்க முடிந்த மாற்றுத்திறனாளிகளே அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். ஆனால் வெளியூரில் இருப்பவர்களோ, 80 சதவீத ஊனத்தை உடையவர்களோ எங்களோடு இணையமுடியவில்லை.

 

ஒரு சிநேகிதியைச் சந்திக்கச் சென்ற போது அவளுடைய தந்தையாரிடம் “ஏன் படிக்க வைக்கவில்லை? என்று கேட்டோம்.

 

“வயசுக்கு வந்துட்டா! வயசுப்புள்ள முட்டி போடுறது அசிங்கம்மா இருந்ததும்மா. அதுனால ஸ்கூலுக்கு அனுப்புல! என்றார்.

 

“இருக்குற வரைக்கும் நாங்களே சோறு போடுறோம்; இதுக்கு மேல என்ன வேணும்? என்று கேள்வி எழுப்பும் பெற்றோர்களைத் தாண்டி அவர்களின் கண்களில் தெரிந்த ஏக்கம்தான் இந்த இதயத் துடிப்புநிறுவனத்தைத் துவங்க எங்களுக்கு உந்து சக்தியாய் இருந்தது.

 

எங்களுக்கு என்று அலுவலகத்திற்காக தனி இடம் அரசாங்கத்திடம் கேட்க, அதிகாரிகள், இடமில்லை என்று கை விரித்த பிறகு, கிராமத்தில் எனக்கிருந்த வீட்டையே அலுவலகமாக மாற்றினேன்.

 

தற்போதுள்ள இடப்பற்றாக் குறையை போக்க என் சகோதரர் அன்பு ராஜ் அவர்கள் வீட்டை குறைந்த வாடகையில் தந்தார்கள். அப்படி இருந்தும் அடிப்படை வசதிகள் இன்றி அங்கே தங்குவதென்பது சாத்தியமில்லைஎன்று தோன்றியது.

 

சில நாட்கள் தங்கி, மீண்டும் அடிப்படை வசதிகளோடு அங்கே கூடுவது என்று முடிவெடுத்தோம்.

 

தற்போது படிப்பை இடையில் நிறுத்திய மாற்றத்திறனாளிகள் வயது ஆதாரம் மட்டுமே வைத்து 8 ஆம் வகுப்புத் தேர்வு  எழுதலாம்.

 

அதைக் கருத்தில் கொண்டு கல்வி கற்க, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்பது எங்களுடைய கனவு.

 

அதிகம் படித்த நல்ல நிலையில் இருப்பவர்களைப் பற்றி எங்களுக்கு மகிழ்ச்சியே!

 

எங்கள் கவனம் முழுவதும் கல்வி அறிவின்றி படிக்கவில்லையே என்று ஏக்கங்களோடு சுற்றுபவர்களைப் பற்றியே இருக்கிறது

“இதை ஏன் நீ செய்கிறாய், உன்னையே உன்னால் தாங்கி நடந்து கொள்ள முடியவில்லையே? என்று அநேகர் கேட்க என்னுடைய பதில் இதுவே:

 

“நான் வலிகளை அனுபவித்தேன். அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதே வலி அவர்களுக்கும் இருக்கிறது என்பதை உணர்கிறேன். மீன் பிடித்து சமைத்துக் கொடுக்கப் போவதில்லை. மீன் பிடிக்க கற்றுத்தரப்போகிறேன். பிறகு அவர்கள் வழியில் அவர்கள் போகப் போகிறார்கள்.!

 

இருப்பவர் ஒருவர் இல்லாத ஒருவருக்கு உதவி செய்ய முன்வந்தால் தமிழ் நாட்டில் வறுமைத் துயரே தலைத் தூக்காது.

 

அடிப்படையில் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் தேவைப்படுவது ஊக்கமும் அன்பும், நட்புக் கரங்களும், பாரட்டலுமே! இதை என் ஒருத்தியால் மட்டும் செய்துவிட முடியாது. உங்கள் ஊக்கப்படுத்தலுக்காகவும்நட்பிற்காகவும் அன்பிற்காகவும் கூட யாரோ ஒரு மாற்றுத்திறனாளி காத்திருக்கக் கூடும். ஊக்கப்படுத்துங்கள்

 

நட்பாய் சிநேகியுங்கள் அவரை.

 

டிரஸ்ட் உருவாகக் காரணமாக இருந்த என் வாழ்க்கைப் பின் புலங்களைக் குழும/இணைய நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

 

இது யாசகத்திற்கான ஒரு விண்ணப்பம் அல்ல. உங்கள் உதவும் உள்ளம் கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை சுவைத்துப் பார்க்க மிக்க பணிவுடன் வழங்கும் ஒரு வாய்ப்பு. நீங்கள் வழங்கும் உதவி என்பது உங்களிடம்உள்ள ஒரு பழைய கணினியாகவோ மடிக்கணினியாகவோ இருக்கலாம்.

 

பணமாகவோ பொருளாகவோ இருக்கலாம்.

 

இதை வாசித்துப் பிற நண்பர்களிடமோ  உதவும் உள்ளங்களிடமோ செய்யும் பரிந்துரையாக இருக்கலாம். பகிர்ந்து கொள்ளலாகவும் இருக்கலாம்.

 

எதுவாக இருப்பினும் இந்த அறக்கட்டளையில் பயிற்சி பெறும் ஒரு மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்க உதவும் ஊக்குவிப்பாக இருக்கும் என்பது உறுதி.

 

வங்கிக் கணக்கு எண்

Heart Beat Trust

Indian bank 

Kariyamangalam Branch

IFSC CODE – IDIB000K107

A/c 6241625367

 

தொடர்பு விலாசம்

Heart Beat Trust

34 E B Street

Thukkapet

Chengam 

Tiruvannamalai – 606,709

 

Mobile No. 95247 53459

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்புகாரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *