எளிய மனிதர்களின் தன் முனைப்பு

This entry is part 7 of 21 in the series 16 அக்டோபர் 2016

rekaஎன் அருமை நண்பரும், மலேசியாவின் ஆகச் சிறந்த எழுத்தாளாருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அமரத்துவம் எய்திவிட்டார்.

தமிழுக்கு நல்ல சிறுகதைகளைத் தந்தவர்

———————————–

நடவடிக்கைகள்

 

” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து …..

 

சுப்ரபாரதிமணியன்

 

 

பச்சைப் பசுங்கோயில் –இன்பப்

பண்ணை மலைநாடு

இச்சைக்குகந்த நிலம்- என்

இதயம் போன்ற நிலம் ( சுத்தானந்த பாரதியார் )

 

 

அய்ந்து நாவல்கள் கொண்டஇத் தொகுப்பை  படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும், கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும், முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும்  மனதில் வெகுவாக  நிற்கின்றனர்.

ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன்  கொஞ்ச காலம் பத்திரிக்கையாளனாக இருந்து கல்வித்துறை விரிவுரையாளனாகச் செல்கிறான். அப்பாவின் வன்முறையால் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்வி கற்று முன்னேறியவன். அம்மாவைத்தேடிப்போகிறான். காதலியாக இருப்பவள் இன்னொருத்தனை பணத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டு  பின் விவாகரத்து பெறுகிறவள் இவனை விரும்புகிறாள். அப்பா, அம்மாக்களை தேடிப்போய் அவர்களின் நோய், மரணம்  ஆகியவற்றில் அக்கறை கொள்கிறான்.

இந்த அம்சங்களை மற்ற 4 நாவல்களிலும் காண முடிவது அவரின்  நாவல் உலகம் விரிவடையாமல் இருப்பதைக் காட்டுகிறது. முதல் நாவலில்  ( வானத்து வேலிகள்) குணசேகரன் இப்படி வீட்டை விட்டு விரட்டப்பட்டவன் மாட்டுத் தொழுவத்தில் வேலை பார்த்து அந்த வீட்டு பண்க்காரப் பெண்ணை காதலித்து, லண்டன் போய் படித்து பெரும் பணம் சம்பாதித்து ஏழை மாணவகளுக்கு விடுதி ஒன்றை பெரும் செலவில் கட்டுகிறான். மனைவியுடன் உடல் தொடர்பு இல்லாமல் இருக்கிறவன் மகன் தந்த பாடத்தால்   மனைவியுடன் சேர்கிறான். ராணி என்ற குணசேகரனின் உதவியாளர் திருமணம் செய்து கணவனைப்  பிரிந்து கொஞ்சம் குணசேகரனுக்காக தவிக்கிறவள்.” தேடியிருக்கும் தருணங்களில் ” நாவலில் நாயகன் அப்பாவின் சாவு, அஸ்தி கரைப்பு, தன் அம்மாவைத் தேடிப் போகிறான்.  அம்மா சாதாரண கூலிக்காரப் பெண். கண்டடைகிறான்.   அந்திம காலம் நாவலில் சுந்தரத்திற்கு புற்று நோய். மகள் ராதா கணவணை விட்டு லண்டனுக்கு மகன் பரமாவை அப்பா சுந்தரத்திடம் விட்டு போய்விடுகிறாள். பின் அந்த வாழ்க்கையும் சரியில்லையென்று திரும்புகிறாள். பரமா இறந்து விடுகிறான். சுந்தரம் புற்று நோயிலிருந்து தப்பிக்கிறார். ” காதலினால் அல்ல” நாவலில்  கணேஷின் பல்கழைக்கழக அனுபவம், ரேக்கிங்,, அத்தை பெண், காதலிப்பவனைக் கட்டாமல் அத்தைப் பெண்ணை கட்டும் சூழல். எல்லா நாவல்களிலும் நோய் சார்ந்த மனிதர்களின் அவஸ்தை இருக்கிறது. அதிலும் புற்று நோய் என்று வருகிற போது விவரமான விவரிப்பு இருக்கிறது. கல்வி சூழல் சார்ந்த விரிவான அணுகுமுறை, பாடத்திட்டங்கள், பல்கலைக்கழக கல்வியில் இருக்கும் அரசியல், மாணவர்களின் போக்குகள், ரேக்கிங் சித்ரவதைகள் இடம்பெறுகின்றன. அங்கங்கே இடம் பெறும் இலக்கியக் குறிப்புகளும்  சுவாரஸ்யப்படுத்துகின்றன. எளிய மனிதர்கள் படித்து சுய அக்கறையுடன் கல்வியைத் துணைக்கு வைத்துக் கொண்டு லவுகீய வாழ்க்கையில் முன்னேறும் படிமங்களின் சிதறல் எங்கும் காணப்படுகிரது.

ரெ.கார்த்திகேசு கல்வித்துறையில் பணிபுரிந்தவர் அல்ல. ஆனால் கல்வித்துறை சார்ந்த அவரின் விஸ்தாரமான நாவல் அனுபங்கள் வியப்பூட்டுகின்றன. அந்த வகையில் கல்வித்துறை பற்றின முறையான பதிவாகவும் இருப்பது இந்நாவல்களின் பலம்.மலேசியா சூழலின் கல்வித்தன்மை, அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் கல்விசூழல் குறிப்பிட வேண்டியது. புதிய தலை முறை பற்றிய அக்கறை இருகிறது. குழந்தைகளுக்கு ஆங்கில ஆக்கிரமிப்பு மீறி தமிழ் சொல்லித்தரும் தாத்தாக்கள் இருக்கிறார்கள். பழைய இலக்கியங்களில் தோய்ந்து  அவற்றை வெளிப்படுத்தும் பல இடங்கள் உள்ளன. மரணம் பற்றிய பயத்தில் கதாபாத்திரங்கள் எல்லாவற்றிலும் அலறிக் கொண்டிருக்கிறார்கள் “ மரணம்  கூத்தாடுகிறது. இங்கு எல்லோரும் அதன் பேய்ப் பிடியில் இருக்கிறோம். இன்றொன்றும் நாளையொன்றுமாக தனது விருப்பத்திற்கு அது மனிதர்களைக் கொய்து தின்கிறது. இது மரணப் பேயின் விருந்துக்கூடம் என்று தோன்றியது “ ( பக்கம் 551 )

கார்த்திகேசுவின் சிறுகதைகளின் நுணுக்கமான விசயங்கள் இதிலும் உள்ளன. அவரின் சிறுகதைகள் வெகுவாக சமகாலத்தன்மையோடும் நவீன வாழ்க்கைச் சிக்கலோடும் வெளிப்பட்டவை. ஆனால் இந்நாவல்களின் பிரசுரிப்பு காலம் 80,90 என்பதால் வெகுவாக பின்தங்கி மலேசியா எழுத்தாளர்களின் பழைய எழுத்தை, மத்திய தர மலேசியர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துபவை.   நேரடிசாட்சியாக இருந்து அனுபவித்திருப்பதை மீறி வேறு தளங்களில் அவர் இயங்காமல் இருக்கும் பலவீனம் தென்படுகிறது.  இன்றைய புது வாசகனுக்கு இது சற்றே அலுப்பூட்டும். மலேசியா நிலவியல் சார்ந்த விவரிப்புகளும், சரளமான  நடையும்  நாவலை நல்ல வாசிப்பிற்குள்ளாக்குகிறது.மலேசியா பற்றிய    தகவல்களை அள்ளித்தருகிறது.முன்னுரையில் கார்த்திகேசு இப்படி குறிப்பிடுகிறார்.  “ இது பிள்ளைப் பேறுமாதிரிதான். பிறக்கும்போது என்ன அமைகிறதோ அதுதான் அதற்கு வாய்த்தது. அடுத்தவர் கையில் கொடுத்த பிறகு இதன் மூக்கைக் கொஞ்சம் எடுப்பாகப் பண்ணியிருக்கலாம். கண்ணை கொஞ்சம் நீடியிருக்கலாம் எனத் தாய் கவலைப்பட்டு பயனில்லை.எழுத்தின் கருத்துகளுக்கு அவனே பொறுப்பு, ஆனால் நாவலின் மொத்த வடிவத்துக்கு அவன் மூளையோடு அவன் சுரப்பிகளும் பொறுப்பு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் “ முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய வாழ்க்கையின்  அப்போதைய பதிவாக அவற்றைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருப்பது அவரின் படைப்புகளை ஒரு சேர படிக்கவும், கல்வித்துறை சாந்தவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

 

( காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு  998 பக்கங்கள்  விலை ரூ 1300  )

 

Series Navigation“முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளாதொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *