பொன் குலேந்திரன் -கனடா
முல்வேலி முகாம்
கலாதாரி ஹோட்டலை ஜோனும் மகேசும் அடைந்தபோது காலை 9.00 மணியாகிவிட்டது.
“ நான் ரூமுக்கு போனவுடன் டொராண்டோவுக்குப் போன் செய்து என் பிரதம ஆசிரியரோடு பேசவேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு குளித்துவிட்டு ஒரு சிறுதூக்கம் அவசியம் எனக்குத் தேவைப்படுகிறது. உம்மை பகல் பதின்ரெண்டு மணிக்கு ஹோட்டல் பார்வையாளர்களுக்கான லவுஞ்சில் சந்திக்கிறேன். திறந்த வெளி முகாமைப் பற்றிய விபரங்களும், அங்கு போவதற்கான ஒழுங்குகளைப் பற்றிப் பேசுவோம். உமது பகல் போசனம் இன்று என்னோடு. அதை மறந்துவிடாதையும்” என்றார் ஜோன்.
இருவரும் ஒன்றாக கோப்பி அருந்திய பிறகு தங்கள் பிஸ்னஸ் கார்டுகளை பரிமாறிக் கொண்டார்கள்.
“ஜோன் நான் வரும்போது லலித்தையும் என் கூடவே அழைத்துவரவா? முகாமில் கடமையாற்றும் இராணுவத்தினர் பலருக்குச் சிங்களத்தை தவிர வேறு பாஷை தெரியாது. அதே போல் முகாமில் இருக்கும் அகதிகள் அனேகருக்க தமிழ் மட்டுமே தெரியும். நாங்கள் மூவரும் மெனிக் முகாமுக்குப் போவது நல்லது. மொழிபெயர்ப்புக்கு உமக்கு உதவியாக இருப்போம்;. எங்கள் பகல் போசனத்துக்குப்பின் நாங்கள் மூவரும் ரிட்டையர்ட் மேஜர் ஜெனரல் விஜயரத்தனாவை சந்திக்கப் போகலாம். எங்களுக்குத் திறந்தவெளி முகாமைப் பார்க்க போவதற்கான உதவியை அவரிடம் கேட்கலாம். சிறீலங்காவில் எதைச் செய்வதானாலும் உயர் இடத்தில் யாரைத் தெரியும் என்பது தான் முக்கியம்.” என்றார் மகேஷ.
“நீர் சொல்வது உண்மை. லலித்தும் எங்கள் குழுவில் இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. மேஜர்; விஜய்யை அவர் வீட்டில் போய் சந்தித்து எமது பிளானைப் பற்றி சொல்லுவோம். மேஜரை நான் ஒரு தடவை இங்கு வந்திருந்தபோது யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன். நல்ல உதவி செய்யக் கூடிய மனிதர் ஆனால் கண்டிப்பானவர். அவருக்கு எல்லாம் சொன்ன நேரத்தில் நடக்க வேண்டும். நேரத்துக்கு மதிப்புகொடுப்பவர் என்று அப்பவே நான் கணித்துவிட்டேன்” என்றார் ஜோன்.
“ நீங்கள் சரியாகவே மேஜரை கணித்திருக்கிறீர். அப்ப சரி ஜோன். பிறகு பகல் நாம் சந்திப்போம்” என்று விடைபெற்றார்; மகேஷ்.
தனக்கு மூன்றாம் மாடியில் தரப்பட்ட 304 இலக்க அறையை நோக்கிப் போர்டர் பொதிகளோடு முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்தார் ஜோன்.
******
சரியாக பகல் பதின்ரெண்டு மணிக்கு ஜோன் லவுஞ்சுக்கு போன போது மகேசும் லலித்தும் அவருக்காக ஏற்கனவே வந்து காத்துக் கொண்டுடிருந்தார்கள். ஜோனைக் கண்டவுடன் “வெல்கம் பாக் டு சிறீலங்கா ஜோன்” என்று கை குழுக்கி வரவேற்றார் லலித்”.
“தங்கியூ லலித்.எப்படி இருக்கிறீர். போன தடவை உம்மைப் பார்த்ததை விட நீர் வெயிட் போட்டிருக்கிறது போல் எனக்குத் தெரிகிறது. வேலை அதிகமோ”? லலித்தைப் பார்த்து சிரித்தபடி ஜோன் கேட்டார்.
“ஜோன், இப்போ லலித் அவர் வேலை செய்யும் பேப்பரின் உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். . அவருக்குத். தேகப்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. வேலை அதிகம். நாட்டுப் போர் செய்திகளைப் பற்றி எழுதுவது அவர் பொறுப்பு.” என்று லலித்துக்கு பதிலாக மகேஷ் பதில் அளித்தார்.
மூவரும் ஆளுக்கு ஒரு லயன் லாகர் பியருக்கு ஓடர் செய்துவிட்டு திறந்த வெளி முகாமைப் பார்க்கப் போகும் பயண ஒழுங்குகளைப்பற்றிப் பேச அமர்ந்தார்கள்.
“நான் போனதடவை வேலையாக வந்து யாழ்ப்பாணம் போனபோது பல தடைகளைக் கடந்து A9 பாதையில் போக வேண்டியிருந்தது, தாண்டிக்குளத்துக்கு வடக்கே எல்டிடி யின் ஆட்சி, தெற்கே சிறீலங்கா அரசின் ஆட்சி. ஆனால் இப்போது போர் முடிந்ததால் அந்த நிலமை மாறிவிட்டது என்பதால் தடைகள் இருக்காது என நினைக்கிறேன்”, ஜோன் இருவரையும் பார்த்துக் கேட்டார்.
“ அதிகமாக இருக்காது. ஆனால் திறந்த வேளி முகாமுக்குள் போய் சுற்றிப் பார்க்க எவரும் உத்தரவு இன்றி போகமுடியாது. அதற்குத் தான் மேஜர் விஜய்யின்; உதவி எங்களுக்குத் தேவை.” மகேஷ் பதில் சொன்னார்.
“முகாமுக்குப் போகும் ரூட் தெரியுமா மகேஷ்” , ஜோன் கேட்டார்.
“நாங்கள் போகப் போவது வவனியாவுக்கு அருகேயுள்ள செட்டிக்குளம் என்ற பகுதிக்கு. அங்கு இரு வழியாகப் போகலாம். ஓன்று மதவாச்சியில் இருந்து ஏ 14 மன்னாருக்குப் போகும் பாதை வழியாகவும், மற்றது வவுனியாவில் இருந்து மன்னாருக்குப போகும் ஏ30 பாதை வழியாகவும்; போகலாம் வவுனியாவில் இருந்து சுமார் 30 மைல் தூரத்தில் செட்டிக்குளம் இருக்கிறது. மாதவாச்சியில் இருந்து போவதானால் 15 மைல்கள் குறைவு. செட்டிக்குளத்தில், ஒரு காலத்தில் விவசாயப் பண்ணையாக இருந்த இடத்தில் தான் இப்போது திறந்த வெளி முகாம் இருக்கிறது” லலித் பதில் சொன்னார்.
“ அப்டியா? அரசின் காணியா அது? ஜோன் இருவரையும் பார்த்துக் கேட்டார்.
“ இல்லை ஜோன். அது மானிக்கம் என்ற ஊர்காவற்துறையில் உள்ள சுருவில் கிராமத்தைப் பிறப்பிடமாக கொண்ட பிரபல தமிழ் பிஸ்மன்னின் காணி. அதனால் தான் அவரின் பெயரில் மணிக் திறந்த வெளி முகாம் என்று அழைக்கப்படுகிறது. சிறைச்சாலை என்ற வார்த்தையை அரசு பாவிக்க விருப்பப் படவில்லை. காரணம் உலக நாடுகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டி வரும் என்பதால், போரினால் உள்னாட்டில் புலம் பெயர்ந்தவர்களுக்கு ஐடிபி (IDP) என்று நாமம் இட்டு திறந்த வெளியில் முற்கம்பிகள் சூழ சிறைவைத்தாலும்; அந்த நலன்புரி முகாமை, வெல்பியார் சென்டர் ( Welfare Center) என்றே சாதுர்யமாக அரசு அழைக்கிறது” என்றார் லலித்.”
“எத்தனை பேர் சிறைக்குள் இருக்கிறார்கள்”
“நான் நினைக்கிறேன் சுமார் 30,000 முதல் 40,000 வரை 4 முகாங்களுக்குள் இருக்கிறார்கள்.” என்றார் லலித.;
“அங்கு போவதறகு எவ்வளவு தூரப் பயணம் செய்யவேண்டும்”
“ வவுனியாவுக்குப் போய் அங்கிருந்து போவதானால் சுமார் 180 மைல்கள் வரை இருக்கும். மதவாச்சிக்குப் போய் அங்கிருந்து போவதானால் 160 மைல் தூரம். ஆறு அல்லது ஏழு மணித்தியாலங்களில் போய்விடலாம்” லலித் சொன்னார்.
“காலை ஐந்து மணிக்கு பயணத்தை கொழும்பில் இருந்து ஆரம்பித்தால் பகல் பதினொரு மணிக்குள் குருநாகல். தம்புள்ள, அனுராதபுரம் வழியாகப் போய்விடலாம். போகும் போது குருநாகலில் காலை உணவு எடுக்கலாம்” என்றார் மகேஷ்.
“ அது சரி போகும் வாகனத்தைப் பற்றி சொல்வில்லையே.”
“ யோசிக்க வேண்டாம் ஏற்கனவே ஏவிஸ் (AVIS) என்ற வாடகைகு கார் விடும் கொம்பெனியில் புது பேஜோ 404 கார் ஒன்றை டிரைவரோடு புக் செய்து விட்டேன்” மகேஷ் சொன்னார்.
“ இனி அப்ப மேஜரிடம் போய் பேசி அவர் மூலம் மெனிக் முகாமுக்குள் போய் அங்குள்ளவர்களைச் சந்தித்துப் பேச அனுமதி பெற்றுத் தரும்படி கேட்போம். என்ன லலித் சொல்லுகிறீர்”?.
“ இப்போமணி இரண்டாகிவிட்டது. நான் அவரிடம் மூன்று மணிக்கு சந்திக்க வருவதாகப் போன் செய்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். வாருங்கள் சொன்ன நேரத்துக்கு நாம் அவரிடம் போயாக வேண்டும்” என்று லலித் சொன்னார். மூவரும் பேசி முடிந்து, பகல் போசனத்தை; உண்ட பின் கொழும்பு 7 யில் உள்ள ஹோர்டன் பிளேசில் இருக்கும் மேஜர் விஜய்யின் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர்.
******
எதுவும் சொன்ன நேரத்துக்கு நடக்கவேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர் மேஜர் விஜேய். ஆறடி மூன்று அங்குலம் அவர் உயரம் இருக்கும். திரண்ட தோல்கள். ரிட்டையராகியும் ஆர்மி மீசை மறையவில்லை. அகண்ட சிரிப்பு. முகத்தில் போரின் சின்னமாக ஒரு தளும்பு.
கொழும்பு 7 இல் உள்ள ஹோர்டன் பிலேசில், அவருடைய பங்களா இருந்தது, வீட்டுக்கு முன்னே சிறு மலர் தோட்டம். காரை தலைவாயலில்; நிறுத்தி விட்டு ஜோன், மகேஷ், லலித் மூவரும் கரைவிட்டு இறங்கிய போது மேஜரும் மனைவியும் ஏற்கனவே அவர்களின் வருகைக்க்காக வாசலில் காத்துநின்றனர்.
மேஜர் விஜய்யும் அவர் மனைவி அனோஜாவும் சிரித்து முகத்தோடு மூவரையும் வரவேற்றார்கள். பிரதான ஹாலுக்கு எல்லோரும் போய் அமர்ந்தனர். ஹாலின் சுவரில் இரு பெரிய படங்கள். ஒன்று மேஜர் ஆர்மி யுனிபோர்மோடு காட்சி அளித்தார். அவரது உடையில் இருந்த 2 நட்சத்திரங்கள் அவரை மேஜர் ஜெனராலாக அவர் வகித்த பதவியை எடுத்துக்காட்டிய கம்பீரமாக நிற்கும் படம். மற்றது மேஜரும் மனைவியும் திருமணத்தின் போது எடுத்தப்படம்.
“மேஜர் விஜய் நான் கடைசியாக ஒரு வருடத்துக்;கு முன் பார்த்தபிறகு இப்போது தான் உம்மை சந்திக்கிறேன். உங்கள் தோற்றத்தில் அவ்வளவாக மாற்றமில்லை” ஜோன் சொன்னார்.
“ தினமும் காலை இரண்டு மைல் கோல்பேசில் (Galle Face) நண்பர்களோடு நடப்பேன். அவர்களோடு கோலப் விளையாடுவேன். ஓட்டரஸ் (Otters) சுவிம்மிங் பூலுக்குப் போய் நீந்துவேன். தினமும் அரைமணித்தயாலம் மெடிட்டேட் பண்ணுவேன். உணவில் நான் கவனம். அது தான் தேகம் வெயிட் போடாமல் பார்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.” என்றார் விஜய்.
“உங்களுக்கு என்று சிவாஸ் ரீகல் போத்தல் ஒன்று அன்பளிப்பாக கொண்டு வந்திருக்கிறேன்”, என்று தான் கொண்டுவந்த விஸ்கி போத்தலை மேஜரிடம் ஜோன் கொடுத்தார்.
“ஜோன், நீர் என்னை நினைத்துக் கொண்டு வந்த அன்பளிப்புக்கு என் நன்றி. நான் இப்போது தினமும் குடிப்பதை எவ்வளவோ குறைத்துவிட்டேன். எப்போதாவது ஒரு நாள் நண்பர்களைச் சந்திக்கும் போது இரண்டு கிலாஸ் விஸ்கி மாத்திரம் எடுப்பேன்” எனறார் விஜய்.
“அது நல்லது. நண்பர்கள் வந்தால் இது அவர்களோடு சேர்ந்து சுவைக்க தேவைப்படும்”
“ அது சரி முகாமுக்குப் போகும் ஒழுங்குகளைச் செய்து விட்டீர்களா?” மேஜர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
” அதெல்லாம் செய்தாகிவிட்டது. ஏவிஸ் ரெனட் கார், டிரைவரோடு புக்செய்தாச்சு, முக்கியமான ஒன்றைத் தவிர” என்றார்; லலித்.
“ என்னது லலித்”.
“ முகாமுக்குள்ளே போய் பார்த்து அங்குள்ளவர்களோடு பேசுவதற்குத் தேவையான அனுமதி.”
“ அதை பற்றி யோசிக்கவேண்டாம். அதைப்பற்றி ஏற்கனவே முகாமுக்குப் பொறுப்பாக உள்ள மேஜர் வின்சென்ட்டோடு கதைத்து விட்டேன். அவர் எல்லாம் கவனித்துக் கொள்வார்; . எனக்கு பலாலியிலை அசிஸ்டன்டாக வின்சென்ட இருந்தவர். நல்ல மனுசன். என் நண்பரும் கூட. அவருக்கு ஒரு கடிதம் தருகிறேன். அவரிடம் கொடுங்கள். உங்களுக்குத் தேவையானதை அவர் கவனித்துக்கொள்வார்;” என்றார் விஜய்.
“ மிகவும நன்றி சேர்”. மகேஷ் சொன்னார்.
“ஒன்று மட்டும் உங்கள் மூவருக்கும் சொல்ல விரும்புகிறேன் அங்கு இருக்கும் மட்டும் இயன்றளவு எல் டி டி (LTTE) யுக்கு ஆதரவாகக் கதைக்கவேண்டாம் “.
“ நாங்கள் அப்படி கதைத்து உங்களைச் சிக்கலில் மாட்டி விட மாட்டோம். அது சரி படம் எடுப்பதில் பிரச்சனை இருக்காதே?” என்று தன் சந்தேகத்தை ஜோன் கேட்டார்.
“அதைப் பற்றி வின்சென்டோடு பேசிக்கொள்ளுங்கள். நீங்கள் அங்கு தங்கமுடியாது. முகாமைச் சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் தேவை. அதனால் ; ஒரு இரவுக்கு வவுனியாவில் உள்ள ஹோட்டலில் நீங்கள் தங்கலாம்”, அறிவுரை சொன்னார் மேஜர் விஜய்.
.
“முகாமுக்குப் போவது அவ்ளவு இலகுவல்ல. பல செக்போஸ்டுகளைத் தாண்டிச் செல்லவேண்டும். மெனிக் முகாமைப் போல் இன்னும் 3 முகாம்கள் இருக்கிறது அவைக்கு அருணாச்சலம், கதிரகாமர், இராமநாதன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அம்முகாங்களில் பெரியது மெனிக் முகாம். . இந்த முகாமைச் சுற்று முற்கம்பி வேலி . இலகுவில்; முகாமுக்குள் இருப்பவர்கள் தப்பி ஓட முடியாது.
மெனிக்முகாமுக்குள் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் , குழந்தைகள் வலம் குறைந்தவர்கள் போன்று பல தரப்பட்ட மக்கள் செய்யாத குற்றத்துக்கு கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். தம் சொந்த நாட்டிலேயே, உள்ளூல் புலம் பெயர்ந்தவர்கள் ஐடிபி என்ற பெயரில் திறந்த வெளி சிறையில் பரிதாபத்துக்குரிய வாழ்வு வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் செய்த குற்றம் ஈழத்தில் தமிழனாகப் பிறந்தது மட்டுமே, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின் போது யூதர்கள் எப்படி நடத்தப்பட்டார்களோ அதே போன்ற நிலை. துவக்கும் கையுமாக இராணுவம் அவர்களைக் கண்காணித்தபடியே இருக்கிறது. வரிசை வரிசையாக அமைக்கபட்ட கூடாரங்களுக்குள் ஒரு முடங்கிய வாழக்கை. அக்கூடாரங்கள் துணியாலும், அலுமினியத்தகடுகளாலும் வேயப்பட்டிருக்கின்றன.. தண்ணீர் வசதி, மலம் சலம் களிக்கும் வசதிகள் மிகக் குநைவு. ஒரு கூடாரத்துக்குள் இரு குடும்பங்கள் வாழ்கின்றன. வாகனம் போனால் அல்லது பலத்த காற்று வீசினால் மண்ணை வாரிக் கூடாரத்துக்குள் கொட்டும்.
அடிக்கடி இராணுவத்தின் வாகனங்கள் ஒரு முகாமில் இருந்து மற்றைய முகாம்களுக்குப் போய் வரும். முகாமில் இருபவர்கள் சுதந்திரமாக ஒரு முகாமில் இருந்து மற்றைய முகாம்களுக்கு போய் வரமுடியாது. 3 சக்கர வண்டியில் பயணிப்பதென்றால் ஒன்று அல்லது இரண்டு கி.மீ தூரத்துக்கு பயணிப்பதற்கு அதிக பணம் கொடுக்க வேண்டி வரும்” , மகேஷ் முகாம்களைப் பற்றிய விபரங்கள் சொன்னார்.
“ அது சரி மகேஷ் உமக்கு இதெல்லாம் எப்படித் தெரியும். நீர் அங்கு எப்போதாவது போனீரா? ஜோன் மகேஷைக் கேட்டார்.
“ நான் போகவில்லை. அங்கு போய்வந்த எனது நண்பரான சிங்கள உடகவியாலர் ஒருவர் சொன்னதைத் தான் சொன்னேன். அதுவுமல்லாமல் இந்த விபரம் சில பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது”.
“ மகேஷ் மேலும் முகாமைப் பற்றிய விபரங்கள் தெரிந்தால் சொல்லும்” .
அகதிகளைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் அறை மிகச் சிறியது. நூற்றுக் கணக்கானவர்கள் தம் இனத்தவர்களைச் சந்திக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிவரும். வேகு நேரம் காத்திருந்துவிட்டு சந்தித்தவர்களோடு நிண்ட நேரம் பேச மெய்காப்பாளர்கள் விடமாட்டார்கள். “வெகு நேரம் கதைத்துவிட்டீர். மற்றவர்களும் கதைக்க நேரம் வேண்டும்”’ என்று கட்டுப்படுத்தி விடுவார்கள். பொருட்கள் அல்லது கொண்டு வந்த உணவை வந்திருந்தவர்கள் கொடுப்பது அவ்வளவு இலகுவல்ல. கடும் பரிசோதனைக்குப் பின்னரே அப் பொருட்களை அவர்கள் கொடுக்க முடியும்,” லலித் சொன்னார்.
******
நீண்ட பணத்தின் பின் ஜோன், மகேஷ், லலித் ஆகிய மூவரும் மெனிக் முகாமை அடையும் போது பகல் ஒரு பதின்ரெண்டாகிவிட்டது. வரும் வழியில் இரு தடவை அவர்கள் இராணுவத்தடைகளை தாண்டவேண்டியிருந்தது, லலித் இருந்தபடியால் தாங்கள் மூவரும் பத்தி;ரிகையாளர்கள் என்பதையம் முகாமில் வாழும் அகதிகளைப் பற்றிக் கண்டு அறிய வந்ததாக சிங்களத்தில் விளக்கம் கொடுத்தார்.
“யாரை காம்பில் சந்திக்கப் போகிறீர்கள்”?, வவுவனியாவில் உள்ள இராணுவக் செக் போஸ்ட்டுக்குப் பொறுப்பாய் இருந்த சார்ஜன்ட் ஒருவர், அவர்களைச் சிங்களத்தில் கேட்டார்.
“நாங்கள் மேஜர் ஜெனரல் வின்சனட் பெரெராவைச் சந்தித்து அனுமதி பெற்று காம்ப்பை பார்க்கப்போகிறோம்” என்றார் லலித்.
“ உங்களுக்கு ஏற்கனவே அவரைத் தெரியுமா?” சார்ஜன்ட் கேட்டார்.
“ அவருக்கு ரிட்டையரான மேஜர் ஜெனரலாக இருந்த விஜயரத்தினா கடிதம் தந்திருக்கிறார்”.
“ ஓ நீங்கள மூவரும்; மேஐர் ஜெனராலாக இருந்த விஜயரத்தினாவின் ஆட்களா. அவர் தான் எனக்கு டிரெயினிங் தந்தவர். நல்ல மனிதர். அது சரி இவர் எந்தத் தேசத்தவர்” ஜோனைக் காட்டி கேட்டார் சார்ஜன்ட்;
“ இவர் பெயர் ஜோன். கனடா டொரண்டோவில் வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றின் ரிப்போர்டர்.” மகேஷ் தனக்குத் தெரிந்த சிங்களத்தில் பதில் அளித்தார். மூவரது அடையாளப் பத்திரங்களைப் பார்த்துவிட்டு சரி நீங்கள் போகலாம்.;. இங்கிருந்து சுமார 30 மைல்கள் போனால் மெனிக முகாம் வரும். முகாமைப் பரிபாலனம் செய்யும் ஓபீசுக்குப் போகும் திசையைக் காட்டியபடி ஒரு ரோட் இருக்கும். அந்த ரோட்டில் போனால் மெயின் விதியில் இருந்து சுமார் நூறு யார் தூரத்தில் மேஜர் வின்சனட் பெரெராவின் ஒபீஸ் இருக்கும். உங்கள் பயணம் நன்றாக இருக்கட்டும்;”, என்று வாழ்த்தி அனுப்பினார் சார்ஜனட்.
மேஜர் வின்சென்ட் பெரெராவின் ஒபீசை அடைந்தவுடன் அங்கிருந்து இராணுவச் சிப்பாயிடம்; தாங்கள் ஊடகவியலாளர்கள் எனவும்;, மேஜர் வின்சர்டை சந்திக்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.
“மேஜர் ஒரு மீட்டிங்கில் இருக்கிறார் இனடனும் பத்து நிமிடத்தில் மீட்டிங் முடிந்து விடும் அதன் பிறகு அவரை நீங்கள் சந்திக்கலாம்” என்றான் அந்த இராணுவச் சிப்பாய்;.
மூவரும் தங்கள் பிஸ்னஸ் கார்ட்டுகளை மீட்டிங்கில் இருக்கும் மேஜரிடம் கொடுக்கும் படி இராணுவ சிப்பாயிடம் கொடுத்தார்கள்.
மீட்டிங் முடிந்து வெளியேவந்த வினசண்ட் மூவரையும் கண்டவுடன் “ஹலோ ஜோன், லலித், அண்ட் மகேஷ் மெனிக் காம்புக்கு உங்கள் வருகை நல் வரவாகுக. உங்கள் மூவரையும் நான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனான். பயணம் எப்படி இருந்தது? ஆங்கிலத்தில் கேட்டார் மேஜர்
“ பயணம் பரவாயில்லை. ஆனால் பாதை தான் சரியில்லை. குருணாகலிலும் அனுராதபுரத்திலும் சற்று இளப்பாறி வந்தோம்” லலித் சொன்னார்.
“என்டை பிரண்ட், மேஜர் விஜய், ஏற்கனவே எனக்கு டெலிபோன் செய்து நீங்கள் காம்புக்கு வரப்போகும் விபரத்தைப்பற்றச் சொன்னவர்.; காம்பைச் சுற்றி பார்க்க எல்லா ஒழுங்குகளையும் செய்து கொடுக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால் நீங்கள் எது வித பிரச்சனையும் இல்லாமல் சுற்றிப்பார்க்கலாம். படம் எடுக்கலாம். ஆனால் ஒரு கட்டுபபாடு”, வின்சன்ட் சொன்னார்.
“ என்ன கட்டுப்பாடு மேஜர்?” லலித் மேஜரைக் கேட்டார்.
“ காம்புக்குள் இருப்பவர்கள் எவரோடாவது அரசியல் பேசுவதை முடிந்தளவு தவிர்க்கவும்;. முக்கியமாக எல்.டீ.டி யைப்பற்றி கருத்து தெரிவிக்கக் கூடாது.
“ நாங்கள் காம்பில் உள்ளவர்களோடு பேசும் போது கவனமாக அரசியல் கலக்காமல் பேசுவோம்.” ஜோன் சொன்னார்.
“ உங்களுக்குப் பயணக் களைப்பு இருக்கும். மணி ஒன்றாகிவிட்டது. பகல் போசன நேரம். என்னோடு பகல் போசனத்தை சாப்பிட்டு விட்டு காம்பை நீங்கள் சுற்றிப் பார்க்கத் தொடங்கலாம்” மேஜர் வின்செனட் சொன்னார்.
“ மிகவும் நன்றி மேஜர்.” மூவரும் மேஜருக்கு நன்றி தெரிவித்த பின்னர் போசனம் உண்ணச் சென்றார்கள். அவர்களின் வருகையை எதிர்பார்த்தோ என்னவோ உணவு பிரமாதமாக தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. திறந்த வெளி முகாமில் அகதிகள் நல்ல உணவு இல்லாமல் தவிக்கும் போது தாங்கள் இப்படியான உணவை உண்பது மூவருக்கும் என்னவோ மாதிரி இருந்தது மேஜரின் விருந்தோம்பலுக்கு மரியாதை கொடுக்கவேண்டியதால்; அவர்கள் சிறுதளவு உணவை உண்டபின் “ மேஜர் அன்று சில மணி நேரங்கள் தான் மிகுதி இருக்கிறது. முகாமை சுற்றிப்பாரத்து அகதிகளோடு உரையாட வேண்டி இருப்பதால் உணவு உண்பதில் நேரத்தை வீணாக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. எங்களை குறை நினைக்க வேண்டாம் “ என்றார் ஜோன்.
“ உங்கள் நிலை எனக்குப் புரிகிறது.” என்றார் மேஜர் புன்னகையோடு.
*******
- ரெமோ – விமர்சனம்
- திரும்பிப்பார்க்கின்றேன் சுஜாதாவிடம் நான் கற்றதும் பெற்றதும் ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருந்த சுஜாதா
- 21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் (ஆய்வு கட்டுரை நூல்) ஆசிரியர் : முனைவர் பூ மு அன்பு சிவா
- ஒரு நாள் விரதமிரு 48 நாட்கள் ஆயுள் நாட்களில் அதிகரிக்கும்
- கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)
- எரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 3 பொன்னம்மாவும் அன்னம்மாவும்
- நீள்கவிதை – பராக் பராக் பராக்..!
- ஒரு நாளின் முடிவில்…..
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 2
- தொடுவானம் 139.உலகத் தொழுநோய் தின விழா
- தொடு நல் வாடை
- கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும்
- கவர்ச்சி
- குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்
- காமிக்ஸ் – பியூர் சினிமா புத்தக அங்காடி
- எலி வளைகள்
- கதை சொல்லி (சென்றவாரத் தொடர்ச்சி) – 3
- வண்டுகள் மட்டும்
- புரிந்து கொள்வோம்
- அழகு
- ஆழி …..
- கவிதைகள்
- கவிநுகர் பொழுது (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)
- தொடரி – விமர்சனம்
- மிதவையும் எறும்பும் – கவிதை
- திருப்பூர் : ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு
- கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 10