ஸ்ரீராம்
“அழகாக தன் போக்கில் இயல்பான கதைகளாக தேடிப்பிடித்து பண்ணிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை ஹீரோயிசம் பண்ண வைத்து காலி பண்ண பார்க்கிறார்கள்” றெக்க படம் பார்த்ததும் இப்படித்தான் தோன்றியது..
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,
நானும் ரெளடி தான்,
ரம்மி,
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,
சூது கவ்வும்
இது போன்ற கதைகளில் விளிம்பு நிலையில் சிக்குண்ட மனிதனின் கதாபாத்திரங்களில் இயல்புத்தன்மைக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது. ‘றெக்க’ பக்கா ஹீரோயிசம்.
நூறு அடியாட்களை பறக்க விடுவது, ஐம்பது ஜிம்பாய்களை தெறிக்க விடுவது, லாஜிக்கே இல்லாத காதல், கலர் கலர் ஆடைகளில் டூயட் என்று சகிக்கவில்லை. திடீரென்று விஜய் சேதுபதிக்கு கதைக்கு பஞ்சமாகிவிட்டது போலொரு நிலை.
அக்கா தந்த துண்டு சீட்டை கவனக்குறைவால் உரிய இடத்தில் சேர்க்க முடியாமல் போன தன்னுடைய தவற்றால் தனக்கு மிக மிக பிடித்த அக்காளின் காதல் கைகூடாமல், ஒருவன் பைத்தியமாகிவிடவும் நேர்ந்துவிட்டதே என்கிற அற உணர்வு தான் படத்தை மேற்கொண்டு பார்க்க வைக்கிறது.
ஹீரோயிசத்துக்கு பொருந்துகிற முகமோ, உடல் வாகோ கிடையாது விஜய் சேதுபதிக்கு. அவர் அது போன்ற கதாபாத்திர்ங்களில் பெரிதாக சோபிக்க மாட்டார். அவற்றை அவர் நிராகரிப்பது உத்தமம். ஆனால் றெக்க படத்தில் அவர் நடித்திருப்பது, தனது பலம் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறாரோ என்கிற எண்ணத்தை வரவழைக்கிறது. சண்டை காட்சிகளிலும், டூயட் பாடல்களிலும் அவரது உடலசைவுகள் “ஐயய்யோ .. நானா?” என்பது போல் இருக்கிறது.
கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனின் பலவீனம் அவருக்கே தெரியாமல் இதுகாறும் மறைந்திருந்து, ரெமோ படத்திற்கென அவர் பேசிய பேச்சுக்களில் வெளிப்பட்டது போலத்தான்.
பொதுவெளியில் அவர் காட்டும் அதீத அடக்கம், தேவைகளே இன்றி வெளிப்படும் சாரி, தாங்க்ஸ் போன்றவைகள் வெறும் பம்மாத்து மட்டுமன்றி திட்டமிட்ட காய் நகர்த்தல். இவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இயங்குமுறையில் பெரிய வித்தியாசமில்லை.
சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்.. “வேலை செய்ய விடுங்கள்” என்று அழுதாராம் சிவா. எந்த வேலை? பெண்களை மோசமாக சித்தரிப்பதா? பெண்கள் ஏதேனும் கோரிக்கை வைத்தால் உடனே ஒரு விதிவிலக்கான எடுத்துக்காட்டை காட்டி “பாத்தியா உன் கோரிக்கை ஒரு வெத்து” என்று ஜல்லியடிப்பதா? அமேரிக்க மாப்பிள்ளைகள் மீது வகை தொகையில்லாமல் சேறு பூசுவதா? சிவாவின் சமூகம் மீதான மோசமான புரிதல், அவருடைய “கலாய்த்தல்” திறமையால் இதுகாறும் பூசி மொழுகப்பட்டிருந்தது. இறைவி என்கிற படம் கார்த்திக் சுப்புராஜ் என்கிற அரை குறை புரிதல் உடைய இயக்குனரின் குறைகளை வெட்டவெளிச்சமாக்கியது போல. ஆனால் சிவகார்த்திகேயனின் படங்களை பார்த்தால் அவருடைய போலித்தனம் எளிதாக துருத்திக்கொண்டு நிற்பது தெரியும். அதை பார்க்க பார்வையாளர்களுக்கு சற்று முதிர்ச்சி தேவைப்படுகிறது. சிவாவின் படங்கள் வெற்றியடைவது எதை காட்டுகிறதென்றால், பெரும்பான்மை தமிழ்ச்சமூகம் முதிர்ச்சியற்றது என்பதைத்தான்.
கொடுமை என்னவென்றால், “வேலை செய்ய விடுங்கள்” என்று கதறுகையில் பெண்களை மிகவும் மலினமாக சித்தரிக்கும் படங்கள் தான் செய்கிறோம் என்பதோ, பத்து வருடங்கள் கழித்து தன் படங்களை தன்னாலேயே நியாயப்படுத்த முடியாது போகும் என்பதோ இவருக்கு தெரிந்திருப்பது போல் தோன்றவில்லை. தான் செய்வது இன்னதுதான் என்பதே தெரியாமல் இயங்கிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவா தனது படங்களில் காட்டும் காதல்களில் மயக்கமுற்று ஒரு தளர்ந்த, பலவீனமான சூழலில் துணை தேர்வு செய்துவிட்டு பிற்பாடு உண்மை நிலையை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், மானத்துக்கு பயந்து வெளியே சிரித்து வைத்து உள்ளுக்குள் குமுறும் எண்ணற்ற பெண்களின் எண்ணிக்கை கற்பனைக்கும் எட்டாதது. சிவாவின் படங்களில் சிவா ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் வெற்றி அடையவது எத்தனையோ பெண்களின் பொறுமை மற்றும் அதீத சகிப்புத்தன்மையின் பின்விளைவு தான். அதே பெண்கள் சிவாவை கதா நாயகனாக்கி ரசிப்பது ஒரு மிகப்பெரிய முரண். நுனி கிளையில் அமர்ந்து அடி கிளையை வெட்டுவது போன்றது. உண்மையில் இது பெண்களையே குறைத்து மதிப்பிட வைக்கிறது.
நூறாண்டுகால இந்திய சினிமாவில் தமிழ் சினிமா இன்னமும் சர்வதேச தரத்தில் இயங்காததற்கு காரணம், அது தவறான பாதையில் செல்வதே. சிவகார்த்திகேயன் போன்றவர்களின் வளர்ச்சி, தரம் தாழ்ந்த சமூகத்தின் ஒரு குறியீடு தான். சிவகார்த்திகேயன் போன்றவர்கள் எத்தனை வளர்கிறார்களோ அத்தனைக்கத்தனை தமிழ் சமூகத்தில் குதர்க்கங்கள் அதிகமாகின்றன என்று பொருள்.
ஆனால் விஜய் சேதுபதி அப்படி அல்ல. யதார்த்த சினிமா தான் அவருடையது. றெக்க அவருக்கு ஒரு கண நேர பிறழ்வாகத்தான் இருக்க வேண்டும் அல்லது ஒரு வெரைட்டிக்காக அவர் இந்த படத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
விஜய் சேதுபதியின் படங்கள் வெற்றி அடைவதும் ஒரு குறியீடு தான். அது எதை குறிக்கிறதென்றால், தமிழ்ச் சமூகம் எப்படியெல்லாம் வாதை அனுபவிக்கிறது என்பதை காட்டும் கண்ணாடியாகத்தான் பார்க்கிறேன். சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கும், விஜய் சேதுபதியின் வளர்ச்சிக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான். முன்னது தேய்மானம். பின்னது தேய்மானத்தின் அளவுகோல்.முன்னது தீயது. பின்னது ஒரு அளவுகோல் மட்டுமே. முன்னது அனுமதிக்கப்படக்கூடாது. பின்னது ஒரு சமூகத்துக்கு தேவை. சிவகார்த்திகேயனின் படங்கள் ஒரு சமூகத்துக்குள் அனுமதிக்கப்படக்கூடாது. அவைகள் நச்சு. ப்ளாஸ்டிக் நச்சு போல. சீக்கிரம் மக்காது. ஒரு கிருமி போன்றது. ஆங்கிலத்தில் parasite என்பார்கள். அதாவது தான் சார்ந்திருக்கும் ஒன்றை அரித்து அரித்து தனது வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்வது. தொலைகாட்சியிலிருந்து சினிமாவிற்கு இதுகாறும் வந்தவர்கள் இந்த அரித்தலை செய்யவில்லை. ஆனால் சிவாவின் படங்கள் அரிக்க மட்டுமே செய்கின்றன.
விஜய் சேதுபதியின் படங்கள் சமூகத்தின் குறைமிகும் இடங்களை மற்றவர்கள் பார்வைக்கு காட்டும் கண்ணாடி. அது ஒரு சமூகத்துக்கு மிக மிக தேவை. ஒரு சமூகம் ஆரோக்கியமான அறிவு சார் தளத்தில் பயணிக்க இது மிக மிக தேவை. றெக்க இந்த கண்ணாடியில் சேராது என்பது தான் எனது வாதம்.
விஜய் சேதுபதி திரை உலகில் தனக்கு இருக்கும் இடம் குறித்து துல்லியமான கணிப்புடனே இருப்பதாகத் தெரிகிறது. தான் வெறும் ஒரு ட்ரன்ட் மட்டுமே என்பதை நன்கு புரிந்துவைத்திருக்கிறார். அதனால் தானோ என்னமோ ஒரே வருடத்தில் ஏழு படங்கள் ரிலீஸ் செய்கிறார். ஒருவேளை அவர் ஐந்து வருடங்கள் நடித்துவிட்டு அரவிந்துசுவாமி போல் திரை உலகை விட்டு விலகிவிடவும் கூடும்.
– ஸ்ரீராம்
- கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்
- ஈர்மிப் பெருந்திணை
- சத்யஜித்ரேயின் சிறுகதைகள்
- அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்
- வண்ணதாசனுக்கு வணக்கம்
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா
- எளிய மனிதர்களின் தன் முனைப்பு
- தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .
- பசி
- பாசத்தின் விலை
- படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்
- கள்வன் பத்து
- உன் முகம்
- குட்டி (லிட்டில்) இந்தியா
- மாயாண்டியும் முனியாண்டியும்
- வதந்திகளை பரப்புபவர்கள்!!
- வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?
- றெக்க – விமர்சனம்
- மீண்டும் நீ பிறந்து வா…!
- கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை